தமிழர்களின் இன்னல்கள் போகியுடன் போகட்டும்.! அனைவரது இல்லங்களிலும் இனி புதுப் பொங்கல் பொங்கட்டும்.!

அறிக்கைகள்
s2 430 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 13 Jan 2022

Loading

தமிழர்களின் இன்னல்கள் போகியுடன் போகட்டும்.!

அனைவரது இல்லங்களிலும் இனி புதுப் பொங்கல் பொங்கட்டும்.!

இயற்கை வணக்கமும், பசு-காளை-உழவருக்கு நன்றி கூறலும் தமிழர் மரபு; தமிழர் மாண்பு
பொங்கல் திருநாளாம் – மாட்டுப் பொங்கல் திருநாளாம் – உழவர் திருநாளில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் நெஞ்சங்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நரம்புகளாகவும்; இரத்த நாளங்களாகவும் விளங்கக்கூடிய சொந்தங்களுக்கும்; பாரத சகோதரர்களுக்கும் புதிய தமிழகத்தின் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியாரின் கூற்றுக்கு இணங்கவும்,

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு – என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்கவும், இயற்கை-மாடு-உழவர்-உழைப்பு-உணவு விளைச்சலை மையமாக வைத்து தோன்றியதே போகி பண்டிகையும், பொங்கலும்-அறுவடை திருநாளும், மாட்டுப் பொங்கலும் ஆகும்.

மண், அதில் கலந்துள்ள சத்து – நீர் – காற்று – ஒளியும் வெப்பமும் – பசுவும்- காளையும்– உழவரும் – உழைப்பும் ஒன்றாகி விளைவதே உணவு ஆகும். உறையுள் இல்லாத காலத்தில் கூட மனிதர்களால் குகைகளில் வாழ முடிந்தது. ஆடைகள் இல்லாதபோதும் இலையும் தளைகளும் ஆடைகளாக மாறின. ஆனால், உணவில்லாமல் ஒருபோதும் எவராலும் வாழ இயலாது.
வேட்டையாடி உண்டதால் விலங்குகள் அரிதாகின. தானாக விளைந்த பழங்களை உண்டு தீர்த்ததால் அவைகளும் குறைந்தன. எனவே, மனித குலம் உயிர் வாழ மனிதன் உணவை உற்பத்தி செய்ய வேண்டியவர்கள் ஆகினர். ஆதிகால மனிதன் கண்டுபிடித்த முதல் தொழிலும் உழவுத் தொழிலே. புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றும்; தொழில் நிறுவனங்கள் உருவாகும்; உற்பத்திகள் பெருகும்; நவீனமும் ஆடம்பரமும் அதிகரிக்கும். ஆனால், என்ன மாறினாலும் உணவின்றி எந்த உயிரினமும் வாழ முடியாது. மனித குலமும் வாழவும் முடியாது; தழைக்கவும் முடியாது. உற்பத்தி முறைகளில் கூட மாற்றம் வரலாம். நிலங்களே இல்லாமல் கூட நெற்கதிர்கள் விளைவிக்கப்படலாம். செடி, கொடிகள் இல்லாமல் கூட ’திசு வளர்ப்பு’ மூலம் காய்கறிகளை விளைவிக்கலாம். விளைச்சல் செயல்முறைகள் வேண்டுமென்றால் மாறலாமே தவிர, மனித குலம் உயிர் வாழ அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தியின் அவசியம் ஒருநாளும் மாறாது.
பரந்துபட்ட நிலம் இருந்தது. ஆனால், அதை பயன்படுத்தி தனக்கான உணவை மனித குலத்தால் தான் உற்பத்தி செய்ய முடிந்தது. வேட்டையாட விலங்குகள் இல்லாதபோது பல விலங்குகள் அழிந்து போயின. மேய்ச்சல் நிலங்கள் அழிந்து போன போது பல விலங்கினங்கள் மாண்டு போயின. நீர் கிடைக்காத போதும் கூட விலங்கினங்கள் அழிந்து போயின. ஆனால், மனிதன் மட்டும் தான் தனக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டபோது கூட நிலத்துக்கு அடியில் உள்ள நீரைக் கண்டுபிடித்தான். இயற்கையாக விளைச்சல்கள் குறைந்த போதும் பற்றாக்குறை ஏற்பட்ட போதும் தனக்குத் தேவையானதை தானே உற்பத்தி செய்து கொண்டான்.

பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பே “நிலத்தை உழவேண்டும்; அதை ஆழ வேண்டும்” என்ற கலையை கற்ற மனிதன் நீரைத் தேக்கி, வயல்களில் பாய்ச்சி நெல்லையும் கரும்பையும் உற்பத்தி செய்து தனக்கு மட்டுமின்றி அதை மற்றவர்களுக்கும் அளித்த பெருமைக்குரியவர்கள் தமிழ் மண்ணின்-பாரத தேசத்தின் மக்களே. நிலத்தை உழ வேண்டும் என்ற போதும், தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும் என்ற போதும் மனிதர்களுக்கு உற்ற தோழனாக விளங்கியவை பசுக்களும்-காளைகளுமே. ’உழவர்’ என்ற சொல்லின் உள்ளே உழவனின் உழைப்பும் இருக்கிறது; பசு-காளைகளின் உழைப்பும் இருக்கிறது. இயற்கை – மாடு – உழவர் ஆகிய மூவருடைய பங்கில்லாமல் உணவு விளைச்சல் நிறைவேறுவதில்லை.

ஆடிப்பட்டம் தேடி விதைத்து, மழைக்காலங்கள் நிறைவுற்று தானிய வகைகளையும், பயிறு வகைகளையும் களத்திற்குக் கொண்டு வந்து சேர்க்க ஒளியும், வெப்பமும் தேவைப்படுகிறது. ஒரு வருட உழைப்பின் பலனை உழவன் தை மாத அறுவடையின் போதே அடைகிறான். அறுவடைக்கு முன்னரும், பின்னரும், அறுவடையின் போதும் உழவர்கள் தங்களுடன் பங்காற்றியவர்களை நினைவு கூறுகிறார்கள். உழவர்கள் என்று சொல்லுகின்ற போது கலப்பையைப் பிடித்து உழுகின்றவர்கள்; சேற்றுக்குள் நின்று விதைகளை விதைப்பவர்கள்; அது முளைத்த பின் களை எடுப்பவர்கள், நீர் பாய்ச்சுபவர்களையும், உரமிடுபவர்கள், இடுப்பு நோகக் கதிர் அறுப்பவர்கள், கயிறு போன்ற வரப்புகளில் கால்கடுக்க நடந்து வந்து களத்துமேட்டில் நெற்கதிர்களை சேர்ப்போர்கள், நெல்மணிகளையும், தாட்களையும் தனித்தனியாகப் பிரித்து களத்துமேட்டில் குவிப்போர்களை மட்டுமே சாரும்.

உடலுழைப்பை தரும் உழவர்கள் தன்னோடு இணைந்து எவ்வித பிரதிபலனையும் பாராமல் உழைத்த மாடுகளுக்கும், விதை முளைத்து வளரவும் அவைகள் நெல் மணிகளாகப் பரிணமிக்கவும் உற்றத் துணையாக விளங்கிய ஆதவனுக்கும், தேவையான நேரத்தில் மழை பெய்யவும், அறுவடை நேரத்தில் மழை பெய்யாமலும் தங்களைப் பாதுகாத்த இயற்கை கொடைக்கும் நன்றி சொல்லக் கூடிய விழாவே அறுவடைத் திருநாள் – மாட்டுப் பொங்கல் – ’தைப்பொங்கல்’ எனும் ’பொங்கல்’ திருநாளாகும்.

எந்த உழவனும் நான் உழைத்ததை தானே எடுத்துக் கொள்வதில்லை. தன் உற்றார் உறவினருக்கும், தனது சுற்றாருக்கும், சமுதாயத்திற்கும் பகிர்ந்தே அளித்தார்கள். அதனால் இல்லாதவர்களும், இயலாதவர்களும் பயன் பெற்றார்கள். அதுதான் பண்டைய தமிழ் பண்பாடு, பண்டைய தமிழ் நாகரிகம்.

ஆனால், காலங்கள் மாற மாற இந்த மண்ணை உழுது வளப்படுத்தியவனின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகின. உழைத்தவர்களைக் காட்டிலும் உழைக்காதவர்களே பலன் பெறும் நிலை ஆயிற்று. அனைத்தும் பொதுவாக இருந்த நிலைகள் மாறி யார் யாருக்கோ நிலங்களும், அதன் பலன்களும் சொந்தமாகின. முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் நில மக்கள் அடிமையானார்கள். வறுமை என்னவென்றே தெரியாத மக்களுக்கு வறுமை வந்து சேர்ந்தது. தங்கள் சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர்கள். தலை குனிந்து நிலைகுலைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தங்களுடைய மண்ணை பிடுங்கிக் கொண்டது மட்டுமல்ல தங்களது இயற்கையோடு இணைந்த இந்திய-பாரத-பாரம்பரிய இயற்கை வழிபாடுகளைக் கூட பகுத்தறிவு அற்றது என்று அரைகுறை பகுத்தறிவாளர்கள் முத்திரை குத்தினார்கள். மண்ணை நேசித்ததும், மழையை நேசித்ததும், ஒளி-வெப்பத்தை நேசித்ததும், காளை-பசுக்களை நேசித்ததும் இமயமலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை அல்ல. இதுவே தமிழர்களின் மாண்பும், மரபும் ஆகும்.

” தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.” – என்ற திருக்குறளுக்கு ஏற்ப எல்லோருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழிலுக்கு உற்ற துணையான இயற்கைக்கும், மாடுகளுக்கும் உழவன் வணக்கம் செலுத்தினான்; நன்றி கூறினான்.

இன்று இயற்கையையும், மாடுகளையும், உழவர்களையும் போற்றுவோம்.! அவர்களுக்கு நன்றிக்கடன் ஆற்றுவோம்.

நமது பாரம்பரிய – பாரத – தமிழர் பண்பாட்டுத் தமிழ் பொங்கல் பொங்கட்டும்.!
எல்லோருக்கும் சமமாக எல்லாம் நிறைவாகக் கிடைக்கட்டும்.!!

அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் போகியோடு போகட்டும்!
சம உரிமை –சமத்துவத்தை நிலை நாட்டிடவும்
புதிய தமிழகத்தோடு இணைந்து பொங்கலிடவும்
ஊழல்; பொய் ஆட்சியாளர்களை நீக்கி
தமிழக மக்களின் நலன் காக்க
புதிய தமிழகத்தின் தலைமையில் கூட்டாட்சி மலர சபதமேற்போம்!
பொங்கலோ பொங்கல்.!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.! உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்..!

– டாக்டர் கிருஷ்ணசாமி. எம்.டி
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.01.2022