10 வது மாநில மாநாடு – உலக தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு, அடையாளம் மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற மாநாட்டு தீர்மானம்
தேதி: 06 மே 2018
இடம்: விருதுநகர் மாவட்டம் - பட்டம்புதூர்
2018, மே 6-ந்தேதி விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர்.க.கிருஷ்ணசாமி M.D, Ex.M.L.A, அவர்களின் தலைமையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் 10-வது மாநில மாநாடு மற்றும் உலகத் தேவேந்திரர் ஒருங்கிணைப்பு, அடையாள மீட்பு மற்றும் பட்டியலின வெளியேற்றப் பிரகடன மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
- தேவேந்திரகுல வேளாளர் மக்களின் அரசியல், கலாச்சார மற்றும் சமூக மாற்றங்களை தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கிடையே மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த இந்திய மக்களிடையே சமூக மாற்றத்திற்கு உந்துதல் ஏற்படுத்தக் கூடிய, சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற, தேவேந்திரகுல வேளாள மக்களுக்கு இம்மாநாடு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
- வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் அய்யா க.கிருஷ்ணசாமி, D, Ex.M.L.A, அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு அறக்கட்டளை மற்றும் இயக்க நிர்வாகிகளுக்கும், இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஊர் நாட்டாண்மை, மற்றும் ஊர் தலைவர்களுக்கும், ஏனைய தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகள், மற்றும் இயக்கங்களுக்கும் இந்த மாநாடு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
- தமிழ்நாட்டில் 76 சாதிகள் அடங்கிய பட்டியலின மக்கள் அட்டவணையில் பள்ளர், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தார், கடையர் மற்றும் காலாடி என்ற 6 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற சாதியைச் சார்ந்தவர்கள். இந்த 6 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, “தேவேந்திரகுல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேவேந்திரகுல வேளாளர் என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.
- ‘தமிழ்மொழியின் இலக்கணக் காப்பியமாக விளங்கும் தொல்காப்பியத்தில்’ மருதநிலமக்களாக அடையாளப்படுத்தப்பட்ட மூத்ததமிழ்க்குடி – சேர, சோழ, பாண்டியர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாறுகளை சிறிதும் கணக்கில் கொள்ளாமலும், 1927-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், எம்மின மக்களின் ஆட்சேபனைகளையும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமலும், அன்று தேவேந்திரகுல வேளாளர்களின் வறியநிலை ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, பட்டியல் பிரிவில் சேர்த்ததை, தேவேந்திரகுல வேளாள சமூகம் முழுமையாக நிராகரிக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளுக்கும், சமூக ஒதுக்கல்களுக்கும் ஆளான மக்களை வகைப்படுத்தி, அவர்களுக்கு அரசு நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் அளிக்கவே பட்டியல் பிரிவு தயார் செய்யப்பட்டது. நில உரிமையாளர்களாக இருந்த தேவேந்திரகுல வேளாளர்கள், அந்நியப் படையெடுப்புகளால் அரசு, அதிகாரத்தை இழந்து, மண்ணையும் இழக்கலாயினர். இழந்த மண்ணை மீட்டெடுக்கப் போராடிய தேவேந்திரகுல வேளாளர்கள் குடிநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. வரலாற்றில் ‘இம்மண்ணைஆண்டவர்களேஅரசு, அதிகாரத்தை இழந்து வறுமையில் உள்ளவர்கள்’ என்பதை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் காணத்தவறியதோடு மட்டுமின்றி, தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினத்தில் சேர்த்தது பிரிட்டிஷ் அரசு செய்த வரலாற்றுப் பிழையாகவே நாங்கள் கருதுகிறோம். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பட்டியலினத்தில் சேர்த்ததையும், பின்னாளில் தொடர்ந்து திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆதிதிராவிடர் என்று அழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டதையும் தேவேந்திரகுல வேளாளர்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். காலங்காலமாக இம்மண்ணில் சுதந்திரமாக கோலோச்சிய மக்களை, பட்டியல் பிரிவில் சேர்த்ததால், தீண்டாமையை வலிந்து எம்மக்கள் மீது திணித்தனர். கோபம் கொண்ட தேவேந்திரகுலவேளாளர்கள் கொந்தளித்தனர். 1928-ஆம்ஆண்டு 11 கட்டுப்பாடுகள் தேவேந்திரகுல வேளாளர்கள் மீது விதிக்கப்பட்டது. அக்கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தொடங்கிய போராட்டங்களே தேவேந்திரகுல வேளாளர்கள் அடையாள மீட்புப் போராட்டங்களாக இன்றுவரையிலும் தென்தமிழகத்தில் தொடரக்காரணம் என்பதை சில வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலான ஊடகங்கள், பத்திரிக்கைகள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இம்மாநாட்டின் மூலம், இழந்தமண்ணையும், அரசையும், அதிகாரத்தையும், அனைத்துகலை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களையும் மீட்டெடுக்கவும், ஆதிதிராவிடர் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறவும் உறுதி பூண்டுகிறோம். தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினத்திலிருந்து நீக்கி அரசு வேலை வாய்ப்புக்களில் மக்கள் தொகை அடிப்படை விகிதாச்சரத்துடன் கூடிய ஒதுக்கீட்டுடன் இதரப் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று 2017 அக்டோபர் 6ம் தேதி சென்னையில் நடந்த மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றி ,மாநாட்டு தீர்மானங்களை, முதலமைச்சர் முதல் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சமர்ப்பித்ததை இந்த மாநாடு நினைவு கூர்கிறது.2017 டிசம்பர் 6 ம் தேதி டெல்லியில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தி, பிரதமர் முதல் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கோரிக்கை மனு சமர்ப்பித்ததையும் இம்மாநாடு நினைவு கூர்கிறது. ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்களின் ஏகோபித்த கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளுக்கு இம்மாநாடு வருத்தத்தை தெரிவிக்கிறது. மேலும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தை உடனடியாக அறிவிக்கவும், பட்டியலினத்திலிருந்து நீக்கி, இதரப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகளை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில், வரும் 2018 ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலிருந்து மூன்று கட்டப் போராட்டங்களை முன்னெடுக்க இம்மாநாடு தீர்மானிக்கிறது.
- புதிய தமிழகம் கட்சியும், தேவேந்திரகுல வேளாளர்களும் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பள்ளர், குடும்பர், தேவேந்திரகுலத்தார், பண்ணாடி கடையர் மற்றும் காலாடி ஆகிய சாதிகள் பற்றிய செய்திகளை குறிப்பிடும்போது, தேவேந்திரகுல வேளாளர் என்றே குறிப்பிட வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. எக்காரணத்தைக் கொண்டும், தேவேந்திரகுல வேளாளர்களை ஆதிதிராவிடர், தலித், தாழ்த்தப்பட்டோர் மற்றும் அரிஜன் என்று குறிப்பிடக்கூடாது என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
- தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் வாழும் விவசாயிகளின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்று, மத்திய அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியால் துவங்கப்பட்ட போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடரும்.
- நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு! கடந்த காலங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைகளாலும், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல் பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளாலும் பெரும்பாதிப்பு நேர்ந்ததை நாம் அறிவோம். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்,DCW கில்பன் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை உரிய முறையில் தடுத்து நிறுத்துமாறு புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.
- ஆனால் இதுபோன்ற சில பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் எவ்விதமான வளர்ச்சித் திட்டங்களையும் வரவிடா வண்ணம், தமிழின் பெயரால் எதிர்ப்புக் குரல் கொடுக்கக்கூடியப் போக்கு அண்மைக்காலமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் கொடையாக விளங்கும் கனிமங்கள், நிலக்கரி, பெட்ரோல்,டீசல், எரிவாயு என அனைத்திற்கும் தமிழின் பெயரால் எதிர்ப்புக் குரல் கொடுப்பது கண்டிக்கத்தக்கது.
- கட்டுப்பாடற்ற சமூக வலைதளங்களின் பயன்பாடுகள், ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கின்றன. எனவே Facebook, Whatsapp, Twitter, Youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.
- கடந்த 4 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையுயர்வு நடுத்தர வர்க்கத்தை பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது.உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, இங்குள்ள பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழகத்தில் உள்ள தேசிய நெடுச்சாலைகளில் சில சுங்கச் சாவடிகளில் சுங்கத்தீர்வை காலாவதி ஆனப் பிறகும் வசூல் செய்வதாக தெரிய வருகிறது. ஆகவே சுங்கத் தீர்வை வசூலிக்கும் முறைப் பற்றி வெள்ளை அறிக்கை அளிக்க இந்த மாநாடு மத்திய அரசை கெட்டுக்கொள்கிறது.
- தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய முழுமையும் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு கொடுக்க, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், சுயதொழில் பயிற்சியும் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- GST வரிவீதத்தை 18%, 24% என்ற வீதத்திலிருந்து குறைத்து, 4%, 12% என்ற அளவிற்கு மாற்றியமைக்கவும், உணவு போன்ற ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டு பொருட்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கவும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடவும் வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடுக் கேட்டுக்கொள்கிறது.
- திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- திருநெல்வேலி மாவட்டம், சிவகிரிக்கு மேற்குப் பகுதியில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டை பழுதுபார்த்திடவும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகி, வீணாக அரபிக் கடலில் கலக்கும் நதிகளையும், ஓடைகளையும் தமிழகப்பகுதிக்குத் திருப்பிவிட, முறையான பேச்சுவார்த்தையை கேரள அரசிடம் தமிழக அரசு துவக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- மதுரை விமான நிலையம் அமைத்திட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அளித்த தேவேந்திரகுல மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மானுவேல் தேவேந்திரர் பெயர் சூட்டிட வேண்டுமென மத்திய அரசையும், அதற்கு உரிய பரிந்துரை அளிக்குமாறு மாநில அரசையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- சமீபத்தில் சிங்காரம், செந்தில்குமார் ஆகிய தேவேந்திரகுல இளைஞர்களை கொலை செய்த மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாசகத்தை தாக்கிய கூலிப்படையினரையும் அவர்களை ஏவிவிட்டவர்களையும் உடனடியாக கைது செய்திட வேண்டுமெனவும், தென்தெமிழகத்தில் தலைதூக்கும் கூலிப்படை கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- எந்தவொரு சமுதாயத்தினுடைய வீழ்ச்சிக்கும் வெளிப்பகை மட்டுமல்ல, உள்பகையும் காரணமாக இருக்கும். எனவே வீழ்ச்சியிலிருந்து மீட்சி காண வேண்டுமானால் முதலில் உள் பகைகளை ஒழிக்க வேண்டும். தகுதிகளை வளர்க்கத் தவறியதன் விளைவாக, பொதுத் தளங்களில் தனிமைப்படுத்தப்படுகிறபோது, தன்னைத்தானே நொந்து கொள்வது, ஆண்மகனாக குடும்பச்சுமைகளை தோளில் சுமப்பதற்குப் பதிலாக குடும்பத்தினர் மீது வெறுப்பு கொள்வது, உற்றார் உறவினர்களோடு பகை கொள்வது, சேர்ந்து வாழும் இயல்புகளை மறப்பது, நேசிக்க வேண்டிய சகோதர, சகோதரிகள் மீது வெறுப்பு கொள்வது, பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை மோதிக்கொள்ளும் முரண்பாடுகளாக மாற்றுவது ஆகிய உள்பகைகளை அறவே விட்டொழிக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர்களும் ஈடுபட வேண்டும். ‘Blood is thicker than water’ என்ற அடிப்படையில், எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் சமூக ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் பேணிப் பாதுகாப்பதையே நம்முடைய தலையாய கடமையாக கருதிட வேண்டுமென ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- பட்டியல் இடம் பெற்றதால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சிறிய நன்மைகளும், பெரிய பாதிப்புகளுமே ஏற்பட்டன. சுதந்திர இந்தியாவில் வேறெந்த சமுதாயமும் சந்தித்திராத போராட்டங்களை அல்ல போர்களை சந்தித்தது தேவேந்திரகுல வேளாளர்களே! எனினும் இம்மண்ணில் வாழும் சக தமிழ்ச் சாதிகளோடு நல்லிணக்கம் காட்டும் பொருட்டு, எந்தச் சூழ்நிலையிலும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை புதிய தமிழகம் கட்சியினரும் தேவேந்திரகுல வேளாளர்களும் பயன்படுத்தக் கூடாது எனவும், காவல்துறை பயன்படுத்தினாலும் அப்பிரிவுகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- தேவேந்திரகுல இளைஞர்கள் அனைவரும் பட்டியலிலிருந்து வெளியேற முடிவெடுத்துவிட்ட நிலையில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி, பொதுப்பிரிவிலேயே மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் இடம்பிடிக்கவும், மத்திய அரசின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுகளிலும், மாநில அரசின் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற முழு ஈடுபாடு காட்ட வேண்டுமென தேவேந்திரகுல மாணவச் செல்வங்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- அரசு வேலைகளை மட்டுமே நம்பியிராமல் ஆண், பெண் இருபாலரும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பறந்து சென்று பொருள் ஈட்டிடவும், வேலைக்கு செல்கிறோம் என்ற நிலையை மாற்றி, வேலை கொடுக்கிறோம் என்ற நிலைக்குத் தங்களை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- ஆண்ட சமுதாயம் இம்மண்ணை மீண்டும் ஆள சித்தத் திடமும், உடல் திடமும் மிகமிக அவசியம். இளம் வயதிலேயே மது, புகை போன்ற பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதால் இளம்வயதிலேயே உடல்நலம் குன்றியும், உடல்நலம் குன்றுவதால் தன்னம்பிக்கை இழந்தும், தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எனவே நல்ல பண்பு நலன்களோடும், குண நலன்களோடும், திடகாத்திரமான உடல்நலம், மனநலத்தோடு நம்முடைய அடையாளத்தை மீட்டால் மட்டுமே அதை தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே இந்தச் சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான, நம்முடைய முன்னோர்களிடத்தில் நிலவிவந்த மதுப் பழக்கவழக்கங்கள் இன்றைய இளைய சமுதாயத்திடமும் தொடர்வது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. எனவே குடிப்பழக்கவழக்கங்களை அறவே விட்டொழிக்க வேண்டுமென தேவேந்திரகுல இளைஞர்களையும், பெரியோர்களையும் இம்மாநாடு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறது.
- இன்றைய சூழ்நிலையிலும் வயல்வெளிப் பகுதியானாலும், மலைப் பகுதியானாலும், கடும் மழை, குளிர், பனி, வெயில் பாராமல் நேரடியாக வேளாண்மையில் ஈடுபடுவது தேவேந்திரகுல தாய்மார்களாகவே இருக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய உடல்நலம் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. அவர்கள் முறையாக கவனிக்கப்படாததன் விளைவாக நம் எதிர்கால தலைமுறையே மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். எனவே தேவேந்திரகுல தாய்மார்களையும், சகோதரிகளையும் பேணிப்பாதுகாத்திட வேண்டுமென தேவேந்திரகுல பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
- பட்டியல் வெளியேற்றம் மற்றும் அடையாள மீட்பு என்பது வெறும் சொல் மாற்றமல்ல. அது நமது உள்ளத்திலும், உடலிலும், பேச்சிலும், எழுத்திலும், பழக்கவழக்கத்திலும், நமது இல்லத்திலும், நம் வாழ்விடங்களிலும் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகளை உள்ளடக்கியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே உடல்தூய்மை, உள்ளத்தூய்மை, இல்லத்தூய்மை, வீதித்தூய்மை, ஊர்த் தூய்மை என்று அனைத்திலும் நம்முடைய தூய்மையை பேணிப் பாதுகாத்திட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- தாழ்வு மனப்பான்மைகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் விட்டொழிக்க வேண்டும். தனிநபரையோ, சமுதாயத்தையோ எவ்விதத்திலும், எவ்விடத்திலும், எவராலும் தாழ்த்திப்பார்க்க அனுமதிக்கக் கூடாது. உடல் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும், கூனியும் குறுகியும் செய்யும் தொழில்களையும், தலைச்சுமைப் பணிகளையும் அறவே விட்டொழிக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளத்தை மீட்டெடுப்பது நமது இழந்த வரலாற்றை மீட்டெடுப்பதற்கே. அந்தப் பெருமையையும், பெருமிதத்தையும் உள்ளத்துக்குள் மட்டுமே கொண்டாட வேண்டுமே தவிர, வேறு யார்மீதும் பிரயோகிக்கக் கூடாது.
- அன்றாடம் எழும் பிரச்சினைகளுக்கு, சமுதாயத்திற்குள் பிரச்சினை என்றால் பேசித் தீர்த்திடவும், வேறொருவருடன் பேசித் தீர்க்க முடியாதளவிலான பிரச்சினை என்றால் சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர மோதல் போக்குகள் கூடாது.
- கலப்படம், கடத்தல், கந்துவட்டி, பிராத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூகம் வெறுத்து ஒதுக்கும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது. யாரையும் ஏமாற்றவும், வஞ்சிக்கவும் கூடாது; யாரிடமும் ஏமாறவும் கூடாது.
