ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தாதீர்!

அறிக்கைகள்
s2 388 Views
  • Dr Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 16 Feb 2022

Loading

ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தாதீர்!

பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி 18,19 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு, அண்மையில் தான் அனைத்து பள்ளி கூடங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பது மாணவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். நீட் தேர்வு குறித்த கட்டுரையிலேயே அரசுப்பள்ளி மாணவர்களுடைய செயல் திறன் குறைவதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்விசாரா பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதே. எனவே, அது நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தோம். ஏற்கனவே பள்ளி பணி நாட்கள் மிகக் குறைவு.

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் மாறிமாறி வருகின்றன. எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலும் ஆசிரியர்களே தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு உயர் பதவிகளிலும், பிற துறைகளிலும் அதிகமாக தேர்வாவதில்லை என குறைபட்டுக் கொண்டே அதற்கான அடிப்படை குறைகளை அதிகரித்தே கொண்டு போவதில் எவ்வித நியாயமும் இல்லை.

குறிப்பாக, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கல்விப் பணிக்கு அல்லாது வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தாத சூழல் என்று உருவாகிறதோ அப்பொழுது மட்டுமே தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை துலங்கும். அதை விட்டுவிட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் மீது ’நீலிக்கண்ணீர்’ வடிப்பதில் எவ்வித பலனும் இல்லை.

இனி வரக்கூடிய காலகட்டங்களில் ஆசிரியர்களை தேர்தல் பணி பயிற்சிக்கோ, தேர்தல் அலுவலர்களாகவோ, வாக்காளர் சேர்ப்பு பணிகளிலோ, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளிலோ பயன்படுத்தாத வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.02.2022.