தனியார்களால் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் மதுபானக்கடைகளும், அரசு நடத்தும் 4765 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை திரு. விஜய் அவர்களின் அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும்!

அறிக்கைகள்
s2 6 Views
The liquor shops run by private individuals in the name of ‘Manamakizh Mandarangal’ and the 4765 TASMAC shops run by the government must be closed and Mr. Vijay’s government must immediately implement complete liquor prohibition in Tamil Nadu!
Published: 12 May 2026

Loading

717 மதுக்கடைகளை மட்டும் மூடினால் போதாது;
’மது வருமானத்தைக் கொண்டுதான் தமிழ்நாடு அரசு இயங்குகிறது’ என்கிற அவல நிலையை அடியோடு மாற்றிட வேண்டும்!
தனியார்களால் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் மதுபானக்கடைகளும், அரசு நடத்தும் 4765 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை திரு. விஜய் அவர்களின் அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும்!
………………………………………………………

கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் புதிய ஆட்சி அமையும்போது, இதுபோல 500 முதல் 1000 கடைகளை மூட உத்தரவிடுவதும், சில மாதங்களிலேயே அவை வேறு வேறு வடிவங்களில் அதைவிட பன்மடங்கு கடைகள் பெருகுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அதுமட்டுமல்லாமல், டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து, அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தரும் ”பகாசுர” நிறுவனமாக அது வளர்ந்துவிட்டது. கடந்த கால ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற அல்லது அவர்களின் பினாமிகளாகச் செயல்படும் 19 மதுபான உற்பத்தி ஆலை அதிபர்கள் கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகின்றனர். பாட்டிலுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூல், காலி பாட்டில் விற்பனை, வாகனங்கள் இயக்குதல், பார் டெண்டர்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி என ஆண்டுக்குக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் அரங்கேறி வருகிறது.
இதையெல்லாம் வெறும் ஊழலாக மட்டும் பார்க்கக் கூடாது; தமிழகத்தின் ஏழை எளிய உழைப்பாளி வர்க்க மக்களின் உழைப்பும், உதிரமும், உயிரும் இதில் அடங்கியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது இயங்கி வரும் 4,765 கடைகளில் வெறும் 717 கடைகளை மூடுவதால் என்ன அடிப்படை மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது? பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதால் மட்டும் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.
ஏனெனில், ஏற்கனவே ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்குள்ளும், அருகிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய எண்ணற்ற மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் நவீன பார்களும் பெருகிவிட்டன. “மதுக்கடைகள் இங்கே இருக்கக் கூடாது, அங்கே இருக்கக் கூடாது என்பதல்ல; “தமிழகத்தில் எங்குமே மதுக்கடைகள் இருக்கக் கூடாது” என்பதே நமது வேண்டுகோள். அதுவே ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் விருப்பமுமாகும்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிப் பெரியோர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை சீரழிந்து வருகின்றனர். இளைஞர்களின் உயிரிழப்புகளால் விதவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதும், சாதி-மத ரீதியான மோதல்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மதுப் பழக்கத்தினால் தான் பெருமளவில் நடைபெறுகின்றன. எனவே, பெயரளவிற்காகவோ அல்லது ஒரு சடங்காகவோ 717 மதுக் கடைகளை மூடுவது எவ்விதப் பலனையும் தராது.
“மது வருமானம் இன்றித் தமிழ்நாடு அரசு இயங்காது” என்ற அவல நிலையை ஒழித்துக் கட்ட வேண்டும். உழைப்பாளி மக்களின் உழைப்பும், உயிரும் பறிக்கப்படுவதை தடுத்திட வேண்டும். நாகரிகமான, அமைதியான ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்க, காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமலாக்கிட முதல்வர் விஜய் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2026