’பொல்லாதது’ – வரக்கூடாது!; முதல்வர் விஜய் அவர்கள் வாயிலிருந்து ’நல்லதே’ வரட்டும்!

அறிக்கைகள்
s2 8 Views
Let nothing 'bad' come forth—may only 'good' words come from Chief Minister Vijay!
Published: 06 Jun 2026

Loading

’பொல்லாதது’ – வரக்கூடாது!; முதல்வர் விஜய் அவர்கள் வாயிலிருந்து ’நல்லதே’ வரட்டும்!
………………………………………………………….
ஜூன் ஒன்றாம் தேதி திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், விஜய் அவர்கள் பேசிய “நல்லா வருது…” என்ற பேச்சு, எதிர்க்கட்சிகளால் மட்டுமன்றி, அவரை விரும்பி வாக்களித்த சாதாரண நடுநிலை வாக்காளர்களாலும் ரசிக்கப்படவில்லை; ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை.
மனுத்தாக்கல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23 ஆம் தேதி வரை அவர் ஒரு கட்சியின் வேட்பாளர் மட்டுமே; ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்று 107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் மே 9 ஆம் தேதி வரை முதல்வர் நாற்காலிப் பந்தயத்தில் (chief minister race) முன்நின்றவர்; ஆளுநரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட மே 10 ஆம் தேதி முதல், மே 13 ஆம் தேதி வரை CM Designate நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு ’தமிழக மக்களின் முதல்வர்’.
ஒரு கட்சியின் தலைவர் என்ற ஸ்தானத்தில், பிற கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதிலும் கண்ணியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. சில நேரங்களில் சில தலைவர்கள் எல்லை மீறிப் போவதும் உண்டு; அது வேறு விஷயம். ஆனால், முதலமைச்சரான பிறகு மக்கள் சந்திப்பின் நன்றி முதல் அறிவிப்புக் கூட்டத்திலேயே விஜய் அவர்கள் எல்லை மீறி, எதிர்க்கட்சிகளைத் தடித்த வார்த்தைகளைச் சொல்லித் திட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை.
விஜய் அவர்கள் என்றைக்கு அரசியலில் நுழைந்தாரோ, அன்று முதல் தன்னை ஒரு மாற்றுச் சக்தியாக நிலைநிறுத்திக்கொள்ளவே முயன்றார். அன்றிலிருந்தே அவரையும் அவரது ஆதரவாளர்களையும் எதிர்த்தரப்பினர் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அவரைக் காட்டிலும் அவரது ரசிகர்களை மிக மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.
பொதுவாக, எந்தவொரு அரசியல் கட்சியை அல்லது இயக்கத்தை நடத்தக்கூடியவர்களும் தன்னையோ, தங்களது இயக்கத்தாரையோ எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும்பொழுது வாய்மூடி மௌனமாக இருக்க மாட்டார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனது தொண்டர்களை ‘அணில் குஞ்சுகள்’ என்றும், ‘தற்குறிகள்’ என்றும் விமர்சனம் செய்தபோது, அதற்கு அவர் அப்பொழுதே பதில் கூறியிருந்தால் அல்லது எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும் யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், அன்று அவரை ‘ஆர்.எஸ்.எஸ்.-இன் செல்லப் பிள்ளைகள்’ என்று விமர்சனம் செய்தவர்களை எல்லாம் தற்போது தனது மடிமேல் ஏற்றி வைத்துக்கொண்டு, அமைச்சர் பதவியும், வேறு வேறு பதவிகளும் கொடுக்கிறார். பின், எவரை அல்லது யாரைக் குறிப்பிட்டு விஜய் அவர்கள் பேச விரும்புகிறார்?
கடந்த இரண்டு வருடங்களாகத் தனது இயக்கத்தினர் மீது வைக்கப்பட்ட ‘தற்குறி’ விமர்சனத்திற்கு, தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பிறகுதான் பதில் கூற வேண்டுமா? அதுவும் கூட “நல்லா வருது…” என்று ஏதோவொரு கடுமையான வார்த்தையைத்தான் பிரயோகித்திருக்க வேண்டுமா? அதேபோன்று, ”கவர்ச்சி” விமர்சனத்திற்கு ஏதோ சொல்ல வந்து, “வேணாம்…” என நிறுத்திக்கொண்டது, முதல்வர் விஜய் அவர்களிடமிருந்து எவரும் எதிர்பார்த்தது அல்ல.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சார கால விமர்சனங்களுக்குக் காலம் கடந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் முதல்வர் விஜய் அவர்களுக்குத் தற்போது இல்லை. முதலமைச்சராக ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ உண்டு.
40 – 50 வருடங்கள் அரசியல் பொதுவாழ்வில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட பல தலைவர்களுக்கு கிடைக்காத ஆதரவும் செல்வாக்கும், அரசியல் களத்திற்கு வந்த இரண்டே ஆண்டில் விஜய் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. இது எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு நபருக்கும் அல்லது தலைவருக்கும் எளிதாக எல்லா காலகட்டத்திலும் கிடைக்காத வாய்ப்பு.
கடந்த 60 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளின் மீதான வெறுப்பும் கோபமும்; பல வருடங்களாகத் தமிழகத்தில் நிலவி வந்த மிதமிஞ்சிய ஊழலும்; சாதியக் கொடுமைகளும் ஏற்றத்தாழ்வுகளும்; மது மற்றும் போதை வஸ்துகளால் ஏற்பட்ட சமூகச் சீரழிவுகளும்; குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்மை போன்ற காரணிகளாலும்; தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையபெறாதது, சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களின் தாக்கங்களை முன் கூட்டியே கணிக்கத் தவறியது போன்றவற்றாலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வரையிலும் பெரும்பாலான இளைஞர்களும், அதற்கு பிறகு ஏற்பட்ட அசாதாரணமான மாற்றங்களால் ஏப்ரல் 23 ஆம் தேதி பெரும்பாலான பெண்களும் நடுநிலையாளர்களும் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.
உங்களது அரசிற்கு, குறிப்பாக முதல்வரான உங்கள் முன்னால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. நுனி முதல் அடி வரை புரையோடிப்போயிருக்கிற ஊழல் சாம்ராஜ்யத்தைத் தகர்க்க வேண்டியுள்ளது. மது மற்றும் போதை பழக்க வழக்கங்களை முற்றாகச் சமூகத்திலிருந்து விரட்ட வேண்டியுள்ளது.
அரசியல் மற்றும் அதிகாரத்தில் பங்கேற்ற அனுபவம் இல்லாத அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்; அதிகாரம், பதவி என்ற ஒற்றை காரணங்களுக்காக மட்டுமே உங்களோடு பயணிக்கும் ஊசலாட்டம் கொண்டவர்கள்; தேர்தல் காலங்களில் கொண்ட தோழமையைப் பயன்படுத்தி, தலைமைச் செயலகத்திலேயே இன்னொரு அதிகார மையமாகப் பரிணமிக்க எத்தனிக்கும் ஊழல் மற்றும் லாட்டரி, சூதாட்டப் பேர்வழிகளிடமிருந்து உங்களையும் தமிழக மக்களையும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், ஆட்சியை மிகுந்த கவனத்துடன் நகர்த்திச் செல்ல வேண்டிய கடமையும் உள்ளது.
அதுமட்டுமல்ல, தாங்கள் மக்களுக்குக் கொடுத்துள்ள எண்ணற்ற தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். எனவே, தேர்தல் காலக் குற்றச்சாட்டுகளை மனதில் வைத்துக்கொண்டு, அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று நேரத்தை வீணடிப்பதோ, “நல்லா வருது…” என்று எவ்வித பொல்லாததையும் சொல்ல நினைப்பதும் கூடாது; வாய் தவறியும் சொல்லக் கூடாது.
தங்களது வாயிலிருந்து நல்லதே வரட்டும், ஆட்சியில் நல்லதே நடக்கட்டும்! அதுவே தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
06.06.2026