பரவும் தென்மாவட்டக் கொலைகள்
370 Views
![]()
பரவும் தென்மாவட்டக் கொலைகள்!
நேற்று பெருங்குடி, இன்று மதுரை அச்சம்பத்து!!
ரவுடிகளின் கைக்கு மாறுகிறதா சட்டம் ஒழுங்கு?!!!
”தென்மாவட்டங்களில் நடைபெறும் தொடர் கொலைகள் குறித்தும், அதில் பெரும்பாலும் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட அட்டவணைப் பிரிவில் அடங்கிய சில சமூகங்களும் இடைநிலைச் சாதியினரும் பெரிதும் இலக்காகிறார்கள்; எனவே தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; மத்திய உள்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; தென்மாவட்டங்களில் சாதாரண மக்களுக்குப் பாதுகாப்பாக மத்திய துணை இராணுவம் நிறுத்தப்பட வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தேன்.
அதே நாளில், மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடியில் 6 வயது சிறுவன் உட்பட 5 ஆதிதிராவிடர் சமூக இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அச்சம்பவம் நடந்து ஒரு நாள் கூட ஆகவில்லை; மீண்டும் மதுரை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அச்சம்பத்து – காந்திநகரைச் சார்ந்த பாண்டீஸ்வரன் என்ற செல்வம் நேற்றுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டீஸ்வரன் சாதாரணமான ஒரு கூலித் தொழிலாளி; தந்தை ஏற்கெனவே மரணமெய்திவிட்டார்; தாயின் அரவணைப்பிலே உள்ள அவர், சாதிய வன்மத்தோடு கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்யப்பட்டு, கால்வாயில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். சம்பவம் நடந்து ஏறக்குறைய 24 அணி நேரம் ஆகிவிட்டது.
அதில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் முறையாக விசாரணை செய்து கைது செய்யாமல், பெயருக்காக இரண்டு பேரை மட்டும் கைது செய்துவிட்டு, அவ்விருவருக்குத் துணையாக வந்த பிற குற்றவாளிகளைக் காவல்துறைக் காப்பாற்ற முயல்வதாகத் தெரிகிறது.
அண்மையில் தென்தமிழகத்தில் நடந்த அனைத்துக் கொலைகளுமே தன்னந்தனியாக ஆடுமேய்ப்போர், அயர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்போர், தனித்து இருப்போரைக் குறிவைத்தே நடைபெற்றிருக்கின்றன. இந்த எளிய சமூகங்களைச் சார்ந்த யாராவது ஒருவரை கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில், பாதுகாப்பற்ற நிலையில், தன்னந்தனியாக இருக்கக்கூடியவர்களைக் குறிவைத்தே இக்கொலைகள் நடைபெறுகின்றன.
காவல்துறையில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய சில கறுப்பு ஆடுகளும் முக்கியமான பதவிகளில் இருந்து கொண்டு, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்குத் துணை போகிறார்கள். தங்களுடைய பிள்ளையின் கொலைக்கு நியாயம் கேட்டு, அந்தக் குடும்பத்தாரும் உற்றார்-உறவினரும் ஜனநாயக ரீதியாகப் போராடுவதைக் கூட அனுமதிக்காமல் காவல்துறை தனது பலத்தைக் கொண்டு மிரட்டுவதாகவும் தகவல்கள் வருகின்றன; இது கடும் விளைவுகளை உருவாக்கும்.
ஒரு வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகின்றபொழுதே குளறுபடிகளை உருவாக்கிவிட்டால், அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற அடிப்படையிலேயே செயல்படுவதாகத் தெரிகிறது. மேலும் அந்தச் சம்பவத்தை நேரடியாகக் கண்ட ஒரு பெண்மணியும் மிரட்டப்பட்டதாக அறிகிறோம். ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து, ரவுடிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிட்டது என்ற ஓர் அவலநிலையை நாம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
மதுரை – அச்சம்பத்து பாண்டீஸ்வரன் கொலை முழுக்கமுழுக்க சாதியக் கொலையே. இதை காவல்துறையும் அரசும் மூடிமறைக்க முயற்சி செய்யக்கூடாது; மாறாக குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்; அந்தக் குடும்பத்திற்குண்டான சட்டரீதியான அனைத்து உதவிகளையும் இழப்பீடுகளையும் காலம்தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். பாண்டீஸ்வரன் கொலைக் குற்றவாளிகள் எவரையும் தப்பிக்கவிடாமல், அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நெல்லையில் தொடங்கி மதுரைக்குப் பரவும் தென்மாவட்டக் கொலைகள்!!
நேற்று பெருங்குடி, இன்று மதுரை அச்சம்பத்து!
ரவுடிகளின் கைக்கு மாறும் சட்டம் ஒழுங்கு!!
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.11.2023





