7 வது மாநில மாநாட்டு தீர்மானங்கள்
85 Views

![]()
026 – புதிய தமிழகம் வெல்லும்!
7 வது மாநில மாநாடு
ஜனவரி 7, 2026 – மதுரை, பாண்டி கோவில் அருகில் – மாலை 03.00 மணி
மாநாட்டு தீர்மானங்கள்
PT Party 7th Conference
Madurai
PT Party 7th Conference
Maduraiமுன்னுரை:
இந்திய அரசியல் சாசனத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் நாள்தோறும் பட்டியலின மக்கள் மீது ஒரு கொலையோ, பாலியல் வன்கொடுமையோ அல்லது குடிசை எரிப்போ நடைபெறாத நாளே இல்லை என்ற நிலையே நீண்ட காலமாக நீடித்தது. குறிப்பாக 1995-ஆம் ஆண்டு வரை தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பட்டியலின சமூக மக்கள் மீது எண்ணற்ற வன்கொடுமைகள் ஏவப்பட்டன.
சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பொதுப் பானையில் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக ’தனம்’ என்ற சிறுமியின் கண்கள் அப்பள்ளி ஆசிரியராலேயே பறிக்கப்பட்டு குருடாக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியது. சிதம்பரத்தில் ’பத்மினி’ காவல் நிலையத்திலேயே வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். கொடியங்குளத்தைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் காவல்துறையினரால் சூறையாடப்பட்டன. தங்களுக்கு ஏற்பட்ட இந்த அவலங்களை தட்டிக்கேட்க நாதியற்று இருந்த காலமது.
அத்தகைய சூழலில் தான் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை என்ற மூன்று மிக முக்கியமான லட்சியங்களோடு ”புதிய தமிழகம் கட்சி” உருவாக்கப்பட்டது. “சாதியக் கொடுமைகளுக்கு மதமாற்றமே தீர்வு” என்றிருந்த நிலையை மாற்றி, “எதிர்த்துப் போராடுவதே தீர்வு” என்ற தாரக மந்திரத்தை தமிழக அரசியலில் புதிய தமிழகம் கட்சி உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் கொத்து கொத்தாக அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் வெளியேறி, தங்களுக்கான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதன் பின்னரே, தமிழகத்தின் 20 விழுக்காடு மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்து பொதுவெளியில் விவாதங்கள் எழுந்தன. தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் பேசப்படக்கூடிய ஒரு இயக்கமாக “புதிய தமிழகம் கட்சி” கோலோச்சியது. கடந்த 30 ஆண்டுகளில் நாம் ஏற்றுக்கொண்ட மண்ணுரிமை, வாழ்வுரிமை மற்றும் மனித உரிமை தளத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம்.
எனினும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் சம உரிமை, சம பங்கு (Equality & Equity) என்ற நமது தலையாய லட்சியத்தை அடையத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.! அந்த உயரிய லட்சியத்தை அடைய அரசியல் அதிகாரம் நம் கைகளில் வந்து சேர வேண்டும். எனவே, அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதே இம்மாநாட்டின் தலையாய நோக்கமாகும்.
தீர்மானம் :- 1
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பெற்று தந்த நாயகருக்கு நன்றி அறிவிப்பு
ஏழு உட்பிரிவுப் பெயர்களிலும், பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்களிலும் சிதறுண்டு கிடந்த மக்களை உணர்வூட்டி ஒன்றுபடுத்தவும், சாதியக் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கவும், எம்மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பண்பாட்டு மேன்மைக்காகவும், 1975-ஆம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவப் பருவம் தொட்டு ‘மிசா’ உள்ளிட்ட எத்தனையோ சிறைவாசங்கள், வழக்குகள், சாதிய வன்மதியாளர்களின் கொலைவெறித் தாக்குதல்கள், சொந்த சமூகத்திற்குள்ளிருந்தும் பிற அரசியல் இயக்கங்களிலிருந்தும் வந்த துரோகங்கள், தொல்லைகள், துன்பங்கள் அனைத்தையும் தாங்கி, வெற்றி பெற்று சட்டமன்றம் சென்ற காலங்களில் சிங்கம் போல தனித்து நின்று முழங்கியும், மற்ற தருணங்களில் மக்களோடு மக்களாக நின்று போராடியும், பல்வேறு கடினமான சூழல்களிலும் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி ஏறக்குறைய 50 ஆண்டுக்காலம் தன்னை அர்ப்பணித்து கோடானகோடி மருத நில மக்களுக்கு ”தேவேந்திர குல வேளாளர்” எனும் ஆளுமைமிக்க முகவரியை மீட்டுத் தந்த ”தர்ம சக்தி நாயகர்” எங்கள் தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு, இம்மாநாட்டின் வாயிலாகக் கோடான கோடி தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் :- 2
ஒற்றை அடையாளத்தில் ’ஒரே தலைமையின்’ கீழ் ஒன்றுபடுவோம்!
ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய, தமிழ் இலக்கண இலக்கியங்களின் முன்னோடியான தொல்காப்பியத்தில், தமிழ் நிலமும் அதில் வாழ்ந்த மக்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைப் படுத்தப்பட்டுள்ளனர். தேவேந்திர குல வேளாளர்கள், மருத நிலத்தில் உழவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள் ஆவர். காலப்போக்கில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளால், ஆற்றுப் படுகைகளில் நெல்லும் கரும்பும் விளைவித்து வாழ்ந்த இம்மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் அதே நிலத்தில் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உழவர்குடி மருத நில மக்களை திட்டமிட்டே பல துணைச் சாதிப் பெயர்களாகப் பிரித்து, தேவேந்திரகுல வேளாளர் எனும் பூர்வீக அடையாளத்தை அழித்தனர். இப்பிரிவினை அம்மக்களின் ஒற்றுமை, கண்ணியம் மற்றும் அரசியல் நனவைச் சிதைத்துவிட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களும் இதே பிரிவினையையே தொடர்ந்தனர். இது கல்வி மற்றும் பொதுத்தள அதிகாரப்பூர்வப் பதிவுகளில் காலனித்துவ அடையாளங்கள் நிலைத்திருக்க வழிவகுத்தது. ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பல பெயர்களால் துண்டாக்கப்பட்டதால் பல தலைமுறைகளாக ஆழ்மனதில் தாழ்வுச் சிக்கல்களை உருவாக்கியது. பல தலைமுறைகளாக ஏற்பட்ட அவமானங்களுக்கும், உரிமைகள் மறுக்கப்பட்டதும் அரசியல் தளத்தில் வெகுதூரம் அம்மக்களை பின்னுக்குத் தள்ளியதோடு, ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் ஆளாக நேரிட்டது. எனவே, காலத்தால் மறைக்கப்பட்ட ‘தேவேந்திர குல வேளாளர்’ அடையாளத்தை உயர்த்தி பிடிப்பதும்; அந்த ஒற்றை அடையாளத்தில் உலகெங்கும் உள்ள ‘தேவேந்திர குல வேளாளர்கள்’ ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைவதும் வரலாற்றுக் கட்டாயம் என இம்மாநாடு கருதுகிறது.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கின் தாழ்வு” என்ற முதுமொழிக்கேற்ப, உலகெங்கும் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் பல்வேறு சமூக இயக்கங்களாகவும், அரசியல் கட்சிகளுக்குள்ளும் அடைபட்டு கிடக்காமல் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் இழந்த பெருமைகளை மீட்டு ஆட்சி – அதிகாரத்தில் அமர்ந்திட, ”தர்ம சக்தி நாயகர்” புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் ஓரணியில் திரண்டிடவும்; நமது சமூக அடையாளமாக தேவேந்திர குல வேளாளர்! அரசியல் அடையாளமாக புதிய தமிழகம் எனும் தாரக மந்திரத்தை அனைவரும் கடைபிடிக்கவும் இம்மாநாடு அறைக்கூவல் விடுக்கிறது.
தீர்மானம் :- 3
தேவேந்திர குல வேளாளர்” பெயர் இயற்கையானது!
“தேவேந்திர குல வேளாளர்” என்ற பெயர் இயற்கையானது; இறுதியானது; மாற்ற முடியாதது; இதில் எவ்விதச் சமரசத்திற்கும் என்றும் இடமில்லை என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.
தீர்மானம் :- 4
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் – அனைத்து தமிழ் குடிகளும் வரவேற்க வேண்டும்!
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் என்பது தமிழ்க்குடிகளிடையே இடைப்பட்ட காலத்தில் உருவான பிணக்குகளை நீக்கி, ஒரு பிணைப்பை உருவாக்கி, சாதி – மத – வர்க்க பேதமற்ற ”தமிழ் பேரினமாக” எழுந்திட வழிவகுக்கும். எனவே, அனைத்து தமிழ்க் குடிமக்களும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தை முழுமனதோடு வரவேற்க இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :- 5
பெயர் மாற்றச் சான்றிதழ் – உடனடியாக வழங்க வேண்டும்!
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள், கல்வி நிறுவனப் பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளிச் சான்றிதழ்களில் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் “தேவேந்திர குல வேளாளர்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், முந்தைய பல்வேறு பெயர்களில் உள்ள அனைவருக்கும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றச் சான்றிதழை, வருவாய்த்துறையினர் அவரவர் இல்லங்களுக்கே சென்று வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 6
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மீட்பு – கண்ணியம் காக்க வேண்டும்!
தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு அல்லது மறு சீரமைப்பு என்பது தற்பெருமை பேசுவதற்கான பொருள் அல்ல; வேறு எந்த சாதிக் குழுக்களுக்கு எதிரானதும் அல்ல! மாறாக ஒரு மாபெரும் சமூகத்தின் விடுதலையின் அடையாளச் சின்னம் ஆகும். எனவே, தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களும், தாய்மார்களும், பெரியோர்களும் கற்றறிந்தோரும் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மீட்பு வரலாற்றுச் சாதனையை பேணி காத்து எதிர்கால சந்ததியினர் என்றென்றும் ஒன்றுபட்டு தேவேந்திரகுல வேளாளர் எனும் கண்ணியமான அடையாளத்தை தலைமுறை தலைமுறைக்கும் முன்னெடுத்துச் செல்ல இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
தீர்மானம் :- 7
7.5% இட ஒதுக்கீட்டுடன் பட்டியல் வெளியேற்றம்!
தேவேந்திர குல வேளாளர்கள் வரலாற்று ரீதியாக விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்ட சமூகமாக இருப்பதால் பிரிட்டிஷ் ஆட்சியிலும் கூட ‘பஞ்சமர்’ பட்டியலில் இடம்பெறாமல், ”தேவேந்திரகுல வேளாளர்” என்ற தனித்த அடையாளத்துடன் தான் உரிமைகள் பெற்றதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டு தேவேந்திரகுல வேளாளர்களை அட்டவணைப் பிரிவில் (Scheduled Caste) சேர்த்தனர். அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்த அந்த வரலாற்றுப் பிழையைச் சரி செய்ய முன்வரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக ”பெயர் மாற்றத்தையும், பட்டியல் வெளியேற்றத்தையும்” வலியுறுத்தி பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுத்தோம். 2021-ல் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தை மட்டும் அறிவித்துவிட்டு, மத்திய, மாநில அரசுகள் ”தேவேந்திரகுல வேளாளர்” மக்களின் மிக முக்கியமான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறி விட்டார்கள். பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது படித்து மேல்தட்டில் உள்ளவர்களின் பகட்டான கோரிக்கை அல்ல; மாறாகச் சுதந்திரம் பெற்று 78 வருடங்கள் கழித்தும் சுதந்திரத்தின் எவ்விதப் பலன்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் லட்சோபலட்சம் தேவேந்திரகுல வேளாளார்களின் உணர்வுப்பூர்வமானக் கோரிக்கையாகும். எப்பொழுதாவது ஒரு சிலர் மட்டும் பெறக்கூடிய அரசு வேலைவாய்ப்பிற்காக லட்சோபம்லட்சம் மக்கள் காலமெல்லாம் ‘Scheduled Caste’ என்ற முத்திரையோடு வாழ்வதிலிருந்து விடுபடுவதை சாதி ஒழிப்பின் ஒரு பகுதியாகவும், அதுவே உண்மையான சுதந்திரம் எனவும் ”தேவேந்திரகுல வேளாளர்” மக்கள் கருதுகிறார்கள். எனவே, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி, ”தேவேந்திரகுல வேளாளர்கள்” என்ற புதிய பட்டியலை உருவாக்கி, அம்மக்களின் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப 7.5% இட ஒதுக்கீட்டையும் பெற்றிட தமிழகத்தில் நம் தலைமையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கிட இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 8
25,000 பணியிட இழப்பு – 25000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்!
தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், பட்டியலில் உள்ள 18 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 3 சதவீதம் பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுத்து, எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும் அவர்களுக்கே முன்னுரிமை கொடுத்ததால், திமுக அரசு பதவியேற்ற 2021-க்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் / ஆதி திராவிடர்களுக்கும் கிடைக்க வேண்டிய ஏறக்குறைய 25,000-க்கும் மேற்பட்ட உயர் பதவிகள் 3 சதவிகித குறிப்பிட்ட பிரிவினருக்கே தாரைவார்க்கப்பட்டுள்ளன. தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான சட்ட ரீதியிலான பங்கு குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மீறி அக்குறிப்பிட்ட பிரிவினருக்கே வாரி வழங்கிக் கொடுத்ததை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர்களின் உரிமையைப் பறித்ததால், ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட அவர்களின் மறுவாழ்விற்கு ரூ25,000 கோடியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 9
உலக தேவேந்திரர்கள் ஒருங்கிணைப்பு மையம்!
இம்மண்ணின் மூத்த தமிழ்க்குடி மக்களான தேவேந்திரகுல வேளாளர் மக்கள், இடைப்பட்ட காலத்தில் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதால் ஒரே கிராமத்திற்குள்ளும், அடுத்தடுத்த கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பு இல்லாதச் சூழலை உணர்கிறோம். எனவே, வீழ்ந்து கிடக்கக்கூடிய சமுதாயம் மீண்டெழ வேண்டுமானால் டாக்டர் அய்யா அவர்களின் தலைமையின் கீழ் அமைய உள்ள “உலக தேவேந்திரர்கள் ஒருங்கிணைப்பு மையத்தோடு” தேவேந்திரகுல வேளாளர்கள் வாழும் கிராமங்கள் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அனைத்து தேவேந்திரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்பு மையம் மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும்; அதற்கான அலுவலகம் விரைவில் தொடங்கப்படும். எனவே, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அமைப்புகளை ”உலக தேவேந்திரர்கள் ஒருங்கிணைப்பு” மையத்தின் அங்கமாக மாற்றிட வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இந்த அமைப்பு தேவேந்திரகுல மக்களின் கல்வி, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் அரசியல் மேம்பாடு ஆகியவற்றிற்காக பாடுபடும் பரந்துபட்ட அமைப்பாகச் செயல்படும்.
தீர்மானம் :- 10
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம்!
ஆறு தசாப்தங்களாக தமிழ்நாடு ’ஒற்றைக்கட்சி’ ஆட்சியால் அலங்கோலப்பட்டு வருகிறது. இதை சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தின் இன்னொரு வடிவமாகவே கருத வேண்டும். இந்த ஒற்றைக்கட்சி ஆட்சி முறை தமிழகத்தில் ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற முதுமொழிக்கேற்ப, தொடர்ந்து ஆட்சியாளர்கள் ஊழலில் திளைப்பதற்கும், கனிம வளங்களை கேட்பாரற்று கொள்ளை அடிப்பதற்கும், கொலை கொள்ளைகள் தாறுமாறாக நடப்பதற்கும் வழிவகை செய்கிறது. ஆட்சி கைக்கு வந்துவிட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு தங்களை யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்ற எதேச்சதிகாரப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. எனவே, தமிழகத்தில் தற்போதுள்ள ஒரு குடும்ப – ஒரு கட்சி, ஆதிக்க, ஊழல் மலிந்த, மதுவாலும்; மிதமிஞ்சிய போதைப் பொருட்களால் மக்களை மயக்கி, கூட்டணி பலம் என்ற போர்வையில் கட்டமைக்கப்பட்டுள்ள போலியான சமூக நீதி ‘திராவிட மாடல்’ எனும் “திராவிட மாயை” ஆட்சியை 2026 சட்டமன்றத் தேர்தலில் அகற்றிட தமிழக மக்களும், அவ்வெண்ணத்தோடு உள்ள பிற அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 11
2026 சட்டமன்றத் தேர்தல் – கூட்டணி ஆட்சி!
”ஒரு குட்டைக்கு மாற்று; இன்னொரு குட்டை அல்ல, ஒரு மட்டைக்கு மாற்று; இன்னொரு மட்டை அல்ல.” தமிழ்நாட்டில் கடந்த 59 ஆண்டுகளாக நிலவும் அனைத்து அவலங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உண்மையான மக்களாட்சி மலர்ந்திட, தலை முதல் அடிமட்டம் வரையிலும் புரையோடிப் போயிருக்கிற ஊழலால் சீரழிந்து வரும் தமிழ் சமூகத்தை காப்பாற்றிட, மதுவால் சீரழிந்து வரும் தமிழக இளைஞர்களையும், ஆடவர்களையும் மீட்டிட, கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட, குடும்பமும் – கட்சியும் – ஆட்சியும் – ஊழலும் ஒற்றைப் புள்ளியில் குவிந்திடும் நவீன மன்னர் பரம்பரைக்கு வித்திடும் ’திராவிட மாயை’ ஆட்சிக்கு மாற்றாக, ஊழலற்ற ஜனநாயக பூர்வமான ”ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்பதை வெளிப்படையாக அறிவித்து, குறைந்தபட்ச திட்ட அம்சங்களோடு அமைச்சரவையில் பங்களிக்கும் கூட்டணி ஆட்சி மலர்ந்திட அனைத்து தமிழ் மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே 2026 – சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கொள்கை நிலைப்பாடு ஆகும்.
தீர்மானம் :- 12
மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமை மீட்பு!
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையை ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்விடமாகக் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு செய்ததுடன், அவர்களைக் கட்டாயப்படுத்தி மாஞ்சோலையிலிருந்து அப்புறப்படுத்தும் திமுக அரசின் முயற்சிக்கு புதிய தமிழகம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய அரசின் 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பத்துக்கும் மேற்பட்ட முறை தாமாக வாதாடியும்; உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையங்களிடம் தொடர்ந்து போராடியும் வரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் இடைவிடாத முயற்சிக்கு இம்மாநாடு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
சட்டப்படியும் நியாயப்படியும் மாஞ்சோலையிலேயே தங்களுடைய வாழ்வாதாரத்தை தொடர அனுமதிக்காமல், தொழிலாளர்கள் வாழும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, குதிரைவெட்டி உள்ளிட்ட ஐந்து எஸ்டேட்டுகளுக்கும் போக்குவரத்து, மின் வசதி, குடிநீர் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூடச் செய்து தராமல், கடைசியாக அவர்களது குடியுரிமையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலில் பெரும்பாலான தொழிலாளர்களின் பெயர்களை இடம்பெற விடாமல் தடுத்திடும் மனிதவிரோதச் செயலை புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு கண்டிக்கிறது. அவர்களின் அனைத்து வித உரிமைகளையும் மீட்க இம்மாநாடு என்றென்றும் துணை நிற்கும் எனவும் உறுதி கூறுகிறது.
வீண் கௌரவம் பாராமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் அனைவருக்கும் மாஞ்சோலையிலேயே தலா 2 ½ ஏக்கர் நிலம் வழங்கவும், அதில் விவசாயம், ஆடு மாடுகள் வளர்ப்பு மற்றும் சிறு கைவினைத் தொழில்கள் தொடங்க உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 13
கௌரவப் படுகொலைகளுக்கு திராவிடக் கொள்கைவாதிகளே பொறுப்பு!
”கலப்புத் திருமணங்களே சாதி ஒழிப்பின் அடிப்படையாக இருக்கும்” என்று தங்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே முழக்கம் பேசி வந்த இன்றைய திமுக ஆட்சியில், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் ஆதிக்கச் சாதிவெறிக்கு அடிக்கடி பலியாவது மிகுந்த கவலையளிக்கிறது. இது வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, காவல்துறையால் மட்டும் தீர்க்கக்கூடிய பிரச்சினையும் அல்ல; மாறாக சாதி ஒழிப்பு, முற்போக்குக் கொள்கை பேசிய அவர்களே அரசு இயந்திரத்தின் அனைத்து மட்டத்திலும் ஊடுருவியதும், ஆட்சியில் அமரும் கட்சியினுடைய அனைத்து நிர்வாகிகளுமே சாதிவெறியர்களாக மாறியதுமே இதற்குக் காரணம் என புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு கருதுகிறது. எனவே, தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய ’அனைத்துக் கௌரவப் படுகொலைகளுக்கும் திராவிடக் கொள்கைவாதிகளேப் பொறுப்பேற்க வேண்டும்’ என இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் :- 14
சாதியக் கண்ணோட்டத்தோடு செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை!
தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் சக பட்டியல் பிரிவு மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் குடிநீர் வசதி, மின்விளக்கு, மயான வசதி, போக்குவரத்து, வீட்டுமனை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததால், அப்பகுதிகள் குப்பை மேடுகளை போல காட்சியளிக்கின்றன. சட்ட ரீதியாக செய்து தரவேண்டிய வசதிகளையும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாதிய கண்ணோட்டத்துடன் புறக்கணித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துக்கிறது.
தீர்மானம் :-15
அரசு வேலைக்கு ’ரேட்’!
அனைத்து வேலைவாய்ப்புகளும் ரூபாய் 10 லட்சம், 15 லட்சம் என விலை பேசி ஏலம் விடப்படுகின்றன. படித்த இளம் பெண்களும் இளைஞர்களும் வேலைவாய்ப்பின்றி அலையும் அவல நிலை உருவாகியுள்ளது. இவற்றிற்கு முற்றுப்புள்ளை வைத்திட தமிழக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :-16
தேர்தல் சீர்திருத்தம்: கலப்பு உறுப்பினர் விகிதாச்சார முறை!
இந்திய அளவில் நடைமுறையில் உள்ள ‘முதலாவதாக வருபவர் வெற்றி’ (First-Past-The-Post) தேர்தல் முறை, வாக்காளர் பிரதிநிதித்துவத்தை முற்றாகச் சிதைக்கிறது. அதாவது, 50 சதவீத ஓட்டுகளைக் கூடப் பெற முடியாத கட்சிகள், 80 சதவீத இடங்களைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடுகின்றன. 40 சதவீத வாக்குகளைப் பெற்று 10 சதவீத உறுப்பினர்களைப் பெற முடியாமல், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போய்விடுகிறது. குறிப்பாக, இந்தத் தேர்தல் முறையில் பொருளாதார ரீதியாக பிரிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் மிகவும் பின்தங்கியுள்ள சமூகங்கள் மற்றும் சாதி ரீதியாக ஒருங்கிணைக்கப்படாத சமூகங்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. வலுவான சாதியக் கட்டமைப்புகள், பணம் கொடுத்து வாக்குகளைக் கொள்ளையடிப்பது மற்றும் மிதமிஞ்சிய விளம்பரங்களால், ஓரிரு சதவீதம் கூட இல்லாத சமூகங்கள் தொடர்ந்து ஆட்சி பீடத்தில் எளிதாக அமர்ந்துவிடுகின்றன. எண்ணிக்கையில் பெருமளவு இருந்தும், சாதி ரீதியாக ஒருங்கிணைக்கப்படாததால் தேவேந்திர குல வேளாளர்கள் உள்ளிட்ட பல எளிய சாதிகளால் தங்கள் பிரதிநிதிகளை எளிதாக சட்டமன்றத்திற்கும், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கும் அனுப்ப முடிவதில்லை.
எனவே, உலகெங்கும் பெருவாரியான ஜனநாயக நாடுகளால் பின்பற்றப்படும் விகிதாச்சார தேர்தல் முறையை (Proportional Representation) இந்தியாவிலும் அமல்படுத்தவும்; பரீட்சார்த்தமாக மொத்தமுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் பாதி உறுப்பினர்களை தற்போதுள்ள நடைமுறைப்படியும், மீதி உறுப்பினர்களை விகிதாச்சார முறையிலும் தேர்ந்தெடுத்தால், எல்லா சமுதாய மக்களின் பிரதிநிதிகளும் எல்லா காலக்கட்டங்களிலும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிகளாக முடியும்; ஆட்சியிலும் பங்கு பெற முடியும். எனவே, உண்மையான ஜனநாயகம் தழைக்கவும், ஏகபோக ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் ”விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்” (Proportional Representation) முறையை அமல்படுத்த புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 17
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம்!
தமிழ்நாட்டில் 2026 – சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி விரும்புகிறது. ஆட்சி – அதிகாரம், பண பலம், சாதி பலம் மற்றும் அடியாள் பலம் உள்ளிட்ட எந்த அம்சங்களும் மேலோங்கிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. எனவே, வாக்குப்பதிவு தேதிக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு நிர்வாகம் கொண்டு வரப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 18
காசுக்கு ஓட்டுப் போடும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்!
எவ்விதமான ஆசை வார்த்தைகள், அச்சுறுத்தல்கள் அல்லது தூண்டுதல்கள் இல்லாமல் வாக்களித்தால் மட்டுமே, சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் வேட்பாளர்கள் வாக்காளர்களை நேரில் சந்திக்காமல், கட்சியினுடைய ஏஜெண்டுகளை வைத்து வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தால் 100 ரூபாய், கட்சிக்குக் கொடி பிடித்தால் 200 ரூபாய், ஓட்டுப் போட்டால் 1000 ரூபாய் என வாக்காளர்களை விலை பேசுவதால், வேட்பாளருடைய முகத்தைக் கூடப் பார்க்காமல் ஓட்டுப் போடக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக வெற்றி பெற்ற பிறகு வாக்களித்த மக்களை புறக்கணிக்கும் போக்கு உருவாகிறது. தட்டிக் கேட்டால் “காசுக்குத் தானே ஓட்டுப் போட்டீர்கள்” என்று மக்களையே குற்றவாளி ஆக்குகிறார்கள். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிதமிஞ்சிய பணத்தோடு ஏழை, எளிய மக்களின் வாக்குகளைச் சூறையாட வரும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை இனங்கண்டு அவர்களை புறக்கணிக்கவும், காசுக்கு ஓட்டுப்போடும் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :- 19
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்!
திருப்பரங்குன்றத்தில், நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. சட்ட ஒழுங்கைக் காரணம் காட்டியும், கோடான கோடி தமிழ் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய வகையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படக்கூடாது. திருப்பரங்குன்றம் முழுக்க முழுக்க முருகப்பெருமானின் இருப்பிடம். அத்திருத்தலத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டுத் தலங்களைத் தவிர, வேறு எவ்வித ஆக்கிரமிப்புகளுக்கும் அரசு இடம் தரக்கூடாது. இது கோடான கோடி தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதனை வாக்கு வங்கிக்கான அரசியல் களமாக மாற்றக்கூடாது. திருப்பரங்குன்றம் மலை நிர்வாக பொறுப்பில் இருந்து அறநிலையத்துறை விலகிக் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருத்தலத்தை தனி ஆணையம் ஒன்றை உருவாக்க அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். அதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கெடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 20
இருக்கன்குடி மாரியம்மனை இடமாற்றதே!
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் எல்லையை எக்காரணம் கொண்டும் வேறு ஊராட்சிக்கு மாற்றக்கூடாது எனவும், உள்நோக்கத்தோடும், அரசியல் மற்றும் சாதிய உணர்வோடும் 1995-ஆம் ஆண்டு இருக்கன்குடியில் உள்ள மந்தை கிராமத்திற்கு மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. பல நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகும் இந்த எல்லைப் பிரச்சினையில் ஒரு நடுநிலைத் தன்மையோடு நின்று அரசு செயல்படாமல் வீண் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. ”இருக்கன்குடி மாரியம்மன் கோவில் எல்லை இருக்கன்குடி ஊராட்சியிலேயே நீடிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 21
கிராமக் கோவில்களில் அனைவருக்கும் பங்கு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமக் கோவில்களும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதி நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு பகுதியிலும் ஒரு தனிநபரோ, குழுவோ இணைந்து ஒரு வழிபாட்டுத் தலத்தை உருவாக்கினாலும், அது சாதி, மொழி கலந்த அனைத்து மக்களுக்கான வழிபாட்டுத் தலமாக இருக்க வேண்டும்; அதை நிர்வகிக்கும் பொறுப்பு அனைத்துச் சமுதாய மக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். கிராமக் கோவில்களில் ஏற்படும் சாதி மோதல்களும் தீண்டாமைப் பிரச்சினைகளுமே கிராம அளவில் மதமாற்றத்திற்கு வழிவகுக்கின்றன. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமக் கோவில்களையும் நிர்வகிக்க ஒரு தனி ஆணையத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு எங்கும் எண்ணற்ற கோவில்களில் வழிபடுவதிலும் நிர்வகிப்பதிலும் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கிராமக் கோவில்களை நிர்வகிக்கும் ஒரு ஆணையத்தை உருவாக்கிட இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 22
பரம்பரை பூசாரிகள் ஒழிப்பு!
தமிழ்நாட்டில் இன்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பரம்பரை பூசாரிகளாகவும், அவர்களே பரம்பரை அறங்காவலர்களாகவும் தொடர்வது பல பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. எனவே, பரம்பரை பூசாரிகள் முறையை நீக்கி, எல்லாக் கோவில்களுக்கும் தகுதியின் அடிப்படையில் பூசாரிகள், அறங்காவலர்களை நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் :- 23
பூரண மதுவிலக்கு!
தமிழ்நாடு அரசின் மதுக் கொள்கையால் பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகித் தங்களது உடல்நலத்தை இழந்துவிட்டார்கள். ஆண்டொன்றுக்கு நேரடியாக 60,000 கோடியும், மறைமுகமாக 60,000 கோடியும் என மொத்தம் 1,20,000 கோடி ரூபாயை ஏழை மக்களின் உழைப்பிலிருந்து இந்த அரசு சுரண்டுகிறது. 2006 முதல் 2010 வரையிலும் இன்றைய முதல்வர் (அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்) ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி மற்றும் கட்சியினர் தமிழகத்தில் மதுவினால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக முழங்கினார்கள். ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் மது விற்பனையை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மதுக்கடைகளை ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் வாழும் பகுதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், தென்னந்தோப்புகளிலும், சாலையோரக் கடைகள், வீடுகளிலும் என எங்கும் மது கிடைக்கக்கூடிய நிலையை உருவாக்கி உள்ளார்கள்.
இந்தக் குடிப்பழக்கத்திற்கு அதிகம் ஆளானவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களும், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களுமே! தினசரி மற்றும் மாத விற்பனையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் பங்களிப்பே டாஸ்மாக் வருமானமாக உள்ளது. இதன் காரணமாக இவர்களின் சராசரி வாழ்நாள் மற்றவர்களை விடக் குறைந்து 40 – 50 வயதிலேயே முடிந்து விடுகிறது. பெரியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என மூன்றாவது தலைமுறையும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டனர். மது, கஞ்சா, பிறப் போதைப் பொருட்களை தாராளமாக அனுமதித்து தமிழ் சமுதாயத்தை திட்டமிட்டே அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் விரோதிகளாவர்; அவர்களை இனி ஒருபொழுதேனும் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் பூரண மதுவிலக்கை அமலாக்க தவறினால், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்படும் என இம்மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் :- 24
கனிம வளக்கொள்ளை!
தமிழகத்தில் அங்கு இங்கு என்று என்றுமில்லாத அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை புதிய தமிழகம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மணல் குவாரிகளால் வேளாண்மை – மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் சூறையாடப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து குவாரிகளையும் நிறுத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 25
ஆடு, மாடுகளை விட்டு விவசாயத்தை அழிக்காதே!
கிராமப்புறங்களில் தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பட்டியலின மக்கள் சொந்த நிலங்கள் வைத்திருப்பதே அரிது. அதிலும் பல இடங்களில் உள்ள நிலங்களுக்கு உரியப் பாசன வசதிகள் மறுக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் உதவியோடு சாதியச் சக்திகள் அடாவடியில் ஈடுபடுகின்றன. குளங்கள் மற்றும் மீன்பாசி ஏலம் விடுவதிலும் நடைபெறும் சாதிய ஒதுக்கல்கள் கண்டிக்கத்தக்கது. கமுதி, கடலாடி, திருச்சுழி, காரியாப்பட்டி; தூத்துக்குடி வல்லநாடு பகுதிகளில் விவசாய நிலங்களில் ஆடு, மாடுகளை மேய விட்டுப் பயிர்களை அழிக்கும் செயல்களை இம்மாநாடு கண்டிக்கிறது. வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளான்மை துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை இணைந்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 26
பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி!
கிராமங்களிலிருந்து விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாத அவல நிலையைச் சரிசெய்ய வலியுறுத்துகிறோம். கல்வி மற்றும் வேலை நிமித்தமாக நகரங்களுக்குச் செல்பவர்களுக்குப் போதிய போக்குவரத்து வசதி இல்லை. இறந்த பிறகு மயானத்திற்குச் செல்லக் கூடப் பாதை இல்லாத நிலையை இம்மாநாடு கண்டிக்கிறது. உடனடியாக அம்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 27
அனைவருக்கும் வீட்டுமனை மற்றும் வேலைவாய்ப்பு!
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இன்னும் மூன்று சென்ட் வீட்டுமனையும், வீடும், குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பும் இல்லாத நிலை நீடிப்பது குறித்து இம்மாநாடு பெரும் கவலை கொள்கிறது. தமிழகத்தின் அனைத்து வளங்களிலும் அனைவருக்கும் சம உரிமையும், சம பங்கும் கிடைப்பதை உறுதி செய்ய இம்மாநாடு உறுதியேற்கிறது.
தீர்மானம் :- 28
நில அபகரிப்புத் தடுப்பு மற்றும் நிலப் பகிர்வு!
தமிழகத்தில் அண்மைக்காலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் விளைநிலங்களைக் கையகப் படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். வேளாண்மையில் ஈடுபடும் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கிட மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 29
ஊழலற்ற வேலைவாய்ப்பு உறுதி!
சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, படித்த இளைஞர்கள் அனைவருக்கும் லஞ்சலாவண்யமற்ற முறையில் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 30
சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு!
சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்த நிலையிலும், சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி குறித்து கடந்த 75 ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்தாலும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு மற்றும் வழிபாட்டுத் தளங்களில் தீண்டாமை நிலவுகிறது. இத்தீண்டாமை வெளிப்படையாகவும், மேக்ரோ (Macro) அளவில் கண்ணுக்குப் புலப்படாமலும் (Micro) பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
இதனால், தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பூர்வீகக் குடிமக்கள், அரசு வேலைவாய்ப்புகள் தவிர்த்து, பிற தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதிலும், கிராமப்புற அல்லது நகர்ப்புறங்களில் சிறு தொழில்களைத் தொடங்குவதிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பெரும் முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்றனர். இத்தகைய சூழலால், மக்கள் மீண்டும் மீண்டும் ‘மண் அள்ளவும்;கல் சுமக்கவும், களை எடுக்கவும்’ என சேற்றுக்குள்ளேயே தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வெளிப்படையாக தமிழகத்தில் சமத்துவம் நிலவுவதைப் போன்றதொரு தோற்றம் இருந்தாலும், உள்ளே சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. எனவே, அனைத்துத் தளங்களிலும் சாதிய வேறுபாடுகளைக் களைய ஐந்து ஆண்டு கால வரையறையையும், சரியான செயல் திட்டத்தையும் வகுத்து தீண்டாமையை முழுமையாக ஒழித்துக் கட்ட மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 31
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக – கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போராட்டம்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அளித்த வாக்குறுதி அளித்தபடி, நீட் தேர்வு ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, மாதம் ஒருமுறை மின்கட்டண அளவீடு, மாணவர்களுக்கான கல்விக்கட்டண ரத்து ஆகியவற்றை நிறைவேற்றாத; மேலும், குடியிருப்புகளுக்குத் தேவையான குடிநீர், சாக்கடை, மயானம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், சிறிய வேலைவாய்ப்புகளுக்கும் லட்சக்கணக்கில் லஞ்சலாவண்யங்களில் ஈடுபடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, கிராமங்கள்தோறும் போராட்டங்களை நடத்த இம்மாநாடு முடிவு செய்கிறது.
தீர்மானம் :- 32
காட்டுப்பன்றிகளின் பெருக்கமும்; விவசாயிகளின் வேதனையும்!
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் பெருக்கத்தாலும், அவைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதாலும் விவசாயிகள் பெரும் துயரமடைந்துள்ளனர். பல இடங்களில் சிறு விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். எனவே, அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட வனவிலங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இவ்வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நட்டஈடு வழங்கவும் வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கான திட்டத்தைத் தயாரிக்க மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 33
தேவேந்திரகுல வேளாளர் கிராம பொது நிதி சேமிப்பு!
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் அனைவருக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள்:
கிராம இளைஞர்கள் மற்றும் பெண்களின் கல்வி மற்றும் சுயவேலைவாய்ப்புகள், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டுச் சேமிப்பை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என்று இம்மாநாடு கருதுகிறது. எனவே, ஆண்டுதோறும் கொடை விழாக்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை வீணடிப்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி, பெரும் அளவில் ஊர் பொது சேமிப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே நவீன தொழில்நுட்பம், திறன் வளர்த்தல், சிறிய அளவிலான கல்விக்கூடங்களை உருவாக்குதல், நகர்ப்புறங்களிலும் பிரதான பகுதிகளிலும் திருமண மண்டபங்கள் போன்ற கலாச்சாரப் பண்பாட்டு மையங்களைத் துவக்குதல், சொந்த நூலகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை தோற்றுவித்திடல் வேண்டும். இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் என்பது பெயரளவிலான அடையாளம் மட்டுமல்ல, அது தகுதி, திறமை, தொழில், வணிகம், கல்வி, விளையாட்டு மற்றும் கலைகள் என அனைத்திலும் வெற்றியின் அடையாளம் என நிரூபிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளை ஏற்படுத்த வேண்டும். தினசரி தியானம் அல்லது அமைதி மண்டபம் மற்றும் நல்ல அம்சங்களை விவாதிக்க ஊருக்கு ஒரு ”அன்பாலயங்களை” உருவாக்கும் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :- 34
உடல் நலம் பேணல்!
வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதய நோய், புற்றுநோய் மற்றும் கரோனா போன்ற தொற்று வியாதிகள் அதிகரித்து வருகின்றன. உடல் தூய்மையின்மை, சுற்றுப்புறத் தூய்மையின்மை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவையே இவற்றிற்கு மிக முக்கியக் காரணிகளாக அமைகின்றன. Sound Mind, Sound Body ஆரோக்கியமான உடலில் தான் ஆரோக்கியமான சிந்தனைகள் தோன்றும். எனவே, நமது உடம்பையும், நாம் இருக்கும் இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உண்ணும் உணவும், குடிக்கும் நீரும், உடுத்தும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்களில் துரித உணவுகளை முற்றாக தவிர்க்க வேண்டும்; எண்ணெயில் பொரித்த உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். மது, புகை, போதை உள்ளிட்ட பழக்கவழக்கங்களை தவிர்த்து ஆண்களும், பெண்களும் திடகாத்திரமாக இருந்திடல் வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :- 35
”அதிகாரத்திற்கு வர ஆயத்தமாவோம்” – புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் அறைகூவல்: 2026 புதிய தமிழகம் வெல்லும்!
2026 சட்டமன்றத் தேர்தல் புதிய தமிழகம் கட்சியினருக்கு மிக மிக முக்கியமானது. தேர்தல் பணி இன்றிலிருந்தே, இந்த நொடியிலிருந்தே துவங்கிவிட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி என்பது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் விடுதலைக்கும் அச்சாரமாக அமையும். குடும்ப ஊழல் மற்றும் ஏதேச்சதிகார ஆட்சிக்கு முடிவுகட்டி, பரந்துபட்ட அனைத்து தமிழக மக்களுக்கும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கும் பொறுப்பு புதிய தமிழகம் கட்சியின் ஒவ்வொரு தொண்டனின் தலையாய கடமையாகும். ”2026-இல் புதிய தமிழகம் வெல்லும்” என்ற கோஷத்தை நிதர்சனமாக்க இன்றிலிருந்தே நமது தேர்தல் களப்பணி துவங்கட்டும்.
தலைவர் அவர்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளுக்கு சில மாதங்களும், மாநாட்டிற்கும் மக்களைத் திரட்டுவதற்குமாக சில நாட்களும் கடுமையாக உழைத்துவிட்டோம் என ஓய்வெடுப்பதற்கான நேரம் இதுவல்ல. தேர்தலில் எதிரி யார் என்பதை தீர்க்கமாக அடையாளம் காட்டிவிட்டோம். கிராமம் தோறும் இதே வேகத்தில் வாக்குச்சாவடிப் பணிகளைத் துவங்குங்கள். நமது கிராமங்களை புதிய தமிழகத்தின் எஃகு கோட்டையாக மாற்றுங்கள். நமது செல்வாக்கையும் ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தையும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தயக்கமின்றி அனைத்துச் சமுதாயத்தினரிடமும் வாக்கு கேட்டுச் செல்லுங்கள். பெரும்பாலான கிராமங்களில் நம்மை எதிர்கொள்ள எதிரிகளே தென்பட மாட்டார்கள். நம்முடைய நோக்கமும் பார்வையும் தெளிவானது; தமிழக மக்களுக்கானது; தொலைநோக்குடையது. நம்மை நேசிப்பவர்கள், நம்மைப் புரிந்துகொண்டவர்கள், நமது வலிமையை அறிந்தவர்கள் நம்மோடு கைகோர்க்க முன்வருவார்கள். எதிரிகளை அடியோடு வீழ்த்தும் வலுவான கூட்டணியை நாம் அமைப்போம்; நம்பிக்கையோடு பயணிப்போம். 2026-இல் சிவப்பு – பச்சை வண்ணக் கொடி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பறக்கும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம்.! இடைவிடாத உழைப்பே உயர்வைத் தரும்! அடுத்துவரும் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கான நாளே! வெற்றிக்கான நாளே! நம்பிக்கையுடன் பயணியுங்கள்! 2026-இல் புதிய தமிழகம் வெல்லும்!!
தீர்மானம் :- 36
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா, சுமார் இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய நாடாகும். எனினும், அந்த நாட்டில் எண்ணெய் வளமும், தங்கம் உள்ளிட்ட பிற கனிம வளங்களும் தாராளமாக கொட்டிக் கிடக்கின்றன. அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் சுமத்தி, கடந்த 3-ஆம் தேதி அன்று அமெரிக்கா சட்டவிரோதமாக வெனிசுலாவிற்குள் புகுந்து, அதிபர் மதுரோ மற்றும் அவரது துணைவியாரைக் கடத்திச் சென்றுள்ளது. இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மட்டுமல்லாது, சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கும் முரணான செயலாகும். மேலும், அவரை அமெரிக்கா நடத்தும் விதம் மிக மோசமானதும், மனித உரிமை மீறலுமாகும்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின், நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரை நிறுத்துவதாகப் பேசிக்கொண்டே, இன்னொரு பக்கம் ஆயுதங்களையும் பீரங்கிகளையும் வழங்கிப் போரைத் தூண்டுகிறார். அவர்களின் உள்நோக்கம் ஆயுத விற்பனையும், பிற நாடுகளின் இயற்கை வளங்களை அபகரிப்பதும் மட்டுமே. ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது கூட, உக்ரைனின் கனிம வளங்களை எடுத்துக்கொள்ளவே டிரம்ப் ஒப்பந்தம் போட்டார்.
பெரிய அளவிற்கு ராணுவக் கட்டமைப்பு இல்லாத ஒரு நாட்டிற்குள், ராணுவ மிருக பலம் கொண்ட ஒரு நாடு புகுந்து, அந்நாட்டின் அதிபரைக் கைது செய்வது ஒன்றும் பெரிய சாதனையல்ல. மாறாக, இது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே அமையும். ஒரு நாட்டின் அதிபரைக் கடத்திச் சென்று, அந்நாட்டை தன் கட்டுப்பாட்டில் ஆள நினைப்பது அமெரிக்காவின் நவீன காலனித்துவமாகும். இதற்கு உலக நாடுகள், குறிப்பாக இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த அடாவடிப் போக்கினை உலக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்; உடனடியாக மதுரோவை விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.






