தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்களின், இன்றைய (19.03.2022) செய்தியாளர் சந்திப்புபத்திரிக்கை செய்தி

பொருள்: நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து,

அறிக்கைகள்
s2 304 Views
  • தமிழக அரசின் 2022-2023

    தமிழக அரசின் 2022-2023

  • தமிழக அரசின் 2022-2023
Published: 20 Mar 2022

Loading

திமுகவின் ஊடகப்பிரிவு மற்றும் அதன் புகழ் பாடிகளால் பெரிதும் பூதாகரப்படுத்தப்பட்ட 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அவர்களின் ஒட்டுமொத்த திராவிட மாடல் ஆட்சியின் அடையாளமாகவே இந்தப் பட்ஜெட் இருக்கப் போகிறது என்று முரசு கொட்டப்பட்டது. மாநில திட்டக்குழு போதாமல், சர்வதேச பொருளாதார நிபுணர் குழு மற்றும் கடந்த ஒரு வருடத்தில் துணைக்கு துணைக் குழுக்களும் இணைந்து இந்தியாவே வியக்கும் வகையில் ஒரு நிதிநிலை பட்ஜெட்டை அறிவிக்கப்போகிறார்கள் எனச் சொல்லப்பட்டது. ’திராவிட புலி வருகிறது என்று சொன்னார்கள், புலி வந்ததா? இல்லையா? எனப் பார்ப்போம்.

அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளில் பெரிய பெரிய வணிக நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் கொண்டவரால் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டில் அதற்குண்டான ஒருசில அறிகுறிகளைக் கூடக் காணவில்லை. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு முதல் நாள்இந்தியா டுடேஆசிரியர் ராஜ் செங்குப்தா அவர்களுக்கு பழனிவேல் தியாகராஜன் அளித்த சிறப்புப் பேட்டியில், தமிழ்நாடு பட்ஜெட்டின் மூலம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போவதைப் போலப் பல கருத்துக்களை கூறியிருந்தார்.

நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளை எல்லாம் மேற்கோள்காட்டி அந்நாடுகளைப் போல இங்கும் மக்களுடைய வருவாயைப் பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருந்தார். பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நேரடி வரி விதிப்பு குறித்து பேசிய அவர், கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதைச் சாடி இருந்ததோடு இந்தப் பட்ஜெட்டில் அந்தக் குறைபாடுகள் அடியோடு நீக்கப்பட்டு,  EQUITY – சமப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதிகாரம் அவரிடம் இல்லை என்றாலும், பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து அந்தச் சமநிலையை எட்ட முடியும் எனத் தெரிவித்து இருந்தார்.  ஆனால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஜி.எஸ்.டிக்குள் கொண்டு சென்று வருவதற்கான எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலை நாடுகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் நவீன முறையில் தமிழகத்தினுடைய வருவாயைப் பன்மடங்கு அதிகரிக்க பெரும் பெரும் திட்டங்கள் வருமென்றெல்லாம் தமிழக மக்கள் திராவிட மாடல் ஆட்சியை நோக்கிக் கனவுகனவுகண்டிருந்தார்கள். ஆனால், எந்த அதிசயமும் நடைபெறவில்லை.

வருவாய் பற்றாக்குறை ரூபாய் 7,000 கோடி குறைக்கப்படும் என்று சொன்னபிறகும்,  இந்த ஆண்டு ரூபாய் 90,000 கோடி முதல் 1,20,000 ஆயிரம் கோடிவரை கடன் வாங்க வேண்டிய சூழலே மீண்டும் ஏற்பட்டுள்ளது? கடந்த அரசு செய்த அதே தவறை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் இல்லை. எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்த பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் என்று ஏற்கனவே இருந்த திட்டத்தைக் காலி செய்துவிட்டு, இப்போது கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000  என மாற்றி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2021 ஏப்ரலில் நடந்த தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். மே மாதம் பதவி ஏற்றப் பிறகு, இந்த ஆண்டு தான் முழுமையாக முழு பட்ஜெட் போடுகிறார்கள். எனவே, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு உண்டான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குச் செய்யக்கூடிய திட்டங்களை பட்ஜெட்டில் செய்வது போல, கொட்டை எழுத்துக்களில் காட்டி இருக்கிறார்கள். ஆனால், அதற்கான நிதி ஆதாரங்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகளுக்கான பயிர்க் கடன்கள், நகைக் கடன், மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு இருக்கிறார்களா? அல்லது இந்தாண்டு செய்யப்படப் போவதைக் கூப்பிட்டு இருக்கிறார்களா? அது எத்தனை பேருக்கு என்பதையெல்லாம் தெளிவுபடுத்தப்படவில்லை. மாநகர மற்றும் பிற நகரப் பேருந்துகள் எல்லாம் மின் மயமாக்கப்பட்டு ஓட்டுநர், நடத்துநர் வரை தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் என்று சொல்லி இருக்கிறீர்களே, இதுதானா திராவிட மாடல் ஆட்சியா?

பட்ஜெட்டில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் மிக முக்கியமாக ஓய்வூதிய தொகை ரூபாய் 1,000-லிருந்து 1,500 ஆக உயர்த்தப்படும் என்பது குறித்தும்,  ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ரூபாய் 1,000 கொடுக்கப்படும் என்பது குறித்தும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்படும் என்பது குறித்தும், கேஸ் சிலிண்டர் மானியம் குறித்தும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பழைய ஓய்வூதிய முறை குறித்தும் பேச்சு மூச்சு இல்லை.

தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். கலை மற்றும் அறிவியல் பட்டங்கள், பட்டயப் படிப்புகளைப் பயின்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருவதற்கான எவ்வித தொலைநோக்கு திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் உண்டாக்கப் படவில்லை.

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்என்று கிண்டல் அடிப்பது உண்டு. ’குஜராத் மாடல்என்றால் கண் கூட அங்கு ஒரு பொருளாதார வளர்ச்சியைக் காண முடிகிறது. ’திராவிட மாடல்எனச் சொல்லிக்கொண்டு 5 கோடி ரூபாய் செலவில் பெரியாரின் புத்தகங்களை மொழிபெயர்ப்பதுதான்திராவிட மாடல்ஆட்சியா? எல்லோருக்கும் நல்ல கல்வி, எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, எல்லோரையும் சமூக பொருளாதார தளத்தில் கொண்டுபோய் சமமாய் நிறுத்துவது தானே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவுற்ற பின்னரும், அரசாங்கம் 100 நாட்களுக்காவது வேலை கொடுத்தால் மட்டுமே தங்களால் உயிர்வாழ முடியும் என்ற நிலையிலுள்ள தமிழகத்தின் கோடான கோடி மக்களுக்கும்; டெல்டா மாவட்டங்களில் கொத்துக்கொத்தாகவும்,  தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்னும் கையளவு நிலம் கூட இல்லாமல் ஏழைகளாகவே இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்பவர், மர வேலைகள் செய்பவர், கட்டிடத் தொழிலில் ஈடுபடுவோர், கூடை முடைவோர், நகைத் தொழில் செய்வோர், ஆட்டோ, டாக்ஸி, லாரி, ஓட்டுநர்கள் உட்பட கோடான கோடி கைவினைஞர்கள் போன்றோருக்கு நிரந்தர வருமானத்தை உயர்த்த என்ன திட்டம் இந்த பட்ஜெட்டில் வைக்கப்பட்டிருக்கிறது?

தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்காகத் தானே தமிழ்நாட்டில் திட்டக்குழு, அதற்கு ஒரு துணைக் குழு மற்றும் சர்வதேச குழுக்களை நியமித்தீர்கள். தமிழக அரசின் வணிக வரி  வருவாயைத் தவிர, மூன்று மிக முக்கியமான வருவாய்களில் உண்மைத்தன்மை இல்லையே. ஒன்று டாஸ்மாக்கில் ஆண்டொன்றுக்கு விற்பனை எவ்வளவு? அதன் மூலமாக விற்கக்கூடிய விற்பனை வரி என்ன? அதன் லாபம் எங்கே போகிறது? ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 50,000 கோடிக்கு மேல் லாபம் வரும் டாஸ்மாக் வருவாய்குறித்து முழுமையாக இந்தப் பட்ஜெட்டில் காண்பிக்காமல் வெறும் 10,000 கோடி மட்டும் ஆயத்தீர்வாகக் காண்பிக்கப்பட்டு இருக்கிறதே, மீதம் 40,000 கோடி எங்கே? அதேபோலப் பத்திரப் பதிவுத் துறையில் ஆயிரக்கணக்கில் பத்திரப்பதிவு கட்டணங்கள் அதிகமாக்கப்பட்டு அதில் பல்லாயிரம் கோடி வருவாயை வருகிறபோது, அதில் ரூபாய் 16,000 கோடி மட்டும் காண்பிக்கப்பட்டு இருக்கிறதே, அதனுடைய முழு விவரம் என்ன? மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணங்கள் மற்றும் சாலை வரிகள் வசூலிக்கப்படுகிறதே, அவை வெறும் ரூபாய் 7,100 கோடி தானா? அதனுடைய முழு விவரம் என்ன?

தமிழக மதுபான விற்பனையிலும், பத்திரப்பதிவிலும் நிறையக் கசிவுகள் ஏற்படுகிறது என சொல்லிவிட்டு, அதைப்பற்றி இந்த நிதிநிலையில் எதுவும் குறிப்பிடாமல், கடந்த ஆண்டு குறிப்பிட்டதை அப்படியே கடந்து போவதன் மர்மம் என்ன? சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய உடலையும் உயிரையும் கசக்கிப் பிழிந்து மதுபானங்கள் மூலமாகக் கிடைக்கக்கூடிய ரூபாய் 50,000 கோடி வருவாயைக் கணக்கில் கொண்டு வந்தாலும், பத்திரப்பதிவு மற்றும் வாகன வரி விதிப்பில் இருக்கக்கூடிய ஒழுகல்களை அல்லது கசிவுகளைக் கண்டறிந்து தடுத்து நிறுத்தி உண்மையான வருவாயைக் கணக்கில் கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் எவ்வித வரியும் இல்லாமல் பெட்ரோல், டீசல் வழங்க முடியுமே? அதுகுறித்து எல்லாம் இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடாததது ஏன்?

எப்படியாவது தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையில், ‘India  is Union of States’ இந்தியா மாநிலங்களால் ஆன கூட்டமைப்பு என மீண்டும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்து இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் preamble என்று அழைக்கக்கூடிய முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய ‘India To Be Sovereign, Socialist, Secular, Democratic, Republic’ என்று தடித்த எழுத்துக்களில்இந்தியா, ஒரு ஒன்றுபட்ட தேசம்என்று குறிப்பிட்டுள்ளதை ஒருமுறைக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து, இந்திய தேசம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகள் ஒருங்கிணைந்து உருவான பல நாடுகளின் கூட்டமைப்பு அல்ல நிர்வாக வசதிக்காகவும், அதிகாரப் பரவலுக்குக்காக்கவும் மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகாக்கள், பிளாக்குகள், வருவாய் கிராமங்களாகவும்;  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளாகவும் நிர்வாகத்திற்காகப் பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய தேசமே தவிர, எட்டுப்பட்டி பத்துபட்டிகளை  கொண்டிருந்த கடந்தகால காட்டாட்சிகளால் ஆன கூட்டாட்சி அல்ல என்பதை இவர்கள் எப்பொழுதுதான் புரிந்து கொள்வார்களோ என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கைதிராவிட புலி வருகிறது, திராவிட புலி வருகிறது  என்று சொன்னார்கள். ஆனால், புலி வரவில்லை, திராவிடக் கிலி மட்டும் தான் வந்திருக்கிறது’.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்களே, பொய்களை மட்டுமே கூறி ஆட்சிக்கு வந்து ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைக் கூறும் பட்ஜெட்டாகவே இது இருக்கிறது. ’கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும்என்பதற்கு இணங்கதிராவிட மாடல் ஆட்சி பத்தே மாதத்தில் வெளுத்துவிட்டது’. இந்தப் பட்ஜெட்டில் பெரும் மாற்றங்கள் வரும் என நம்பியோர் கைவிடப்பட்டார்கள். ரூபாய் 500, 1000-க்கு விலை போனவர்களுக்கு இன்னும் இருக்கிறது எண்ணற்ற ஏமாற்றங்கள்.!

  டாக்டர் .கிருஷ்ணசாமி MD, Ex.MLA

நிறுவனர் & தலைவர்

புதிய தமிழகம் கட்சி

19.03.2022