தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் 11.04.2015-ஆம் நாள் புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி M.D.,M.L.A. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) கடந்த 7-ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு புதிய தமிழகம் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. இறந்தவரின் குடும்பங்களுக்கு ரூ.10 இலட்சம் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு ஆந்திர அரசில் வேலைவாய்ப்பும் வழங்கிட வலியுறுத்தப்படுகிறது. துப்பாக்கிச் சூடு குறித்தும் இருபது ஏழைத் தொழிலாளர்களை ஏவிய பெரும்புள்ளிகள் குறித்தும் உண்மைநிலையைக் கண்டறிய உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தப்படுகிறது. மேற்கண்ட தீர்மானத்தை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

2) அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதியத் தூக்கலோடு சில சாதியவாதிகளால் திட்டமிட்டு அமைக்கப்படுவதும், அதன் காரணமாக பல்வேறு தமிழ் சமூகக் குழுக்களிடையே மனமாச்சரியங்கள் ஏற்பட்டு, அதுவே மோதலாக உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கை புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த கவலையோடு சுட்டி காண்பிக்கிறது. மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு வெறும் சான்றிதழ் (Central Board of Film Certification) நிறுவனமாக மாறிவிட்ட நிலையில் தற்போதைய சமூக சூழ்நிலையில் தந்திரமாக சாதிய, மதவாத, இனவாத கருத்துக்களை திணிப்பதை தடுக்கும் திராணியற்ற நிறுவனமாக CBFC மாறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சி கருதுகிறது.

3) எனவே தமிழ் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கைக்குழு (Social Accountability Censor-SAC) ஒன்றை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் அமைத்திட முடிவு செய்யப்படுகிறது.

4) அண்மையில் வெளிவந்த கொம்பன் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கக்கூடிய பல்வேறு விதமான சாதிய தூக்கல்கள் கண்டனத்துக்குரியவை. அப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மீது தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. திருவைகுண்டம், நாவலடியூர் என்ற கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகராஜா என்ற 42 வயது விவசாயி கடந்த ஏப்ரல் 2-ஆம் திருவைகுண்டம் காவல்நிலையத்தில் இருந்து 30 அடி தூரத்திலேயே வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். மதுரை சக்கிமங்களத்தைச் சார்ந்த கதிரேசக்குமார் என்ற 36 வயது இளைஞர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும் சாதிமறுப்பு திருமணம் செய்த இளைஞர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கெளரவக்கொலைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன. எனவெ தென்தமிழகத்தில் துணைராணுவத்தை நிறுத்தவும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் கெளரவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் கொண்டுவரவும் வலியுறுத்தி ஜீன் – 6 அன்று சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணி மற்றும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.