

![]()
’Aborigines’ என்று அழைக்கப்படக்கூடிய பூர்வக்குடி மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அம்மக்கள் வறியவர்களாக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, அம்மக்களுக்கு எதிராக சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்கு முறைகளும் ஏவப்பட்டன. சுதந்திர இந்தியாவில் அம்மக்களுக்குச் சிறப்பு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் உட்பட பலரும் போராடியதன் விளைவாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களிலும் பட்டியல் பிரிவினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் கொடுக்கப்பட்டது. இது அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய இழப்பீடு மட்டுமே.!
இந்த உரிமைக்கும் ஆங்கிலேயருக்கு வால் பிடித்தும், கால் பிடித்தும் தங்களை வளப்படுத்திக் கொண்ட நீதிக்கட்சியினருக்கும், திராவிட மனுவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அரசியல் சாசனத்தின் அங்கமான அந்த இடஒதுக்கீட்டைக் கூட, 1967 பிறகு ஆட்சியில் அமர்ந்த திராவிட மனுவாதிகள் முறையாக வழங்கவில்லை.
90 காலகட்டங்களில் தென் தமிழகத்தில் அதிதீவிரமான சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஏழை, எளிய விளிம்புநிலை பட்டதாரி இளைஞர்களின் வேலையில்லா நிலைகளை அறிந்து 1996 சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசியல் சாசன இடஒதுக்கீடு கொள்கைபடி, 19 சதவீதம் பூர்த்தி செய்யப்படாத பின்னடைவு காலிப்பணியிடங்கள் சம்பந்தமாகவும், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் அரசின் அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும் என டாக்டர் அய்யா அவர்கள் 40 ஆண்டு காலமாக யாரும் கேட்காத கேள்விக்கணைகளைத் தொடுத்த போது தமிழகச் சட்டமன்றமே அதிர்ந்து மௌனித்தது.
1998 மே 15 ஆம் தேதி வெள்ளையறிக்கை கோரி சென்னையில் தலைவர் தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது; அப்பேரணியின் முடிவில் அன்றைய முதல் கருணாநிதி அவர்களைச் சந்தித்து தலைவர் அவர்கள் மனு அளித்தார்கள். அதன் பின், 1999 ஏப்ரல் 14 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பேரணி நடைபெற்றது.
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களில் உள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரியதற்கு தமிழக கல்வியமைச்சர் மறுப்பு தெரிவித்ததால் உரிமையைக் கேட்ட திரு.கிருத்துதாஸ் காந்தி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டார்; தாழ்த்தப்பட்டோருக்கான அரசு குழுக்களிலிருந்து தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் விலகினார்கள். விடுபட்ட 595 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வள்ளுவர் கோட்டம் அருகே 15 நாள் தொடர் ஆர்ப்பாட்டம், தொண்டர்கள் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டார்கள். போராட்டங்களின் விளைவாக 100 பின்னடைவு பணியிடங்களை நிரப்ப அரசு விளம்பரம் செய்தது. இதில் 72 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மீதம் 495 பணியிடங்களை நிரப்பக் கோரி தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
தொடர்ச்சியாக தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சார்பாக 30 நாட்களும் தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் இல்ல முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு தினமும் 1,000 பேர் வீதம் கைது செய்யப்பட்டு; தினமும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
2000 மார்ச் 12 ஆம் தேதி தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவுப் பணியிடங்களுக்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு விரைந்து வெளியிடாவிட்டால் மே மாதம் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்து, இணைந்து போராட மருத்துவர் இராம தாசுக்கும் தலைவர் டாகடர் அய்யா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். 2000 மார்ச் 24 ஆம் தேதி புதிய தமிழகம் கோரிய வெள்ளையடிக்கையை வெளியிடுவோம் என தமிழக அரசு அறிவித்தது. ஒரு மாத காலம் பொறுத்திருந்தும், வெள்ளை அறிக்கை வெளியிடப்படாததால், 2000 மே 06 ஆம் தேதி வெள்ளையறிக்கை கோரி இரயில் மறியல் போராட்டத்தை தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறிவித்தார்கள்.
போராட்ட அறிவிப்பைக் கண்டு மிரண்டு போன திமுக அரசு 1996 முதல் கேட்ட ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையடிக்கையை’ 2000 ஆம் மே 16 ஆம் தேதி சட்டமன்றத்தில் வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கையின் வாயிலாக பட்டியல் சாதிகள் / பழங்குடிகள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் பின்னடைவு பணியிடங்கள் எண்ணிக்கை வெளிவந்தது. தலைவரின் முயற்சிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கோவை சி.டி.தண்டபாணி புகழாரம் சூட்டினார்கள்; பார்வர்ட் பிளாக் உறுப்பினர் திரு.சந்தானமும் தலைவர் அவர்களின் கோரிக்கையை ஆதரித்து, பாராட்டினார்.
தலைவர் அவர்களின் சீரிய முயற்சியினால் பெறப்பட்ட வெள்ளை அறிக்கை மூலம், பட்டியல் பிரிவில் இடம் பெற்றிருந்த தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகியோருக்கு தமிழகத்தின் அரசுத்துறைகளான A. B, C என அழைக்கப்படும் உயர்பதவிகளில் 18 சதவிகிதம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குப் பதிலாக வெறும் ஒரிறு சதவிகித இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது அம்பலப்படுத்தப்பட்டது.
அப்போதிருந்த 13 அரசு பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த துணைவேந்தர்கள் ஒருவர் கூட கிடையாது; 15-க்கு மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயக்குநர்கள், மேலாளர்கள் ஒருவரும் இல்லை; தலைமைச் செயலகத்தில் ஆயிரக்கணக்கான பணிகள் இருந்தாலும் வெறும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே துணைச் செயலாளராக இருந்தனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் காவல் நிலையங்களை வழிநடத்தும் காவல் ஆய்வாளர் ஒருவர் கூட இல்லை; தமிழகம் முழுவதும் 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 770 பிடிஒ-க்களில் பட்டியல் பிரிவைச் சார்ந்தவர்கள் 7 பேர் மட்டுமே இருந்தார்கள்; தமிழகத்திலிருந்த 65 மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் 5000-க்கு மேற்பட்ட பேராசிரியர், உதவி பேராசிரியர், விரிவுரையாளர்கள் இருந்த இடத்தில் 18+1=19 என்ற அடிப்படையில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிய வேண்டும், ஆனால் 125 பேர் மட்டுமே விரிவுரையாளராக இருந்தனர், பேராசிரியரோ, உதவி பேராசிரியரோ ஒருவர் கூட இல்லை.
திராவிட கழக ஆட்சியின் இலட்சணங்களைச் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பிட்டு பிட்டு வைத்தார் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள். அன்றைய கல்வி அமைச்சர் அன்பழகன் வீட்டு முன்பு ஒருமாத காலம் போராடியதில் 100 பேராசிரியர்களைப் பெற்றார்கள். அதன்பின் தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணி இடங்களை நிரப்பினார்கள். அன்று நிரப்பப்பட்ட ஒவ்வொரு இடமும் புதிய தமிழகம் கட்சியினரும், தேவேந்திரகுல மக்களும் சிந்திய வியர்வையாலும், இரத்தத்தாலும் கிடைத்ததே. அதில் பட்டியல் பிரிவினர் மட்டுமின்றி சீர்மரபினர்கள், மீனவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என அனைவரின் அரசு வேலை வாய்ப்புகளில் 18,000க்கும் மேற்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்டு அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டது; அதிகாரம் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டது .
1996-ல் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம், பட்டியல் பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டிய 3,50,000 பணியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாக இருப்பதைக் கண்டறிந்தோம். ஆனால், அந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைக்காமல் வெறும் 11,000 இடங்களை மட்டுமே சுட்டிக்காட்டி வெள்ளையடிக்கப்பட்ட அறிக்கையாகச் சட்டமன்றத்திலேயே சமர்ப்பித்தார்கள்; அதையும் ஆட்சி முடியும் தறுவாயில் தான் சமர்ப்பித்தார்கள்.
தலைவர் அவர்களும், புதிய தமிழகம் கட்சியும் அன்று போராடியது தமிழ்நாட்டில் பட்டியலில் இடம் பெற்றிருக்கக் கூடிய மூன்று பிரிவினருக்குமான சம நீதியை வென்றெடுப்பதற்காகத் தான். ஆனால் தலைவர் அவர்கள் மூன்றரை லட்சம் பணியிடங்களை நிரப்பப் போராடியதை அப்படியே மறைத்துவிட்டு, 2006-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினார்.
இதற்கு அந்த சமூகத்தினர் போராட்டமோ, மாநாடோ நடத்தவில்லை. கோரிக்கையும் வைக்கவில்லை. அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்றரை இலட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்பி விட்டு, அதன் பிறகு இதைப் பற்றி ஆலோசிக்கலாம் என்று தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் போர் குரல் எழுப்பினார்கள். ஆனால் பட்டியல் பிரிவினருக்கான மூன்றரை இலட்சம் பின்னடைவுப் பணியிடங்களை அப்படியே குழிதோண்டிப் புதைத்துவிட்டு, கருணாநிதி வரலாற்றில் செய்த குற்றத்தை மறைப்பதற்காக 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு அறிவித்தார்கள்.
தலைவர் அவர்கள் சட்டமன்றத்தில் 2011-2016 வரை எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அதிமுக அரசும் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. இதன் காரணமாக 18 சதவீத இட ஒதுக்கீடு என்பது திராவிட கட்சிகளின் ஏமாற்றுச் சொல்லாக மாறிவிட்டது.
பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நீதிமன்றத்தில் வழக்கு
1999-2000 ‘‘புதிய தமிழக’’த்தின் சமுதாய நீதிக்கான போராட்டம் காரணமாக அரசு கலைக் கல்லூரிகளின் 595 விடுபட்ட பணியிடங்களில் 100 பணியிடங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு 72 பேர் தேர்வு – அரசு பொறியியல் கல்லூரிகளிலும் விடுபட்ட பணியிடங்களை நிரப்ப அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. புதிய தமிழகத்தின் தொடர் போராட்டம் காரணமாக 2008 ஆம் ஆண்டு புதியதாக பதவி ஏற்ற தி.மு.க.அரசு 67 அரசுக் கல்லூரிகளில் விடுபட்ட பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் செய்தது. இதற்கு மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் புதிய தமிழகம் குரல் கொடுத்தது. நீதி மன்றத்தில் புதிய தமிழகத்தின் போராட்டம் காரணமாக பணியிடங்களை நிரப்ப அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும் இந்த பிரச்சனையைப் புதிய தமிழகம் கேட்கக் கூடாது என்பது போன்ற அறிவுறுத்தலை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்னை புனித பாண்டியன், இளங்கோவன் மறுவழக்குத் தொடர்ந்தனர். ஏற்கெனவே வழங்கிய தீர்;ப்பை நீதிமன்றம் மறுபடியும் வழங்கியது. புதிய விளம்பரம் 512 வெளியிடப்பட்டது. இதன் விளைவாக 512 உதவிப் பேராசிரியர்கள் பணி வாய்ப்பைப் பெற்றனர். 1998 ஆம் ஆண்டு 100 பேரும், 2008 ஆம் ஆண்டு 512 பேரும் ஆக 612 உதவிப் பேராசிரியர்கள் எமது போராட்டத்தின் விளைவாக பணிவாய்ப்பைப் பெற்றனர். இது இந்திய / தமிழக கல்வி வரலாற்றில் வேறு எந்த இயக்கமும் நிகழ்த்தாத மாபெரும் சாதனையாகும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பின்னடைவு பணியிடங்களைக் கோரி அங்குள்ள ஆசிரிய அமைப்புகளுடன் இணைந்து புதிய தமிழகம் போராட்டம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பின்னடைவு பணியிடங்களைக் கோரி அங்குள்ள ஆசிரிய அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தை புதிய தமிழகம் 1995 ஆம் ஆண்டு தொடங்கியது. தொடர்;ந்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி வந்தது. சட்டமன்றத்தில் தலைவாரின் கோரிக்கையை அன்றைய தமிழ் வளர்ச்சி அமைச்சர் முனைவர்.மு.தமிழ்குடிமகன் ஏற்றுக் கொண்டார் – தொடர் போராட்டம் நடைபெற்றது – புதிய தமிழகத்தில் சார்பாளர் முனைவர். அருணா ஆட்சிகுழு உறுப்பினராக பதவி ஏற்றார். ஆட்சிக் குழுவில் தொடர்ந்து வற்புறுத்துதல் – ஆசிரியர் – ஊழியர் அமைப்பின் போராட்டத் தலைவர்கள் பணிநீக்கம் – பணிநீக்கத்திற்கு அருணா தலைமையில் போராட்டம் – துணைவேந்தர் தேர்வுக் குழுவில் அருணா பொறுப்பு – புதிய துணைவேந்தராக முனைவர் சி.சுப்பிரமணியம் நியமனம் – பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மறுபடியும் சேர்ப்பு – 25 உதவிபேராசிரியர்கள் பணியிடம் நிரப்பல் – 95 ஆம் ஆண்டு புதிய தமிழகம் தொடங்கிய போராட்டம் வெற்றி.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராக முனைவர் அருணா பதவி ஏற்பு – பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை – துணைவேந்தர் முனைவர் சிவசுப்ரமணியம் பதிவாளர் முனைவர் சி.சுப்பிரமணியம் ஒப்புதல் – 25 குறைவிட பணயிடங்கள் நிரப்பப்பட்டன.
துணைவேந்தர் நியமனத்தில் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை
பல்கலைக்கழகங்கள் இடஒதுக்கீடு தொடர்பான முடிவுகளுக்கு ‘புதிய தமிழகம்’ முனைப்புகள் உதவின. துணைவேந்தர் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை – பாரதிதாசன் துணைவேந்தராக தேவேந்திரகுல வேளாளரான பேராசிரியர். முனைவர் ஜகதீசன் நியமனம் – பேராசிரியர் மாரியப்பன் துணை வேந்தராக நியமனம் – தொடர்ந்து பிற பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டிற்காக கோரிக்கை.
