ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி டாஸ்மாக் ”Party Fund” கொள்ளை!
115 Views

![]()
ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி டாஸ்மாக் ”Party Fund” கொள்ளை!
பலனடைந்த கட்சிப் பெயரைச் சட்டமன்றத்தில் வெளியிடாதது ஏன்?
முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு,
’ரீல்ஸ்’களுக்குப் பயன்படுமே தவிர, ரியல் அரசியலுக்குப் பயன்படாது!
……………………………………
கடந்த 40 தினங்களாக விஜய் காட்டிய மௌனம் கலைந்து, ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மூலம் தனது அரசியல் எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் துவம்சம் செய்துவிடப் போகிறார் என்று இன்று பலரும் எதிர்பார்த்தனர்.
தங்களது கட்சிக் கூட்டங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மாநாடுகளிலும் அரசியலுக்காக ஆதாரமின்றிக் கூட சில விஷயங்களைப் பேசிவிடலாம்; ஏன், திரைப்படங்களில்கூட வசனகர்த்தா எழுதியபடி வசனத்தை முழங்கிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் அவ்வாறு பேச இயலாது; ஆதாரம் இல்லாமல் எதையும் பேசவும் கூடாது.
டாஸ்மாக்கில் ”Party Fund” அதாவது, கட்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்த விஜய், எந்தக் கட்சிக்கு அந்த Fund சென்றது என்பது குறித்த ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தால், அது அரசியல் பூதாகாரமாக வெடித்திருக்கும்.
மேலும், இது இன்று அவர் வைக்கும் புதிய குற்றச்சாட்டும் அல்ல; கடந்த இரண்டு வருடங்களாக மேடைகளில் அவர் பேசிவரும் குற்றச்சாட்டு. அன்று அவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமே; மே மாதம் 10ஆம் தேதிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
கடந்த 40 நாட்களாக ஆட்சி – அதிகாரத்தில் இருந்தும், மாதம் சராசரியாக ரூ. 100 கோடி என ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் எந்தக் கட்சிக்குக் கைமாறியது? அதன் நேரடிப் பயனாளிகள் யார்? என்பதை முழுமையாக ஆய்ந்து, அறிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழகச் சட்டமன்றத்தில் தனக்குக் கிடைத்திருக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து உண்மைகளையும் வெளியிட்டு இருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்; அதைவிடுத்து மீண்டும் அதே குற்றச்சாட்டையே திரும்பத் திரும்பச் சொல்வதில் ”அரசியல் அசுரத்தனமே (RHETORIC) – வெறுமையே” வெளிப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்த்த அவரது குற்றச்சாட்டு, வெறும் ”புழுதிக்காற்றாகவே” போய்விட்டது.
ஆட்சிக்கு வந்த பிறகும் தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனைகளைப் பெறுவது ”ஆரோக்கியமானது” அல்ல.
முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு நமத்துப்போன ’ரீல்ஸ்’களுக்குப் பயன்படுமே தவிர, ரியல் அரசியலுக்குப் பயன்படாது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
23.06.2026






