1. தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும் எனும் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் முன் முயற்சியில் புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையைப் புதிய தமிழகம் மகளிரணி மாநாடு முழு மனதோடு வரவேற்கிறது. மேலும் இக்கோரிக்கையை மே 6 – விருதுநகர் மாநாட்டில் குறிப்பிட்டபடி அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் நிறைவேற்றித் தந்திட மத்திய, மாநில அரசுகளைப் புதிய தமிழகம் மாநில மகளிரணி மாநாடு வலியுறுத்துகிறது. அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் புதிய தமிழகம் கட்சியால் அறிவிக்கப்படுகிற மாநிலந்தழுவிய போராட்டத்தில், அனைத்துக் கிராமங்களின் சார்பாகப் பெண்கள் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

2. நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் நிலப்பயிர் சாகுபடியில் இன்று வரையிலும், கழனியில் இறங்கிக் கடுமையாகப் பாடுபடுவோர் தேவேந்திர குலப் பெண்களாகவே இருக்கின்றனர்; பல தலைமுறைகளாக இருந்தும் வருகின்றனர். இதன் காரணமாகத் தேவேந்திரகுல மகளிருடைய கல்வி, பொருளாதாரம், உடல்நலம் சார்ந்த பல வளர்ச்சிகள் தடை பெற்றிருக்கின்றன. எனவே, வேளாண்மை தொழிலில் நேரடியாக ஈடுபடக்கூடிய தேவேந்திர குலப் பெண்களுடைய உடல்நலம் பேணவும், அவர்களுடைய பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு, திறன் மேம்பாட்டுக்காகத் தேவேந்திரகுல வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைத்துத் தந்திட மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்திதுகிறது.

3. பெண்களுக்கான அதிகாரம் என்பது, சமுதாயத்தினுடைய விளிம்புநிலையில் இருக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் பெண்மணிகளை அதிகாரப்படுத்துவதில் இருந்துதான் துவங்குகிறது. பெண்ணடிமை ஒழிய மண்ணடிமை ஒழிய வேண்டும். மண்ணடிமை ஒழிய தேவேந்திகுல வேளாளர் பெண்களை நில உடைமையாளர்களாக மாற்ற வேண்டும். வாழ்வியல் மேம்பாடு அரசியல் அதிகாரத்திலிருந்தே துவங்குகிறது. கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஜனநாயகம், அரசியல் பங்களிப்பு என்ற பெயர்களில் ஏமாற்றி, தமிழக மக்களின் அனைத்து விதப் பின்னடைவுகளுக்கும் காரணமாக விளங்கும் இரு குடும்ப, இரு கட்சி ஆட்சி முறை முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். திராவிட கட்சிகள் நம்மை வாக்குவங்கிகளாக மட்டுமே இதுவரை பயன்படுத்திக் கொண்டார்கள். இனி வரக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியூட்டவும், ஒட்டுமொத்தத் தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் ஒரு வலுவான அணியை உருவாக்கவும், அந்த அணியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தவும், புதிய தமிழகம் மகளிரணி மாநாடு உறுதி பூணுகிறது.

4. ஒரு சமுதாய மேம்பாட்டில் கல்வியும், திறனும், மிகமிக முக்கியமானப் பங்காற்றுவதால் எதிர்காலச் சந்ததியினர் தங்களைச் சுயமாக நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டுத், திறன் சார்ந்த தொழிற்கல்விகளைக் கற்க தேவேந்திரகுல மகளிரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இம்மாநாடு முடிவு செய்கிறது. இதன்பொருட்டு தமிழ்நாடெங்கும் மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் மகளிரணி அமைப்புக்களை வலுப்படுத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

5. அண்மைக்காலமாகக் குழந்தைகள், மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் மற்றும் இதர வன்கொடுமைகளைப் புதிய தமிழகம் மகளிரணி மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. குழந்தைகள் மற்றும் மகளிரைப் பாதுகாக்காத எந்தவொரு சமுதாயமும் முன்னேறாது, அது நாகரிக சமுதாயமாகவும் கருதப்படாது என்பதைப் புதிய தமிழகம் மகளிரணி மாநாடு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எச்சரிக்கை செய்கிறது.

6. சலுகைகளால் முன்னேறுவது என்று காத்துக்கிடக்காமல், தகுதி, திறமை அர்ப்பணிப்பால் முன்னேறுவது என்ற தாரக மந்திரத்தில், சிறிய மற்றும் பெரிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கல்வி, தொழில், வேளாண்மை, வணிகம், அரசியல், கலை, கலாச்சாரம் என அனைத்துத் தளங்களிலும் முன்னேறிச் செல்லத் தேவேந்திரகுலப் பெண்மணிகளுக்கு இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது. சுய மற்றும் குடும்ப, சமுதாய சுகாதாரம், உடல் வலிமை, அறிவு வலிமை, சுய மரியாதை, சுய கௌரவம், உணவு, உடை, பண்பாட்டு தளங்களில் மிகவும் அக்கறை கொள்ளவும், மேம்படுத்தவும் தேவேந்திரகுல மகளிருக்குப் புதிய தமிழகம் அறைகூவல் விடுக்கிறது. பெண்களுக்குக் கல்வி மற்றும் சம உரிமையைப் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், பாரம்பரிய தமிழ் பண்பாடு, இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றிப் பேணிப் பாதுகாக்கவும் இம்மாநாடு சபதமேற்கிறது.