

![]()
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் அய்யா அவர்கள் போட்டியிட்டார்கள். அத்தேர்தலில் வாக்கு சேகரிக்க மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிக்குச் சென்றபோது, தலைவர் அவர்களிடத்தில் பன்னெடுங்காலமாக தலைமுறை தலைமுறையாக மிக மிகக் குறைந்த சம்பளத்தில் பணி செய்தும் குடியிருக்க போதிய இடம் இன்றியும், உண்ண போதிய உணவின்றி, காட்டு விலங்குகள் – விஷ பூச்சிகளுக்கு மத்தியில் மழையிலும் பனியிலும் வெயிலிலும் சொல்லொன்னா துயரத்திலும்; கை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் ஈவு இரக்கமின்றி BPTC நிறுவனம் நடந்து கொண்டதன் வாயிலாக மார்பகங்களில் சீழ் வைத்து பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இறந்து போனார்கள். ’இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்பது வெறும் வெற்றுச் சொல்லல்ல. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டால் கசையடிகளுக்கு ஆளானார்கள்; இடம் மாற்றப்பட்டார்கள்; சொல்லாலும் செயலாலும் பல்வேறு அவமானங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். கல்வி கற்க வேண்டிய இளம் வயதிலும் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் பதினைந்து ரூபாய் தினக்கூலிக்கு பணி புரிய நேர்ந்தது. அப்பெண்களின் இளமை கங்காணிகள், மேலாளர்களின் பசியை ஆற்றப் பயன்பட்டன போன்ற சொல்லொன்னா துயரங்களை டாக்டர் அய்யா அவர்களிடம் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறி அழுத போது, ”உங்களை இந்த கொத்தடிமை தனத்திலிருந்து விடுவிக்கின்றேன்” என்று அன்று தன்னம்பிக்கையை ஊட்டி, அம்மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
தேயிலைத் தோட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகளைக் கண்டித்தும், கூலி உயர்வு கேட்டும் சட்டமன்றத்தில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதங்கள், சென்னையில் பேரணி, டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி இருமுறை பேரணி, தமிழக முழுவதும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல், 144 தடை உத்தரவு, தமிழக அளவில் பந்த் போன்றவை நடைபெற்றது.
1998 ஆகஸ்ட் 17 ஆம் தேதி தேயிலைத் தோட்டங்களில் நடைபெற்ற கொத்தடிமை முறை குறித்து தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்து இரவு 8 மணி முதல் மறுநாள் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தி, மனு அளித்தார்கள்.
”தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக ரூபாய் 150 கொடுக்கவேண்டும், சட்ட ரீதியாக எல்லா உரிமைகளும் வழங்கப்படவேண்டும்; 8 மணி நேரம் மட்டுமே வேலை கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் கொத்தடிமைத் தனத்திலிருந்து முற்றிலும் விடுதலை செய்யப்படவேண்டும்” என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்து அவர்களுக்காக திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருந்து 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களோடு 80 கிலோமீட்டர்களுக்கு மேல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அந்த போராட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான பெண்கள் கைதாகி கோவை, திருச்சி, திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டனர்.
1998 செப்டம்பர் 25 ஆம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. நவம்பர் 27 ஆம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கைது குறித்து சட்டசபையில் போராட்டம் நடத்தி சட்டசபையிலிருந்து அவைக் காவலர்களால் தலைவர் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். 1998 டிசம்பர் 30 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியால் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1999 ஜனவரி 06, மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டிரைக்டர் ஜெனரல் டி.ஆர்.கார்த்திகேயன் ஒப்புதல் கொண்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது; அப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மாநிலம் தழுவிய பந்த் நிறுத்தம் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
1999 ஜனவரி 12 ஆம் தேதி தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் தொடர் முயற்சியால் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் உயர்த்தப்பட்டது. 1999 ஜனவரி 23 ஆம் தேதி வால்பாறைத் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளா? – என அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையத்திடம் தலைவர் அவர்கள் மனு அளித்தார்கள். மார்ச் 02 ஆம் தேதி அரசியல் பழிவாங்கும் நோக்கோடு மாஞ்சோலை அந்தோணிமுத்து கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு தலைவர் அவர்களும் 11 ஆவது எதிரியாக சேர்க்கப்பட்டார்கள்.
ஏப்ரல் 28, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஜூன் 02 ஆம் தேதி தமிழகம் முழுவதும் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு நிறைவடைவதால், புதிய மாத ஊதியமாக தினக்கூலி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாத ஊதியமாக தினக்கூலி 150 ரூபாய் என்ற அடிப்படையில் கணக்கிட்டு வழங்கவும் கோரிக்கை வைத்தார்கள், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.
1999 ஜூன் 18 ஆம் தேதி 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற நெல்லை ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் 10 கைக்குழந்தைகள், 200 தாய்மார்கள் உட்பட 600 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென 1999 ஜூலை மாதம் 23-ஆம் தேதி, நெல்லை ஜங்சனிலிருந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 50000-க்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பேரணியாக வந்தனர்.
ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமைதியான முறையில் நடந்த அந்த பேரணியில் நிறைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தாமிரபரணி ஆற்றின் கரையிலே கொளுத்துகின்ற வெயிலின் சூடு தாங்க முடியாதவர்கள் தங்களுடைய காலணிகளைக் கழற்றி அதன் மேலே அமர்ந்திருந்தார்கள். பேரணிக்குத் தலைமை தாங்கிய தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் உட்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். ஆனால் அதற்குக் கூட அனுமதி அளிக்காத மாவட்ட ஆட்சியர் தனவேல், அன்றைய டி.ஐ.ஜி இராஜேந்திரன் உட்பட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து அப்பாவி தொழிலாளர்கள் மீது நடத்திய கொடும் தாக்குதலில் தாமிரபரணி ஆற்றில் ஒரு வயது விக்னேஷ் உட்பட 17 பேர் வீரமரணம் எய்தினார்கள். தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் உயிரைக் குறி வைத்துத் தாக்கப்பட்ட போது, தங்களது உயிரை துச்சமென எண்ணி தலைவர் அவர்களின் மீது ஒரு கல் கூடப் படாமல் தொண்டர்கள் கவசம் போல் சூழ்ந்து காப்பாற்றினார்கள்.
1999 ஜூலை 2 ஆம் தேதி திருச்சி சிறையிலிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 1999 ஜூலை 31 ஆம் தேதி தாமிரபரணி படுகொலையைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மூப்பனார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். 2000 ஜனவரி 25 ஆம் தேதி நீலகிரி, கோத்தகிரி, பர்ன்சைட், கூட்டாடா தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்றபோது தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2000 ஏப்ரல் 19 ஆம் தேதி மாஞ்சோலை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் தலைவர் அவர்கள் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். நவம்பர் 11 ஆம் தேதி வால்பாறையில் பொதுக்கூட்டம்; நவம்பர் 14 ஆம் தேதி மோகன் ஆணைய அறிக்கையைத் தலைவர் நிராகரிப்பு என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன.
2000 டிசம்பர் 20 ஆம் தேதி தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது; 2001 நவம்பர் 20 ஆம் தேதி தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முடீஸில் புதிய தமிழகம் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
தலைவர் அவர்களின் தொடர் போராட்டங்களின் உத்வேகத்தைக் குறைக்கத் திட்டமிட்டு வால்பாறை முடிஸ் தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்களைத் தடுத்ததாக முடீஸ் காவல்நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டு, டிசம்பர் மாத விடியற்காலையில் கோவை பொதிகை இல்லத்தில் திமுகவின் காவல்துறை டாக்டர் அய்யா அவர்களை கைது செய்து, கோவை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மூன்று மணி நேரம் காலதாமதம் செய்து, பின்பு வாகனத்தில் மதுரை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; தலைவர் அவர்களின் கைதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியினரும், பொது மக்களும் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தலைவர் அவர்கள் 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினீல் வெளிவந்தார்கள்.
அதை தொடர்ந்து 2002 பிப்ரவரி 25 ஆம் தேதி குன்னூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேச மார்ச் 14 ஆம் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சரத் யாதவ் மற்றும் 2002 மார்ச் 24 ஆம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுவையும் தலைவர் அவர்கள் சந்தித்தார்கள்.
2002 மே 01 ஆம் தேதி கோவையில் தோட்டத் தொழிலாளர் அணிவகுப்பு – மாநாடும், மே 16-ஆம் தேதி டெல்லியில் பேரணியும் நடைபெற்றது. 2003 ஜுலை 02-ஆம் தேதி தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தோட்டங்கள் அழிக்கப்பட்டதற்கு தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பலமுறை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் என வலியுறுத்தினாலும், அதன் மூலம் பேச்சுவார்த்தை பலமுறை நடைபெற்றிருந்தாலும் கோரிக்கைகளுக்கு உரிய உத்திரவாதம் அளிக்கப்படாததால் பல கட்ட போராட்டங்கள் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மண்ணுரிமைக்காக, மனித உரிமைக்காக வாழ்வுரிமைக்காக, ஊதிய உயர்வுக்காகவும் இறுதி வரை சமரசம் இல்லாமல் களத்தில் உறுதியாக நின்ற புதிய தமிழகம் கட்சியின் அளப்பரிய போராட்டங்களால் தொழிலாளர்களின் ஊதியம் ரூபாய் 45-லிருந்து 160 ஆகவும் பிறகு, ரூ 450 வரை பெற்று தொழிலாளர்களுடைய வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது.
இருப்பினும், வரலாற்றின் உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும் என்பதில் நாம் உறுதியாகத் தான் இருக்கிறோம். தாமிரபரணிப் படுகொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டும். என்பதே நாம் வைக்கக்கூடிய நீண்டநாள் கோரிக்கையாகும்.
தாமிரபரணி தியாகிகளை மறக்கவும் மாட்டோம்..!
கொலைக் குற்றம் செய்தோரை மன்னிக்கவும் மாட்டோம்.!
வரலாறுகள் என்றாவது ஒரு நாள் சரியாகத் தீர்ப்பெழுதும்!!
