புதிய தமிழகம் கட்சியின்
மாநில அரசியல் உயர்நிலைக் குழுக் கூட்டம் மதுரையில் 3.5.2015 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

தீர்மானம் எண்-1:
தென் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு இரையாகி உயிர் நீத்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் உட்பட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் செம்மரக்கட்டை கடத்தியதாக ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்கள் மரணத்திற்கும் புதிய தமிழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது .

தீர்மானம் எண்-2:
அண்மையில் வெளிவந்த கொம்பன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சாதியத் தூக்கல்களைத் தடுத்து நிறுத்திய தென்சுடர் டாக்டர் அய்யா அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்-3:
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியர் குறி வைத்து கொலை செய்யப்படும் போக்கு தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து புதிய தமிழகம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்து கொள்கிறது .

தீர்மானம் எண்-4:
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோர் மீது நடந்துவரும் கெளரவக் கொலைகளை தடுத்திட தனிச்சட்டம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் எண்-5:
தென் தமிழகம் மீண்டும் ஒரு சாதிய கொலைக்களமாக மாறி வருவதையும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பட்டியலின வகுப்பாரும் 80-க்கும் மேற்பட்ட பிற சமுதாயத்தினரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சாதி வெறிக்கு ஆளாகி உள்ளதையும் நாடே அறியும். தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த திவாகர் என்ற பொறியியல் கல்லூரி மாணவர், மூலக்கரை என்னும் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் குமார், கால்வாய் என்ற கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் மற்றும் முத்துலட்சுமி என்ற பெண்மணி, ஸ்ரீவை K.T.K. நகரைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பாஸ்கரன், நவலடியூரைச் சேர்ந்த ஆறுமுகராஜ் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் என்ற ஒரே தாலுகாவை சேர்ந்தவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடுத்த காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சாதிவெறிக் கூலிப்படையினரால் தொடர்ந்து இது போன்ற கொலைகள் நடத்தப்படுவதும், கொலையாளிகள் எளிதாக தப்பித்து கொள்வதுமாக இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் இந்த சம்பவங்களில் அ.தி.மு.க. அரசு நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமெனவும் புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்-6:
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மாரிசெல்வம் மற்றும் முருகன் எனும் 16 வயது நிரம்பிய இரு பள்ளி மாணவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 4 மாதமாகியும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேற்குறிப்பிட்ட கொலை சம்பவங்களை CBI மூலம் விசாரிக்க மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அதே போன்று சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களாலேயே கொலை செய்யப்படும் மனித உரிமை மீறல் அரங்கேறி வருகிறது. இந்தக் கௌரவக் கொலைகளை வெளிப்படையாகவே சில அரசியல் கட்சிகளும், மற்ற அமைப்புகளும் ஆதரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சாதிவெறிக்கு ஆளாகி மரணமுற்ற பட்டியலினப்பிரிவு மக்களின் கொலைக்கு காரணமானவர்களை கண்டறிய CBI விசாரணைக்கு உத்தரவிடவும், கௌரவக் கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் கொண்டுவரவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூக ஆர்வலர்களின் பார்வைக்கு கொண்டுவரும் பொருட்டும் சர்வதேச மாநாடு ஒன்றை தமிழகத்தில் நடத்த முடிவு செய்யப்படுகிறது .

தீர்மானம் எண்-7:
பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான் என ஆறுவிதமான பெயர்களில் அழைக்கப்படக்கூடிய ஒரே சமுதாய மக்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என அழைத்திட அரசாணை வெளியிட தமிழக அரசை புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்-8:
செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் படுகொலையை விசாரிக்க CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்-9:
பொழுது போக்கு ஊடகமாக செயல்பட வேண்டிய தமிழ்த் திரைப்படங்களில் சாதியத் தூக்கல் நிறைந்த வசனங்கள், காட்சிகள் மற்றும் பாடல்களை புகுத்தி சாதிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் போக்கு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய திரைப்பட தணிக்கைக்குழுவும், மத்திய-மாநில அரசுகளும் முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிர்காலத்தில் எந்தவித சாதிய கூறுகளும், தூற்றியும் போற்றியும் வரும் திரைப்படங்களை முற்றாக தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது

தீர்மானம் எண்-10:
பல நூறாண்டு காலம் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளான கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு நடைமுறையில் இருந்து வந்த PCR எனும் சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் உரிய பாதுகாப்பைத் தராததால் இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களின் ஒப்புதலோடு 1989-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அந்த சட்டமும் முழு பலனை தராததால் தற்பொழுது வன்கொடுமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வடக்கு மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்ட ‘ரன் விர் சேனா’வைப் போன்று தமிழகத்திலேயும் பட்டியலின மக்களுக்கு எதிராக தோன்றியுள்ள சமுக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .

தீர்மானம் எண்-11:
மாறியுள்ள பொருளாதார சூழலில் நிலமே இந்தியாவின் பொருளாதரத்தை தீர்மானிக்கறது. பெரும்பாலானோரினுடைய வாழ்வாதாரமாக விளைநிலங்கள் விளங்குகிறபடியால் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் இந்திய விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கக் கூடியதாகவே கருதப்படவேண்டும். ஏகபோக முதலாளிகளுக்கு இந்திய மண்ணை தாரை வார்க்கவும், இந்திய விவசாயிகளை நிர்கதியாக்கும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து சமுக மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைந்து போராடுவதென முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண்-12:
வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதிய தமிழகம் கட்சியினர் வீடு தோறும் சென்று பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்படுகிறது .

தீர்மானம் எண்-13:
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அந்தந்த மாநில அரசுகள் மதித்து நடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்-14:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத் தலைவர்களது பிறந்தநாளை கொண்டாடுவதால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிய மோதல்கள் ஏற்படுகின்ற காரணத்தால், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் தவிர்த்து எந்த தலைவருடைய பிறந்த நாள், நினைவு நாட்களை அரசு அல்லது மாணவர்கள் சார்பாக கொண்டாட அனுமதி அளிக்ககூடாது. தேவையில்லாத மோதல்களை உருவாக்குவதால் மாணவர்களிடையே சாதிய அடையாளங்களோடு உள்ள அனைத்துக் கூறுகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தடைசெய்ய வேண்டும்.
சாதிய மோதல்களைத் தடுக்கும் விதமாக சாதியப் பெயர் தாங்கிய பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு இணைந்த சாதிப் பெயர்களை நீக்கவேண்டுமென தமிழக அரசை புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்-15:
ஓட்டு வங்கியை மனதிலே வைத்து ஒரே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுடைய தலைவரின் சிலைக்கு மட்டும் தங்க கவசம் அணிவித்தும், அவருடைய பிறந்தநாள், நினைவு நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ் சாதிகளிடையே நிரந்தரமான பகை உணர்வை வளர்த்துவிடுகிறது. தேர்தலின் பொழுது ஒட்டுமொத்த மக்களின் ஓட்டுகளை வாங்குவதும், ஆட்சியில் அமர்ந்தபிறகு ஒரு குறிப்பிட்ட சாதியின் மேலாண்மைக்கு ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவதும் அ.தி.மு.க. அரசின் செயல் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் ஆகும். சமுக நல்லிணக்கத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசின் செயலை முற்றாக புறக்கணிக்க அனைத்து சமூக அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் புதிய தமிழகம் அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் எண்-16:
அரசியல் சாசன பதவிகளான மாநில தாழ்த்தப்பட்ட ஆணையத் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையத் தலைவரின் பதவிகளை உடனடியாக நிரப்பிட புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .

தீர்மானம் எண்-17:
அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக பட்டியலின பிரிவு இடஒதுக்கீட்டிலிருந்து அண்மையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீட்டு முறையை இரத்து செய்ய வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்-18:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் கிடப்பில் கிடக்கும் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிட புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .

தீர்மானம் எண்-19:
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு பல்கலைகழகங்கள் இருந்தும், ஒரு பல்கலைகழகத்தில் கூட பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினரை துணைவேந்தராக நியமிக்காத அ.தி.மு.க. அரசை புதிய தமிழகம் கண்டிக்கிறது .

தீர்மானம் எண்-20:
2011-க்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களில் ஒரு சதவீதம்கூட பட்டியலின வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாதது சட்ட விரோதமாகும். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நியமங்களில் முழுமையாக 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .
உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்களில் அனைத்துப் பிரிவினரும் இடம்பெறும் வண்ணம் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .

தீர்மானம் எண்-21:
பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினரிடையே தொழில் முனைவோரை உருவாக்க ‘இளம் தொழில் முனைவோர் பயற்சி கல்வி’ ஒன்றை மாநில அரசே உருவாக்க புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .

தீர்மானம் எண்-22:
சுயநிதி கல்வி நிறுவனங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை(அரசாணை எண்: 92) மாநில அரசு கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே கல்வி நிறுவனங்களுக்கு செலுத்திட புதிய தமிழகம் வலியுறுத்துகிறது .

தீர்மானம் எண்-23:
அடுத்த 3 மாதங்களில் 30 இலட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டுமென இலக்கு நிர்ணயித்து செயலாற்றுவது என புதிய தமிழகம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்-24:
பட்டியலின பிரிவிற்கான சிறப்பு உட்கூறுத் திட்ட நிதியை கண்காணிக்க ‘மேலாண்மை நிறுவனம்’ ஒன்றை நிறுவிட புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.