தூத்துக்குடி மாவட்டம்; ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – கொடியங்குளம் அருகே உள்ள மருதன் வாழ்வு கிராமத்தில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர் டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் கிராம நாட்டாமைகள் மற்றும் ஊர்த் தலைவர்கள் மாநாட்டுத் தீர்மானங்கள்:

1. தேவேந்திர குல வேளாளர் அரசாணை பெற்றுத் தந்த தலைவருக்கு நன்றி பாராட்டுதல்:
கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மாநாடுகள் மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி ”தேவேந்திர குல வேளாளர் அரசாணை” பெற்று தந்த தலைவர் டாக்டர் ஐயா அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி பாராட்டுகிறது.!

2. தேவேந்திர குல வேளாளர் அரசாணை – ஜாதி சான்றிதழ்:
ஏறக்குறைய 30 ஆண்டு காலம் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி புதிய தமிழகம் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டு தேவேந்திர குலத்தார், பள்ளர், கடையர், குடும்பர், காலாடி, பண்ணாடி, வாதிரியார் ஆகிய ஏழு பெயர்களை உள்ளடக்கி ”தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒற்றை பெயரில் அழைத்திட அரசாணை பெறப்பட்டும், இன்னும் பெரும்பாலான கிராமங்களில் ’தேவேந்திர குல வேளாளர்’ என ஜாதி சான்றிதழ் மாற்றம் செய்யாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனவே, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம நாட்டாமைகள் – ஊர்த் தலைவர்கள் முன் முயற்சி எடுத்து, 2024 டிசம்பர் 31-க்குள் அனைத்து கிராமங்களிலும் 100% சதவீதம் ’தேவேந்திர குல வேளாளர் ஜாதி சான்றிதழ்’ அனைத்து மக்களும் பெற்றிட உரிய முயற்சி எடுக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.!

3. சாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திரகுல வேளாளர் எனப் பதிவு செய்தல்:
விரைவில் மத்திய அரசு சாதிவாரி அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இருப்பதால் அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் நமக்கான பங்கை உறுதிப்படுத்தும் விதமாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும் ’தேவேந்திர குல வேளாளர்’ என்று மட்டுமே பதிவு செய்யவும்; அதில் SC, BC அல்லது ஆதிதிராவிடர் என வேறு எவ்வித இனக் குறியீடும் செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு கூட்டங்களை தேவேந்திரகுல வேளாளர் நாட்டாமைகள், கிராமத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

4. தென்தமிழக தேவேந்திர குல இளைஞர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த:
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் 8 கட்டளைகள் மற்றும் 11 கட்டளைகள் வாயிலாக தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட பறையர் மக்களுக்கு எதிராக கடந்த 75 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த அடக்குமுறைகளும், ஒடுக்கு முறைகளும் 1995 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம், காசிலிங்காபுரம், ஆலந்தா, ஒட்டுடன் பட்டி, மருதன் வாழ்வு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆதிக்க மனப்பான்மை கொண்டோருக்கு ஆதரவாக காவல்துறையே களம் இறங்கி ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய உச்சக்கட்ட சூழ்நிலை உருவாகிற்று.

அதன் பின், டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் ஓரணியில் திரண்டு அரணாக நின்றதால் ஏறக்குறைய 20 ஆண்டுகள் காலம் தென்தமிழகத்தில் பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், அதன் பின் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் தோன்றிய சிறு, சிறு குழுக்களாலும்; சுயநல நோக்கத்தோடு ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாச்சரியங்களுக்கும் ஆட்பட்டு தேவேந்திர குல வேளாளர் மக்களின் ஒற்றுமையில் ஏற்பட்ட சிதைவைப் பயன்படுத்திக் கொண்டு 2016-க்கு பிறகு, சாதி வன்மம் கொண்ட பிரிவினரின் தாக்குதல்கள் பெருகி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தீபக் ராஜா, செப்டம்பர் மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சென்பகப்பேரி பாண்டிய ராஜா கொலைகள் என தொடர் நிகழ்வாகிறது. இதைத் தடுத்து நிறுத்து வேண்டிய நிலையில் உள்ள காவல்துறையும், அரசும் அரசியல் மற்றும் சமூக நோக்கத்தோடு அணுகுகிறார்கள்.

இது போன்ற கொலை சம்பவங்களின் போது மட்டும் காவல்துறையினர் கைது, குண்டாஸ் எனப் பரபரப்பு காட்டுவதும்; FIR; Charge Sheet-களில் ஆயிரம் ஓட்டை உடைசல்களை ஏற்படுத்திக் கொடுத்து மேல் முறையீடுகளில் விடுதலை ஆகிடும் வண்ணம் குற்றவாளிகளுக்குத் தொடர்ந்து உதவி வருவதால் தான் தென் மாவட்டங்களில் 100 வருடங்களாகக் கொலையாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்; கொலைக் குற்றங்கள் தொடர்கின்றன. கடந்த மூன்று வருட திமுக ஆட்சியில் தேவேந்திர வேளாளர் இளைஞர்கள் மீதான கொலை சம்பவங்கள் 100 மடங்கு அதிகரித்துள்ளன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அநீதி உடனடியாக களையப்பட வேண்டும்:
பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத சூழ்நிலையில், பட்டியல் பிரிவிலிருந்து நாம் வெளியேறும் வரையிலும், நமது இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை 18% இட ஒதுக்கீட்டுக்குள்ளேயே பெற வேண்டியுள்ளது. ஆனால், 2010 ஆம் ஆண்டு, ஆட்சியில் இருந்த திமுக அரசால் கொண்டுவரப்பட்ட ’அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு’ என்ற அரசாணையால் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் அருந்ததியருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால் அரசாங்கத்தினுடைய துறைகளில் குறிப்பாக உயர்பதவிகளில் உருவாகும் ஓரிரு காலிப்பணியிடங்களையும் வெறும் 3% உள்ள அருந்ததியர் என்ற ஒரு சாதியினர் மட்டுமே, கடந்த 14 வருடங்களாக அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.

’அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு’ சட்டத்தால் தேவேந்திர குல வேளாளர் மட்டுமின்றி, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் (பறையர்) சமூக இளைஞர்களும் பெரும் அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ’சமூக நீதி அடிப்படையில் ஆட்சி செய்கின்றோம்’ என்று கூறும் திமுக அரசு நாம் 1996 முதல் 2001 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் நாம் வலியுறுத்தியதால் 11,000 பின்னடைவுப் பணியிடங்களை மட்டுமே குறிப்பிட்டு அரைகுறை வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு மூன்றரை லட்சம் பின்னடைவு பணியிடங்களை முழுக்க மூடி மறைத்து விட்டார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடுகள் முறையாக அமலாக்கி இருந்தால், இம்மண்ணின் மூத்த தமிழ் குடிமக்களான தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர்( பறையர்), மக்களின் வாழ்வில் மிகப் பெரும் சமூக, பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால், ஐந்து முறை ஆட்சியிலிருந்து, ஆறாவது முறையாக ஆட்சியில் உள்ள சமூகநீதி பேசும் திமுக 3 ½ லட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
ஆனால், 3% அருந்ததியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு மட்டும் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.

”அனைத்தும் அருந்ததியருக்கே என்ற அநீதி அரசாணையின்” காரணமாக அருந்ததியர் என்ற ஒரு வகுப்பாருக்கே 18 சதவீதத்தையும் தாரை வார்த்து விடுகிறார்கள். இந்த உள் இட ஒதுக்கீடு விஷயத்தில், அதை கொண்டு வந்த அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும், அதை வருந்து காட்டிக் கொண்டு அமலாக்கும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய அரசியல் சாசனம் மற்றும் சமூக நீதிக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைக்கும் துணை போகும் சில அரசியல் கட்சியின் நடவடிக்கைகளை இம்மாநாடு கண்டிக்கிறது. மேலும் 18 சதவீதம் இட ஒதுக்கீட்டையும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று சதவீதம் உள்ள அருந்ததியருக்கு அபகரித்துக் கொடுக்கும் இந்த அநீதி உடனடியாக நிறுத்திட வேண்டும் எனவும், அந்த முன்னுரிமை சரத்தை இரத்து செய்திட வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. மாஞ்சோலை மக்களுக்கு 2006 வன உரிமை சட்டப்படி வாழ்வுரிமையை ஏற்படுத்துதல்:
நூறு வருடங்களுக்கு முன்பு, தென் மாவட்டங்களில் இருந்து ஆங்கிலேயர்களால் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, காக்காச்சி கிராமங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் மக்களை ஆறு தலைமுறைகளாக அட்டைப் பூச்சிகளை போல் உறிஞ்சிவிட்டு, தற்போது அவர்களை கட்டாயப்படுத்தி நிற்கதியற்றவர்களாக வெளியேற்றுவதை தடுத்திடவும், அவர்களுக்கு 2006 வன பாதுகாப்பு சட்டத்தின் படி, அதே பகுதியில் வாழ்வுரிமையை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், விருப்ப ஓய்வு என்ற பெயரில் அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் அனைத்து முயற்சிகளையும் கண்டிக்கிறோம்.!

7. மது ஒழிப்பு:
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இல்லாமல், 2011 முதல் 2016 வரையிலும் திமுக மது ஒழிப்புக்கு போராடியதை நினைவு கூறவும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி, 2021 வரை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையிலும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் பேசிய பேச்சுக்கள், போராட்டங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டும் ’மது ஒழிப்புக் கொள்கையை மத்திய அரசுக்கு எதிராக ’ என மடைமாற்றம் செய்யாமல் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக இழுத்து மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசை வலியுறுத்துகிறோம். தேவேந்திர குல வேளாளர்கள் வாழும் அனைத்துக் கிராமங்களையும் மது, புகை, போதையில்லா கிராமங்களாக மாற்ற நமது ஊர்த் தலைவர்கள், முழு முயற்சி எடுக்க இம்மாநாடுக் கேட்டுக் கொள்கிறது.

8. தனியார் தொழில் நிறுவனங்களில் தென்தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை:
அந்நிய முதலீட்டின் வாயிலாக துவங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையை மட்டும் மையமாக வைத்து தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பரவலாக துவங்கி, தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகளில் தென் தமிழக மக்களை பயன்படுத்தி கொண்டு தொழிற்சாலை இயங்குகின்ற பொழுது பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு உயர் பதவிகளில் முன்னுரிமை கொடுப்பது, கடினமான மற்றும் மதிப்பு குறைவான பணிகளுக்கு மட்டுமே தென் தமிழக மக்களை பயன்படுத்துகின்ற பிரிவினைப் போக்குகள் முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான விதிமுறைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே உருவாக்கப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9. ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் பேரணி:
உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் இம்மண்ணின் பூர்வீக தமிழ் குடிமக்களான தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகிய இரு சமூகங்களின் லட்சோப லட்சம் இளைஞர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ’அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு முன்னுரிமை அரசாணையை’ இரத்து செய்யவும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் படி தீர்வு காணவும், கடந்த 3 ½ வருடங்களாக தென் தமிழக தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களுக்கு எதிராகவும், வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தீண்டாமை மற்றும் உயிர்ப்பலி எடுக்கும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் மாபெரும் பேரணி நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் எனவும், பேரணிக்கு கிராமம் தோறும் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனைவரும் கலந்து கொள்ள முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்படுகிறது.

சமூக நலன் கொண்ட உணர்வுப் பூர்வமான இத்தீர்மானங்களை அனைத்து கிராமங்களிலும் கிராம நாட்டாமைகள் & ஊர்த் தலைவர்கள் நமது கிராம மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக கிராமங்களில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கவும், துண்டுப் பிரசுரங்கள் வைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.