

![]()
தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் நிலவி வந்த இரட்டை டம்ளர் முறை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மனித உரிமைக்கு எதிராகவும், தீண்டாமையின் உச்சபட்ச வடிவமாகவும் தலைவிரித்தாடியது, சமூக நீதி காவலராக தன்னைத்தானே காட்டிக் கொண்ட கட்சிகளும், அதன் தலைவர்களும் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது இதுபோன்ற தீண்டாமை கொடுமைக்கு எதிராக எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை.
2001 ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக கிராமங்களிலிருந்த இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் சட்டமன்றத்தில் முதல் குரல் எழுப்பினார்கள். இந்நிலையில் டாக்டர் அய்யா அவர்களின் போர்குணமான போராட்டத்தாலும், சட்டமன்றத்தில் வலுவான குரல் எழுப்பியதனாலும் ஆளும் அரசு வழக்கம்போல அந்த இரட்டை குவளை முறையை மூடி மறைக்க முயற்சித்த போது, தலைவர் அவர்களின் தொடர் போராட்டத்தின் வாயிலாக 22,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது என தலைவர் அவர்கள் சட்டமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக் காட்டிய போது இல்லை! இல்லை!! வெறும் 2000 கிராமங்களில் மட்டும் இரட்டை டம்ளர் முறை நிலவுவதாக அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களே ஒப்புக்கொண்டார். இரட்டை டம்ளர் முறையை நீங்களே ஒழிக்கிறீர்களா? அல்லது புதிய தமிழகம் கட்சியினர்கள் அந்த கடைகளில் புகுந்து ஒழிக்க வேண்டுமா? என்று போர்க்குரலை எழுப்பிய போது ஆளும் அரசு பணிந்து இரட்டை டம்ளர் முறையை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் நிலவி வந்த இரட்டை டம்ளர் முறைகள் புதிய தமிழகம் கட்சி போராட்டத்தின் எதிரொலியாகவே ஒழிக்கப்பட்டது; உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட்டது.
