

![]()
1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தைச் சார்ந்த அரசு பேருந்து ஓட்டுநர், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டது தொடர்ந்து, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி, 1995 ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை குறிப்பாக அச்சமூக பெண்களைக் கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன.
அன்றைய அரசும், காவல்துறையும் தேவேந்திர மக்களைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மாறாக, ஆளும் அரசின் ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றன. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் – தேவேந்திர குல வேளாளர் இடையே மோதல்கள் உருவாகின.
நெல்லை ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண், பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது; அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது; அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவற்றை கூட விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்துச் சென்றன. மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்வா?சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
1995 ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் மீண்டும் தென்தமிழகத்தில் அரசு பயங்கரவாதமாக விஸ்வரூபம் எடுத்தது. தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு இரையாகின. குடிமக்களின் உயிர் – உடைமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே காவல்துறையையும், தனியார் நிறுவன செக்யூரிட்டி(அடியாள்) குண்டர்களையும் கொண்டு கொடியங்குளத்தில் தேவேந்திரகுல மக்களின் சொத்து, சுகங்களைச் சூறையாடியது.
தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் நிர்கதியானார்கள். வாக்குகளைக் காலந்தோறும் பெற்று வளம் பெற்ற கட்சிகள் அம்மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக்குக் கூட அக்கிராமங்களுக்குச் செல்லவில்லை.
கொடியங்குளம் மக்களின் அவலக்குரல் அந்தக் கிராமத்திற்கு உள்ளேயே ஒருவர் வீட்டைத் தாண்டி, இன்னொருவர் வீட்டிற்குக் கூடச் செல்ல முடியாத அவலநிலை; அனைத்து வீடுகளின் உணவுப் பொருட்களும், பண்ட பாத்திரங்களும் அடித்துச் சீரழிக்கப்பட்டன; குடிநீருக்காகப் பயன்படுத்தப்பட்ட அக்கிராமத்தின் ஒரே ஒரு கிணற்றிலும் பெட்ரோல் ஊற்றப்பட்டது; பொது போக்குவரத்து இல்லை; உள்ளூர் தபால் நிலையமும் தாக்குதலிலிருந்து தப்பிக்கவில்லை; தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
தேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்துக் கொண்டார்கள். 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இது போன்ற அநியாயங்களும், அட்டூழியங்களும் நடந்தும் எந்தச் செய்தித்தாளிலும் வெளிவரவில்லை.
கொடியங்குளம் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அரை மணி நேரத்தில், கோவையிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஒரு தொலைக்காட்சி குழுவுடன் 400 கிலோமீட்டர் தூரம் கடந்து, மறுநாள்(செப்டம்பர்-1) கொடியங்குளத்தில் தலைவர் அவர்கள் கால் பதித்தார்கள்; மக்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி எழுச்சியை ஏற்படுத்தினார்கள்.
இக்கொடுமைக்கு நீதி வேண்டி செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைவர் அவர்கள் வழக்கு தொடர்ந்ததன் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகள் பெறப்பட்டது; நீதியை நிலைநாட்டினார்கள். அன்று தலைவர் அவர்கள் தொடர்ந்த வழக்குதான் தமிழகத்தின் முதல் பொதுநல வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
1995 அக்டோபர் 6 ஆம் தேதி புதிய தமிழகம்(தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு) சார்பாக கொடியங்குளம் கொடுமைக்கு நீதி கேட்டும், காவல்துறை மற்றும் அன்றைய அரசின் மீது சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மன்றோ சிலையிலிருந்து சீரணி அரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் திரிசூலம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் மெரினா கடற்கரையில் அன்றைய ஜெயலலிதா அரசின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி உயிர்நீத்தார்கள்.
அக்டோபர் 6-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட உண்ணாவிரதம்; இரண்டு மணி நேர பந்த் மகத்தான வெற்றியைப் பெற்றது. அதன் பின்பு டிசம்பர் 6-ல் டெல்லியில் பேரணியும், போராட்டமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து 1996 ஜனவரி 6-ல் ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 6 தமிழகமெங்கும் உண்ணாவிரதம், மார்ச் 6 மதுரையில் மாநாடு என்று ஒவ்வொரு நாளும் தேவேந்திரகுல வேளாளர்களின் எழுச்சியும் ஒற்றுமையும் வலுவடைந்து கொண்டே சென்றது.
1996 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கொடியங்குளம் தாக்குதலுக்கு பரிகாரம் தேட தெய்வச்செயல்புரத்திலிருந்து காசிலிங்காபுரம், ஆலந்தா, சவலாப்பேரி வழியாகத் தான் அன்றைய முதல்வர் சுற்றுப்பயணம் திட்டமிட்டிருந்தார். அன்றைய முதல்வருக்கும், ஆட்சிக்கும் எதிரான சூழலைத் தவிர்த்திட அமைச்சர் பெருமக்களும் பெட்டிகளோடு கொடியங்குளம் வந்தார்கள். வந்த வேகத்தில் ’தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று அமைச்சர்கள் ஓடினார்கள். அந்த கிராமங்கள் வழியாக முதலமைச்சர் வந்தார்; அன்றைய முதல்வரை ஒரு பிரபல திரைப்பட முன்னாள் நட்சத்திரம் என்று கூட தூரத்தில் எட்டி நின்று பார்க்கக் கூட ஒருவரும் வெளியில் வந்து பார்க்க முன்வரவில்லை; அன்று தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான வித்து ஊன்றப்பட்டது; அதை விதைத்தவர்கள் கொடியங்குளம் – அதன் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர்கள்.
தலைவர் அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களைத் தட்டி எழுப்பினார்கள்; வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து 1996 ஆம் ஆண்டு வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள்; அரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.
அதே தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்கள்.
1995 கொடியங்குளம் தாக்குதல் வெறும் காவல் துறை அத்துமீறல், அரச பயங்கர மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி இன ரீதியாக ஒரு பிரிவினர் மீது தொடுத்த ‘அராஜகப் போர்’ என்பதை தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் இந்தியத் தேசம் முழுவதும் எட்டுத் திசைக்கும் உரக்கப் பேசி; அதை உலகிற்குப் படம்பிடித்துக் காட்டியதால் தான் அன்று கொடியங்குளமும் தப்பியது; தேவேந்திர குலமும் தப்பியது; அதனால் இன்று தனது அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
