டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு

செய்திகள்
s2 572 Views
  • 2
  • 2
Published: 14 Aug 2024

Loading

13.08.2024 அன்றைய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய சாராம்சங்கள்:

அகில இந்திய அளவில் schedule caste என்று அழைக்கப்படக்கூடிய பட்டியல் பிரிவில் தமிழகத்தில் 76 சாதிகள் இருக்கின்றன. அதில் தேவேந்திர குல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் என்று அழைக்கப்படக்கூடிய பறையர் சமூக மக்கள் மற்றும் அருந்ததியர் சமுதாய மக்கள் உள்ளிட்ட மூன்று மிக முக்கியமான சமுதாயங்கள் மற்றும் பல்வேறு சமுதாயங்கள் உள்ளடக்கி இருக்கின்றன.

தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலே இருந்து விலக்கி, அவர்களை மிக மிகப் பின்தங்கியவர்கள் என்ற புதிய ஒரு பட்டியலை உருவாக்கி அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உரியப் பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், தேவேந்திர குல வேளாளர் மக்களும் ஏறக்குறைய நூறாண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர் தேவேந்திர குலத்தார், கடையர் என்ற ஏழு பெயர்களை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்திலே இரு அவைகளிலும் அறிவித்தது. எங்களுடைய கோரிக்கை ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பேரில் அழைக்க வேண்டும்; அம்மக்களைப் பட்டியல் பிரிவிலிருந்து விலக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அக்கோரிக்கையின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றிய மத்திய அரசு மிக முக்கிய கோரிக்கையான பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி வைக்கவில்லை. எனவே அதற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 76 சமுதாயங்கள் உள்ளடக்கிய பட்டியல் பிரிவினருக்குக் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 18 சதவிகிதம் இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு என்பது சட்டத்தில் இருக்கக்கூடியது; மத்திய, மாநில அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டது. சட்டத்திலே 18 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று இருந்தாலும் கூட, தமிழகத்தில் இருக்கக்கூடிய 56 அரசுத் துறைகளில் குறிப்பாக ஏ, பி, சி என்று அழைக்கப்படக்கூடிய உயர் பதவிகளில் ஓரிரு சதவீதம் கூட நிரப்பப்படவில்லை என்பதை நாங்கள் ஆய்வு செய்து கண்டறிந்து, 1996 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய பட்டியலின மக்களுக்கு அரசு துறைகளில் எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக, அன்றைய ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் செல்வராஜ் அவர்கள் தலைமையில், அன்றைய ஆதிதிராவிடர் துறை செயலாளர் கிறிஸ்து தாஸ் காந்தி, 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கி ஒரு குழு அமைக்கப்பட்டது. நாங்கள் ஏறக்குறைய ஆறு மாத காலத்திற்கு மேலாக பல்வேறு துறைகளை ஆய்வு செய்து ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை; அதிலும் மிக முக்கியமாக உயர் பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினோம்.

அந்த அறிக்கையை முற்றாக ஏற்றுக்கொள்ளாமல், 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முன்பாக தமிழ்நாடு அரசு ஒரு அரைகுறை அறிக்கையை சட்டமன்றத்திலே அறிவித்தது. அப்போதும் நாங்கள் வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும் வலியுறுத்தினோம்.

ஆனால் வெள்ளையறிக்கையை வெளியிட்டு, தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு துறைகளில் 18 சதவீதம் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தப்படாமல் பல்வேறு துறையில் இருக்கின்ற பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக, 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் திடீரென்று அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளித்தார்கள்.

நான் அக்கூட்டத்திலே கலந்து கொண்டு ”எந்த ஒரு பிரிவினருக்கும் அவர்கள் உண்மையிலேயே பின்னடைந்து இருந்தால் அவர்களுக்கான வாய்ப்பை கொடுப்பதற்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. அதே சமயத்தில் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கக்கூடிய 18 சதவீதத்தையே நீங்கள் நிரப்பாத காரணத்தினால் தென் தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தேவேந்திர குல வேளாளர்களும், வடக்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஆதிதிராவிடர்களும் மிகப் பெரிய அளவிற்கு தங்களுடைய வாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள். குறிப்பாக அடிமட்ட நிலையில் இருக்கக்கூடிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் துப்புரவு பணிகளிலே வேண்டும் என்று சொன்னால் 80% – 90% என்று இட ஒதுக்கீடுகள் நிரப்பப்பட்டிருக்கிறதே தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொதுப்பணித்துறைகள், கல்வி, நீதித்துறைகள், காவல் துறைகள் போன்ற உயர் பதவிகளில் அதிகபட்சமாக மூன்று சதவீதத்திற்கு மேல் நிரப்பப்படவில்லை. அதை நிரப்ப பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்ற பொழுது, அது குறித்து அரசு எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஏன் அவசர அவசரமாக இந்த அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருக்கிறீர்கள்? எனவே, முதலில் அன்றைய ஆதிதிராவிடர் அமைச்சர் செல்வராஜ் தலைமையில் குழு கண்டறியப்பட்ட 3 ½ லட்சம் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்புங்கள்; அதற்குப் பின்னும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கோ, அருந்ததியினருக்கோ, ஆதி திராவிடர்களுக்கோ பங்கு இல்லாமல் பாதிப்பு இருந்தால் சிறப்பு இட ஒதுக்கீடு கூட அறிவியுங்கள்” என்று வலியுறுத்தினோம்.

ஆனால், அக்கூட்டத்தில் 1950 முதல் பட்டியல் பிரிவில் உள்ள மக்களுக்கு 18 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காதது குறித்து ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் பேச மறுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு, ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் ”அருந்ததியர் உள்ள இட ஒதுக்கீடு” அமலாக்கப்பட்டது. அப்போதும் அருந்ததியர்களின் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டிற்கு நான் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதாவது 18 சதவீதத்தில் மூன்று சதவீதத்தை அருந்ததியர்களுக்கு கொடுப்பதில் நான் கொள்கை ரீதியாக எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அன்றைய அரசு செய்த மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்னவென்று சொன்னால், அதாவது ஒரு இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு ஒரு சுழற்சி முறையில் எஸ்.சி என்று வரக்கூடிய இடங்களில் எல்லாம் எஸ்.சி(ஏ) என்று பதிவு செய்து அருந்ததியர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வழங்கிவிட்டார்கள். அதன் காரணமாக பட்டியல் பிரிவில் இருக்கக்கூடிய தேவேந்திர குல வேளாளர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும், பிற பிரிவினருக்கும் உயர் பதவிகளில் கிடைக்கவில்லை. அதேபோல அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து இடங்களும் அருந்ததியர்களுக்கே ஒதுக்கினார்கள். இதனால், அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் கடந்த 14 வருடத்தில் தேவேந்திர குல வேளாளர்களும், ஆதிதிராவிட மக்களும் உயர் பதவிகளுக்கு செல்ல முடியாத ஒரு அவல நிலை உருவாகி இருக்கிறது. இதைவிட சமூக அநீதி எதுவும் கிடையாது.

உச்சநீதிமன்றத்தில் இதுபோன்று ”ஒரு சமூகத்தை கை தூக்கி விடுவதற்கு இட ஒதுக்கீடுகளைப் பிரித்துக் கொடுக்கலாம்” என்று கூறி இருக்கிறார்கள். அதைக் குறித்து மாயாவதி, அத்வாலே, சிராஜ் பஸ்வான் உள்ளிட்டோர் மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.

சமூக நீதி பேசக்கூடிய இன்றைய திமுக அரசு பட்டியல் பிரிவில் இருக்கக்கூடிய 76 சமுதாயங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை ஒரு சமுதாயத்திற்கு மட்டும் எடுத்துக் கொடுத்தது நியாயமா? இதையே அதிமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கின்றன; காங்கிரஸ் ஆதரிக்கின்றது; பாஜகவும் ஆதரிக்கின்றது. இன்னமும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மூலம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கும் உள்ள உரிமைகளைப் பறிக்கவும், அபகரிக்கவும் துணை போகிறார்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் கேட்டுக் கொள்வது, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைவரும் தங்களது கட்சி சட்டத் துறையினரோடு கலந்து ஆலோசித்து அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெறுமனே இயந்திரத்தனமாக உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்று சொல்வது, வறட்டு தனமான சமூக நீதியே தவிர, அதில் எவ்விதமான சமூக நீதியும் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

எனவே தமிழக மக்களுக்குப் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்துதல் குறித்த உண்மை நிலையை வெளிக்கொணர, தமிழகத்தில்1950 ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கான 19 சதவிகித இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது குறித்த வெள்ளையறிக்கையையும்; 2009 ஆம் ஆண்டு அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகு, துறை வாரியாக எத்தனை பணி இடங்கள் காலியாகின? அதில் அருந்ததியர்களுக்கு எத்தனை இடங்கள் கொடுத்திருக்கிறீர்கள்? அதில் தேவேந்திரகுல வேளாளர்களும், ஆதிதிராவிடர்களும் எவ்வளவு இடங்களை பெற்றிருக்கிறார்கள்? இன்ன பிற சமுதாய மக்கள் எத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்? என்பது குறித்து வெள்ளை அறிக்கையையும், வெளியிட வேண்டும்.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதிப்புகள் குறித்து பல்வேறு சமுதாய அமைப்பினரும் எங்களோடு ஒன்றுபட்ட கருத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். உள் இட ஒதுக்கீடு பாதிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் – கருத்தரங்கம் விரைவில் நடைபெறும். அதேபோல தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிடர்களின் சட்ட ரீதியான உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்து விரைவில் மிகப்பெரிய அளவில் தமிழகம் தழுவிய போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம்.
**************************************************