’பேச வாருங்கள்; பேச வாருங்கள்’ என்று அழைத்துக் கொண்டே டெல்லி விவசாயிகள் மீது ஒடுக்கு முறையை ஏவக் கூடாது.!

அறிக்கைகள்
s2 279 Views
  • 1
  • 1
Published: 15 Feb 2024

Loading

அனைவருமே பணக்கார விவசாயிகளும் அல்ல; இது வசதி படைத்தவர்களுக்கான போராட்டமும் அல்ல.!
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் விரைந்து தீர்வு காணவும், விளைப் பொருட்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயம் செய்யவும் வேண்டும்.!
ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒருங்கிணைந்து போராடி வருகிறார்கள். அதனுடைய ஒரு பகுதியாக டெல்லி தலைநகரை நோக்கி வந்த விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளிலேயே காங்கீரட் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டும், முட்பாதங்கள் அமைக்கப்பட்டும், ட்ரோன்கள் மூலமாக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் டெல்லியை நோக்கி முன்னேற விடாமல் தடுக்கப்படுகிறார்கள் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இந்தியத் தேசத்தின் தலைநகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் குழுமினால் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும், டில்லியின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. அதற்காக, விவசாயிகளுடையப் போராட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் தடுத்து நிறுத்த முயற்சி செய்வது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

விவசாயிகளின் கோரிக்கைகளில் மிக முக்கியமான வேளாண் விளைப் பொருட்களுக்கு நியாயமான, அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் எவரும் எவ்வித குற்றத்தையும் காண இயலாது. போராடுவோரில் சில வசதி படைத்த விவசாயிகளாக இருக்கலாமே தவிர, அனைவருமே பணக்கார விவசாயிகளும் அல்ல அல்லது இது வசதி படைத்தவர்களுக்கான போராட்டமும் அல்ல. மாறாக, இந்தியாவினுடைய மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடக்கக்கூடிய கோடான கோடி சிறு, குறு, மத்திய, தர விவசாயிகளின் கோரிக்கையே ஆகும். விவசாயிகளில் சில ஆயிரம் பேர் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக இன்றும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயிகளுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலம் மற்றும் தேசிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக வேளாண் விளைப் பொருட்களுக்கு நியாயமான அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிந்தவுடன் அதை மறப்பதுமே இந்திய அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக இருக்கிறது. டெல்லி விவசாயிகளினுடைய இந்தப் போராட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் எதிரானதாகவோ, தேர்தலை மையமாகக் கொண்டு இருப்பதாகவோ கருதக் கூடாது. டெல்லியை நோக்கி வரக்கூடிய பிரதானச் சாலைகளை காங்கீரட் சுவர்கள் எழுப்பித் தடுப்பது பெரிய ஒரு அபாயகரமான நிலையைச் சுட்டிக் காட்டுவதாகத் தெரிகிறது.
எனவே, விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசித் தீர்வு காண்பது ஒன்றே, சரியான வழியாக இருக்குமே தவிர, தடுப்புச் சுவர்கள் எடுப்பதும், முட்பாதங்கள் அமைப்பதும் ஜனநாயகத்தின் தோல்வியையே பிரதிபலிக்கும்.

’பேச வாருங்கள்; பேச வாருங்கள்’ என்று அழைத்துக் கொண்டே டெல்லி விவசாயிகள் மீது ஒடுக்கு முறையையும் ஏவக் கூடாது. விவசாயிகள் இந்த மண்ணின் மக்கள்; இந்தியச் சமுதாயமும், இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய மத்திய – மாநில அரசுகளும் அவர்களால் உருவாக்கப்பட்டவையே. எனவே, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு இது என்பதை மனதில் வைத்துப் போராடும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் விரைந்து தீர்வு காணவும், மிக முக்கியமான கோரிக்கையான விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயம் செய்யவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.02.2024