நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அரசியல் உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானங்கள்
தேதி: 10 அக்டோபர் 2019
இடம்: சென்னை - நுங்கம்பாக்கம்
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்
குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக் குழுக் கூட்டம்
தலைமை:
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA அவர்கள்
நிறுவனர் – தலைவர், புதிய தமிழகம் கட்சி
நாள்: 10-10-2019, வியாழக்கிழமை,
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: புதிய தமிழகம் தலைமை அலுவலகம்,
நுங்கம்பாக்கம், சென்னை.
புதிய தமிழகம் கட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சியாகும். சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுள்ள இந்திய சமுதாயத்தில் குறிப்பாக மொழி, சாதி, மத, இன அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் இம்மண்ணில் ஒவ்வொரு சமுதாயத்தினுடைய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினுடைய அடையாளத்தை மீட்பதிலிருந்தே துவங்குகிறது. பல சமுதாயங்கள் உன்னதமான நிலையிலே இருந்து வறிய நிலைக்கு விழுந்த வரலாறுகள் உண்டு. ஆனால் அவர்களுடைய தற்போதைய வறுமை நிலையை மட்டுமே கணக்கிலே கொண்டு புதிய புதிய சொற்றொடர்களால் பாரம்பரியமிக்க தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்துவதை புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது.
தேவேந்திரகுல வேளாளர்கள் தொல்காப்பியம் முதல் அனைத்து பண்டைய தமிழ் நூல்களிலும் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள். பிற்காலகட்டங்களில் அவர்களைத் தாழ்த்தும் விதமாக அழைத்ததை நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒற்றை பெயரில் அழைத்திட புதிய தமிழகம் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. 2017 அக்டோபர் 6-ஆம் தேதி சென்னையில் மாநாடு, டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் பேரணி, ஜனவரி 20-ஆம் தேதி மதுரையில் உண்ணாவிரதம், மே 6-ஆம் தேதி விருதுநகரில் மாநாடு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி குற்றாலத்தில் மாநாடு, அக்டோபர் 6-ஆம் தேதி திருச்சியில் மாநாடு, நவம்பர் 15-ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் ஹைகவுன்சில் நோக்கி பேரணி, டிசம்பர் 15-ஆம் தேதி சேலத்தில் மாநாடு, ஜனவரி 10-ஆம் தேதி கோயம்புத்தூரில் உண்ணாவிரதம், பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னையில் இறுதி எச்சரிக்கை உண்ணவிரதம் என எண்ணற்ற போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி நடத்தியது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அரசாணை பிறப்பிக்கவும், அவர்களை தற்போது இடம்பெற்றிருக்கக்கூடிய பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி மிகபிறப்டுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திடவும் புதிய தமிழகம் கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசாணை பிறப்பிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. அதனுடைய அடிப்படையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 8 மாதங்கள் ஆகியும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை புதிய தமிழகம் கட்சி வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக் குழுக் கூட்டம், கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA, அவர்கள் தலைமையில் சென்னை – நுங்கம்பாக்கம், புதிய தமிழகம் தலைமை அலுவலகத்தில் 10.10.2019 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானங்கள்:
தீர்மானம் – 1:
இந்தியா – சீனா நட்புறவை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியாவிற்கு வருகை தரும் சீன தேசத்தின் தலைவர் ஜி ஜின் பிங் அவர்களை புதிய தமிழகம் கட்சி வருக வருக என வரவேற்கிறது.
தீர்மானம் – 2:
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சீனப் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோரின் சந்திப்பை தமிழகத்தின் பாரம்பரியமிக்க மாமல்லபுரத்தில் நடத்துவது தமிழர்களின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். இரு தேசத் தலைவர்களின் சந்திப்பை மாமல்லபுரத்தில் நடத்திட முடிவு செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 3:
சீன பிரதமர் மற்றும் பாரத பிரதமர் ஆகியோருடைய சந்திப்பானது, பாதுகாப்பு, தொழில், வணிகம் மற்றும் பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையே முன்னேற்றத்தை உருவாக்கும். மேலும், ஆசிய கண்டத்தின் இருபெரும் தேசங்களுக்கிடையே நல்ல நட்புறவு ஏற்பட்டு உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தீர்மானம் – 4:
மத்திய அரசினுடைய முத்ரா வங்கி கடன் திட்டத்தை தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்களின்றி அவதியுறும் தென்தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற, நகர்புற இளைஞர்களுக்கு விரிவாக எடுத்துச் செல்ல அனைத்து வங்கிகளும் கிராமம், பேரூராட்சி, நகராட்சி என்ற அளவில் சிறப்பு முகாம்களை நடத்தி தாராளமாக கடன் வழங்கி உதவிட வேண்டுமாய் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 5:
தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீர்செய்யும் வகையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றவும், தினச் சம்பளமாக குறைந்தது 300 ரூபாய் வழங்கிடவும் பல்வேறு காரணங்களுக்காக பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சிகளில் இணைக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கும் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 6:
குரூப் 2 தேர்வில் கடந்த காலங்களில் இருந்தது போலவே தமிழ்மொழி தேர்விற்கும் சமபங்கு அளித்திட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 7:
மத்திய அரசினுடைய துறைகளில் தமிழக மாணவர்கள் அதிகமாக வெற்றிபெற முடியாமல் போவதற்கான காரணங்களை கண்டறிய குழு ஒன்றை நியமிக்கவும், அந்தக் குழுவின் அறிக்கையினுடைய அடிப்படையில் தமிழக மாணவர்கள் இரயில்வே, தபால் துறைகளில் அதிக வெற்றிகளை பெற உரிய நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 8:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஏழை, எளிய விவசாய தொழிலாளர்கள் மற்றும் உதிரி பாட்டாளிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் கூட இதுவரையிலும் வழங்கப்படவில்லை. உடனடியாக அதனை வழங்குமாறு புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 9:
மத்திய அரசின் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் முறையாக கணக்கெடுப்பு செய்யாத காரணத்தினால் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அந்த நிதி சென்றடையவில்லை என்று தெரிகிறது. எனவே, மாநில அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கு காட்டாமல் மத்திய அரசின் திட்டம் உரியவர்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 10:
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 11:
நிலத்தடி நீரை செரிவூட்டவும், மழைநீரை சேமிக்கவும், பருவநிலை மாற்றத்தை முறைப்படுத்த மரம் வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்கவும் புதிய தமிழகம் கட்சி கல்லூரி மாணவர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தை நடத்திட முடிவு செய்கிறது.
தீர்மானம் – 12:
கல்வியும் தொழிலும் வளர்ச்சியின் இரு கண்கள் என்பதை உணர்த்தும் வகையில் சிறு குழந்தைப் பருவம் தொட்டே திறன் மேம்பாட்டு கல்வியில் கவனம் செலுத்தும் விழிப்புணர்வை வீடுதோறும் ஏற்படுத்த புதிய தமிழகம் இளைஞரணி சார்பில் இளைஞர் அமைப்பு ஒன்றை உருவாக்க புதிய தமிழகம் கட்சி முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் – 13:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற அடிப்படை தத்துவத்தை கிராமப்புற மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் பொருட்டு, இல்லத்தூய்மை-உடல்தூய்மை-உள்ளத்தூய்மை என்ற மூன்று அம்சங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் இயக்கத்தை நடத்துவது என புதிய தமிழகம் கட்சி முடிவு செய்கிறது.
தீர்மானம் – 14:
மது, புகை மற்றும் போதைப் பொருள் ஆகிய மூன்றையும் அறவே ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்தி கடும் போராட்டத்தை முன்னெடுக்க புதிய தமிழகம் கட்சி முடிவு செய்கிறது.
தீர்மானம் – 15:
தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழ் மற்றும் இந்திய பாரம்பரிய உயர்ந்த பண்பாடுகள், வழிபாடுகள், கலை, கலாச்சாரங்கள், மொழி மற்றும் தேசப்பற்றை வளர்த்தெடுக்க புதிய தமிழகம் மக்கள் இயக்கத்தை காணும் என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் – 16:
இந்திய அரசியல் சாசனத்திண் 370-வது பிரிவில் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த தனி அந்தஸ்தை இரத்து செய்து இந்திய இறையாண்மையை நிலைநாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 17:
புதிய கல்விக் கொள்கையில் வரையறுத்துள்ளவாறு இந்தியா முழுமைக்கும் இந்தி மொழியை விருப்பமொழியாக மொழியாக பள்ளிக் கல்வித் திட்டத்தில் அமல்படுத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 18:
இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார மந்த நிலைக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தவறான நடவடிக்கைகளே காரணம் என புதிய தமிழகம் கட்சி கருதுகிறது. கண்ணை மூடிக்கொண்டு பல இலட்சக்கணக்கான கோடிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய சில முக்கிய நபர்களுக்கு மட்டும் கடனாக வழங்கிய வங்கிகள், இப்பொழுது அதை திரும்பப் பெற முடியாமல் ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவர் மீதும் மிகப்பெரும் நிதிச் சுமையை சுமத்தியிருக்கின்றன. வங்கிகள் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றக்கூடியவை; குதிரைகள் ஓடிய பிறகு இலாயத்தை மூடி விடுவது போல இப்பொழுது பெரும்பாலான வங்கிகள் நியாயமாக, நேர்மையாக தொழில் புரிபவர்களுக்குக் கூட வங்கி கடன் வசதியை செய்து தர வராததே கடந்த சில வருடங்களாக தொழில் துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய பின்னடைவிற்குக் காரணம் ஆகும். எனவே வங்கிகள் தங்களது தவறான போக்குகளை மாற்றிக் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கு கடன் தரும் வசதிகளை தாராளப்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
சிறப்புத் தீர்மானம்
“2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அக்கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் அன்பிற்குரிய ஜெயலலிதா அவர்களிடம் பேசியபோதே, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளைத் தான் முன்வைத்தோம். அப்போது அவற்றை ஏற்றுக்கொண்ட அவரும் தேர்தல் முடிந்த பிறகு வாக்குறுதியை காப்பாற்றவில்லை. 2012-ஆம் சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, புதிய தமிழகம் கட்சியின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காக, சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்’ என்று ஜெயலலிதா அளித்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை. அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அரசும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்பதை புதிய தமிழகம் கட்சி வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது. தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக இருக்கிறது. நாங்குநேரியில் துவங்கி தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் தேவேந்திரகுல மக்கள் தங்களுடைய இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி, எடப்பாடி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வருகிறார்கள். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு அம்மக்களின் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் புதிய தமிழகம் கட்சி தேவேந்திரகுல மக்களுக்கு தோளோடு தோள் நிற்கும் என உறுதி பூணுகிறது. அடையாள மீட்பு அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் இல்லையேல் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் ஆதரவு இல்லை என்ற தேவேந்திரகுல மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில், ’நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது இல்லை’ என புதிய தமிழகம் கட்சி முடிவு செய்கிறது. அதேபோன்று வேறு எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்பதையும் புதிய தமிழகம் கட்சி தெளிவுபடுத்துகிறது.”