

![]()
ஜுலை 07, 1998 தேவக்கோட்டை அருகில் உள்ள கண்டதேவி கோவிலில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக நீதிமன்றத் தடை பெறப்பட்டது – அனைத்து சாதியினரும் தேர்வடம் பிடித்து இழுக்கும் உரிமை நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் – தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் திருவிழாவில் மண்ணின் பூர்வகுடி மக்களான தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தேர் இழுக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இதனை மீட்டெடுக்கும் பொருட்டு, 1998 ஆம் ஆண்டு ’ஆண்ட பரம்பரைக்கே அநீதியா?” எனும் முழக்கத்தோடு மதுரையிலிருந்து தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கண்டதேவியை நோக்கித் தேர் இழுக்கும் உரிமையை நிலை நாட்டச் சென்ற போது அரசும் காவல்துறையும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆதரவாக தடுத்து நிறுத்தினார்கள். பின், 1998 ஜூலை 7 ஆம் தேதி கண்டதேவி தேரோட்டப் பிரச்சினையில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று அனைத்து சாதியினரும் வடம் பிடித்து தேரை இழுக்கும் உரிமையை தலைவர் அவர்கள் பெற்றுத் தந்தார்கள்.
1998 மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்டதேவி தேர் இழுப்பு சிக்கல் குறித்து தலைவர் அவர்கள் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்கள். ஜூன் மாதம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழாவில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் வழிபாட்டில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைவர் அவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்; தேர்த் திருவிழாவை நடத்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரி கண்டதேவியிலிருந்து தேவகோட்டை வரை பேரணியாக செல்வதாக தலைவர் அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். தலைவர் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்144 தடை உத்தரவு பிறப்பித்தது; 144 தடையை மீறி பேரணியாக செல்ல தலைவர் அவர்கள் முயற்சி.
1998 ஜுன் 24 ஆம் தேதி அனைத்து இந்துக்களும் வடம் பிடிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்வடம் இழுக்க ஆதிக்கச் சாதிகள் மறுப்பு தெரிவித்ததையொட்டி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜுலை 7 ஆம் தேதி தேவக்கோட்டையில் ‘சொர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோவிலானது ஒரு சாதி உடைமை – ‘ஒரு சாதியினர் மட்டும் வழிபடும் உரிமை’ என்னும் மூர்க்கத்தனத்திற்கு எதிராக தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் உயர்நீதிமன்ற வழக்குத் தொடுத்துத் தீர்ப்பு பெற்றார். அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆதிக்கசாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பையொட்டி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2000 ஜுன் மாதத்தில் கண்டதேவி தேர் ஓடவில்லை.
2003 ஜுலை, 7 கண்டதேவி கோயில் தேரோட்டத்திற்கு புதிய தமிழகம் மீண்டும் நீதிமன்றம் மூலம் உரிமையைப் பெற்றுத் தந்தது. 1988 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழிபாட்டு உரிமை போருக்கு நீதி மன்றம் வழங்கிய வழிகாட்டுதலை சாதி வெறியர்கள் பின்பற்றப்போவதில்லை என அறிவித்ததால் 2003 ஜுலை 11 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ்பாபு தேரோட்டம் நடைபெறாது என அறிவித்தார்.
2003 ஜுலை 12 ஆம் தேதி கண்டதேவி கோயில் தேரோட்டம் குறித்த நீதிமன்ற வழிகாட்டுதலை நிறைவேற்றத் தவறிய மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஐஜி ஆகியோருக்கு கண்டனம். மேலும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைத் தடைசெய்தவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை பிரயோகிக்காததிற்குத் தலைவர் அவர்கள் கடும் கண்டனம்.
2004 ஜுலை 01 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணித்து விட்டு கண்டதேவி தேர் திருவிழா நடைபெற்றது. நீதிமன்ற வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
2004 ஜுன் 18-கண்டதேவி தேரோட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. ஜுன் 21, கண்டதேவி செல்ல முயன்ற தலைவர், மனித உரிமை ஆர்வலர் புதுவை சுகுமாரன், கவிஞர் கவிதா சரண் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி கே.கே.நகர் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்படப் பின், மாலை விடுதலை செய்யப்பட்டனர் கண்டதேவி தேரோட்டத்தில் நீதிமன்ற ஆணையை மீறி திருவிழா நடைபெற்றது.
ஜூலை, 04 தென்தமிழகத்தில் இந்து சாதி தீவிரவாதத்தை ஒடுக்கக்கோரியும், கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் பட்டியல் சாதி மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு குறித்தும் சென்னை வழக்கறிஞர்கள் சந்துரு மற்றும் பொது வழக்கறிஞர் பக்தவச்சலம், சாந்தி அரிமா, அரிமா தோழன், அய்யர், பேராசிரியர், முனைவர் அருணா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.
ஜூலை 04, கண்டதேவி தேரோட்டத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசைக் கண்டித்து சென்னை – மெமோரியல் ஹால் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; இறுதியில் கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது.
நவம்பர் 05 ஆம் தேதி உத்தபுரம், பந்தபுளி(சங்கரன்கோயில்) கண்டதேவி (சிவகங்கை) திரௌபதி அம்மன்(சேலம்) கோயில்களில் அடித்தட்டு மக்களுக்கு வழிபாட்டு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க தமிழக முதல்வருக்கு தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கோரிக்கை கடிதம் எழுதினார்கள்.
பின்பு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் தொடர்ந்து போராடியதன் மூலமாக அனைத்து சாதியினருக்கும் தேர் இழுக்கும் உரிமையும், வழிபாட்டு உரிமையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
