கோட்டைப்பட்டி மாவீரன் சுரேஷ் அவர்களின் 15-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி..!
307 Views
![]()
தேவேந்திரகுல வேளாளர்களின் தன்மானம் காக்கவும், அடையாளத்தை மீட்டெடுக்கவும் நடைபெறும் யுத்தக்களத்தில் தன்னுயிரை நீத்தவர் இ.கோட்டைப்பட்டி – புதிய தமிழகம் கட்சியின் மாவீரன் சுரேஷ். அவர் சொல்லிலும், செயலிலும் மாவீரன்..! காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தும் என்பது தெரிந்திருந்தும் எதிர்த்து நின்று தனது நெஞ்சிலும், நெற்றிப் பொட்டிலும் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி கொண்டவர்.
2008-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி உயிர்நீத்த மாவீரன் சுரேஷ் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது. என்றென்றும் போற்றுதலுக்குரியது. சேடப்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாழ்விடத்திற்கும், இன்னொரு சாராரின் பகுதிக்கும் இடையே எழுப்பப்பட்ட சுவரை அகற்றுவது தொடர்பாக மிகப்பெரிய பதட்டம் நிலவி வந்த நேரம் அது. அந்நிகழ்வு இருதரப்பு மோதலாக மாறிவிடாமல் தடுத்திடவும், அதை அடிப்படையாக வைத்து தென்தமிழகத்தில் சமூக மோதல்கள் உருவாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் இருதரப்பினரின் அழைப்பின் பேரில் சுமூகமான தீர்வு காணவே உத்தபுரம் சென்றோம்.
நாம் மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக அமைதியான முறையில் சுவர் அகற்றப்படும்; அதன் மூலம் தென்தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு சமூக நல்லிணக்கமும், சமூக மாற்றமும் ஏற்படும் என்பதை கண்ணுற்ற ஒருசில சாதிவெறி சமூக விரோதக் கும்பல்களால் உத்தபுரத்தில் பேசிவிட்டு மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்த வழியில், உத்தபுரத்திலிருந்து மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள எழுமலை என்ற கிராமத்தில் இரவு 8 மணியளவில் மின்சாரத்தைத் துண்டித்தும்; கற்களையும், முட்களையும் சாலையில் அடைத்து வைத்து தடையை ஏற்படுத்தியும் நம் மீதும், நம்மோடு வந்த புதிய தமிழகம் கட்சியினரின் மீதும் கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அக்கொலைவெறி தாக்குதலைக் கேள்வியுற்ற தேவேந்திரகுல வேளாளர் மக்கள் எழுமலை சமூக விரோதக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரதான சாலையிலிருந்து வெகுதூரம் உட்பகுதியில் இருக்கக்கூடிய இ.கோட்டைப்பட்டி என்ற குக்கிராமத்தில் ஆண்களும், பெண்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். வாரக் கணக்கில் அந்த பகுதியில் தர்ணா நடந்தால் கூட எந்த விதமான போக்குவரத்து இடையூறும் ஏற்படாத பகுதி அது. இவை அனைத்தும் நன்கு தெரிந்தும் காவல்துறை உயர் அதிகாரிகள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், தர்ணாவிற்கு முன்னிலை வகித்த மாவீரன் சுரேஷ் அவர்களின் நெற்றிப்பொட்டிலும், நெஞ்சிலும் வன்மத்தோடு குறிபார்த்துச் சுட்டு வீழ்த்தினர். காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தப்போகிறார்கள் என தெரிந்திருந்தும், தான் கொண்ட கொள்கைக்காகவும், எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவும் துப்பாக்கிக் குண்டுகளை நெற்றிப்பொட்டிலும், நெஞ்சிலும் தாங்கிக் கொண்ட மாவீரன் சுரேஷின் தியாகம் அளவிடற்கரியது, என்றென்றும் போற்றுதலுக்குரியது.
’வீரர்கள் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகிறார்கள்’ என்பதற்கு இலக்கணமாக அந்த மகத்தான மாவீரன் சுரேஷ் அவர்களின் 15-ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று இரவு கொட்டும் மழையிலும் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.11.2023






