ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கியப் போர், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டில் மிகப்பெரிய அளவிற்குப் பொருட்சேதமும், இருதரப்பு  இராணுவ வீரர்களுக்கு கணிசமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுவரை பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். கீவ் மற்றும் கார்க்கீவ் போன்ற பெரிய நகரங்களில் உள்ள மக்கள், ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, பதுங்குக் குழிகள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களில் உணவு, தண்ணீர், சுகாதாரமான காற்று, கழிப்பிட வசதி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். அந்நாட்டில் கல்வி பயிலச் சென்ற பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். நாளுக்கு நாள் போரின் போக்கு அதிகரித்து வருவதாலும், பெரிய நகரங்கள் சுற்றி வளைக்கப்படுவதாலும் ஏற்படும் பாதிப்புகளுடன், 15-க்கும் மேற்பட்ட அணுமின்நிலையங்கள் நிறைந்த உக்ரைனில், ஒரு சிறிய தவறுதலான தாக்குதல் கூட மனிதகுலத்திற்கானப் பேரிழப்பைக் கொண்டு வந்துவிடுமோ அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகின் பிற நாடுகளையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. 1945-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இப்பொழுது மீண்டும் ஓர் உலகப் போருக்கான சமிக்ஞை தெரிகிறது. இப்போரை இப்பொழுதே தடுத்து நிறுத்தவில்லையென்றால், ஐரோப்பாவையும் தாண்டி, உலகின் பிற நாடுகளையும் பற்றிக் கொள்ளும். போரை நிறுத்த ஐ.நாவின் பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் பொது கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பலனளிக்கவில்லை. இதுவரை நடுநிலை வகித்துவரும் இந்தியாவால் மட்டுமே, இப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும்பங்காற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.  போர் தொடங்கிய மூன்று தினங்களில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், ரஷ்யா அதிபர் புட்டின் அவர்களோடு பேசியிருக்கிறார். இந்தியா தனது வரலாற்று கடமையை நிறைவேற்றும் பொருட்டு, ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா அதிபர் பிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் மேக்ரன், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஷோல்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆகியோருடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தி, ரஷ்யா – உக்ரைன் போரைத் முடிவுக்குக் கொண்டுவரவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் தீவிர முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.