சங்கரன்கோவில் வடக்கு புதூர் ஓட்டுநர் முருகன் மரணம்! சங்கரன்கோவில் மாஜிஸ்ட்ரேட் அவர்கள் அறிக்கையை காலம் தாழ்த்தாது சமர்ப்பிக்க வேண்டும்!

அறிக்கைகள்
s2 392 Views
  • Driver Murugan
  • Driver Murugan
Published: 11 Mar 2024

Loading

சங்கரன்கோவில் வடக்கு புதூரை சேர்ந்த வேன் உரிமையாளரும் ஓட்டுநருமான முருகன் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமெய்தி நான்கு தினங்களுக்கு மேலாகி விட்டன. சங்கரன்கோவில் காவல் நிலைய சரக காவலர்களால்தான் தாக்கப்பட்டு முருகன் மரணமெய்தி உள்ளார் என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் இருந்தும் இன்னும் அந்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. இது போன்ற காவல் நிலைய மரணங்கள் குறித்து துணை ஆட்சியர் அந்தஸ்தில் இருப்பவர்கள் தான் விசாரணை செய்ய வேண்டும். ஆனால், இந்த கொடூரமான மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 9 ஆம் தேதி மாலையில் பிரேதப் பரிசோதனை முடிவுற்று, எல்லா தடயங்களையும் சேகரித்த பின்னரும் இன்னும் சங்கரன்கோவில் மேஜிஸ்ட்ரேட் அவர்கள் காவல்துறைக்கு உண்மை நிலை அறிக்கையை தாக்கல் செய்யாமல், காலதாமதம் ஆவதால், மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய அனைத்து சட்ட சர்வ நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளன.

மேலும், மேஜிஸ்திரேட் அவர்களே அறிக்கை சமர்ப்பித்தாலும் அதே காவல் நிலைய அதிகாரிகளால் எப்படி அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர்கள் மீது நேர்மையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும்? குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்?

இது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு ஆளாகி இறந்த சம்பவத்தைக் காட்டிலும் மிகவும் கொடுமையானதாகும். மேலும், இந்த வழக்கை உடனடியாக துணை ஆட்சியர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய வருவாய்த்துறை அதிகாரி இடத்தில் மாற்ற வேண்டும் அல்லது சிபிஐ இடத்தில் ஒப்படைத்து விட வேண்டும். மேலும், காலம் தாழ்த்தாது கொலையுண்ட முருகனின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாகக் குறைந்தது ரூ 50 லட்சம் நட்ட ஈடும், அவருடைய துணைவியார் மீனாவிற்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மாஜிஸ்ட்ரேட் அவர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க கால தாமதம் ஆவதால், அவருடைய உடலைக் கூடப் பெற்றுக்கொள்ளாமல் குடும்பத்தினர், கிராமத்தினர் ஐந்தாவது நாளாக போராட வேண்டிய சூழல் இருக்கிறது. இது அப்பகுதியில் தொடர்ந்து ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தொடர் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாக மாஜிஸ்ட்ரேட் அவர்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், குற்றம் இழைத்த காவலர்களை கைது செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.03.2024.