1. கோவில்பட்டி மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் நீண்டகாலக் கோரிக்கையான கோவில்பட்டியை மையமாக வைத்து தனி மாவட்டமும், ராஜபாளையத்தை மையமாக வைத்து தனி மாவட்டமும் உருவாக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

2.தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நலத் திட்டங்களையும் முறையாக அமல்படுத்தவும், அதனைக் கண்காணிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையங்களை அமைத்திட புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

3.தச்சுத்தொழில், தங்க நகை வேலை, பாத்திர வேலை, சிப்பி வேலை, இரும்பு, சிறு, குறு பட்டரைகள் எனத் தமிழகமெங்கும் வாழும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்களுடைய சுயதொழிலை விருத்தி செய்யும் பொருட்டு, இலவச மின்சாரமும், 15 இலட்சத்திற்குக் குறைவில்லாமல், குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கிட மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. மதுரை – குற்றாலம், திருநெல்வேலி – தென்காசி ஆகிய சாலைகளின் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திட புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

5. நாளுக்கு நாள் நலிந்து வரும் நெசவாளர்களின் வாழ்வாதரத்தை மேன்மைப்படுத்த, அதிநவீன விசைத்தறிகளை விட்டுதோறும் அமைத்திடவும், அதற்குண்டான நவீன இயந்திரங்களை 50% மானியத்தில் வழங்கிடவும், பருத்தி, ஸ்பின்னிங் நூற்பாலைகளுக்கு அருகாமையிலேயே நெசவாளர்களுக்கு கிரஸ்டெர்களை அமைத்திடவும், நெசவாளர்கள் நெய்யும் துணிகளை அரசே நேரடிக் கொள்முதல் செய்திடவும் வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

6. தேர்தலின்போது சொத்து வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு வரியை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி, பால் பொருட்கள் விலை, மின்கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்தி மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி, திமுக அரசு தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. மேலும் மேற்கண்ட வரி உயர்வையும், பால் பொருட்களின் விலை உயர்வையும், சிறு, குறு தொழில்முனைவோர், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளை மிகவும் பாதிக்கும் மின்கட்டண உயர்வையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, மாதம் ஒருமுறை மின் அளவீட்டு முறையை அமல்படுத்திடவும், தடையில்லா, தரமான மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

7. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலில் கலக்கும் நதிகளைக் கிழக்கு நோக்கி திருப்பி, கனவுத் திட்டங்களான செண்பகவல்லி அணை மற்றும் அழகர் அணைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
8.மத்திய அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைக் களைந்திட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

9. மத்திய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிறுவி, செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

10. மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY), இந்திய மேலாண்மை நிறுவனம் (NATIONAL INSTITUTE OF MANAGEMENT), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY) ஆகிய கல்வி நிறுவனங்களை தென்தமிழகத்தில் நிறுவிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

11. சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலையே நம்பி இருக்கின்றனர். இத்தொழில்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக நீக்கிடவும், பட்டாசு/தீப்பெட்டித் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், மாற்றுத் தொழில்களை ஏற்படுத்தித் தந்திடவும், மத்திய, மாநில அரசுகளைப் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் தொழிலாளர்கள் பெயரில் காப்பீடு செய்திடவும், விபத்துகளில் பலியாவோருக்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்கிடவும் வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

12. பெண்களின் மேம்பாடு இல்லாமல் எந்த ஒரு பகுதியும் உண்மையான முன்னேற்றத்தை காண்பது முடியாது. எனவே பெண்களின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்புகளையும் சுயதொழில்களையும் உருவாக்கிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

13. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையும் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு கொடுக்க, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், சுயதொழில் பயிற்சியும் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. மேலும் அரசு வேலைகளை மட்டுமே நம்பியிராமல் ஆண், பெண் இருபாலரும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பறந்து சென்று தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, வேலைக்கு செல்கிறோம் என்ற நிலையை மாற்றி, வேலை கொடுக்கிறோம் என்ற நிலைக்குத் தங்களை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.
14. மண்பாண்டம் செய்வோர், கூடை முடைவோர், நகைத் தொழிலில் ஈடுபடுவோர், விசைத்தறி தொழிலில் ஈடுபடுவோர், ஏழை, எளிய விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் தொழில் புரியும் அனைவருக்கும் பென்ஷன் வழங்கிடவும், மண்பாண்டம் செய்வோருக்கு நவீன உலைகள் அமைத்து கொடுப்பதற்கும் சலவைத் தொழிலாளர்களுக்கு நவீன முறையில் துணிகள் உலர்த்தும் துறைகள் அமைத்துக் கொடுப்பதற்கும், சவரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், மரவேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர், கூடை முடைவோர் என அனைத்து தரப்பினருக்கும் சமூகப் பாதுகாப்புக்கும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

15. பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளில் விளையும் அனைத்துவித பூக்கள், எலுமிச்சை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிர்பதனக் கிடங்குகளையும், அவற்றிற்கு நல்ல விலை கிடைக்க கூடிய வகையில் அரசு கொள்முதல் நிலையங்களையும் அமைத்திட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
16. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் புற்றீசல் போல் பரவியிருக்கக்கூடிய ‘Cash for Vote’ என்ற நிலையை மாற்றி, “No Cash for Vote” என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கத்தை நடத்திட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்கிறது.

17. தமிழ்நாடு அரசில் நேரடியாக தேர்வு செய்யும் பணியாளர்களான கிராம நிர்வாக உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், சத்துணவு உதவியாளர், நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் உதவியாளர், அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோவில் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்ட பல பணி நியமனங்களுக்கும், பணி மாறுதல்களுக்கும் பணத்தை மட்டுமே பிரதானமாகப் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்வதை முற்றாகத் தவிர்த்து, முழு வெளிப்படைத் தன்மையோடு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.

18. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு, கச்சத்தீவை மீட்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

19. கனிமவளங்களைப் பாதுகாப்போம் என்று வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் கனிமவளங்களையெல்லாம் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சிக்கு வந்தவர்கள் போல, ஆளுங்கட்சியினரே அதிகாரிகளின் துணையோடு மலைகளை உடைத்து, ஆறுகளில் மணலை அள்ளி, சட்டவிரோதமாக இயற்கை வளங்களை சூறையாடி, வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்று, கொள்ளையடிக்கிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய – தமிழ் மக்களின் சொத்துகளாகும். எனவே மணல், சரளை மண், கல், தாதுமண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளிட்ட கனிமவளங்களை கொள்ளையடிக்கும் சமூகவிரோதிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தின் கனிமவளங்களைப் பாதுகாத்திடும் நோக்கில் புதிய தமிழகம் தலைமையில் போராட்டங்களை முன்னெடுக்க இம்மாநாடு முடிவு செய்கிறது.

20. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோவில்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பலராலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, கண்டறிந்து, அந்நிலங்களையெல்லாம் மீட்குமாறு மாநில அரசை புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.

21. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை அதிகப்படுத்தியும், பெண்களுக்கென்று தனி பார்களைத் திறந்தும், 24 மணி நேரமும் திமுகவினர் மூலம் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து சமூக சீரழிவை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்திட புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் மது, புகை, கஞ்சா, அபின் மற்றும் போதை மாத்திரைகள் போன்ற அனைத்து போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் பூரண மது விலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுத்திட புதிய தமிழகம் கட்சி முடிவெடுக்கிறது.

22. மாஞ்சோலை, வால்பாறை, ஹைவேவிஸ் உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் பல்லாண்டுகாலமாக பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கே தேயிலைத் தோட்ட நிலங்களைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

23. மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்டவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும் தமிழகத்தில் இது குறித்த ஆட்சேபனைகள் எழுந்து வருவது அரசியல் ரீதியான காரணங்களாகும். 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெறும் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திலும் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனவும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக எழும் சிக்கல்களைத் தீர்க்க, அனைத்து பட்டியல்களையும் நீக்கிவிட்டு, ஒரே அட்டவணைப்படுத்தி 100% இட ஒதுக்கீட்டை அந்தந்த சமுதாயத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை முடிவாகும்.

24. பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு என்பது அரசியல் கோரிக்கை அல்ல!! மாறாக இம்மண்ணின் மூத்த வேளாண்குடி மக்களின் ”உரிமைக் குரல்” ஆகும். புதிய தமிழகம் கட்சியின் பலகட்டப் போராட்டங்களின் விளைவாக, தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதை முழுமையான வெற்றியாகக் கருத முடியாது. பட்டியல் வெளியேற்றத்துடனான தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றமே நம்முடைய முழுமையான வெற்றியாகும். இவ்விரண்டு கோரிக்கைகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை. தொல்காப்பியத்திலே மருத நில மக்களாக பெருமைப்படுத்தப்பட்ட வேளாண்மையை உயிர்த்தொழிலாக செய்துவரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர், தலித், தாழ்த்தப்பட்டவன், அரிசன், தீண்டத்தகாதவன் என அடையாளப்படுத்துவதால் எம்மின மக்கள் உளவியல் ரீதியாக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இது இம் மக்களின் வரலாற்றுக்கு எதிராக இவர்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக இச்சமூகம் கருதுகிறது. எனவே தான் 1924 ஆம் ஆண்டு BC பட்டியலில் இருந்த தேவேந்திர திருக்குலப் பள்ளர்களை SC பட்டியலில் சேர்க்க அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தபோது தேவேந்திர குல வேளாள சமூகத்தை சார்ந்த சீனிவாசகம் பிள்ளை அப்போதைய அரசுக்கு தேவேந்திர குல வேளாள சமூகத்தை பட்டியலில் சேர்ப்பது, இச்சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாகும் என எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதினார். பண்டைய காலம் முதல் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் கொண்ட, உழவுத்தொழிலை குலத்தொழிலாக செய்துவரும் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினத்திலிருந்து விடுவித்து, தமிழ்நாட்டில் தனிப் பட்டியிலிலும் மத்திய அரசாங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் சேர்த்து மக்கள்தொகைக்கேற்ப 10% இடஒதுக்கீடு வழங்கிட மத்திய மாநில அரசுகளை இந்த மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

25. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய சித்தாந்தங்களுக்கு மாற்றாக வந்த, திராவிட சித்தாந்தம் காலாவதியாகி போய்விட்டது. அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் திராவிட சித்தாந்தம் வெறும் வெற்று கோஷம் ஆகிவிட்டது. ’REMEDY IS WORSE THAN THE DISEASE’ என்பதற்கு இணங்க தமிழ்நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் அவையே காரணமுமாகிவிட்டன. தமிழக மக்களை மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபடுத்துவதற்கு மாறாக, என்றோ, எவரெவராலோ, கொண்டுவரப்பட்ட ’இட ஒதுக்கீடு’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு, தமிழ் சமுதாயத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை நிரந்தரமாக்க நயவஞ்சக செயலிலும் ஈடுபடுகிறார்கள். ஒரு பக்கம் தமிழர்களை மொழியாலோ, மதத்தாலோ ஒன்றுபடவிடாமல் தடுத்திடும் அதே வேளையில், ’திராவிடம்’ என்ற முலாம் பூசி ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினத்தின் அடையாளத்தை அழிக்க, ஒரு குடும்பம் முயற்சி செய்கிறது. வாழ்க்கையில் உச்சத்திலிருந்த தமிழ் சமுதாயம் பொங்கலுக்கும், தீபாவளிக்கும், ஒரு துண்டு கரும்புக்கும், ஒரு கண்டு வேட்டிக்கும், இரண்டு முழம் சேலைக்கும், ஒரு படி உப்புக்கும் கையேந்தும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 100 நாள் வேலை கிடைத்தால் மட்டுமே வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலையிலேயே பெரும்பான்மையான தமிழ் மக்கள் உள்ளனர். தேர்தல் நேரங்களில் தாங்கள் கொள்ளை அடித்து வைத்திருந்த கோடான கோடி பணத்தை, ரூபாய் 200, 500 என்று வழங்கி பெரிய கனவான்களாக காட்டிக் கொள்வது மட்டுமின்றி, தங்களின் ஊழலுக்கு இரையாகும் குடும்ப ஊடகங்களின் துணையோடும்; மதுவாலும்; பொய்யான வாக்குறுதிகளாலும் தமிழக மக்களை மதிமயக்கி, வாக்குகளை அள்ளி பெற்று, ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த நூற்பாலைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனால், நாள்தோறும் சாராய ஆலை மட்டும் செழித்து வளர்கிறது. மதுவை ஒழிக்க சசிபெருமாள் போன்றவர்கள் செய்த தியாகங்களை எல்லாம் ஓட்டாக்கி, ஆட்சிக்கு வந்தபின், மதுவிலக்கைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டார்கள். இப்பொழுது பால் வண்டியைக் காட்டிலும், 108 ஆம்புலன்ஸ் வண்டியைக் காட்டிலும், தீயணைப்பு வண்டியைக் காட்டிலும் டாஸ்மாக் வண்டிகளுக்கு முன்னுரிமை எனும் அளவிற்கு திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் ஆட்சியில் மது அரக்கன் கோலோச்சுகிறான். ஆற்று மணல், சரளை மண், கல் மற்றும் கனிம வள கொள்ளைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராடிய போராட்டங்களை எல்லாம் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கனிமவள கொள்ளையைத் தங்களது குடும்ப சொத்தாக்கிவிட்டார்கள். ரியல் எஸ்டேட்களிலும் ’ஜி-ஸ்கொயர் நிறுவனம்’ தவிர வேறு எவரும் கால்பதிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். அதேபோன்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கிடுக்குபிடியில் திரைத்துறையும் சிக்கி இருக்கிறது. இலட்சோபலட்சம் பேர் உயிர்த்தியாகம் செய்து, அந்தமான் செல்லுலர் சிறையில் செக்கிழுத்து, அல்லல்பட்டு போராடிப் பெற்ற சுதந்திரமும், ஜனநாயகமும் ஒரு குடும்ப ஆட்சிக்குள் சுருங்கிப் போய்விட்டது. இனி ’திராவிட ஆட்சி’ என்று சொன்னால் ஒரு குடும்பம் மட்டுமே, ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என்ற ’திராவிட மனு’ உருவாக்கப்படுகிறது. திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் ஆட்சி என்பது, என்றோ ஒழித்துக் கட்டப்பட்ட மன்னராட்சிகளின் அடையாளம். ரஷ்யாவில் சோசியலிசப் புரட்சிக்கு முன்பு, ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்ட ஜா மன்னரின் எச்சமாகவே திராவிட ஆட்சியைக் கருத வேண்டும். திராவிட சித்தாந்தமே தமிழ் மக்களின் எதிரி; திராவிடத்தால் தான் வீழ்ந்தோம்; திராவிடத்தை வீழ்த்தி தமிழக மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, ஜனநாயகத்தின் மாண்புகளை – பார் போற்றும் தமிழர் அடையாளத்தை மீட்டெடுக்க, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட, உண்மையான சமூக நிதி, சமநீதி, சமயநீதியை அமலாக்க செல்லரித்துப்போன திராவிட சித்தாந்தத்தின் பொய்களைத் தோலுரித்து, தமிழக மக்களுக்கு வழி காட்டவும், அவர்களை வழிநடத்தவும், அடிப்படை மாற்றத்தை உருவாக்கவும், அனுபவத்தாலும், அறிவியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் உறுதியான கொள்கை – இலட்சியம் கொண்ட புதிய தமிழகம் கட்சியால் மட்டுமே முடியும்.