புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று (28.09.2022) புதன்கிழமை கோவை பொதிகை இல்லத்தில் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் பல்வேறு பொருளாதார, அரசியல், சமூக சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1.    2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் அனைத்து திட்டங்களையும் கடுமையாக விமர்சித்தும்; உச்சக்கட்டமாக ’அடிமை அரசு’ என முத்திரை குத்தியும்; திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனவும்; 505 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என பொய் பிரச்சாரம் செய்து, 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றிய திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் காப்பாற்றாமல், அதற்கு நேர் மாறாக செயல்படுவதால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, திமுக அரசின் மக்கள் விரோத போக்கை புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2.    திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் அல்லல்படும் தமிழக மக்களின் துயர் துடைக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பது என்றும், ஏற்கனவே முதற்கட்டமாகக் கடந்த 22 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக அரசு அண்மையில் உயர்த்திய மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளின்படி மாதம் ஒருமுறை மின் கணக்கீட்டை வலியுறுத்தியும்  ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது. 12 ஆம் தேதி கோவையிலும், 13 ஆம் தேதி சேலத்திலும், 14 ஆம் தேதி வேலூரிலும்; தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3.    தேசிய புலனாய்வு முகமையால் அண்மையில் 19 மாநிலங்களில் ஒரு இயக்கத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஜனநாயகத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு முறைகள் இருக்கின்ற போது, வன்முறைகளைக் கையில் எடுப்பது ஏற்புடையதல்ல. இதில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே வன்முறை நடவடிக்கைகள், பொதுமக்களை ஆத்திரமூட்டும் பேச்சுக்கள், கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான அமைதி வழியில் தீர்வு காணவும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

4.    தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே சமூக நீதியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல, திமுக தனது அறிக்கைகளிலும், மேடைப்பேச்சுகளிலும் முழங்கி வருகிறது. குறிப்பாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு போன்றவற்றில் முன்னோடிகளாக தம்பட்டம் அடித்துக் கொள்வதில் திமுகவிற்கு நிகர் திமுகவே! ஆனால், எதார்த்தத்தில் அவர்களுடைய உடல் மொழிகளும், எழுத்துக்களும், பேச்சுக்களும் ஜாதி துவேசத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும்; இந்த நாட்டின் மூத்த குடிமக்களை எளிதாக இழிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் அடிக்கடி ஆதிதிராவிடர், எஸ்.சி, தாழ்த்தப்பட்டோர் போன்ற சொல்லாடல்களை ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் பயன்படுத்தி பூர்வீகக் குடிமக்களை அவமானப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்கள் பலரும் விதிவிலக்கல்ல. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை ஒரு அமைச்சர் எஸ்.சி என்று தாழ்த்தி பேசியது; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தாழ்வாக நடத்தியது; உள்ளாட்சித் துறை அமைச்சரே ஒரு மேயரை ஒருமையில் பேசியது; உயர் கல்வித்துறை அமைச்சர் ஒரு பொது மேடையில் ஒரு கவுன்சிலரை நீ எஸ்.சி தானே என்று கூறுவது போன்ற சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் 1989- தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறியதாகும். ஆனால், இவர்கள் எவர் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்கதை ஆகிறது. இந்த போக்கை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்ணாடி கூண்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிவதற்கு ஒப்பான சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கும் தன்னுடைய சகாக்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

5.    இந்திய அரசியல் சாசனத்தில் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய Socially and Educationally சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பன்னெடுங்காலம் சம நீதி மறுக்கப்பட்ட மக்களை இந்தியா எங்கும் கண்டெடுத்து அவர்களை Schedule Caste என வகைப்படுத்தினர். Schedule என்றால் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் ’பின்தங்கிய மக்களின் தொகுப்பு’ என்று மட்டுமே பொருள். ஆனால் Schedule என்ற வார்த்தையை நாளடைவில் ’தாழ்ந்த’ சொல்லாக்கி இந்தியாவின் பூர்வீக மூத்த குடிமக்களைச் சிறுமைப்படுத்துவதற்கான சொல்லாக்கப்பட்டு விட்டது. தற்போது முற்பட்ட வகுப்பினருக்கும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்ட பிறகு, அனைத்து சமூகத்தினரும் ஏதாவது ஒரு வகையில் இட ஒதுக்கீடு பெறக்கூடியவர்கள் ஆகின்றனர். எனவே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் இன்னும் எஸ்.சி என்று முத்திரை குத்துவதும், அவர்களைத் தாழ்வாகப் பார்க்கக்கூடிய சூழலுக்கும் தள்ளுவதும் ஏற்புடையதல்ல. எனவே தான், SC என்பது இழிவான, தாழ்வான முத்திரை என்ற அடிப்படையிலேயே தேவேந்திர குல வேளாளர்கள் SC முத்திரையிலிருந்து வெளியேற வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்தது. எனவே SC என்ற சொற்றொடர் நாளடைவில் அதனுடைய உண்மையான மதிப்புகளை இழந்து மண்ணின் பூர்வீக மக்களைக் கொச்சைப்படுத்துவதற்கான சொல்லாடலாக உருவெடுத்த பிறகு, அதைப் பொதுவெளியில் பயன்படுத்துவது என்பதே குற்றமாக்கப்பட்டு, 1989 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை உணராமல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களுடைய கட்சிகளுக்குள்ளே ஆதிதிராவிடர் அணியாக்கி, அதை மெல்ல மெல்ல பட்டியல் அணியாக்கி ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கினார்கள். அதையே பின்பற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸும், தற்போது பிஜேபியும் அதே வழியை பின்பற்றி வருகின்றன. முதலில் ஜாதி – பாகுபாடுகளை ஒழிப்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் உண்மையாக கருதுமேயானால் தங்களுடைய கட்சிகளுக்குள் ஜாதி ரீதியாக செயல்படும் ’SC அணி – பட்டியல் அணி’ போன்ற பெயர்களை அடியோடு நீக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் புதிய தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

6.    தமிழக இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் பாழ்படுவதும் மது, புகை, கஞ்சா போன்றவற்றை அறவே ஒழிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

7.    தமிழகத்தினுடைய இயற்கை வளங்கள் கொள்ளை போகிறது; அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலிருந்தும் மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் மெல்ல மெல்ல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து ஆற்றப்படுகைகள், குளங்களிலிருந்து மணல் அள்ள அனுமதி கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல், குளத்து மண் உட்பட அனைத்து கனிம வளங்களையும் எவரும் அபகரிக்க அனுமதிக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

8.    டிசம்பர் 15, புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு – வெள்ளி விழா மாநாட்டை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. மாநாடு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெறும்.

9.    புதிய தமிழகம் கட்சி வெள்ளி விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டிற்குள் ஒரு கோடி பேரை புதிய தமிழகம் கட்சி உறுப்பினராக்கும் லட்சியத்தை கொண்டு ’உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்த புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கட்சியினரை வலியுறுத்துகிறது.

10. புதிய தமிழகம் கட்சியின் கிளை, ஒன்றிய, மாவட்ட, மாநில அமைப்பு தேர்தல்களை 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக நிறைவு செய்ய வேண்டி இருப்பதால் கட்சியின் அனைத்து மட்ட தொண்டர்களும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு வேண்டுகிறது.

– தலைமை அலுவலகம்,

புதிய தமிழகம் கட்சி.

28.09.2022