2026 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்கள் குறித்து விவாதித்து செயலாற்றுவதற்கான புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை, புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி Ex.MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. விஜய் அவர்கள் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகியும் அரசின் செயல்பாடற்ற தேங்கிய நிலை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் மிகுந்த கவலையை உருவாக்குகிறது. வெற்று அறிக்கைகள், வீராப்புப் பேச்சுக்கள் எந்தவிதப் பலனையும் தந்துவிடாது. அரசுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், inertia நிலையில் இருந்து விடுபட்டு ”Action Mode-ல் செயலாற்ற” புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

2. அனைத்துத் தரப்பு மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகிறது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருமானமும் இல்லாத இக்காலகட்டத்தில், விண்ணை முட்டும் விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க புதிய தமிழகம் கட்சி உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

3. ”ஊழலை ஒழிப்பதே தனது தலையாய லட்சியம்” எனச் சூளுரைத்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் அவர்கள் ’கட்சியையும் ஆட்சியையும் வலுப்படுத்துகிறோம்’ எனும் பெயரில் தனது அடிப்படை லட்சியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், தனது கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் ஊழல் பெருச்சாளிகள் ஊடுருவி, உலா வர அனுமதிக்கக் கூடாது என அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

4. உணவுக் களஞ்சியமாக கருதப்படும் ”டெல்டா” மாவட்டங்களில் நிரந்தரமாக விளங்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டை சீர்குலைக்கும் வகையில் கர்நாடக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ”மேகதாது” அணைக்கட்டைத் தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவும், அதில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் தீர்மானத்துடன் பெரும் குழுவாக டெல்லி சென்று பாரதப் பிரதமர் அவர்களைச் சந்தித்து மேகதாது அணைக்கட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணவும் வேண்டுமென அரசியல் உயர்மட்டக் குழு முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறது.

5. ஆட்சி, அதிகாரம் என்பது யாருக்கும் நிரந்தரமில்லை. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியோ, ஆசை வார்த்தை காட்டியோ பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை, பிரதிநிதிகளை தங்கள் வசம் இழுப்பது அரசியல் முறைகேடானது. அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதும், அவர்கள் தவெக-வில் இணைவதும் இன்று நல்லதைப் போன்று தோன்றலாம்; ஆனால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும். முதல்வர் விஜய் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ இதை ஊக்குவிப்பதை கைவிட வேண்டும்.

6. அமைச்சர் பதவிகள், வாரியங்கள் உள்ளிட்ட ஆதாயத்தை மனதில் வைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்று, இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைவதை ”அரசியல் சூரத்தனமாக” கருதி, இதற்கு ஒரு முடிவு காணும்வரை காலியாகும் இடங்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறோம். விரைவில் ஆளுநர் அவர்களைச் சந்தித்து, குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்த உள்ளோம்.

7. ஆட்சிக்கு வந்தவுடன் மது, போதை மற்றும் புகைப் பொருட்களை முற்றாக ஒழித்துவிடுவார்” என்ற வாக்குறுதியை முன்னிறுத்தியே தவெக இளைஞர்கள் பொதுமக்களிடம் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆனால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், கஞ்சா, புகை, மது மற்றும் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளுக்கு எதிராக ‘Start Run Stop Drugs’ என்ற பெயரில் வெறும் மாரத்தான் ஓட்ட இயக்கங்களை நடத்தி விளம்பரம் தேடிக் கொண்டார்களே தவிர, போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டமும், தொலைநோக்குப் பார்வையும் தற்போதைய அரசிடம் இல்லை. வெறுமனே மாரத்தான் போன்ற பரப்புரைகளோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தங்குதடையின்றிப் புழங்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதை வஸ்துகளையும் வேரோடு ஒழிக்கத் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான கள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநில உயர்மட்டக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

8. தமிழகத்தின் தாய்மார்களும், இளம் பெண்களும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்ற ஒற்றை நம்பிக்கையில்தான் தவெக-விற்கு வாக்களித்து, விஜய் அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, வெறும் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்து ஒரு கண்துடைப்பு நாடகத்தை மட்டுமே இந்த அரசு நடத்தியுள்ளதே தவிர, பூரண மதுவிலக்கிற்கான எந்தவொரு முறையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேலும், அந்த 717 கடைகளே முழுமையாக மூடப்படாதச் சூழலில், அவ்வாறு மூடப்பட்டதாகக் கூறப்படும் சில அரசு கடைகளின் அருகிலேயே, காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு தனியார் மனமகிழ் மன்றங்கள் (Clubs) எவ்விதத் தடையுமின்றிச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய போக்கு, அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, தனியார் மனமகிழ் மன்றங்களின் மது விற்பனையைப் பெருக்கவும், அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படவுமே இந்த அரசு முற்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, வரும் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை இந்த அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும்; தவறும்பட்சத்தில், ஒத்த கருத்துடைய பிற அரசியல் மற்றும் சமூக இயக்கங்களை ஒன்றிணைத்து, தமிழகம் தழுவிய மாபெரும் தொடர் போராட்டங்களைப் புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்கும் என இம்மாநில உயர்மட்டக் குழு வாயிலாக எச்சரிக்கிறோம்.

9. தமிழகத்தில் டெண்டர் காலம் முடிவடைந்த டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கு (Bar) எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது. மேலும், உரிய அனுமதியின்றி, விதிகளுக்குப் புறம்பாகச் சட்டவிரோதமாக இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை பார்களையும் கண்டறிந்து, அவற்றை உடனடியாக மூடித் தடை செய்ய வேண்டுமென இம்மாநில உயர்மட்டக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

10. ஜூலை 23 ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடி தாமிரபரணியில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு தினச் சீருடைப் பேரணியில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

11. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஏறக்குறைய ஆறு தலைமுறைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடந்த இரண்டு வருடங்களாக சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் அம்மக்கள், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி அங்கேயே வாழும் உரிமை பெற்றவர்கள் ஆவர். எனவே, 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, மாஞ்சோலை மக்களின் துயர் துடைக்க கள நிலவரத்தை கண்டறிய அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை அனுப்பிட வேண்டுமென என புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

12. இந்தியா சுதந்திரம் பெற்று, 78 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும், தமிழகத்தில் வாழும் பல்வேறு தரப்பட்ட எளிய மக்கள், நிலையான வாழ்வாதாரமும் சொந்த வீடு, மனையும் இன்றி வாழும் அவலநிலை நீடிப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. அதே வேளையில், தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் ஆக்கிரமிப்பிலும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களும் உரியவர்களிடம் சேராமல் உள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்களையும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களையும் முழுமையாக மீட்க வேண்டும். அவ்வாறு மீட்கப்படும் நிலங்களை, தமிழகத்தில் வாழும் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு தலா 2 ½ ஏக்கர் வீதம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என இம்மாநில உயர்மட்டக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

13. உலக மற்றும் இந்திய அளவில் நிலவும் ‘எல்-நினோ’ (El Niño) தாக்கத்தின் காரணமாக தற்போது தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட சூழலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையையும், விவசாயிகளின் சாகுபடித் தேவையையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இப்போதிலிருந்தே உரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாத்தல், குடிநீர் விநியோகத்தைச் சீரமைத்தல் மற்றும் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு, தண்ணீர் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என இம்மாநில உயர்மட்டக் குழு கேட்டுக்கொள்கிறது.

14. கடந்த மாதம் தமிழக அரசு, நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் விவசாய மேம்பாட்டிற்காகவும், விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. ஆனால், இத்திட்டத்தை ஆளும் கட்சியினர் முற்றிலும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது நீர்நிலைகளில் ஆளும் கட்சியினருக்கு மட்டுமே வண்டல் மண் எடுக்க முன்னுரிமையும் அனுமதியும் வழங்கப்படுவதாகவும், விதிகளுக்குப் புறம்பாக அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு ஆழமாக, மண் கொள்ளை நடைபெறுவதாகவும், அவ்வாறு எடுக்கப்படும் வண்டல் மண் வணிக நோக்கில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகள் உடனடியாக அனைத்து நீர்நிலைகளிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சியினர் மீதும், அதற்குத் துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநில உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

15. நீதிமன்றங்களில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் திறமையான அரசுப் பொதுக் குற்றவியல் வழக்கறிஞர்கள் (Public Prosecutor) மற்றும் அரசு முதன்மை வழக்கறிஞர்களைப் (Government Pleader) தேர்வு செய்வதற்குப் பதிலாக, ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பெரும் தொகையை, அதாவது ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு இந்த நியமனங்களைச் செய்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய மிக முக்கியப் பதவிகள், இவ்வாறு ஆளும்கட்சியினரின் முறைகேடுகளாலும் லஞ்சப் பரிமாற்றங்களாலும் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுவது, பணபலம் கொண்ட குற்றவாளிகள் தங்களை மிக எளிதாகச் சட்டத்திலிருந்து தற்காத்துக்கொள்ள வழிவகுத்துவிடும். இது ஒட்டுமொத்த நீதி நிர்வாகத்தையே முற்றிலுமாகச் சீரழித்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் இத்தகைய லஞ்ச ஊழல் தலையீடுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தகுதி, நேர்மை மற்றும் மூத்த வழக்கறிஞர்களின் அனுபவம் ஆகியவற்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு, முறையான, வெளிப்படையான வழிகாட்டுதல்களின்படி தகுதியான அரசு வழக்கறிஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என இம்மாநில உயர்மட்டக் குழு தமிழக அரசை மிக அழுத்தமாக வலியுறுத்துகிறது.

16. தமிழகத்தில் நேரடி லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தாலும், அதற்கு மாற்றாக, கைபேசி மற்றும் இணையதளம் வழியாக பரவி வரும் ‘ஆன்லைன் கேமிங்’ எனப்படும் இணையதளச் சூதாட்டங்களுக்கும், ஒரு நம்பர், இரண்டு நம்பர், மூன்று நம்பர் லாட்டரி என்ற பெயர்களில் நடைபெறும் சூதாட்ட செயல்களுக்கும் இரையாகி நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் கைபேசி மற்றும் இணையதளங்கள் வாயிலாகப் பொதுமக்களை ஏமாற்றும், அனைத்து வித ஆன்லைன் சூதாட்டங்கள், டிஜிட்டல் நம்பர் லாட்டரி செயலிகள் மற்றும் சட்டவிரோத இணையதளங்களை உடனடியாக கண்டறிந்து முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இம்மாநில உயர்மட்டக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

*****************************************