12-வது மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்
தேதி: 5 மார்ச் 2017
இடம்: கோவை - குனியமுத்தூர்
புதிய தமிழகம் கட்சியின் 12-வது மாநில பொதுக்குழுக் கூட்டம், 05.05.2017 அன்று, கோயம்புத்தூர் – குனியமுத்தூர், ஆயிஷா மண்டபத்தில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி MD அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் 1 :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்திற்கு பிறகு தமிழக அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. தண்டிக்கபட்ட ஒருவர் சிறையில் இருந்து வழி நடத்த கூடிய பினாமி அரசு ஒன்று, ஏழு கோடி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும். எனவே சசிகலா அவர்களின் நிழலாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய வகையில் அமைச்சரவையை கலைத்து விட்டு ஜனநாயக ரீதியாக தேர்தலை சந்திக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியினுடைய மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது
தீர்மானம் 2 :
பெரும்பான்மை மக்களின் செல்வாக்கு பெற்ற அரசு இல்லாத சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய பிரச்சனைகளை கையில் எடுத்து தமிழக மக்களை திசை திருப்பும் வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை புதிய தமிழகம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் 3 :
பெட்ரோலிய பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் புதுக்கோட்டை நெடுவாசல் உட்பட இந்தியாவில் முப்பத்தொரு இடங்களில் “ஹைட்ரோ கார்பன் ” எடுக்கும் இந்திய அரசின் திட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது, அதே சமயம் இயற்கை வளம் சார்ந்த எந்த திட்டத்தையும் எந்த பகுதியிலும் செயல்படுத்தும் முன், அதன் சாதக பாதக அம்சங்களை அப்பகுதி மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் மக்கள் கருத்தறியும் நிகழ்ச்சிகளை நடத்திய பின்னரே அத்திட்டத்தை தொடங்க வேண்டும் என்பதையும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் இத்திட்டங்கள் வாயிலாக அப்பகுதியில் நீர், நிலம், காற்று மாசு ஏற்படாது என்பற்கான உத்தரவாதத்தையும், அதில் ஈடுபடும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்கணிக்கவும் அனைத்து மட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அந்த நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கக்கூடிய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம், அவர்களையும் பங்குதாரர்களாக்கி, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படக்கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
தமிழகத்தில் வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழை என இரண்டும் பொய்த்து விட்ட நிலையில், வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் கருகி போயின. இதனால் 250க்கும் மேல் விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் மரணம் அடைந்து இருக்கிறார்கள். எனவே இந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம், அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானாவாரியாக இருந்தால் ரூ.15,000/-மும் நன்செய் பயிர்களாக இருந்தால்
ரூ.30,000/-மும் வழங்கப்பட வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5:
மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதில் முழு முயற்சியுடன் பங்குபெறும் பொருட்டு, இப்போதிருந்தே பணிகளை புதிய தமிழகம் கட்சியினர் துவக்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6 :
ஐம்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்களே மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். சிறுசிறு மாநிலங்களும் நீட் தேர்வை தைரியமாக சந்திக்கும் போது, தமிழக மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?? தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்தவும் அதன் வாயிலாக நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பங்குபெறும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 :
தமிழகம் முழுமைக்கும் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், வெற்றி வாய்ப்புள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிடுவது என முடிவு செய்கிறது
தீர்மானம் 8 :
தென் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சுபாஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தொடர்ந்து வறட்சியாலும் வேலையின்மையாலும் பாதிக்கப்பட்ட தென்தமிழகத்தில், பல ஆண்டுகளாக நடந்துவந்த சாதிய மோதல்கள் புதிய தமிழகம் கட்சியால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்; சமூக நல்லிணக்கம் வளர்க்கப்பட்டும், அண்மைக்காலமாக ஓரளவு அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலை இருப்பிடமாகக் கொண்ட சுபாஷ் என்ற ரௌடிக் கும்பல், தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. அண்மையில் சிங்காரம் என்ற சிறைவாசி சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட காவல்துறையின் வாகனத்தின் மீது சுபாஷின் அடியாள் கும்பல் தாக்குதல் நடத்தி சிங்காரத்தை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்திற்கு காவல்துறையினர் சிலரே உடந்தையாக இருந்துள்ளனர். அமைதியாக உள்ள தென் தமிழகத்தில், இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்தி புதிய சாதிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க எண்ணும் ‘சுபாஷ் மீது’ காவல்துறை இதுவரை மென்மையான போக்கையே கையாண்டிருக்கிறது. இப்பொழுது காவல்துறையின் வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் சுபாஷ் தண்டிக்கப்படவில்லையெனில் இது மிகமிக தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே சுபாஷ் மற்றும் அவனது கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.
திராவிட மற்றும் திரைஉலக
மாயையிலிருந்து
தமிழ்நாட்டையும் ; தமிழர்களையும்
விடுவிக்க !பொங்கி எழட்டும் !!
புதிய தமிழகம் !!
தீர்மானம் :
50 வருட திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு அரசியல், பொருளாதாரம் , கல்வி , கலாச்சாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் பெரிதும் பொலிவிழந்து விட்டது. உலக அளவில் தமிழர்களுக்கு அவலம் சேர்க்கும் வகையில் அனைத்து துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழல்; இடைத்தரகர்கள் மற்றும் மனச்சாட்சியற்றவர்களால் சுரண்டப்பட்டு ஏழ்நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள்; விவசாயத் தொழிலாளர்கள்; ஏழ்நிலையையே வாழ்நிலையாகக் கொண்ட நெசவாளர்கள்; கண்ணீரிலும் தண்ணீரிலும் வாழும் மீனவர்கள்; தங்களின் இழந்த அடையாளங்களை மீட்டெடுக்கப் போராடி வரும் மருத நில மக்கள்; திக்கற்றுத் திண்டாடும் அமைப்புசாரா தொழிலார்கள்; இவைகளே இன்றைய தமிழகத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன !
‘திரை உலகம்’ என்ற போதையிலும்; ‘திராவிடம்’ என்ற மாயையிலும் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டே வைக்கப்பட்டிருந்தார்கள்!
தமிழர்களிடையே அன்பும், ஒற்றுமை உணர்வு வளர்க்கப்படுவதற்கு பதிலாக சாதிய வாதிகளுக்கு வானுயுர சிலைகளும்; தங்கக் கவசங்களும் அணிவித்து சாதிய பகைமையை வளர்த்து எளிய மக்களை அடக்கியும் ஒடுக்கியும் அடாவடி சக்திகளை அரியணைக்கு ஏற்றி தமிழ்நாட்டு மக்களின் மாபெரும் சீரழிவிற்கு இருபெரும் திராவிடக் கட்சிகளே காரணமாக விளங்கியுள்ளன!
இவ்விரு திராவிடக் கட்சிகளின் ‘ஆட்சி ‘ எனும் கோரப்பிடியிலிருந்து . தமிழக மக்கள் தங்களை விடுவித்து கொள்வதற்கான தருணம் இதுவே ! திராவிட மற்றும் திரை உலக போதை மற்றும் மாயையிலிருந்து தமிழ் நாட்டையும் தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான அரிய தருணமும். இதுவே திராவிட மற்றும் திரை உலக மாயையிலிருந்து தமிழர்களை விடுவிக்கும் பொறுப்பு புதிய தமிழகம் கட்சிக்கே ! இருக்கிறது .
நாளைய விடியல் ! புதிய தமிழகமாக மலரட்டும் !
தமிழர்களை விடுவிக்க புறப்படுங்கள் !!
