2026 ஜூலை 23; புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் – ராணுவ அணிவகுப்பிற்கு ஆயத்தமாவீர்!
7 Views

![]()
மாஞ்சோலை தியாகிகளுக்கு தாமிரபரணியில் 27-ஆம் ஆண்டு அஞ்சலி!
2026 ஜூலை 23; புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் – ராணுவ அணிவகுப்பிற்கு ஆயத்தமாவீர்!
…………………………………………………..
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகியவற்றை மீட்டெடுக்க நெல்லையில் 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்றதுதான் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் பேரணி ஆகும்.
“மலைகள்” என்றாலே கொட்டிக்கிடக்கும் அழகும், கொழுந்துவிட்டு வளர்ந்த தேயிலைச் செடிகளும், முதுகுப்புறம் தொங்கும் கூடைகளுடன் கொழுந்து பறிக்கும் பெண்களும், அதனுடனே நமது திரையுலகத் தேவதைகளுடன் நடிகர் திலகங்கள் ஓடி ஆடிப்பாடி மகிழும் காட்சிகளும் மட்டும்தான் பன்னெடுங்காலமாக நமது தமிழ் சமுதாயத்திற்கு வெளியே தெரிந்த காட்சிகள். ஆனால், பச்சைப்பசேல் என்று காட்சியளித்த அந்தத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த லட்சோபலட்சம் தொழிலாளர்களின் கண்ணீர் சிந்தும் வாழ்வைப் பற்றி வெளியே எவருக்கும் எதுவும் தெரியாது.
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என கவிஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த பாட்டிற்கு நடனமாடி, மக்களின் வாழ்த்துப் பெற்றதற்குப் பின்னால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்களால் கூட, மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழ்வைத் தெரிந்து கொள்ளவோ, அதற்குத் தீர்வு காணவோ முடியவில்லை.
1996 முதல் 2001 வரை நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தருணத்தில், 1998-ஆம் ஆண்டு தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்கினோம். அப்பொழுது தென்காசித் தொகுதியின் ஒரு பகுதியாக விளங்கிய மாஞ்சோலைக்கு வாக்குச் சேகரிக்கச் சென்றபோதுதான், அம்மாற்று மக்களின் உண்மை வாழ்க்கை நிலையை அறிய முடிந்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறாவிட்டாலும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி, 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, முதற்கட்டமாக மாஞ்சோலையில் ‘ஆர்ப்பாட்டம்’ என்ற போராட்டத்தை முன்னெடுத்தோம். முதற்கட்டப் போராட்டத்தில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
எட்டு மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடிய 10 கைக்குழந்தைகள், 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 600 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, 1999-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நமது தலைமையில் அனைத்துக் கட்சிப் பேரணி நடைபெற்றது.
பகல் 12 மணி கடும் வெயிலில் பசியோடும் பட்டினியோடும் நெல்லை சந்திப்பில் (Junction) தொடங்கி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த பேரணி மதியம் 02.30 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டது; அமைதியாக வந்து தரையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் ஏவப்பட்டனர். அதன் விளைவாக, ஒரு வயது பாலகன் விக்னேஷ் உட்பட 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தின் வரலாற்றில், இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமும் அதுவே; மாபெரும் உயிரிழப்பும் அதுவே!
இந்திய அரசியல் சாசனம் வழங்கிய மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமைக்கான போராட்டம் அது. அமைதியாக நடந்த பேரணியைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் காவல்துறை ஏவப்பட்டு, நம் மீது கொலைவெறித் தாக்குதலும் நடத்தப்பட்டது. BBTC என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு நின்றது; மக்களுக்கான போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டும் என்பதே அவர்களின் தலையாய நோக்கமாகவும் இருந்தது.
ஆனால், அதற்குப் பின்புதான் போராட்டமே வலுவடைந்தது; குறைந்தபட்ச தினச் சம்பளம் ரூ. 150 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, வால்பாறை, முடீஸ், தேனி மாவட்டம் ஹைவேவிஸ், நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், சேலம் ஏற்காடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். அது வெறும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல; புதிய தமிழகம் கட்சியின் அடிப்படை லட்சியங்களில் ஒன்றான அனைத்து மக்களுக்குமான மனித உரிமை, மண்ணுரிமை, வாழ்வுரிமையை மீட்கும் போராட்டமே ஆகும். Equality and Equity சமத்துவமும் சமபங்கும் பெறுவதற்கான போராட்டம் அது.
அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்கிறது. இன்று ஒட்டுமொத்த மாஞ்சோலை மக்களையும், வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி மக்களையும் அங்கிருந்து வெளியேற்றத் துடிக்கிறார்கள். ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த அம்மக்களுக்கு அங்கு உரிமை இல்லை என அதிகாரிகள் எழுதித் தந்தார்கள்; அரசுகளும் அதை அப்படியே ஆமோதித்தன; நீதிமன்றங்களும் அதையே வாசித்தன. ஆனால், எப்பொழுதுமே மக்கள் சக்திதான் இறுதியானது! மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி மாஞ்சோலையிலேயே தொடர்ந்து தீர்மானிப்போம்.
26 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த போராட்டம் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. இது தமிழகம், இந்தியா மற்றும் உலக மக்களின் சாதி, மதம், இனம், மொழி கடந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ஆம் தேதி தாமிரபரணியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கடமையாகக் கருதி அதை நிறைவேற்றி வருகிறோம்! 2026 சட்டமன்றத் தேர்தலில் – புதிய தமிழகம் மற்றும் மாபெரும் சமூகத்தின் சுயமரியாதைக்கானப் போரில் தனித்து நின்று நமது அபரிமிதமான பலத்தை நிரூபித்து இருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் அரசியல் உற்றுநோக்காளர்களிடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இனி வரும் காலம் புதிய தமிழகத்தின் காலம் என்பதை நினைவில் கொண்டு இப்பேரணியை மிக மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டிட முனைப்புக் காட்ட வேண்டும்.
இந்த ஆண்டு நடைபெறும் பேரணி, ஆண்டுதோறும் நடப்பதைப் போன்ற வழக்கமான நினைவுப் பேரணி மட்டுமல்ல; புதிய தமிழகம் கட்சியின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான ராணுவ அணிவகுப்பு ஆகும். புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் பேரணியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள ஆயத்தமாகுங்கள்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
22.06.2026






