மானாமதுரை மாணவன் ஆகாஷ் காவல்நிலையப் படுகொலை வழக்கை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்! – குற்றவாளி காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்!

அறிக்கைகள்
s2 3 Views
Manamadurai student Akash police station murder case should be handed over to CBI immediately! - The guilty policemen should be arrested immediately!
Published: 02 Apr 2026

Loading

மானாமதுரை மாணவன் ஆகாஷ் காவல்நிலையப் படுகொலை வழக்கை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்! – குற்றவாளி காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்!
………………………………………………………….
மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் ஆகாஷ் என்ற கல்லூரி மாணவர், மார்ச் மாதம் 5-ஆம் தேதி அன்று மானாமதுரை காவல் நிலைய அதிகாரிகளால் ஒரு வழக்குச் சம்பந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு 8-ஆம் தேதி அதிகாலை மரணமடைந்துவிட்டார்.
ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராடியதன் விளைவாகவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் சந்தேக மரணம் ”கொலை வழக்காக” மாற்றப்பட்டது. கொலை வழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைத்து ஏறக்குறைய மூன்று வாரங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி காவலர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் திட்டமிட்டுத் தப்பிக்க விடப்படுவதாகவே தெரிகிறது.
கடந்த வருடம் இதே போன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த காவல்நிலையச் சாவுக்கு காரணமான வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த வழக்கு முறையான விசாரணையை நோக்கிச் செல்கிறது. ஆனால், ஆகாஷ் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும், குற்றம் இழைத்த காவலர்களை அதே தமிழ்நாடு காவல்துறையை உள்ளடக்கிய சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைத்திருப்பதாலும், சக பணியாளர் பாசத்துடன் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆகாஷ் படுகொலையில் சமந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பாதுகாத்து வருவதாக தெரிகிறது. இது தவறானது. சி.பி.சி.ஐ.டி ஒருபோதும் உண்மைக் குற்றவாளிகளான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.எனவே, இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வலியுறுத்துகிறேன்.
கொலைக் குற்றவாளிக் காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆகாஷின் பிரேதத்தையும் வாங்காமல் பெற்றோர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆகாஷின் காவல் நிலைய சித்திரவதை படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், மானாமதுரை ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறேன். தேர்தல் சமயத்தில் போராட்டம் நடத்த மாட்டோம் என்று எவரும் எண்ணக்கூடாது ; விரைந்து ஆகாஷின் கொலைக்கு காரணமான சிவகங்கை, மானாமதுரை பறக்கும் படை காவலர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
02.04.2026