மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம் – தீர்மானம்
தேதி: 8 பிப்ரவரி 2017
இடம்: சென்னை
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம், 08.02.2017 அன்று, சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி MD அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1. தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது! வறட்சியின் வேதனையில் விவசாயிகள் மரணத்தின் விளிம்பில் தவிக்கிறார்கள்! கோடானகோடி பொது மக்கள் குடிநீரின்றியும் தவிக்கிறார்கள்! இந்நிலையில் வலுவான தலைமையின் கீழ் வழிநடத்தப்பட வேண்டிய மாநில அரசு, நிலையற்ற தன்மையுடன் நிலவுவதை கவலையுடன் புதிய தமிழகம் நோக்குகிறது.
2. ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பின் முதல்வராக பொறுப்பேற்ற ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த காரணங்களுக்காக பதவி விலகியதாக அவர் அறிவித்ததை தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை.
3. புதிய முதல்வராக அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் திருமதி.சசிகலா தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தேவேந்திரகுல வேளாளர் மற்றும் சக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்தேறிய கொடியன்குளம் உள்ளிட்ட வன்முறைகளும், 2011 முதல் இன்று வரை ஆட்சியில் உள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தொடரும் கவுரவக் கொலைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான படுகொலைகள் அ.தி.முக. ஆட்சியின் மீதும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கட்சியின் திரைமறைவில் இருந்து கட்சியை இயக்கிய சசிகலா அவர்கள் மீதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பெரும் அச்சமே நிலவுகிறது. மேலும் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் – அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமைந்தபோது கொடுத்த முக்கிய வாக்குறுதிகளான தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க மறுத்ததும், தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்காதது போன்ற குறைபாடுகள் இன்னும் தென்தமிழக தேவேந்திரகுல வேளாளர் மத்தியில் ஆறாத புண்ணாக உள்ளது. எனவே இப்படிப்பட்ட சூழலில் சசிகலாவின் தேர்வை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கும் நிலையில் இல்லை.
4. முதல்வராக முன்மொழியப்பட்டுள்ள சசிகலாவிற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பே நிலவுகிறது.
5. மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜனநாயக ரீதியான, நிலையான மக்கள் அரசு உருவாக, தேர்தலுக்கு வழிவகை செய்வதே தீர்வு என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
