12 வது மாநில மாநாடு – மாநில இளைஞரணி மாநாடு மாநாட்டுத் தீர்மானம்
தேதி: 06 அக்டோபர் 2018
இடம்: திருச்சி - மார்க்கெட் திடல்
1. தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி, மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி முதல் மாநில மாநாட்டில், கொட்டும் மழையிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆர்வத்தோடும், எழுச்சியோடும் கலந்துகொண்டுள்ள தேவேந்திரகுல இளைஞரணி சிங்கங்களுக்கும், இம்மாநாடு வெற்றிகரமிக நடைபெற மிகக் கடுமையாக பாடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைச் செயலாளர்களுக்கும், பிற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும், தேவேந்திரகுல சொந்தங்களுக்கும் புதிய தமிழகம் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2. தேவேந்திரகுல மக்களின் மரபுவழி அடையாளத்தை மீட்டெடுக்கவும், அவர்களை பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்திடவும் தொடர்ந்து போராடி வரும், சமரசமில்லா போராளி டாக்டர் அய்யா அவர்களுக்கு இம்மாநாடு தனது வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. இக்கோரிக்கை வெற்றியடையும் வரையிலும் டாக்டர் அய்யா அவர்களின் பின்னால் இரும்புச் சங்கிலிப் பிணைப்புகள் போல், தேவேந்திரகுல இளைஞர்கள் பட்டாளமும் அறிவுஜீவிகளும் அணிதிரண்டு போராடுவோம் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
3. உழவர்கள் சேற்றிலே கை வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றிலே கை வைக்க முடியும் என்பதற்கு இலக்கணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இன்று வரையிலும் வாழ்ந்து வரும், தொல்காப்பிய காலத்திலேயே மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களை “அரசாணை மூலம் அடையாளப்படுத்தவும், அம்மக்களை தவறுதலாக ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலிடப்பட்டதை சரிசெய்து, மிக பிற்படுத்தப்படோர் பட்டியலில் சேர்த்திட மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்துவதை புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநாடு கவலையுடனும், வேதனையுடனும் சுட்டிக்காட்டுகிறது.
4. கடந்த மே மாதம் 6-ஆம் தேதி, விருதுநகர் மாநாட்டில் அறிவித்தபடி, 6 மாதகாலம் ஆகியும், தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பித்திடவும், மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திடவும், மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்துவது என இம்மாநாடு முடிவு செய்கிறது.
5. ஆங்கிலேயர் காலத்தில் இழைக்கப்பட்ட தவறே தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்த பின்னடைவிற்கும் காரணம் என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம், தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு பிரிட்டிஷ் அரசிடம் நட்ட ஈடு கேட்டு, ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை இருப்பதால், நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் ஹை கவுன்சில் (British High Council) அலுவலகத்தை நோக்கி, பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
6. 2019, ஜனவரி 6-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி யின் முன்முயற்சியில் தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும், கோரிக்கை நிறைவேறும் வரையிலும் தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
7. தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பே ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாள மீட்பு என புதிய தமிழகம் முற்றாகக் கருதுகிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மறுப்பு என்பதை தமிழர்களின் அடையாளத்திற்கும், தமிழர்களின் அதிகாரத்திற்குமான மறுப்பாகவே கருதுகிறோம். ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தமிழ் சமுதாயம் திராவிட இயக்க சித்தாந்தத்தால் பிளவுபட்டு நிற்கிறது. தமிழர்களிடையே ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்குவது என்பது தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பிலிருந்தே துவங்குகிறது. திராவிட சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும், குடும்ப ஆட்சிமுறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் தான் மரபுவழி தமிழர் ஆட்சியை நிறுவ இயலும். எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நமது பாரம்பரிய அடையாளத்தை மீட்டெடுக்கவும், மரபுவழி உண்மைத் தமிழர்களை ஆட்சி, அதிகாரத்தில் அமர்த்துவதற்குமான களமாக அமையும். ‘அடையாள மீட்பே அரசியல் அதிகார மீட்பு’ என்ற இலட்சியத்தை அடைய திராவிட சித்தாந்தங்களுக்கு மாற்றாக அடையாள அரசியலை முன்வைத்து, அரசியல் களம் காணும் புதிய தமிழகம் கட்சியே தமிழர்களின் எதிர்காலம் ஆகும். தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களின் அரசியல் கவசமாகவும், வருங்கால அரசியல் அதிகார மையமாகவும் விளங்கும் புதிய தமிழகம் கட்சியையும், சமரசமில்லா போராளி டாக்டர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களையும் அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல, ஒன்றியத்திற்கு 100, மாவட்டத்திற்கு 1000 புதிய தமிழகம் இளைஞர்கள் ஒருங்கிணைந்து இன்றிலிருந்தே கிராமங்கள் தோறும் களப்பணியாற்றுவது என இளைஞரணி மாநாடு தீர்மானிக்கிறது.