பத்திரிக்கையாளர் சந்திப்பு
60 Views

![]()
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு – செய்தி குறிப்பு
16.02.2026 – பொதிகை இல்லம், கோவை – மாலை 04.30 மணி
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் ‘மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில், மாதம்தோறும் தலா ₹1,000 வீதம் 1.31 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு வழங்க வேண்டிய ₹3,000 மற்றும் ‘கோடைகால சிறப்பு நிதி’ எனும் பெயரில் ₹2,000 சேர்த்து, மொத்தம் ₹5,000 என 1.31 கோடி பயனாளிகளுக்கு ₹6,550 கோடி கடந்த 12-ஆம் தேதி திடீரென வரவு வைக்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆட்பட்டுள்ளது.
முதலாவதாக, இது விரைவில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்பட்டதால், இது ‘ஓட்டிற்கான (Vote) கையூட்டு’ என விமர்சிக்கப்படுகிறது. இரண்டாவதாக, இந்த நிதியானது பட்டியல் பிரிவில் அடங்கியுள்ள மக்களின் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பிரத்தியேகமாக செலவிட வேண்டிய நிதியிலிருந்து மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதாகும். இவ்விரு குற்றச்சாட்டுகளுமே நிதர்சனமானவைகள் தான்.
முதல் குற்றச்சாட்டை வேறு வேறு காரணங்களைக் கூறி அவர்கள் மறுக்கக்கூடும். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக அரசின் மீதான எதிர்ப்பை சமாளிக்க அரசுப் பணத்தைக் கொண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய ஊழல் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இதையெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? இதேபோன்று ஒவ்வொரு ஆளுங்கட்சியும் அரசு கஜானாவிலிருந்து அல்லது கடன் வாங்கி, மீண்டும் மீண்டும் மக்களை கடனாளிகளாக்குவதை உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்பதும் தெரியவில்லை?
தமிழகத்தில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அரசுப் பணத்தை பயன்படுத்தி வாக்காளர்களை விலை கொடுத்து வாங்குவதை நிச்சயம் கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மக்களும் ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு வரும் தேர்தலில், ஆளுங்கட்சிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றே நம்புகிறோம். இது ஒரு பக்கம்!
இன்னொரு பக்கம், இந்த நிதி ஒதுக்கீடு பட்டியல் பிரிவு மக்களுக்கான நிதியிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தவறான செயலை சரியானது போல சித்தரித்து, மீண்டும் ஒரு தவறான பதிலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆனால், இது SCA மற்றும் SCP எனப்படும் ”சிறப்பு உட்கூறு திட்டத்தின் நோக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
தமிழகம் உட்பட இந்தியாவை ஆண்ட இந்திய மன்னர்கள்; இஸ்லாமியர்கள்; இன்னும் பிற தேசத்தவர்கள் ஆட்சிக் காலத்தில், இம்மண்ணின் பூர்வகுடி மக்களின் நிலங்கள், உரிமைகள் பறிக்கப்பட்டு வறிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அம்மக்களின் வறுமையைப் போக்க வழங்கப்பட்ட ஏறக்குறைய 20 லட்சம் ஏக்கர் ‘பஞ்சமி நிலங்களும்’
ஏமாற்றிப் பறிக்கப்பட்டுவிட்டன. சுதந்திரம் பெற்று பல பத்தாண்டுகள் ஆன பின்னரும், பூர்வகுடி மக்களான பட்டியல் பிரிவில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர்களின் வாழ்வு மேம்படவில்லை என்பதை அறிந்து, 1980களில் மத்திய திட்டக் கமிஷனால் முன்மொழியப்பட்டு, அவர்களை மேம்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமே ‘சிறப்பு உட்கூறு திட்டம்’ (SCA & SCP) ஆகும்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் 100% சிறப்பு நிதியுடன், பட்டியல் பிரிவு மக்கள் தொகைக்கு ஏற்ப மாநில அரசும் மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். அந்த நிதி, அம்மக்களின் கல்வி, தொழில், வணிகம், குடியிருப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்காகவும், குறிப்பாக, ” SCA / SCP should be spent for programmes of economic development to enable SC families to cross the poverty line by providing them sustainable income generating means of livelihood” அதாவது, பட்டியல் பிரிவில் உள்ள மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்கவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் செயல் திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டும்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் SCA & SCP நிதியானது அந்த நோக்கத்துடன் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதற்காவும், 2006-2011 கால கட்டத்தில் இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கவும் பயன்படுத்தப்பட்டது போல தற்போது மகளிர் உரிமைத் தொகைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பிரத்தியேக நிதியை, மாநில அரசின் கவர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், திமுக அரசு தனது ஓட்டு வங்கி அரசியலுக்காகப் பட்டியல் இன மக்களின் வளர்ச்சி நிதியை ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” எனும் சிறப்பு திட்டத்திற்கு 2023-2024, 2024-2025, 2025-2026 ஆகிய ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளது. இது முழுக்க முழுக்கத் தவறான செயலாகும்.
SCP-யின் நோக்கத்தைத் தமிழக அரசு முழுமையாகச் சிதைத்துள்ளது. மடை மாற்றப்பட்ட இந்தத் தொகையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; இத்தகைய அரசியல் முறைகேடுகள் குறித்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.






