மதுவிலிருந்து தமிழகத்தை மீட்டிட! புதிய தமிழகம் படைத்திட, அணி திரண்டு வாரீர்.!

தமிழக மக்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைமையில் சென்னையில் 10.05.2023 அன்று சங்கமிப்போம்.! தமிழர்களை தலைநிமிர செய்வோம்.! புதிய தமிழகம் படைப்போம்..!

செய்திகள்
s2 393 Views
  • Tasmac

    மதுவிலிருந்து தமிழகத்தை மீட்டிட! புதிய தமிழகம் படைத்திட, அணி திரண்டு வாரீர்.!

  • Tasmac
Published: 08 May 2023

Loading

மதுவிலிருந்து தமிழகத்தை மீட்டிட!
புதிய தமிழகம் படைத்திட,
அணி திரண்டு வாரீர்.!

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவான இந்திய வல்லரசுக்கான மீட்சியென கருதி விட வேண்டாம்.!

’மது’ என்னும் அரக்கனிடமிருந்து தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை – மாணவர் சமுதாயத்தை மீட்க வேண்டும் என்பதால் இந்த தலைப்பு அவசியமாகிறது. ஆம், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்களது மாணவப் பருவத்திலிருந்தே மது என்னும் சதி வலையில் சிக்கி தங்களது வாழ்க்கையை தொலைப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சிக்கும் தடைக்கல்லாய் அமைந்து வருகிறார்கள். மதுவும், சூதும் நாட்டுக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் தடையாய் அமையும் என்பதை அறிந்த வள்ளுவ பெருந்தகையே ‘கள் உண்ணாமை’ என்கிற அதிகாரத்தை திருக்குறளில் வைத்துள்ளார். ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ இது ’மக்களாட்சி -மக்களுக்கான ஆட்சி’ என்பதையெல்லாம் முற்றாக மறந்துவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் மதுவை ஏகபோகமாக விற்கக்கூடிய அவலம் அரங்கேறி வருகிறது.

ஒரு காலத்தில் மது குடிப்பவர்கள் என்றாலே ஒதுக்கித் தள்ளும் காலம் இருந்தது. காலப்போக்கில் அது உழைத்த களைப்பிற்கு மட்டும் என்று அருந்தி, படிப்படியாக பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சிறிது குடிக்கலாம் என்று ஆரம்பித்து, தற்போது ’உழைப்பதே குடிக்கத்தான்’ என்ற சிந்தனைக்கு மக்கள் செல்லும் அளவிற்கு அரசாங்கமே மது கடைகளை வீதிக்கு வீதி திறந்து வியாபாரம் செய்வது வருகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட இந்த அளவிற்கு நிலைமைகள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளச்சாராயம் விற்பக்கம் விற்கப்பட்டு வந்தது. சாராயம் விற்பவர்கள் சமூகத்தில் பெரும் குற்றவாளிகளாக பார்க்கப்பட்டார்கள்; தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது அரசாங்கமே அத்தகைய சாராயத்தை ‘மதுபானம்’ என்ற பெயரில் விற்று ‘மது மகிழ்வுக்காக – அரசின் வருவாய்’ என்ற கருத்தை விதைத்து இருக்கிறது.

மக்களின் வருவாய் அனைத்தையும் உறிஞ்சிவிட்டு, அரசு கஜானாவிற்கு எவ்வளவு பணத்தை கொண்டு வருகிறோம் பார்த்தீர்களா? எங்களது வலிமையும், வல்லமையும் இப்பொழுது புரிகிறதா? என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ’வல்லவனுக்கு வல்லவன்’ இவ்வையகத்தில் உண்டு என்ற பழமொழிக்கேற்ப அரசு கஜானாவிற்கு செல்ல வேண்டிய பணத்தை தன்னுடைய கஜானாவிற்கு திருப்பிக் கொள்ளும் ’கரூர் வல்லவர்கள்’ இப்போது அரசாங்கத்தில் – அதிகாரத்தில் இருக்கவே செய்கிறார்கள். மதுவினால் இன்று பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாரபட்சமில்லாமல் அனைத்து தரப்பினரும் அடிமைப்பட்டு கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்று மதுவிற்கு அடிமையாகும் மாணவர்களால் வாழ்வின் வழிகாட்டியாக பார்க்கப்பட்ட ஆசிரியர்களும் தாக்கப்படும் சூழல் உருவாகிவிட்டது. மது அருந்த தெரியாவிட்டால் அவர்கள் ஏதோ வாழவே தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம் அனைவருடைய மனதிலும் விதைக்கப்படுள்ளது.

இந்த பாலாய் போன குடியால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது என்பதை கணக்கில் கூட கொள்ள முடியாது. எத்தனையோ குழந்தைகள் தன் தகப்பனை இழந்து, தாயை இழந்து நிற்கதியாய் நடுத்தெருவில் நிற்கும் நிலை நீடித்துக் கொண்டே தான் செல்கிறது. தந்தைகளின் குடியால் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டு, படிப்பை பாதியிலே விட்டுவிட்டு, வருவாயை தேடி ஓடும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது.

மதுவினால் அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்கள் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினராகவே இருக்கிறார்கள். தனது வருவாயில் பாதிக்கும் மேல் டாஸ்மாக்கிலேயே தொலைத்து விடுகிறார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் தங்களது உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல் படுகிறார்கள்.

உணவு தேவைக்கு தள்ளாடுபவர்களால் எப்படி தன் குழந்தைக்கு தரமான கல்வியை அமைத்து கொடுக்க முடியும்? அந்த குழந்தைகளுக்கான அத்தியாவசிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? அரசு மக்களுக்கு இலவசங்களை வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை மேலும் மேலும் சோம்பேரிகளாகவே வைத்திருக்கிறது. ஒரு பக்கம் இலவசங்களை கொடுத்துவிட்டு, மறுபக்கம் டாஸ்மாக் மூலமாக அவர்களின் கொஞ்சநஞ்ச வருமானத்தையும் உறிஞ்சும் வேலையை செவ்வனை செய்கிறது.

இப்போது அமைந்துள்ள ’திராவிட மாடல் அரசு’ தனது மது புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நடத்தியுள்ளது. இனி மது குடிக்க அஞ்சவோ, தயங்க கூடாது என்கிற நோக்கத்தில் அரசிடம் உரிமத்தை வாங்கி இனி கல்யாண வீடு, மண்டபம், விளையாட்டு அரங்கம், பொதுக்கூட்டம் என எல்லாவற்றிலும் மது அருந்திக் கொள்ளலாம் என்கிற புரட்சி திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இனி கல்யாண மண்டபங்களில் மணமகன் அறை, மணமகள் அறை போன்று மது குடிப்போர் அறையும் ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்து கொடுத்துள்ளது இந்த ’திராவிடம் மாடல்’ அரசு.!

இதைவிட இன்னும் எப்படி சிறப்பாக மது விற்பனை செய்யலாம் என திட்டம் தீட்டுகிறார் மது விற்பனை அமைச்சர். அதன் முன்னேற்றம் தான் ”தானியங்கி மது வழங்கும் இயந்திரம்” போல. குடிமகன்களை மட்டுமே பற்றி சிந்திப்பதனால் என்னவோ இவர்கள் அடிக்கடி தங்களை ’குடிமக்களுக்கான அரசு’ என்று சொல்லிக் கொள்கிறார் போல!

தமிழக முழுவதும் 5329 டாஸ்மாக் கடைகள் நிறுவப்பட்டு மக்கள் குடி சேவையாற்றப்படுகிறது. இது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நூலகங்களின் எண்ணிக்கையான 4042யை விட 1287 கடைகள் அதிகமாகும். இதிலிருந்து இது படிப்பவர்களுக்கான அரசா? அல்லது குடிப்பவர்களுக்கான அரசா? என்பது எளிதில் விளங்கிவிடும்.

அரசால் டாஸ்மாக் தொடங்கப்பட்ட 2003-2004 வருவாய் ஆண்டில் வெறும் 3,640 கோடி. ஆனால், 2023-24 நடப்பு ஆண்டில் வருவாய் மட்டும் ரூ 44,099 கோடி. இந்த இடைப்பட்ட 19 ஆண்டுகளில் மட்டும் அரசின் வருவாய் 10 மடங்காக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 2000 – 3000 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் ’திராவிட மாடல்’ அரசு பதவி ஏற்றவுடன் ஒரே ஆண்டில் மது வருமானம் 8000 கோடி உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டு குடிமகன்கள் ஒரு நாளைக்கு 122 கோடிக்கும், ஒரு மாதத்திற்கு 3,666 கோடிக்கும் குடித்தே தமிழகத்தை காப்பாற்றுகிறார்கள். மதுபான ஆலை நிறுவனங்களுக்கு செல்லும் லாபம் எல்லாம் தனி கணக்கு.

தற்போது நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல், வன்கொடுமை, சாலை விபத்து மற்றும் குடும்ப பிரச்சனை போன்ற 99% பிரச்சினைகளுக்கு மதுவே அடித்தளமாக அமைகிறது.

இத்தனை கடைகளிருந்து லாபம் கிடைத்தாலும் கள்ளச் சந்தையில் மதுவை விற்று லாபம் பார்க்கும் கும்பல் ஒன்றும் தற்போது உலா வருகிறது. நேரம் காலம் பார்க்காமல் 24*7 என வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இந்த மதுக்கடையில் வேலை பார்ப்பவர்கள் வேலையில்லா திண்டாட்டம் மூலம் ரூ8000 முதல் 12000 மாத சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதற்கு உரிய ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை.

இந்தியாவிலேயே முதல் மதுவிலக்கு திரு. ராஜாஜி அவர்களால் சேலத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை வைத்து அன்றே மது இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைத்தும் ஒளித்தும் விற்கப்பட்ட மது அரசாங்கத்தால் இன்று பட்டவர்த்தனமாக விற்கப்படுகிறது. அத்தகைய மதுவை ஒழித்து தமிழ் சமுதாயத்தையும், இளைஞர்களையும் மீட்க வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.

எனவே, தமிழக மக்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைமையில் சென்னையில் 10.05.2023 அன்று சங்கமிப்போம்.! தமிழர்களை தலைநிமிர செய்வோம்.! புதிய தமிழகம் படைப்போம்..!

தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி
08-05-2023