தேவேந்திரகுல வேளாளர்கள் அரசியல் எழுச்சி சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்
தேதி: 12 ஏப்ரல் 1998
இடம்: திருநெல்வேலி - புளியங்குடி
1. அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான 19 விழுக்காடு இடஒதுக்கீட்டை, கடந்த 50 ஆண்டுகாலமாக அமலாக்காத காங்கிரஸ், திராவிட கட்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
பல துறைகளிலும் இதுவரை நிரப்பப்படாத பல்லாயிரக்கணக்கான பின்தேங்கல் (Backlog) பணியிடங்கள் பற்றிய நிலைமை ஆகியவை பற்றிய வெள்ளையறிக்கை வெளியிடவும், அதை நிரப்பி வேலை கிடைக்காமல் திணறி வரும் பல இலட்சம் பட்டியலின இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலை கொடுக்கும் தீர்க்கமான அரசு உத்தரவையும், அதற்கான நடவடிக்கைகளையும், தனியார் துறையிடம் 19% இடஒதுக்கீட்டையும் உடனடியாக மேற்கொள்ளவும் இம்மாநாடு வலுவாக வலியுறுத்துகிறது.
அதை வலியுறுத்தும் முகமாக இலட்சக்கணக்கான இளைஞர்களுடன் சென்னை கோட்டையை மே 12-ஆம் நாள் திங்கட்கிழமை முற்றுகையிட இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது
2. பட்டியலின, மிகமிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் சுய வேலைவாய்ப்பைத் தேடி, கடன் உதவி பெற வங்கிகளுக்குச் சென்றால், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை உதாசீனப்படுத்தும் அதிகாரிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
பட்டியலின, மிகமிகப் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு ஐ.ஆர்.டி.பி (I.R.D.P) மற்றும் பி.எம்.ஆர்.ஒய்(P.M.R.Y) மற்றும் சுய வேலைவாய்ப்பிற்குத் தடையற்ற கடன் வழங்க வலியுறுத்தி,அதற்குத் தடையாக இருக்கும் அதிகாரிகளின் ‘முகங்களில் கரிபூசும்’ போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
3. சாதிய, மதவாத, ஊழல் அரசியல் சக்திகளோடு மறைமுக உறவு கொண்டு பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களைக் கைது, சித்திரவதை, பொய் வழக்கு மூலம் காவல் நிலையங்களில் கொடுமைப்படுத்தும் காவல்துறை அதிகாரிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
இனிமேல் பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, காவல் நிலையங்களில் துன்புறுத்தும் அதிகாரிகளை அடையாளங்கண்டு கண்டிக்கும், தண்டிக்கும் நடவடிக்கைகளில் புதிய தமிழகம் ஈடுபடும்.
4. 1957-ல் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி உயிர்நீத்த தியாகி இம்மானுவேல் சேகரன் முதல் இன்று வரை உயிரிழந்த தேவேந்திரகுல, ஆதிதிராவிட, அருந்ததியர் மக்கள் அனைவரையும் “சமநீதி தியாகிகளாக” அறிவிக்கும்படி தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
5. கடந்த ஆட்சியில் தொடங்கி இன்று வரை பட்டன்கல்லூர் , ஆழ்வார்கற்குளம், பெரியபோராளி, குண்டுப்பட்டி உட்பட உரிமைக்குப் போராடிய தேவேந்திரகுல, ஆதிதிராவிட, அருந்ததியர் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
6. இஸ்லாமியச் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும் எதிர்த்து உரிமையையும் பாதுகாப்பையும் பெற்றுத்தர, புதிய தமிழகம் இஸ்லாமியச் சமூக மக்களுடன் தோளோடு தோள் கொடுத்து வெற்றியை ஈட்டும் என இம்மாநாடு அறிவிக்கிறது.
7. நிலமற்ற, ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களுக்கு புரட்சிகர நிலச்சீர்திருத்தத்தின் மூலமாகவும், அரசே கையகப்படுத்தி நிலங்களை அளிப்பதன் மூலாகவும், உழவர்கள் உழுதுண்டு வாழ உத்திரவாதம் செய்ய தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.
8. பெண்கள் மீது நடத்தப்படும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் விடுதலை பெற்று பெண்கள் அதிகாரத்தில் பங்குகொள்வதை புதிய தமிழகம் தனது சமூகக் கடமையாக எடுத்துக் கொண்டுள்ளது என இம்மாநாடு உறுதியளிக்கிறது.
9. மீனவமக்கள் மீது நடத்தப்படும் பொருளாதார ரீதியான, அரசியல் ரீதியான, இராணுவ ரீதியான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, மீனவர் வாழ்வுரிமையை மீட்டுத்தர ‘புதிய தமிழகம்’ பாடுபடும் என்பதை இம்மாநாடு அறிவிக்கிறது.
10. நாடார் சமுகத்தினரது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை அந்தச் சமூகத்திற்கு மீட்டுத்தரவும், யாதவர், முத்தரையர், சலவையாளர், முடிதிருத்துவோர் ஆகிய சமூகங்கள் மற்றும் பலவீனமான சிறுபான்மைச் சமூகங்களுக்கான உரிமைகளைப் பெற்றிடவும் புதிய தமிழகம் ஒவ்வொரு சமூகத்துடனும் இணைந்து செயல்படும் என்பதை இம்மாநாடு கொள்கை முழக்கமாக அறிவிக்கிறது.
