காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காக கர்நாடகத்திடம் எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டதா விஜய் அரசு?
5 Views

![]()
தமிழக அரசின் சார்பாக மூன்று மாதங்களுக்கான, காவிரி நீரைப் பெற எவ்வித கோரிக்கையும் வரவில்லை – கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி!
காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காக கர்நாடகத்திடம் எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டதா விஜய் அரசு?
………………………………………..
டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது காவிரி ஆகும். அதை மட்டுமே நம்பி ஏறக்குறைய 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் டெல்டா பகுதிக்கு உரிய நேரத்தில் காவிரி நீர் வந்து சேரவில்லை எனில், கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேவைக்குப் பெரும் குந்தகம் ஏற்படும்.
காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு ஆண்டில் 177.25 டி.எம்.சி நீரை கர்நாடக அணைக்கட்டுகளிலிருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் பிரித்துத் தர வேண்டும். குறிப்பாக வறட்சியான – distress காலமாக கருதப்படக்கூடிய மே மாத 2.5 tmc, ஜூன் மாத 9.19 tmc, ஜூலை மாத 31.24 tmc என மொத்தம் 42.98 டி.எம்.சி தண்ணீர் இந்த மூன்று மாதங்களில் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் திறந்து விடப்படவில்லை. இதன் காரணமாக, ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை.
“அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்” என்பது பழமொழி. ஆனால், நாம் அழுது பெற வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற உத்தரவின்படியும், காவிரி நதிநீர் ஆணையத் தீர்ப்பின்படியும் நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கீட்டைப் பெறுவதற்குத் விஜய் அரசு போதிய அழுத்தம் கொடுத்தாலே போதும். ஆனால், தமிழக அரசின் சார்பாக மூன்று மாதங்களுக்கான நீரைப் பெற எவ்வித கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அவர்கள் கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
எட்டு கோடி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் நலனை விட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் நீடிப்பதால் என்ன பயன்?
காங்கிரஸின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காகத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனையே கர்நாடகத்திடம் தாரைவார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் மீது அக்கறை கொணடவர்கள் தங்களது ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்கள். ஆனால் விஜய் அவர்களோ, ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்கத் தயாராகிவிட்டார் என்ற தோன்றுகிறது; இது ஏற்புடையதல்ல; தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, தமிழகத்திற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரைப் பெற முதல்வர் விஜய் அவர்கள் உரத்த குரல் கொடுக்க வேண்டுமெனவும், உடனடியாக தமிழக நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடகத்திற்கு நேரடியாக அனுப்பி, தமிழகத்திற்கான உரிய பங்கீட்டைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் என வலியுறுத்துகிறேன்.
• டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.07.2026






