பொதுக்குழு மற்றும் கருத்தாய்வுக் கூட்ட தீர்மானங்கள்
தேதி: 25 பிப்ரவரி 2019
இடம்: சென்னை
16-வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து, கலந்தாலோசிக்கும் பொருட்டு, 25-02-2019 (திங்கள்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு மற்றும் கருத்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் – 1:
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவினுடைய பல மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பர்மா, பிஜி தீவுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளிலும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆங்கிலேயருடைய காலத்திலும், அதைத் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற பின்னரும், இம்மக்களுடைய மரபு ரீதியான வரலாற்று அடையாளங்களைக் கணக்கிலே கொள்ளாமல், அன்று நிலவிய வறுமையை மட்டுமே கணக்கிலே கொண்டு, தேவேந்திரகுல வேளாளர்கள் தவறுதலாக பட்டியலிலே சேர்க்கப்பட்டதன் விளைவாக, இன்று அந்த பெருமைமிக்க சமுதாயம் பொதுத் தளத்தில் தாழ்த்தப்பட்டோர், தலித், அரிஜன், ஆதிதிராவிடன் என்ற அடைமொழிகளோடு கூனிக்குறுகி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. எந்தவொரு அரசுக்கும், அந்த நாட்டில் வாழக்கூடிய மக்களுடைய இல்லாமையையும், கல்லாமையையும் போக்க வேண்டியது அடிப்படை கடமையாகும். அதேபோல, கல்வி பெறுவதும், நிர்வாகத்தில் வாய்ப்புக்களைப் பெறுவதும் அரசியல் சாசனத்தினுடைய அடிப்படை உரிமையாகும். அந்த அடிப்படை உரிமைகளை அரசு வழங்குவதையும், அதை அந்த நாட்டுக் குடிமக்கள் பெறுவதையும் ஒரு மிகப்பெரிய ஜனத்திரளை மூன்றாந்தரக் குடிமக்களாக முத்திரை குத்துவதற்குப் பயன்படுத்துவது மனித உரிமை மீறலும், ஜனநாயக விரோதமானதும் ஆகும். தலித், ஆதிதிராவிடன், அரிஜன் முத்திரைகளை தேவேந்திரகுல வேளாளர்கள் அடியோடு வெறுக்கிறார்கள். இம்மண்ணின் மீது ஆதிக்கம் செலுத்திய மருதநில மக்கள், அந்நியப் படையெடுப்புக்களால் முடி இழந்தார்கள், நிலம் இழந்தார்கள், குடியுரிமை இழந்தார்கள், அரசு அதிகாரத்தை இழந்தார்கள்.
மண்ணுரிமையை இழந்த மக்களுக்கு மண்ணுரிமையை நிலைநாட்டாமல், அந்த சமுதாயத்தில் தேர்ந்தெடுத்து ஓரிருவருக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள், அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவவில்லை; மாறாக, பெரும் ஜனத்திரளை விளிம்பு நிலைக்குத் தள்ளி, மூன்றாந்தர மக்களாக்கியதே அதனுடைய விளைவாயிற்று. பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டதால், தங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் தாழ்வுச் சிந்தனைகளிலுருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தங்களை விடுவித்துக் கொள்ள நினைக்கிறது. எனவே பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறுவது ஒன்றே இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கான முதல்படி என, இலட்சோப இலட்சம் தேவேந்திரகுல மக்கள் உளமாற எண்ணுகிறார்கள். அவர்கள் கடந்த 3 ஆண்டுகாலமாக, பட்டியல் வெளியேற்றத்தின் மூலம் தங்களது அடையாளத்தை மீட்டெடுக்க, புதிய தமிழகத்தின் பின்னால் அணிதிரண்டு, மாநாடு, பேரணி, உண்ணாவிரதம் என பலமுனைப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அண்மையில், மதுரை வந்த பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அறிவிப்பு ஓரளவிற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆனால், மத்திய அரசும் அதற்கு செயல் வடிவம் கொடுக்க தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை; எடப்பாடி தலைமையிலான மாநில அரசும் காலம் தாழ்த்துவது, தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதங்கத்தையும், கொதிப்பையும் உண்டாக்கியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் இந்த வேளையில், தமிழ்நாடு அரசின் இந்த மெளனம் மிகப்பெரிய அளவிற்கு சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே இச்சூழலில், பட்டியல் வெளியேற்றத்தின் மூலம் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பை முற்றிலுமாக ஏற்று, அதை அமலாக்குவதற்குண்டான தகுதி படைத்த அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கையை முன்வைக்கவும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நமக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கவும் முன்வந்தால், அவர்களுடன் தேர்தல் உறவு வைத்துக் கொள்வதற்குண்டான களச்சூழல்களை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப தேர்தல் உத்திகளைக் கையாள, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு முழுமையான அதிகாரம் அளிக்கிறது.
தீர்மானம் – 2:
புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்டு, 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலில் சந்தித்தது. அதைத் தொடர்ந்து 1999 – நாடாளுமன்றத் தேர்தல், 2001 – சட்டமன்றத் தேர்தல், 2004 – நாடாளுமன்றத் தேர்தல், 2006 – சட்டமன்றத் தேர்தல், 2009 – நாடாளுமன்றத் தேர்தல், 2011 – சட்டமன்றத் தேர்தல், 2014 – நாடாளுமன்றத் தேர்தல், 2016 – சட்டமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் தனிச் சின்னத்திலேயே சந்தித்துள்ளது. 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், புதிய தமிழகம் கட்சி 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் 4 ½ இலட்சம் வாக்குகள் பெற்று, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனைய ஏற்படுத்தியதால், ”புறக்கணிக்க முடியாத புதிய தமிழகம்” என்று ஊடகங்களால் நாம் புகழாரம் சூட்டப்பட்டோம். அதற்குப் பின்பு ஏற்பட்ட அரசியல் சூழல்களின் காரணமாக, நாம் ஓரிரு தொகுதிகளுக்குள் சுருக்கப்பட்டு விட்டோம். தமிழகத்தில் 33 மாவட்டங்களில் பரவலாக இருந்தும், 24-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 150 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருந்தும், நாம் சீட்டு எண்ணிக்கையில் அதற்குண்டான முக்கியத்துவம் பெற முடியாத நிலை இருக்கிறது. அதேபோல, பட்டியல் வெளியேற்றம் மற்றும் அடையாள மீட்பு நம்முடைய மக்களுடைய உயிர் மூச்சாக இருக்கிற காரணத்தினால், இந்த தேர்தலில், தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற ஆதரவு வாக்கெடுப்பு என்ற முழக்கத்தோடு, அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, நம்முடைய வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தினால், அது எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் வகையில், உரிய வியூகங்களை அமைக்க, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு முழு அதிகாரம் அளிக்கிறது.
தீர்மானம் – 3:
தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற ஆதரவு வாக்கெடுப்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை பட்டியல் வெளியேற்றத்தின் மூலம் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு வாக்கெடுப்பு முழக்கத்தோடு, புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தேவேந்திரகுல மக்களுடைய இலட்சக்கணக்கான வாக்குகளை குவித்தாலே, நாம் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையில் வெற்றி பெற்றதாக அமைந்துவிடும். அந்த வாக்கெடுப்பானது எந்த அரசாலும் புறக்கணிக்க முடியாமல், அதுவே ஒரு அரசியல் சாசனமாக மாறிவிடும். அந்த அடிப்படையில், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் அனைத்து தேவேந்திரகுல இளைஞர்களும், அறிவுஜீவிகளும், அரசு ஊழியர்களும், சமூக வலைத்தள நண்பர்களும் அடுத்த இரண்டு மாதத்திற்கு களமிறங்கி பணியாற்ற வேண்டுமென புதிய தமிழகம் வேண்டுகோள் விடுக்கிறது.