மணிமண்டபங்களை திறக்காமல் கால தாமதப்படுத்துவதா?
408 Views
![]()
முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது என்பதற்காக
எம்.கே.தியாகராஜ பாகவதர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம்,
பெரும் பிடுகு முத்தரையர் மணிமண்டபங்களை
திறக்காமல் கால தாமதப்படுத்துவதா?
இந்திய தேச விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், சமத்துவத்தை நிலைநாட்டப் போராடியவர்கள், பண்டைய தமிழ் நிலப்பரப்பை சிறப்புற ஆண்டவர்கள், கலைத்துறைகளில் தமிழர் மாண்புகளை உயர்த்தி பிடித்தவர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு மணிமண்டபங்கள், நினைவு தூண்கள் அமைத்தும்; அவர்களது பெயர்களில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைத்தும் கௌரவப்படுத்தி வருகிறோம்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் திரைப்படத்துறை நிழற்படமாக இருந்த காலத்திலிருந்து பிரசித்தி பெற்று விளங்கியவர். பொதுவாக திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பதற்கு வேறு யாராவது இருப்பார்கள். ஆனால் தியாகராஜ பாகவதர் தன் சொந்த குரலில் பாடி புகழ்பெற்றவர். அவருடைய காலத்தில் தமிழகத்தின் எல்லை தாண்டி இந்தியா முழுமைக்கும் பிரசித்தி பெற்ற நடிகராகத் திகழ்ந்தவர். சாதாரண ஏழை எளிய விஸ்வகர்மா கைவினைஞர்கள் சமுதாயத்தில் பிறந்த அவர் தன் சொந்த உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் புகழ் பெற்றவர். அவரது புகழைப்போற்றக் கூடிய வகையிலும்;
புதுக்கோட்டை, திருச்சி மையமாக வைத்து ஆட்சி செய்த முத்தரையர் சமுதாயத்தின் மாபெரும் அடையாளமாக விளங்கக்கூடிய பெரும் பிடுகு முத்தரையர் அவர்களது நினைவாகவும்; நீதிக் கட்சியில் முக்கியமான பொறுப்புகளை வகித்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் போராளியும் அறிவுஜீவியும் பகுத்தறிவு வாதியுமான சர் ஏ.டி பன்னீர்செல்வம் அவர்களது நினைவாகவும் திருச்சி மாநகரின் முக்கிய பகுதியில் மணி மண்டபங்கள் அமைக்க முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கி அப்பணிகள் முடிக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. எனினும் அம்மூன்று மாமனிதர்களின் மணி மண்டபங்களும் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மணிமண்டபங்கள் பல மாதங்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்; கட்டிடப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும் அரசு காலம் தாழ்த்தி வருவது கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிக் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்ற அரசியல் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.
பல கோடி ரூபாய் மதிப்பில் மணி மண்டபங்களைக் கட்டிவிட்டு அவை உடனடியாக திறக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வராமல் மூடி வைத்திருப்பது கட்டிடங்கள் பழுதாவதற்கு வழிவகுக்கும். ’சுற்றுப்புற மதில் சுவர் கட்டப்படவில்லை; அதனால் திறக்கப்படவில்லை’ என்பது ’குதிரை வாங்கியாயிற்று, சாட்டை வாங்க முடியவில்லை’ என்ற பழமொழிக்கு ஏற்பவே அந்த பதில் இருக்கின்றன.
திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான பேருந்து நிலையம் அருகே இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் உள்ள மறைந்த மூன்று மாமனிதர்களின் மணி மண்டபங்களையும் விரைந்து திறந்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.08.2023






