இந்திய சுதந்திரத்தின் நோக்கத்தை அறிந்து, 78 வது தின சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.!! பாரத தேசத்தின் மண்ணும் ஒன்றே!! பாரதத் தாயின் மக்கள் அனைவரும் ஒன்றே என வாழ்வோம்!!

செய்திகள்
s2 263 Views
  • 78th Independance Day
  • 78th Independance Day
Published: 15 Aug 2024

Loading

இந்திய சுதந்திரத்தின் நோக்கத்தை அறிந்து,
78 வது தின சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.!!
பாரத தேசத்தின் மண்ணும் ஒன்றே!!
பாரதத் தாயின் மக்கள் அனைவரும் ஒன்றே என வாழ்வோம்!!

இந்தியா எனும் பாரத தேசத்தின் 78 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய தேசம் ஆயிரம் வருடத்திற்கு மேலாக பல்வேறு அந்நிய படையெடுப்புகளுக்கு ஆளாகி, இறுதியாக பிரிட்டிஷ் அரசின் 200 ஆண்டுக் கால காலணி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு நூறாண்டு கால போராட்டத்திற்கு பிறகு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தேசமானது. 1950-ல் நமது தேசத்திற்கான அரசியல் சாசனமும் அமலுக்கு வந்தது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன இந்திய தேசத்தின் கோட்பாடுகள் ஆகின. 77 வருடங்கள் நிறைவுற்று 78 வது ஆண்டை கொண்டாடுகின்ற இந்த வேளையிலும் சுதந்திர இந்தியாவின் அனைத்து லட்சியங்களையும் அனைத்து மக்களாலும் நுகர முடியவில்லை. நீதியும் சுதந்திரமும் சகோதரத்துவமும் சமத்துவமும் இன்னும் பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. வறுமை, கல்லாமை, அடிப்படை வசதிகள் இல்லாமை, சாதிய, மத, இன, மொழி ரீதியான பேதங்கள் தீர்ந்த பாடில்லை.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்தவர்களுடைய அர்ப்பணிப்புகளின் அர்த்தங்கள் புரியாமல் பலரும் குறுகிய நெஞ்சத்தோடு நடக்கக்கூடிய அவலங்கள் தொடர்கின்றன. பள்ளிகளிலேயே சாதிய, மத மனப்பான்மை விதைக்கப்படுவதும்,அவை தலை தூக்குவதும்; சுதந்திர மண்ணையும் ஜனநாயக அமைப்பு முறையும் பயன்படுத்திக் கொண்டு விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே ஆட்சியின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொள்ளும் ஆதி கால நிலப் பிரதித்துவ, எதேச்சதிகார, ராஜ குடும்ப மனநிலைகள் அதிகரித்து வருகின்றன.

இன்னும் நூற்றுக்கு 60% பேர் வறுமைக்கோட்டிலிருந்து மீளவில்லை. விளிம்பு நிலை மக்களின் உரிமைகள் சாதாரண உரிமைகளுக்கும் பறிக்கப்படுகின்றன. அவற்றிற்கே அம்மக்கள் போராடும் நிலைமை உள்ளது. அனைத்து மக்களுக்கான சட்டமன்றங்கள்; நாடாளுமன்றங்கள்; நீதிமன்றம்; நிர்வாக அமைப்புக்கள் ஆட்சி-அதிகாரத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே சேவை செய்யும் அமைப்புகளாகி விட்டன.

இந்த தேசம் அனைவருக்குமான தேசம்; அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்; அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

எனவே, மேம்போக்காக சடங்கு தனமாக சுதந்திர தினத்தை கொண்டாடாமல் நூறாண்டுக் காலம் இம்மண்ணுக்காகப் போராடிச் சிறைப்பட்டோர், சொத்து சுகங்களை இழந்தோர், அல்லல் பட்டோர், உயிர்த் தியாகம் செய்தவர்களுடைய தியாகங்களை எல்லாம் எண்ணிப் பார்த்து இந்தியத் தேசத்தின் சுதந்திரத்தையும் மதிப்போம்; இம்மண்ணில் வாழக்கூடிய அனைவரும் சுந்தரத்தின் பயனை அனுபவிக்கக் கூடியவர்களாக இந்த தேசத்தை மாற்றுவோம்; எவ்வித பிரிவினைக்கும் இடமளிக்காமல் பாரத தேசத்தின் மண்ணும் ஒன்றே; பாரத தாயின் மக்கள் அனைவரும் ஒன்றே என வாழ்வோம்.!
அதுவே, புதிய தமிழகம் கட்சியின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஆகும்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, ExMLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.08.2024