மல்யுத்த வீரர்களுடன் மத்திய அரசு மல்லு கட்ட கூடாது.!

Don’t Wrestle with Wrestlers!
சர்வதேச வீரர்கள் என்பதால்,
சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தலையிடுவதற்கு முன்பு,
மத்திய அரசே தீர்வு காண வேண்டும்!

அறிக்கைகள்
s2 460 Views
  • Dr Krishnasamy

    மல்யுத்த வீரர்களுடன் மத்திய அரசு மல்லு கட்ட கூடாது.!

  • Dr Krishnasamy
Published: 01 Jun 2023

Loading

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறி ஏறக்குறைய இரண்டு மாதங்களாக மல்யுத்த வீரர்கள் இந்தியாவின் தலைநகரில் போராடி வருகிறார்கள். தங்களின் வாழ்நாளில் இளம் பருவத்தை முழுமையாக அர்ப்பணித்து ஒலிம்பிக் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி உட்பட பல பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர்கள் மல்யுத்த வீரர்கள். 18 வயதிற்கு உட்பட்ட சிறுமி உட்பட பல மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கழகத்தின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற தலைவருமான பிரிஜ் பூஷன் அவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். எனவே, அவர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் அனைத்து மல்யுத்த வீரர்களும் போராடி வருகின்றனர்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், மல்யுத்த கழகத்தின் தலைவர் ஆகிய உயர் நிலையில் உள்ள ஒருவர் மீது சாதாரண காவல்துறையால் பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது. எனவே தான் உயர்மட்ட விசாரணை கோரியும், அவரை மல்யுத்த கழகத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையா? பொய்யா? என்பது தெரியாது. எனினும் நெருப்பு இல்லாமல் புகையாது என்பதற்கு இணங்க ஏதோ ஒரு பிரச்சனை இப்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி தங்களை அர்ப்பணித்த மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்ற கட்டடம்; பிரதமர், ஜனாதிபதி இல்லங்களுக்கு அருகாமையில் போராடி வருகிறார்கள்.

எனவே, பிரச்சனை மற்றும் போராடக் கூடியவர்களின் மனநிலையை அறிந்து அரசியல் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மல்யுத்த வீரர்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நீதியும் கிடைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காலம் தாழ்த்துவது பலனளிக்காது.

மத்திய அரசுடன் மல்யுத்த வீரர்களால் மல்லுக் கட்ட முடியாது. மல்யுத்த வீரர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் என்பதால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தலையிட வாய்ப்பு உண்டு. எனவே, இப்பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக முற்றுவதற்கு மல்யுத்த வீரர்களுடன் மத்திய அரசு மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு பிரிஜ் பூஷன் அவர்களை மல்யுத்த கழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, ExMLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.06.2023