தமிழகத்தில் பூரண மது ஒழிப்பு / சட்டவிரோத பார்களை அறவே ஒழித்திட, 100 இடங்களில் புதிய தமிழகம் கண்டனப் பேரணி – பொதுக் கூட்டம்!
374 Views
![]()
இன்று (15.04.2023) கோவை பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex MLA அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
ஒரு நாட்டின் வளர்ச்சியை வானுயர்ந்த கட்டிடங்களாலும், அகன்ற – நீண்ட சாலைகளாலும், சொகுசு வாகனங்களாலும் மட்டுமே அளவீடு செய்யப்படக்கூடாது. தனி மனிதன் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல், பொருளாதார, மனிதவள மேம்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டே அளவீடு செய்யப்பட வேண்டும். புறத்தோற்றத்தில் தமிழ் சமுதாயம் வளர்ச்சி பெற்றது போன்று தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மது, போதை, புகை ஆகிய பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டு மிகப்பெரிய சீரழிவை நோக்கிச் செல்கிறது. குறிப்பிட்ட வயதை கடந்த ஒரு சிலரிடத்தில் மட்டும் இருந்த இதுபோன்ற பழக்கவழக்கங்கள் கல்லூரி, பள்ளி வாயில்கள் வரை பரவி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் வியாபித்து இருக்கிறது.
இக்கொடிய மது, புகை, போதை பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களுடைய உடல்நலம் சீரழிவதோடு, அவர்கள் சமூகத்தில் சிந்திக்க மற்றும் செயல்படத் திறனற்றவர்களாக மாறி சமூகத்திற்கு பெரும் சுமையாக மாறுகிறார்கள்.
டாஸ்மாக்கில் துவங்கி இப்பொழுது கஞ்சா விற்பனை வரையிலும் பட்டிதொட்டி எல்லாம் பரவி விட்டது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள்.
1947-க்கு பிறகு முன்பு, அந்திய ஆதிக்கங்களிலிருந்து விடுவிக்க நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைப் போல மது, போதை வஸ்துக்களின் பிடியிலிருந்து விடுவிக்க, தமிழகத்தை விடுதலை செய்ய, இன்னொரு சுதந்திரப் போராட்டத்தைத் துவங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பூர்வமாக 5500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. எவ்வித அனுமதியும் இன்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடையை சுற்றிலும் ஐந்து முதல் பத்து பார்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த சட்டவிரோத பார்களில் விற்பனைக்கு எந்த கால வரையறையும் இல்லை; இரவு பகல் பாராது 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுகிறது. துவக்கத்தில் இந்த பார்கள் மூலமாக அரசுக்கு ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1 ½ லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது அப்பார்களிலிருந்தும் எவ்வித கட்டணமும் அரசு கஜானாவிற்கு செல்வதில்லை. மாறாக சட்டவிரோத பார்களில் தினமும் 50 முதல் 100 கோடி வரையும் அரசியல் அதிகார மிக்கவர்களின் தனிப்பட்ட கஜானாவை நிரப்புகின்றன என்ற தகவல்கள் வருகின்றன.
எனவே, உடனடியாக அனைத்து பார்களையும் மூடிடவும்; பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்திட புதிய தமிழகம் கட்சி முடிவெடுத்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக சட்டவிரோத பார்கள் அனைத்தையும் மூடிட வலியுறுத்தி மே மாதம் 15 ஆம் தேதி முதல் 100 இடங்களில் பேரணி மற்றும் கண்டன பொதுக் கூட்டங்களை நடத்திட மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் முடிவு செய்கிறது.






