

![]()
1995-ஆம் ஆண்டு நடந்த கொடியங்குளம் கலவரத்திற்கு நீதி கேட்டு, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில், டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், சென்னைப் பேரணி, டெல்லி பாராளுமன்றம் முற்றுகை, தமிழகம் முழுவதும் சாலை மறியல், பந்த், முதலமைச்சர் நிகழ்ச்சி புறக்கணிப்பு, வீடுகள் தோறும் கருப்புக் கொடி என கொந்தளித்திருந்த தேவேந்திரகுல மக்களைச் சாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தேவேந்திரகுல மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உண்மை நிலையறிந்தும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 1995 நவம்பர் 04, மதுரையை தலைமையிடமாகக் கொண்ட பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து தேவேந்திரகுல சமூகத்தில் பிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியான ”வீரன் சுந்தரலிங்கனார் பெயரில் விருதுநகரை மையமாக வைத்து போக்குவரத்துக் கழகம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
ஆனால், 1996 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பின் காரணமாக சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. தேவேந்திரகுல மக்கள் மத்தியில் அதிமுக மீது ஏற்பட்ட எதிர்ப்பலையால் 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்தத் தேர்தலில் தனித்து நின்று புதிய தமிழகம் வெற்றி பெற்றது.
1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், ஜெயலலிதா அவர்கள் அறிவித்த வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் நடைமுறைக்கு வரவில்லை. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையிலேயே மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1997-ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததன் விளைவாகவும்,”ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள்ளாக வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் நடைமுறைக்கு வரவில்லையெனில், மே 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வேறு எவர் பெயரிலும் போக்குவரத்துக் கழகமோ, மாவட்டமோ இயங்க அனுமதிக்க மாட்டோம்” என்று தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அரசை எச்சரித்ததன் விளைவாகவும் 1997 மே மாதம் 1-ஆம் தேதி வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழக அறிவிப்பு வந்தது.
அன்று முதல் விருதுநகரை மையமாக வைத்து, வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் இயக்கப்பட்டது. ஆனால், அதை அரசு விழாவாகக் கொண்டாடவில்லை; ஒரு அமைச்சரோ, உயர் அதிகாரியோ கூட துவக்கி வைக்க வரவில்லை; வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகம் என்ற பெயருடன் பேருந்துகள் மட்டும் இயங்கின.
அதே 1997-ல் அன்றைய ஆட்சியாளர்கள் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராகவும், தேவேந்திரகுல மக்களுக்கு எதிராகவும் மற்றொரு பிரிவினரை தூண்டிவிட்டார்கள்; ஆறு மாதங்கள் கலவரங்கள் நடந்தன; எத்தனையோ பேருந்துகள் எரிக்கப்பட்டன.
தேவேந்திரகுல வேளாளருடைய எந்த ஒரு அடையாளம் கூட இருக்கக் கூடாது என்பதில் தான் கருணாநிதி முழு மூச்சாகக் கவனமாக இருந்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தனது கூட்டணிக் கட்சியினரை முன்மொழிய வைத்து, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் அடையாளம் இருக்கக் கூடாது என்பதற்காக எல்லா தலைவர்களுடைய பெயரையும் எடுப்பதற்குத் துணிந்து, கண்முன்னாலேயே தேவேந்திரகுல வேளாளர்களை ஏமாற்றி வஞ்சித்தார்கள்; குறுகிய நெஞ்சம் கொண்ட ஆட்சியாளர்களின் செயல்களால் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் துவக்கப்பட்ட போக்குவரத்துக் கழகம் நிறுத்தப்பட்டது.
சமுதாய தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவதில்லை எனவும், பொது இடங்களில் எவரது சிலையையும் அமைப்பதில்லை எனவும் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சுந்தரலிங்கம் பெயரை நீக்கவேண்டும் என்பதற்காகவே ஏற்கனவே மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் இயங்கி வந்த போக்குவரத்துக்கழகங்களும்; மாவட்டப் பெயர்களும் நீக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல, வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகத்தைப் போராடிப் பெற்றதற்காக வேண்டுமென்றே எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், தேனியில் மே மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆட்சியாளர்கள் தலைவர் அவர்களைக் கைது செய்து, மதுரை சிறைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து இரவோடு இரவாக 500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வேலூர் சிறையில் அடைத்தார்கள்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் தமிழகமெங்கும் கொதித்தெழுந்தார்கள். ரயில் மறியல், சாலை மறியல் என தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டங்களை தேவேந்திர வேளாளர் மக்கள் நடத்தினார்கள். கோவில்பட்டி – மலைப்பட்டி அருகே இரயில் சிறைபிடிக்கப்பட்டது; திருநெல்வேலி – துறையூர் அருகே மே 5 ஆம் தேதி அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி நெல்லை-மதுரை நெடுஞ்சாலையில் மறியல் செய்தார்கள். மறியலைக் கலைக்க காவல்துறை ஒருபுறம், எங்கள் தலைவர் டாக்டர் அய்யாவை விடுதலை செய்தால் தான் கலைந்து போவோம் என்று மக்கள் ஒருபுறம். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய அந்த போராட்டத்திற்கு துறையூர் பிலிப்ஸ் தலைமை வகித்தார். வானோக்கி சுட்டப்பிறகும் கூட்டம் கலையாமல் நின்றதால், காவல்துறை உயர் அதிகாரியின் கைத்துப்பாக்கி குண்டுகள் தலைமை வகித்த பிலிப்ஸின் வயிற்றிலும் நெஞ்சிலும் பாய்ந்தன; அதே போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலந்தா சண்முகமும் உயிரிழந்தார்.
இந்த மகத்தான போராட்டங்களால் அன்றைய அரசு பணிந்தது. அன்றே தலைவர் அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
1997-ல் தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேருந்துகள், கல்வி நிலையங்கள், மாவட்டங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு தலைவரின் பெயரையும் சூட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படியே இன்று வரை எந்தவொரு தலைவரின் பெயரும் எதற்கும் சூட்டப்படாமல் இருந்து வருகிறது. இதனாலேயே தென் தமிழகத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவி வருகிறது என்பது தான் வரலாறு.
