6 வது மாநில மாநாடு – உலகத் தமிழர் பாதுகாப்பு சிறப்பு மாநாடு

இடம்:கோவை - வ.உ.சி மைதானம்
தேதி:6, 7 பிப்ரவரி 2010

’உலகத் தமிழ் பாதுகாப்பு சிறப்பு மாநாடாக’ நடைபெற்றது. மாநாட்டில் சர்வதேச அளவில் தமிழ் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலேசியாவின் ’பினாங்கு’ மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களும் கலந்து கொண்டார்கள்

Loading

ஈழத் தமிழருக்கோர் சுதந்திர தேசம்!!

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு

இந்திய நாட்டின் -தாய் தமிழகத்தின் எல்லையிலிருந்து 26 கி.மீ. அப்பாலுள்ள ஈழத்தில் தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் அறுபது ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் அவர்களின் போராட்டம் நிறைவு பெறவில்லை. தமிழர்களின் தன்னுரிமைக்காக போராட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் தமிழர்கள் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற போரில் ஓரிரு நாட்களில் மட்டும் முப்பதாயிரம் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசின் ராணுவம் 21ஆம் நூற்றாண்டில் உலகில் வேறு எந்த தேசத்திலும் நடைபெறாத மனித உரிமை மீறல்களை ”தமிழ் மக்கள் மீது” நிறைவேற்றியது!!

தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து கொடுமைகளும் சர்வதேச விதி முறைகேடுகளுக்கு முரணானவை. இக்கொடுமைகளை மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் கண்டிப்பதோடு மட்டுமின்றி இலங்கை அரசின் பொருளாதார தடை விதிக்கவும் ஆலோசித்து வருகின்றன. தமிழர்களுக்கான போரை ஈவு இரக்கமின்றி நடத்திய குற்றத்திற்காக ராணுவ தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசு விசாரிக்க தொடங்கியுள்ளது. ஐநாவும் தன் பங்கிற்கு கண்டன குரல் எழுப்பியுள்ளது.

எனினும் ”ஜீவகாருண்யத்தின் பிதாமகன்” என்று பறைசாற்றிக் கொள்ளும்” இந்திய மாபாதக” அரசுக்கும் மட்டும் தமிழ் மக்களுக்கு எதிரான எக்கொடுமைகளும் கண்ணுக்கு புலப்படவில்லை.

தமிழ் மக்களின் உணர்வுகளால் உயர்வு பெற்ற ”தாய் தமிழக அரசியல் தலைகளும்” தங்களின் அடுத்த தலைமுறைகளின் பதவியில் அமர்த்துவதை பற்றியே பெரும் அக்கறை கொள்கிறார்கள். ஓட்டுக்களே!! அவர்களின் உயிர் மூச்சு.

ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசாலும், தமிழக ஆட்சியாளர்களாலும், ஈழத் தமிழ் மக்கள் கையில் கழுவப்பட்டு விட்டனர்.

தாய் தமிழகத்தில் 6 கோடி பேர் உலகெங்கும் ஒட்டுமொத்தத்தில் 10 கோடி தமிழ் மக்களின் இருந்தும் இலங்கையில் 60 லட்சம் தமிழ் மக்களை காப்பாற்ற முடியவில்லை. பொங்கி வந்த தமிழ் உணர்வுகளை கடந்த பொங்கலுக்கு முன்பாகவே அரசியலுக்கு அறுவடை செய்து கொண்டார்கள்.

இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஏமாளிகளாக பாதுகாப்பாற்ற நிலையில் பரிதவிக்கின்றன.

முள் வேலிக்குள் 3 லட்சம் தமிழர்கள் ஆறு மாதமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலை  கண்டறியச் சென்ற மத்திய, மாநில நாடாளுமன்ற குழு ராஜபக்சேவின்  பங்காளிகளைப்போல் பரிந்து தினம் தினம் அறிக்கை கொடுக்கிறார்கள்.

புலிகளை விட்டு விலகி வாருங்கள்.!

சுதந்திரமான வாழ்க்கை தருகிறோம் என்ற

ராஜபக்சேவின் வாக்குறுதி என்னாயிற்று?

போராளிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்,

தமிழர்களுக்கான ’தன்னுரிமை’ பற்றி

முடிவெடுப்போம் என்று அறிவித்த அறிவிப்புகள் என்னவாயிற்று?

120 கோடி கொண்ட சீனாவை பகைத்தும்,

 தாய்லா மாவுக்கு அடைக்கலம்!

 அருணாச்சலப் பிரதேசத்தை பாதுகாக்க,

 மறைமுகமாக திபெத் தன்னுரிமை ஆதரவு?

ஆனால், தமிழர்களின் தன்னுரிமையை

இந்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதேன்?

அதுமட்டுமல்ல – மலேசியாவில், சிங்கப்பூரில்,

இந்தோனேசியாவில் உலகெங்கும் என்றுமில்லாத அளவிற்கு,

தமிழர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

 

தாய் தமிழகத்தைச் சுற்றி – முல்லை, பெரியாறு, காவிரி, பாலாறு என்ற

நதிகளின் பிரச்சனையில் தமிழருக்கு எதிரான பகைமுற்றுகிறது.

மீனவர்கள் தினம் தினம் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

 எனினும் – எப்பிரச்சனைகளுக்கும் முடிவு காணாமல்,

உலக தமிழின தலைவராக

இதற்குப் பின்பும் ஒரு சிலரால் உலா வர முடிகிறது.

 தமிழினம் கண்ணதிரே செந்நீரை வடிக்கும் போது,

செம்மொழி மாநாடு நடத்த முடிகிறது

இப்பொழுது தேவை !!

ஈழ தமிழர்கள் தன்னுரிமை பெற வேண்டும்!

உலக தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும்!!

உள்ளும் புறமும், கடல் கடந்தும்

வாழும் தமிழர்களின் சுயமரியாதையும்,

சுய உரிமையும் காக்கப்பட வேண்டும்.!

விடை காண வாருங்கள்!!

உலகத் தமிழர்களே.! அணி திரண்டு வாருங்கள்!!

உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு

2010 பிப்ரவரி  6 & 7

கோயம்புத்தூர்  – வ.உ.சி மைதானம்

 

உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு – முதல்நாள் உரை

தமிழ் மக்களது மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகியனவற்றை வலியுறுத்தி ஒரு மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு, அந்த முயற்சியின் பயனாக, இன்று இடையூறு, தடைக்கற்கள் அவற்றையெல்லாம் தாண்டி, இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பங்குபெற்று கொண்டிருக்க கூடிய தமிழ் ஆர்வலர்களே, புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களே, இந்த மாநாட்டிற்கு 4000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வருகை தந்துள்ள மலேசியா நாட்டினுடைய பிரதிநிதிகளே, தலைமை தாங்கி வருகை புரிந்து இருக்கின்ற இந்த மாநாட்டினுடைய சிறப்பு அழைப்பாளர் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் ப. இராமசாமி அவர்களே, அண்ணன் புலமைப்பித்தன் அவர்களே, இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதற்கு ஊக்கமளித்த திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே, கவிதாசரண் அவர்களே, டி.எஸ்.எஸ்.மணி அவர்களே, மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், ரவி, சிவநேசன் மற்றும் நாகநாதன் அவர்களே, கடந்த 28 ஆம் தேதி அன்று ஐந்து மாநிலங்களுக்கும் சென்று தமிழ் அறிஞர்களைச் சந்திக்க என்னோடு வந்த அன்புச் சகோதரர் கண்ணா அவர்களே, தோழர் குருமூர்த்தி அவர்களே என்னுடைய அழைப்பை ஏற்று தங்கள் சொந்த பகுதியில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்வதைப் போல வருகை புரிந்துள்ள மலேசியாவினுடைய தாய்மார்கள், ஜொகார் மாநில சகோதரி சிவகாமி அவர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.!

தமிழகத்திலே வழக்கமாக நடைபெறும் மாநாடு என்றால் ஆயிரக்கணக்கான பேர், லட்சக்கணக்கான பேர் கூடுவார்கள். அந்த மாநாட்டிலே என்ன தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளன? எதற்காக கூடியது? என்ற இலக்கே இல்லாமால் அதற்கு பிறகு அந்த மாநாடு கலைந்து போய்விடும்; இந்த மாநாட்டை பொறுத்தமட்டிலும் பல மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டாலும் கூட நீங்கள் அறிவீர்கள். பிப்ரவரி ஆறாம் தேதி மாநாடு என்று சொன்னால்மூ ன்றாம் ஆம் தேதி மாலை ஆறு மணிக்குதான் நீதிமன்ற உத்தரவுபடி அனுமதி கிடைக்கிறது. எண்ணி 48 மணிநேரத்திலே இவ்வளவு பெரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் இருந்தாலும் கூட இந்த மாநாட்டில் எப்படி பேச வேண்டும், யார் எல்லாம் பேச கூடாது என்ற நிர்பந்தங்கள் இருந்தாலும் கூட உலக அளவில் முதன்முதலாக தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்காக நடைபெறக்கூடிய மாநாடு; இந்த மாநாடு எவ்வித்திலும் தடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக என்னுடைய அரசியல் வாழ்வில் இது நாள்வரையிலும் ஏற்றுகொள்ளாத சில நிபந்தனைகளை கூட ஏற்று கொண்டு இந்த மாநாட்டை நடத்துகிறேன் என்பதை சொல்லி கொள்ள கடமைபட்டு இருக்கின்றேன். அதையெல்லாம் மீண்டும் நாளை மாலை விரிவாக பேசப்படும்.

இந்த மாநாட்டை நாங்கள் முதன்முதலாக எடுத்தவுடனே, இந்த உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு ஒன்றை அறிவித்து விடவில்லை. ஏறக்குறைய 6 மாத காலத்திற்கு முன்பு, கடந்த மே மாதம் 17, 18 நிகழ்ச்சிகளுக்கு பிறகு, உலக அளவில் தமிழர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஆதங்கம் ஏற்பட்டது. தங்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக, பாதுகாப்புக்காக தாங்கள் பிறந்த மண்ணிலே; தங்கள் மூதாதையர் பிறந்த மண்ணிலே பாதுகாப்போடு வாழவேண்டும்; மரியாதையோடு வாழ வேண்டும், மானத்தோடு வாழவேண்டும் என்பற்காக 50 ஆண்டுகாலம் அங்கே ஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்தினார்கள்; அதற்கு பிறகு, ஒரு 30 ஆண்டுகாலம் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார்கள்; ஆனால், அந்த நியாயமான போராட்டத்தை ஏற்கனவே நண்பர் எல்லாம் சுட்டி காட்டியதை போல பல சக்திகளின் துணையோடு நசுக்கினார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஈழத்திலிருந்து 26 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய தமிழகத்திலே ஆறு கோடிக்கு மேல் தமிழ் மக்கள் வாழந்துகொண்டிருக்கிறார்கள், தமிழருடைய பெயராலே ஒரு ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியா என்ற மிகப்பெரிய ஒரு துணைக்கண்டம் நம்முடைய அருகாமையில் இருக்கிறது. நம்மை காப்பதற்கு, இந்தியாவினுடைய கரம் நீளும், தமிழகத்திலிருந்து 12 கோடி கரங்கள் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கையோடு அந்த தமிழ் மக்கள் இருந்தார்கள்; ஆனால், அவர்கள் காக்கப்படவில்லை. மாறாக ஒரு சிலருடைய பதவி மோகத்துக்காக ஒரு லட்சத்திற்கு மேலான தமிழ் மக்கள் பலி கொடுக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வுக்குப் பிறகு, தமிழகத்தில் தமிழ் மக்கள் எடுத்து கொண்டார்களோ இல்லையோ ஆனால் புலம் பெயர்ந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் இந்த கொடுகைக்கு முடிவுகட்ட ஒவ்வொருவரும் உறுதி எடுத்து கொண்டார்கள். நாங்கள் டிசம்பர் 28 ம்தேதி அன்று மலேசியா சென்று, அன்று மாலையே ஈபோ மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கே ஒரு புலவர், அவர் துணைவியார் ஒரு எழுத்தாளர். அவருடைய இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ”நீங்கள் எதற்கு எங்களையெல்லாம் தமிழ்நாட்டிற்கு “வா” என்று அழைக்கிறீர்கள்; நாங்கள் எப்படி தமிழ்நாட்டில் அந்த மண்ணில் கால் வைப்பது; நாங்கள் அந்த பாவப்பட்ட மண்ணில் கால் வைக்க விரும்பவில்லை; யாராவது ஒரு தமிழ் உணர்வு கொண்டவர் தமிழகத்தில் பதவியேற்றால் மட்டும் தமிழகத்திற்கு வருவதாக இருக்கிறோம்” என்று என்னிடத்திலே சண்டை போட்டார்கள்; நீங்களும் செம்மொழி மாநாட்டிற்கு ஆதரவு கேட்டு தானே வந்திருப்பீர்கள் எனக் கேட்டர்கள். அவர்கள் இந்த பாதுகாப்பு மாநாட்டையும் செம்மொழி மாநாட்டையும் வித்தியாசப்படுத்த முடியாமல் கேட்டார்கள். கோலாலம்பூரிலே இந்த மாநாட்டினுடைய நோக்கம் என்ன என்பதை விளக்கி பேசினேன். நான் தமிழக அரசினுடைய பிரதிநிதியாக இங்கு வரவில்லை: உலகம் எங்கும் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய பத்து கோடி தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன்.

நீங்கள் பார்க்ககூடிய தமிழகத்திற்கும், இருக்க கூடிய தமிழகத்திற்கும் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்களின் எண்ணப்படிதான் அனைத்து தமிழ் மக்களும் இருக்கிறார்கள் என எண்ணி விடாதீர்கள். இங்கே நீருக்குள்ளே மீன் அழுதால் யாருக்கு வெளியே தெரியும் என்று சொல்லுவார்கள் என்பது போல தமிழகத்திலேயும் உங்களை போன்றே உணர்வு படைத்த லட்சகணக்கான, கோடிக்கனக்கான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைத் தட்டி எழுப்புவதற்கு, அவர்களை ஒருங்கிணைப்பதற்கு சரியான முகாந்திரம் உருவாக்கப்படவில்லை. நான் அதற்குண்டான ஒரு விதை தூவுவதற்குதான் நான் இங்கு வந்திருக்கிறேன். எனவே நீங்கள் அவசியம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள் அன்று அழைப்பு கொடுத்தேன்.

புதிய தமிழகம் கட்சி இப்பொழுது பெரிய அரசியல் சக்தியோடு கூட்டணியில் இல்லை. இப்பொழுது தமிழகத்தில் இல்லையென்று சொன்னாலும் கூட அதிகாரத்தில் தூய தமிழ் உணர்வோடு, தமிழ் மக்களது வாழ்வுரிமை, மண் உரிமை, மனித உரிமையைக் காப்பாற்றுவதற்கு கோவையில் எனது தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு அமையும் என்ற நம்பிக்கையோடு இங்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள் இதுதான் இந்த மாநாட்டின் வெற்றி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதுவும் பேராசிரியர் டாக்டர். ராமசாமி அவர்களோடு அதிக பட்சம் முப்பது நிமிடம்தான் பேசியிருப்போம். அதற்கு பிறகு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சந்திப்பிலே சொன்னார் ”கருணாநிதி அவர்கள் கூட்டியுள்ள செம்மொழி மாநாட்டிற்கு வரமாட்டேன். நான் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர்ப் பாதுகாப்பு மாநாட்டிற்குதான் வருவேன்” என தெளிவுப்படுத்தினார்.

எனவே, இந்த மாநாட்டினுடைய நோக்கம் எங்கிருந்து துவங்கியது என்று சொன்னால் மூன்றுலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் முடக்கி வைக்கப்பட்ட எங்கிருந்தும் கருத்து வராதபோது, வாய்மூடிக்கொண்டிருந்தபோது அந்த சம்பவத்தைப்பற்றி உலகாளவிலே தமிழகத்திலே அனைவரும் மவுனத்தை உடைத்தெறிந்தது முதல்முறையாக உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினுடைய இலச்சினையாக அந்த முள்வேலி முகாம்களை வரைந்தது, தான் இந்த மாநாட்டினுடைய தோற்றுவாய் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்கு பிறகு உலகத் தமிழர் பாதுகாப்பு மாநட்டிற்கு தேதி அறிவித்தோம், குழு அறிவித்தோம், இதிலே பல பேர் பல நண்பர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். முதலில் 10 பேர், அடுத்து 20 பேர் என கூடினார்கள் அதன் பின்பு அரசிடத்திலிருந்து எதிர்ப்பு வரும் என தெரிந்தவுடன் ஒதுங்கினார்கள். என்னை பொறுத்தமட்டிலும் நான் எப்பொழுதுமே ஒரு அடி எடுத்து வைத்து விட்டால் அதற்கு பிறகு பின் வாங்குவது கிடையாது. தினமும் மலேசியாவிலிருந்து, சிங்கப்பூரில் இருந்தும் மாநாடு நடக்குமா? நடக்காதா? என்று கேட்டார்கள். நான் மலேசியாவிலிருந்து, ஜனவரி மாதம் 6 ந் தேதி வந்தேன், அதுமுதல் ஏறக்குறைய ஒரு மாத காலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் படிகட்டுகளில் நீதிகேட்டு நெடிய போராட்டத்திற்கு பிறகு இந்தமாநாட்டிற்கு அனுமதி வாங்கியுளேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த மாநாட்டின் நோக்கத்தைப்பற்றி நான் இப்பொழுது அல்ல ஐந்து மாதங்களுக்கு முன்பாக துண்டு பிரசுரம் வெளியிட்டோம்.

இங்கே பல தமிழ் அறிஞர்கள்,ஆர்வலர்கள் இருக்கிறீர்கள். இந்த துண்டு பிரசுரத்தில் எந்த இடத்திலேயே அண்டை மாநிலங்களோடு உறவை கெடுக்கக்கூடியது, அண்டை நாட்டோடு உறவை கெடுக்கக் கூடியது, மத்திய மாநில அரசுகளோடு உறவை கெடுக்கக் கூடியது, எங்கே தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடியது உள்ளது என்பதை மட்டும் எண்ணி பாருங்கள். அதைதான் இன்றைய நிகழ்ச்சியிலே சொல்லி கொள்ள விரும்புகிறேன். இது குறித்து நாளை விரிவாக பேசுகிறேன். நன்றி வணக்கம்.

உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு – தலைவரின் நிறைவுரை

ஆறு கண்டங்களில் உலகெங்கும் பரவிக் கிடக்கக் கூடிய பத்துகோடி தமிழ் மக்களுக்கு வாழ்வுரிமை, மண்ணுரிமை, மனித உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்குண்டான பாதுகாப்பை நிலைநிறுத்திட வேண்டுமென்று உலகத் தமிழ் மக்களது வரலாற்றில் முதல்முறையாக, இந்த மகத்தான கோவை மாநகரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று, இன்று நிறைவாக என்னுடைய மனம் மட்டுமல்ல; மலேசியாவிலிருந்து பேராசிரியர். டாக்டர். ராமாசாமி அவர்கள் தலைமையில் வந்து இருக்கக்கூடிய பேராளர்கள் அனைவரது மனமும் நிறைவாக, இந்த அரங்கம் நிறைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள எனது அன்புள்ளம் கொண்ட புதிய தமிழகம் கட்சியினுடைய அன்பு தழுவிய சகோதரர்களே! சகோதரிகளே! மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களே! தாய்மார்களே! இந்த மகத்தான உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு சிறப்புரையாற்றவும், மாநாட்டைத் துவக்கி வைக்கவும், ஏறக்குறைய நான்காயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலே இருந்து வருகைபுரிந்து நேற்று காலையிலிருந்து இன்றுவரையிலும் இந்த மேடையிலேயே அமர்ந்து, இந்த மாநாட்டிற்கு சிறப்பு சேர்த்திருக்கின்ற மலேசியா நாட்டின் பினாங்கு மாநிலத்தினுடைய துணை முதல்வர் அன்புக்கு இனிய, நெஞ்சத்துக்கு இனிய பேராசிரியர் டாக்டர் ப.ராமசாமி அவர்களே, அவருடன் வருகைபுரிந்து இருக்கின்ற துணைவியார் அவர்களே, மலேசியாவிலுள்ள ஏறக்குறைய ஆறு மாநிலங்களிலே இருந்தும் அவருடன் வருகைபுரிந்து இருக்கின்ற மலேசியா பேராளர்களே! அன்புள்ளம் கொண்ட மலேசிய தமிழ் சகோதர, சகோதரிகளே! அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் வந்திருக்கின்ற பேராளர்களே! இந்த நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய ஐந்துமாத காலத்திற்கும் மேலாக, எனக்கு பல வழிகளிலேயும் உற்றதுணையாக விளங்கி இருக்கக்கூடிய தோழர் மருதுபாண்டியன் அவர்களே! பேராசிரியர் தமிழ்வாணன் அவர்களே! குறிஞ்சி அவர்களே! சந்திரன் அவர்களே! ஞாநி அவர்களே!

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக புதிய தமிழகம் துவங்கிய காலத்திலிருந்து உங்களுக்கு அறிமுகமான, ஆனால் 1975 ஆம் ஆண்டு, முப்பத்தைந்து ஆண்டு காலமாக, மருத்துவக் கல்வி மாணவனாக இருந்த காலத்திலிருந்து ஏற்பட்ட அரசியல்ரீதியான தொடர்புகளிலே இன்றும் உற்றதுணையாக நின்றிருக்கிற தோழர் மணி அவர்களே!

புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர் அவர்களே! தன்னலம் பாராது நம்முடைய இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலே இருந்து நம்முடைய இயக்கத்துக்காக முழுநேரப் பணியை செய்து வரக்கூடிய அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் அவர்களே! ஏனைய நண்பர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் மாலைநேர வணக்கம்.

நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். இந்த மாநாட்டின் முக்கியத்துவம் என்ன? என்பதை கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்றத்துக்கு நான் நடந்து கொண்டதிலிருந்து, இந்த மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதற்கு பிப்ரவரி 3 ஆம் தேதி வரையிலும்பட்ட தொல்லைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள். எனவே, இந்த மாநாட்டின் ஒட்டு மொத்த நோக்கம் அதையெல்லாம் பல்வேறு நண்பர்கள், அவர்கள் வழங்கிய பேச்சுக்களில் இருந்து அனைத்தையும் சேகரித்து, நாளை என்ன செய்யவேண்டும், நாளை மறுநாள் என்ன செய்யவேண்டும் ,அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும், அடுத்த தலைமுறைக்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி உங்கள் மத்தியில் அடுத்த ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பேச இருக்கின்றோம்; எனவே அன்பு கூர்ந்து, நீங்கள் இரண்டுமணி நேரம் நிற்க வேண்டாம்; இங்கே நிற்க கூடியவர்கள் அமைதியாக உட்காரும்படி கேட்டுகொள்கின்றேன்; ஏன் என்று சொன்னால், நேற்று துவக்க காலையிலே ஏன் இங்கே நான் மாநாட்டின் உரையிலே சொல்கின்ற போது கூட “என்ன எல்லோரும் தான் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு தமிழ் மாநாடு நடத்துகிறார்கள்; இந்த மாநாடும் அதைப்போல மாநாடாக இருக்கும்” என்ற சந்தேகம், அன்றும் நான் மலேசியா சென்றிருந்தபோதும் பல்வேறு நண்பர்களால் எழுப்பப்பட்டது. ஏன் இன்னும் கொஞ்ச காலத்திற்கு அந்த சந்தேகம் இருக்கதான் செய்யும்; இத்தோடு கிருஷ்ணசாமி நிறுத்திவிடுவாரா? இதற்குப்பிறகு எப்படி எடுத்து செல்வார் என்று அவர்கள் ஆழ்மனதில் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்யும்; ஆனால், இந்த புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தமட்டிலும் நாங்கள் எளிதாக எதையும் தொடமாட்டோம், ஆனால் தொட்டால் தீர்வு காணாமல் விட மாட்டோம்: இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, மாநாட்டில் என்ன பேசப்பட்டது ;இதில் கலந்துகொண்டவர்கள் என்ன கருத்தை வலியுறுத்தினார்கள் என உன்னிப்போடும், ஆர்வத்தோடும் கவனித்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கு இனிமேல் ஒரு பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: நாங்கள் இந்த மண்ணிலே உங்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று பிரகடனம் செய்கிறோம்.

நான் இன்று மத்திய அரசை அரசை எதிர்த்து, மாநில எதிர்த்து கூடியிருக்க அளவுக்கு மக்கள், இங்கு கூடியவர்கள் வாழ்க்கைத் தரத்தை எடுத்தால் மிக, மிக ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்கள்தான் இங்கு கூடி இருக்கிறார்கள்; யாரும் மிட்டா, மிராசுகள், தொழிலதிபர்கள் அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் கூட கிடையாது. எனவே, இந்த மக்களை பொறுத்தமட்டிலும் அவர்களுக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் பேச தெரியாது. நியாயத்திற்காகப் போராடுவதைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது; ஏமாற்ற தெரியாது; வஞ்சிக்க தெரியாது; நாங்கள் பல்வேறு விதங்களில் ஆய்வு செய்து இந்த 100 கோடி ரூபாய் என்பது இலங்கை அரசுக்கு ரேடர் கருவிகளை வாங்குவதற்காக செய்யக்கூடிய உதவி; எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு இது போன்ற ராணுவ உதவி, தளவாடங்கள் வாங்குவதற்கு உதவிசெய்ய கூடாது என்றும், அதேபோல திருச்சியில் இருக்கக்கூடிய ஆர்டினஸ் பேக்ட்ரியில் இருந்து இலங்கைக்கு எந்த ராணுவத் தளவாடங்களும் விற்கக் கூடாது என எழுதி மனு கொடுத்தோம்.

நான் தமிழ்நாட்டைச் சார்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டேன், ”ஐயா, நாம் இப்பொழுதே ஒரு வலுவான மக்கள் சக்தியைத் திரட்டவில்லை என்று சொன்னால் எதிர்காலத்தில் ஆபத்திலே முடியும் என எச்சரித்தேன். ஆனால் பேசி பேசியே காலம் போக்கினார்களே ஒழிய, ஆணித்தரமான ஒரு முடிவோடு தமிழ் மக்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்திருக்கிறது ஒன்று சேர்ந்து போராடலாம் என்று யாரும் முன்வரவில்லை. டெல்லியில் 2007 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி அன்று நாங்கள் நடத்திய போராட்டத்தோடு, நாங்கள் கொடுத்த அழைப்பை ஏற்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு மிகப் பெரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கொடுத்திருக்குமானால், இன்று இலங்கைத் தமிழர்களுக்கு இதுபோன்ற ஒரு வேதனையான சம்பவம் நிகழ்ந்திருக்காது.

எல்லாம் முடிந்த பிறகு, வெறுமனே எல்லோருமே தேர்தலை மனதில் வைத்து, தமிழ் மக்களிடத்திலே ஓட்டுக்களைக் கேட்பதற்காக, சில பேர் “அம்மா” “ஈழத்தை வாங்கி கொடுப்பார் என்று சொன்னார்கள்; சில பேர் “அப்பா” ஈழத்தை வாங்கிக் கொடுப்பார் என்று சொன்னார்கள்; ஏதோ அப்பாவும், அம்மாவும் பிள்ளைகள் அழுதால் மிட்டாய் வாங்கி கொடுப்பது போல, ஈழத்தை வாங்கிக் கொடுப்பார்கள் என்று சொன்னார்களே தவிர, உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து அந்தக் கருத்தை யாரும் செய்யவில்லை. இப்பொழுது கூட, இந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கும்போது பல்வேறு கட்டளைகளைப் போட்டர்கள்; மருதுபாண்டியர் எல்லா கட்டளைகளையும் ஏற்று கொள்வதா? என்று என்னிடம் கேட்டார்; எல்லா கட்டளைகளையும் ஏற்றுக் கொள்வோம்; வேறு என்னென்ன கட்டளைகளைப் போடவேண்டுமோ போட்டுக்கொள்ளட்டும் என்று சொன்னேன்; என்னென்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் மாநாடு நடக்கவேண்டும்; அவர்கள் என்ன கட்டுபாடுகள் வைத்தார்கள்; விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்பது மிகப்பெரிய கட்டுப்பாடு. (தொண்டர்கள் ஆதரிப்போம், ஆதரிப்போம் என குரல் எழுப்புதல்) அல்ல! அல்ல! விடுதலைப் புலிகளை ஆதரிப்பது அல்ல! இலட்சக்கணக்கான தமிழர்கள் இனிமேல் விடுதலைப் புலிகளாக மாற வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது; மலேசியாவிலிருந்து, ஒவ்வொரு தமிழனும் புலியாக மாறிவிட்டால் எதை தடை செய்வது? ஒவ்வொரு தமிழனும் சிங்கமாக மாறிவிட்டால் யாரைத் தடை செய்வது?அதுதான் வீட்டுக்கு ஒரு தமிழர் வீறு கொண்டு எழுந்து வாரீர் என நாம் போஸ்டரில் போட்டோம். அதனால், இனிமேல் நீங்க ஒன்னும் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை; நாம் அதுவாக மாறிவிடவேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.

ஐயா! 26 கிலோ மீட்டருக்கு அப்பால் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம்; அவர்கள் எல்லாம் சங்கடப்படுவதிலே,கேள்வி கேட்பதிலே, 6 கோடி பேர், ஒரு சதவீதம் பேர் நடந்து சென்றிருந்தால் இலங்கை இருந்து இருக்குமா? ஒரு சதவீதம் பேர் வீட்டுக்கு ஒருவர் மட்டும், தமிழ்நாட்டில் 56,000 கிராமங்கள் இருக்கிறது. எத்தனை கிராமங்கள் 56,000 கிராமங்கள் இருக்கிறது. ஒரு கிராமத்துக்கு ஒரு இளைஞர் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்காக தனது உயிரைப் பணயம் வைத்து, இலங்கை நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தாலே அந்த போர் நின்றிருக்குமா இல்லையா? ஆனால், அதற்குண்டான தயாரிப்புக்களை யாரும் தயார் செய்யவில்லை.

நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, மாநாட்டின் வாயிலாக எச்சரிக்கை செய்ய விரும்புகின்றேன். இனிமேல் தமிழினத்துக்கு இலங்கையிலோ, மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ, இந்தோனேசியாவிலோ உலகின் எந்தப் பகுதியிலோ ஒரு பாதிப்பு வந்தாலும் நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்; வேண்டுமென்று சொன்னால், நீங்கள் இதற்கும் ஒரு தடை கொண்டுவருவீர்கள்; அதைப் பற்றி கவலை இல்லை; ஒரு இனத்தை காப்பாற்றுவதற்கு அரசு முன்வரவில்லை என்றால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இந்த மாநாட்டின் பிரகடனங்கள், இந்த மாநாட்டின் தீர்மானங்களை உற்று நோக்கினால், நாம் யாரிடத்திலும் தயவு கேட்கவில்லை; அதைத்தான் நான் 21வது தீர்மானமாக படித்துக் காட்டினேன்.

இனிமேல்,
எதற்காக அவரை குறைசொல்லி கொண்டிருப்பது?
அவர் காப்பாற்றவில்லை!
அவர் காப்பாற்றவில்லை!
அவர் காப்பாற்றவில்லை!

என்று இது! என்ன பாட்டு! அவர் நான் நிச்சயமாக காப்பாற்ற மாட்டேன் என முடிவு எடுத்தபிறகு, அவருடைய இயலாமையை வெளிக் காட்ட முடிவு செய்துவிட்ட பிறகு, அதிலே போய் அவரிடத்தில் நீங்கள் எதை எதிர்பார்க்கின்றீர்கள்? எதற்காக எதிர்பார்க்கின்றீர்கள்? அவர் காப்பாற்றவில்லை என்று சொன்னாலே, அவர் இது நாள்வரையிலும் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையே தவறானது; அவர் எப்பொழுது எதைக் காப்பாற்றி இருக்கிறார் ஏதாவது ஒன்றை சுட்டிக்காட்ட முடியுமா?

அம்மையார் இந்திராகாந்தி கூப்பிட்டு அழைத்தார்; ஒரு கையெழுத்து போடுங்கள் என்றார். கச்சத்தீவு இலங்கைக்கு என்று சொன்னார்; கையெழுத்து போட்டார இல்லையா? அன்றே தமிழ்நாட்டினுடைய பாதி பறி போய்விட்டது. எதைக் காப்பாற்றி கொடுத்திருக்கிறார்

கச்சத் தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தார்! காவிரியைத் தாரை வார்த்து கொடுத்தார்! முல்லைப் பெரியாரைத் தரைவார்த்து கொடுத்திருக்கிறார்! பாலாற்றைத் தாரைவார்த்து கொடுத்திருக்கிறார்!

அது மட்டுமா? அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே, ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்; 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது; அந்தச் சட்டமன்ற தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் வீடு அற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று செண்ட் வீட்டு மனை, இரண்டரை ஏக்கர் இலவச நிலம், நன்றாக கவனிக்க வேண்டும்; ஒரு குடும்பத்துக்கு இரண்டரை ஏக்கர் இலவச நிலம்; ஆனால், இப்பொழுது நான்கு ஆண்டுகள் முடிந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்; இன்னும் ஒருவருக்குக் கூட இரண்டரை ஏக்கர் நிலம் அவர் வழங்கவில்லை, ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச நிலம் வழங்குவதாக சொன்னார். அதற்குமாறாக என்ன நடந்தது என்று சொன்னால் ஆட்சிக்கு வந்தவுடன் சாத்தான்குளம் அருகே டாட்டாவுக்கு 5000 ஏக்கர் நிலத்தை விலை பேசினார்; அரசாங்கமே அதற்கு புரோக்கராக செயல்பட்டது; நான் தான் முதன்முதலாக குரல் எழுப்பினேன்; தமிழ் மண்ணை டாட்டாவுக்கும், பிர்லாகளுக்கும் ஒருபோதும் விலைபேச அனுமதிக்கமாட்டோம் என்று பேரணி நடத்த போனோம்; எங்களை அடித்துச் சிறையில் போட்டார்கள்; இப்பொழுது பாம்பே கம்பெனிகளுக்கும், கர்நாடகா கம்பெனிகளுக்கும், ஆந்திரா கம்பெனிகளுக்கும், அமெரிக்கா கம்பெனிகளுக்கும், கொரியா கம்பெனிகளுக்கும் 1000 ஏக்கர், 2000 ஏக்கர், 5000 ஏக்கர் என விலை பேசுகிறார்கள்; ஆனால், இந்த மண்ணிலே பிறந்து, மண்ணிலே வளர்ந்த பூர்வகுடிமக்களாக இருக்கின்றவர்களுக்கு மூன்று செண்ட் வீட்டுமனை இன்னும் வழங்கப்படவில்லை.

தன்னை ஆட்சியில் அமர்த்தி கொள்ளவதற்காக ஒரேயொரு குறிக்கோளுக்காக மட்டும் இந்தத் தமிழ் மக்களிடத்தில் இருக்கக்கூடிய செண்டிமெண்ட் பலவீனங்களை மட்டுமே, சொத்தாக்கி, முதலீடாக்கி தொடர்ந்து வாக்குகள் வாங்கி விடலாம் என கருதுகின்றார்கள்; ஆனால், எப்பொழுதும் ஒரு பழமொழி உண்டு; “எல்லாரையும் எல்லா காலமும் ஏமாற்றமுடியாது” என்று. அது வருங்காலகட்டத்திலும் அவருடைய ஏமாற்றம் எடுபாடாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனவே, நம்மைப் பொறுத்தமட்டிலும் மலேசியா பேராளர்கள், தமிழ் ஆர்வலர்களும் இனிமேல் அந்த சுலோகத்தை விட்டு விட வேண்டும்.அவருடைய தவறை சுட்டிக்காட்டுவதற்காக, அவருடைய கடமையை சுட்டிக் காட்டுவதற்காக வேண்டுமென்றால் சொல்லலாம்.

ஆனால், அவர் ஏற்கனவே தனது குடும்பத்தை பாதுக்காக்க முடிவெடுத்த பிறகு, தனது குடும்பத்திலே எத்தனை பேருக்கு அதிகமான பதவிகளைப் பெற்றுதர முடியும் என தெளிவாக இருந்த பிறகு, அவரால் எப்படி தமிழினத்தைப் பாதுகாக்க முடியும்? தமிழினத்தைப் பாதுகாக்க வேண்டுமானல் மத்திய அரசைப் பகைக்க வேண்டும்; மத்திய அரசை பகைத்தால் எந்த நேரமும் ஆட்சி கவிழும்; ஆட்சி கவிழ்ந்தால் லட்சகணக்கான, கோடிக்கணக்காக ரூபாய் சம்பாதித்து வைத்தது எல்லாம் அடுத்த நாள் இன்கம் டேக்ஸ் போகும்; எல்லா சொத்துக்களும் பறிபோய்விடும்; எப்படி அவர் உங்களை காப்பாற்ற முன்வருவார்? எப்படி காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது? அதனால் அந்தப் பாட்டை விட்டுவிட வேண்டும். நம்மை நாம் பாதுகாப்பதற்கு, `இந்தத் தமிழ் மண்ணைப் பாதுகாப்பதற்கு, தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கு, தமிழ் இனத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழ் மண்ணினுடைய நதிநீரை, ஆதாரங்களைப் உலககெல்லாம் வாழக்கூடிய தமிழர்களுக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் குரல் கொடுப்பதற்கு, ஏன் இருபத்தாறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளவர்கள் மட்டும்தான் ஆயுதம் எடுக்க முடியுமோ? நம்மால் அந்த காரியத்தை செய்ய இயலாதா? ஆயுதம் கூட எடுக்க வேண்டாம்; என்னுடைய வேண்டுகோள், இங்கு இருக்கக் கூடிய அனைத்துத் தமிழ் நெஞ்சங்கள்; இங்கு வராதவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது, இனிமேல் உலகத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு வீட்டுக்கொரு புதல்வனை நாட்டுக்கு, தமிழ் நாட்டுக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழ் மொழிக்கு அனுப்பி வையுங்கள்; அவர்கள் தமிழர் படையாக திரளட்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்; எல்லோரும் ஒரு லட்சம் பேர் தமிழர் பாதுகாப்புப் படை என வீதிக்கு வரட்டும்; என்ன செஞ்சிருவாங்க? ஆந்திராவில ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று ஏறக்குறைய மூன்று மாதங்களாக போராட்டம் நடக்கிறது; மத்திய அரசு இருக்கிறது, மாநில அரசு இருக்கிறது என்ன செய்தாங்க? மக்கள் வீதிக்கு வந்த பிறகு, அரசு கைகட்டி நிற்கிறதா இல்லையா? ஆனால், நாம் வீதிக்கு வராத ஒரே காரணத்தினாலே அவர்கள் எப்படி?

குனிய குனிய குட்டுபவர்களுக்கு சந்தோசமாக இருப்பதுபோல! தமிழர்கள் இப்படிதான் அஞ்சி நடப்பார்கள்; இவர்களைக் காவல்துறை மூலமாக, சட்டத்தின் மூலமாக அடக்கி ஒடுக்கி வைத்து விடலாம் என்று கருதுகிறார்கள்; நான் இப்பொழுது ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்; நீங்கள் விரும்பக்கூடிய எந்தத் தலைவருடைய படத்தைப் போற்றுவதாலோ அல்லது இயக்கத்தினுடைய பெயரைச் சொல்லுவதலோ மட்டும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு வராது; அதற்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய மனப்பான்மை உண்மையானதாக இருந்தால் மட்டும்தான் அது நிறைவேறும், அது இல்லாத பட்சத்தில் நாமும் போலியானவர்களாக மாறிவிடுவோம். நாம் அப்படி பட்டவர்களாக இந்த நாட்டிலே இருக்கக்கூடாது நான் அதைத்தான் பல தமிழ் ஆர்வலர்களிடத்திலே கேட்டேன்; நாற்பது வருஷமாக நீங்க ஒரு இயக்கத்தைப் பற்றி பேசிகொண்டு இருக்கிறீர்கள்; ஐம்பது ஆண்டு காலமாக ஒரு இயக்கத்தைப் பற்றி பேசிகொண்டு இருக்கிறீர்கள். ஏங்க சென்னைக்குள் உட்கார்ந்து பேசுவதை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து கிராமங்கள் போனால் பத்து இளைஞர்களைக் கூட உங்களால் தயார்படுத்த முடியாதா?

ஒரு பிரச்சனை வந்தால் ஒரு நாளைக்கு கோபாலபுரம்; இன்னொரு நாளைக்கு போயஸ் கார்டன் என நின்று யாசகம் கேட்கிறோமே தவிர. இந்த இரண்டு அரசியல் கட்சிகளிலேயும் இருந்து விடுபட்ட தமிழ் இளைஞர்களைத் தட்டி எழுப்பமுடியாதா? உங்களால் முடியும், ஆனால் அதற்குண்டான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அந்த முயற்சிதான்; இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது இலங்கை தமிழர்களுக்காக மாத்திரமல்ல; உங்களுக்குத் தெரியாது: இலங்கையிலே இருக்கிற தமிழர்கள் பாதுகாக்கப்படவில்லை என்று தெரிந்த பிறகு, மெல்ல மலேசியாவில் இருக்கக் கூடிய அதிகார வர்க்கம் தமிழர்களை அசைத்துப் பார்க்கின்றது.

நீங்கள் வந்தேறிகள், பிழைப்பதற்காக வந்தவர்கள், பிச்சைக்காரர்கள் நீங்கள் அளவுக்கதிகமாக கேட்டால் உங்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று சொல்கிற துணிவு 200 ஆண்டுகாலம், 300 ஆண்டுகாலம் வாழ்ந்த தமிழ்மக்களுக்கு இன்று நேர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு என்ன காரணம்? அன்று இலங்கையிலே இந்திய அரசு, மாநில அரசு எந்த விதமான உதவிகளையும் செய்ய முன்வரவில்லை; எனவே, இந்திய அரசு உலகில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பார்கள் என்று மலேசிய தமிழர்களை அவர்கள் அசைத்துப் பார்க்கிறார்கள்.

ஆனால், நான் மலேசிய தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் அந்த பெரிய இயக்கங்களிலிருந்து விடுபட்ட காரணத்தினால் தான், உண்மையான தமிழ் நெஞ்சங்கள் தமிழ்ப் போராளிகளை தேடிவந்து இருக்கிறீர்கள்; அதற்கு ஒரு காலத்திலும் நாங்கள் துரோகம் செய்யமாட்டோம்; மோசம்போகமாட்டோம்; நம்பிக்கை குரியவர்களாக நடந்துகொள்வோம் என்று இந்த நேரத்திலே தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்; இங்கு அல்ல; எங்கேயும் நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்; நாங்கள் அந்த முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை கூட்டியிருக்கிறோம்.

எங்களுக்கு தமிழ்நாட்டிலே தமிழர்களுக்குள்ளேயே இதுவரையிலும் சில வேறுபாடுகள், மோதல்கள் இங்கு இருந்தது; நாங்கள் அதற்கெல்லாம் தீர்வு கண்டு விட்டோம்; பெரும்பாலும் இனிமேல் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகதான் எஞ்சிய காலத்தை நாங்கள் செலவழிக்க போகிறோம்; அதற்காகதான் அர்பணிக்கப் போகின்றோம். உங்களிடத்திலே, நாங்கள் எதிர்பார்ப்பது நீங்கள் உலகத் தமிழர்களுக்காக போராடக்கூடிய, உண்மையாக இருக்கக்கூடிய இந்தத் தமிழர்களோடு உங்கள் நேசகரமும், அன்பும் மட்டும் இருந்தால் போதும்; வேறு ஒன்றும் தேவையில்லை; தமிழர்களைப் பற்றி எவ்வளவு எளிதாக நினைக்க முடிகிறது; நான் சில சம்பவங்களை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

இலங்கை 1948 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றது. ஆனால் தெற்காசியா நாடுகளிலேயே முதன்முதலாக ஜனநாயக உரிமை, வாக்குரிமை பெற்ற நாடு எது என்று சொன்னால் இலங்கைதான். 1931ஆம் ஆண்டிலேயே அந்த நாடு வாக்குரிமையை பெற்றது.

1948 ஆம் ஆண்டில் இலங்கையில் தேர்தல் நடத்தி ஆங்கிலேயர்கள் ஒரு பிரதமரை அமர்த்திவிட்டு வெளியே சென்றார்கள்; அவர்கள் செல்லுகின்ற பொழுது என்ன எண்ணத்தோடு சென்றார்கள் என்றால் “நாம் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டை இலங்கையில் உருவாக்கி செல்கிறோம்; இந்த நாடு மற்ற நாடுகளுக்கெல்லாம் ஜனநாயகரீதியாக ஒரு முன் உதாரணமாக விளங்கும்” என்ற நம்பிக்கையோடு சென்றார்கள்; அவர்கள் சென்ற வழித்தடம் கூட மாறவில்லை; அதற்குள்ளாக, இலங்கை அரசு என்ன செய்தது என்று சொன்னால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுடைய வாக்குரிமையைப் பறித்தது. குடியுரிமையைப் பறித்தது; உலகத்திலே வேறு எங்காவது இது போன்ற கொடுமை நடந்திருக்கிறதா? 200 வருடங்கள் முன்பு, ஒரு வருடம், இரண்டு வருடமல்ல இலங்கையின் மையபகுதி, கண்டி பகுதிக்குச் சென்றவர்கள் அவர்கள்தான் அங்கு தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். இன்றும் இலங்கையினுடைய சொத்தாக, வளமாக இருப்பது தேயிலை தோட்டங்கள் தான். அந்தத் தேயிலை தோட்டங்களை உருவாக்குவதற்கு தமிழர்களுடைய இரத்தம் பயன்பட்டது; வியர்வை பயன்பட்டது; அவன் உயிர் பயன்பட்டது.

ஆனால், அவர்கள் உழைப்பைல்லாம் பயன்படுத்தி அந்த நாடு வளம்பெற்ற பிறகு அவன் அந்நியனாக்கப்படுகிறான்; அந்நியனாக்கப்பட்டு விட்டான். அதுபோல தான் மலேசியாவிலே சகோதரர் மனோகரன் சொன்னது போல, தேயிலைத் தோட்டங்கள் இங்கே; அங்கே ரப்பர் தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்; ரப்பர் தோட்டங்கள் உருவாக்க தமிழர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்; சாலைகள் போடுவதற்குப் பயன்படுத்தப்பட்டார்கள்; அதே போல பர்மாவிலே, தாய்லாந்திலே, இந்தோனேசியாவிலே கடுமையான சாலைப் பணிகளைப் போட தமிழர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். உலகில் கயானவில், பிஜி தீவிலே கரும்புத் தோட்டங்களை உருவாக்க தமிழர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

உலகிலே எங்கெல்லாம் கடுமையான உழைப்பு தேவைபடுகின்றதோ அங்கெல்லாம் ஒன்று கருப்பு இன மக்களா அல்லது தமிழரா என்று பார்ப்பர்கள்; எனவே, தமிழருடைய உழைப்பு மலிவாக கிடைத்தது, பல நேரங்களில் தமிழருடைய மானம் மலிவானது; தமிழர்களுடைய உடைமைகள் மலிவானவை; தமிழருடைய உயிரும் மலிவாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டபோதும் உலகில் மனித உரிமை பேசக்கூடிய எந்த நாடுமே குரல் கொடுக்கவில்லை; அதனால்தான் இனிமேலும் நாமெல்லாம் யார்? மத்திய அரசு காப்பாற்றவில்லை; சோனியா காப்பாற்றுங்கள்; வேறு யாராவது காப்பாற்றுங்கள் என கெஞ்ச வேண்டிய அவசியம் நம்மிடத்திலே கிடையாது;

இனிமேல் நமக்கு நாம்தான் துணை வேறு யாரும் துணை கிடையாது; இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள் இந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ளாமல் இருக்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் வேண்டுகோள் வைக்கின்றேன். குறுகிய எண்ணங்களிலிருந்து வெளியே வாருங்கள்; ஜனநாயகரீதியான பாதைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்; தமிழர் என்ற ஒரு அடையாளத்தோடு மட்டும் வாழ்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதைத்தான் இந்தக் கூட்டத்திலே சொல்ல விரும்புகிறேன்;

இன்னும் சொல்லப்போனால் பலபேர் கூட வேறுவிதமாக சொல்லலாம்; ஒரு முக்கியமான முடிவை அறிவிப்பதற்காகதான் இந்த மாநாட்டைக் கூட நாம் கூட்டியிருக்கின்றோம். அது எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும்; எப்பொழுது அமலாக்கப்படும்? அதனாலே என்ன பின்விளைவுகள் ஏற்படும்? அதனால், என்ன நட்டங்கள் வரும் என்பதையெல்லாம் நான் நன்கு யோசித்த பிறகுதான் சொல்ல விரும்புகிறேன்; குறிப்பாக எங்கே இருந்தாவது, எங்கிருந்தாவது ஒரு நல்ல காரியம் தொடங்கப்பட்டு தீர வேண்டும். தமிழகத்தினுடைய வரலாற்றில், தமிழகத்தினுடைய வரலாற்றுப் போக்கில் பல மாற்றங்கள் உருவாவதற்கு புதிய தமிழகமே முன்னாக நின்றிருக்கின்றது, அதனால் நாம் தான் அதற்கு சுழி போட்டிருக்கின்றோம்;

அந்த வகையிலே தமிழர்களை ஒன்று சேரவிடாமல் இந்தத் தாய் தமிழகத்திலே தடுப்பது சாதி என்ற ஒரு மிகப்பெரிய தடைக்கல்; அந்த சாதி ஒழிந்தால்தான் தமிழர்கள் தமிழர்களாக இருக்க முடியும். யார் சாதியை ஒழிப்பது? எப்படி சாதியை ஒழிப்பது? அவர்களை ஒழியுங்கள் என்று சொல்வதற்கு நமக்கு உரிமை கிடையாது; நாம் சொன்னால் அவர்கள் கேட்பார்களா, இல்லையா ? என்பதும் நமக்கு தெரியாது.

ஆனால், நாம் நம்முடைய முடிவை அறிவிப்பதற்கும், நாம் எடுப்பதற்கும் நமக்கு உரிமை இருக்கிறது; இதில் பல இழப்புக்கள் கூட ஏற்படலாம்; ஆனால், எப்பொழுதுமே புதியது ஒன்றை உருவாக்க வேண்டுமானால் பழையதை இழக்காமல் புதியதை அடைய முடியாது. ஒரு விதையை தூவினால் தான், ஒரு செடி வரும் என்பதைப்போல சாதியை இழக்க வேண்டும்; சாதி அடையாளத்தை ஒழிக்க வேண்டும்; தமிழராக மலரவேண்டும்; தமிழராக எழவேண்டும் என்று சொன்னால் நாம் சாதியை முற்றாக துறந்தாக வேண்டும். இங்கே ஆயிரக்கணக்கான புதிய தமிழகம் கட்சியினர், தாய்மார்கள், பெரியவர்கள், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் அனைவரும் வந்து இருக்கின்றீர்கள்.

இனிமேல் ஒருவேளை உங்களுக்கு இடஒதுக்கீடு கூட இல்லாமல் போகும்; அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள்; உங்களுடைய, பிள்ளைகளுடைய பிறப்பு சான்றிதழ்களிலே சாதி, மதம், மொழி எது என்று கேட்டால் தமிழர் என்று மட்டுமே அடையாளப்படுத்துங்கள்; வேறு எதையுமே குறிப்பிடாதீர்கள். நான் சொல்லி முடிச்சவுடனே நாளை ஊருக்கு போனவுடனே, “ஐயா, இடஒதுக்கீடு போய்விடும்; கிருஷ்ணசாமி இப்படி சொல்கிறாரு; நீங்களெல்லாம் ….. நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்; உங்களுக்கான பங்கை எப்படியும் பெற்றுத் தருவேன்; அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; இந்த மண்ணிலே தமிழர் என்று அடையாளபடுத்துவதலே உங்களுக்கு எந்த இழப்பு ஏற்பட்டாலும், துப்பாக்கி ஏந்தியாவது அதற்குண்டான உங்கள் பங்கைப் பெற்று தருவேன்” என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது மிக மிக முக்கியமானது.

தமிழராக எழவேண்டும்! தமிழராக இணைய வேண்டும்! தமிழராக வாழவேண்டும் என்று சொன்னால் சாதி அடையாளங்களை வைத்து கொண்டு, தமிழராக நிச்சயம் எழ முடியாது! தமிழராக வாழவும் முடியாது! தமிழராக இணையவும் முடியாது!

எனவே, கடந்த காலங்கள் எப்படி என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்; நாளை முதல் முடிந்த அளவிற்கு, நாளை எந்தக் குழந்தையாவது உங்கள் வீட்டிலே, உங்களுடைய பிறக்கின்றபொழுது அந்த குழந்தைக்குச் சாதியை குறிப்பிடுகின்ற பொழுது, கிராமங்களிலே ’தமிழர்’ என்று அழகான வார்த்தையை எழுதுங்கள்; வேறு எதையும் குறிப்பிடாதீர்கள். இதுதான் நமது பாதை; ஏன் என்று சொன்னால் நம்மிடத்தில் இருந்து ஏதாவது ஒரு உண்மையை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஏதாவது இந்த மாநாட்டில் ஏதாவது சொன்னாரா? என்று எதிர்பார்ப்பீர்கள். எனவே, தமிழராக உங்களுக்கு நாங்கள்; நான் ஒரு சாதியை வைத்து கொண்டு எப்படி உதவ முடியும்; தமிழருக்கு தமிழர் தான் உதவமுடியும்; எனவே நான் தமிழன்; ஆனால் தமிழனாக தான் உதவ முடியும்.

எனவே, தமிழராகின்ற பொழுது நாங்கள் இதுநாள் வரையிலும் என்ன சாதி, என்ன மொழி அடையாளங்களையெல்லாம் வீழ்த்திவிட்டு இன்றுமுதல் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் நாம் எல்லோரும் ’தமிழர்’ என்ற அடையாளத்தோடே மட்டும் வாழ்வோம். எங்கே தமிழருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் நாம் எதற்கும் தயாராக இருப்போம். இருப்போமா? இருப்போம்; சாதி அடையாளத்தை மறுப்போமா? மறுப்போம் என்கிறவர்கள் கை தூக்குங்கள். எங்கும் தமிழர், எதிலும் தமிழர், சொல்லும் தமிழர், செயலும் தமிழர்தான் என்று சொன்னால் என்ன? இந்த மாநாட்டில் வித்தியாசமாக சொன்னார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு மாநாடு அறிவிப்பதற்கு சென்னையில்தான் முதல் பத்திரிக்கையாளர் கூட்டம் கூட்டினோம். ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார், ‘டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே, (அவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்) 20 வருடங்களாக தெரியும்; நீங்கள் உலகத் தமிழர் மாநாடு போடுகிறீர்கள்; தமிழர் என்று அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள்; இந்த சாதி என்பதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் வந்து தமிழர்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்த போகிறீர்கள் என்பது புரியவில்லை;? அதற்கு ஏதாவது வழியுண்டா? என்று கேட்டார்.

பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வரையில்பொறுமையாக இருங்கள்; பிப்ரவரி 7ஆம் தேதி கோவைக்கு வாருங்கள்; விடை காண்போம்” என்று சொன்னேன். மலேசியா தோழர்களுக்கு சாதி என்ன என்பது சில நேரங்களில் புரியாமல் இருக்கலாம்; நீங்கள் புலம்பெயர்ந்தவர்கள் அதை மறந்து நீங்கள் தமிழராக இருந்தால்தான் உங்களுக்குப் பாதுகாப்பு; நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். ஆனால் இங்கு தமிழராக வாழ முடியாமல் இருப்பதற்கு சாதி என்ற சுவர்கள்தான் மிகப்பெரிய பிரச்சனை; சாதி என்ற அடையாளம் வால் வெட்டப்பட்டு விட்டால், அது போய்விட்டால் உங்களுக்கெல்லாம் பாதுகாப்பு என்பது ஆறுகோடி பேர் ஒரு விநாடியில் ஒன்று திரண்டு விடுவார்கள். உங்கள் பிரச்சனைத் தீர்ந்துவிடும்.

அதன் காரணமாகதான் எங்கே தொடங்குவது? எப்படி தொடங்குவது? எதிலே தொடங்குவது என்று சொல்லுகின்றபொழுது, இந்தச் சாதி அடையாளத்தை மறக்கின்ற பொழுது, தமிழராய் ஆகி விடுகின்றோம். தமிழராய் ஆகி விட்டோம்; தமிழராகி மலர்ந்து விட்டோம்; தமிழராக எழுந்து விட்டோம்; தமிழராக இணைந்து விட்டோம்; பேராசிரியர் என்ன சாதி? மனோகரன் என்ன சாதி? ரவி என்ன சாதி? தமிழ்வாணன் என்ன சாதி என்றா? இப்பொழுது தமிழராக ஒன்றிணைந்து இருக்கின்றோம். இதுபோன்ற இணைப்பைத் தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் துணிவோடு செய்யமுடியாது . எந்த இயக்கத்தாலும் செய்யமுடியாது; ஐயோ சாதியை நம்ம தலைவர் விட சொல்கிறாரே! எப்படி நாம் அரசியல் செய்வது, மாவட்ட பதவி போய்விடுமே! அமைச்சர் பதவி போய்விடுமே என்று அங்கலாய்ப்பார்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்; எந்த பதவி போகிறது என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள், பதவி வருகிறது! எந்த வரலாற்றிலே யார் போராடுகிறார்கள்? யார் உண்மையாக இருக்கிறார்கள்? யார் தூக்கி நிறுத்தப்படுவார்கள்? அவர்கள் எதற்காக வாழ்ந்தார்கள்? எப்படி வாழ்ந்தர்கள்? என்பதை வைத்துதான் முடிவு செய்யப்படும்.

ஒருவேளை சாதி என்ற அடையாளத்தை இழப்பதால் நமக்கு சில இழப்புக்கள் வந்தாலும் கூட இந்தத் தமிழர் என்று அடையாளப்படுத்துவதற்காக லட்சக்கணக்கான தமிழர்கள் இந்த இழப்பை சந்தித்தார்கள் என்று வரட்டும்; அதுதான் நமக்கு பெருமை; அதுதான் புதிய தமிழகத்திற்குப் பெருமை; அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். எனவே உங்களுடைய வீடுகளிலெல்லாம் இது தமிழர் இல்லம் என்று எழுதி வையுங்கள்; எல்லா வீடுகளிலும் ’தமிழர் இல்லம்’ என்று எழுதி வையுங்கள்; எல்லா வீட்டிலேயும் நீங்கள் காலையில் போய் சேர்ந்தவுடனே, ஒவ்வொரு வீட்டிலேயும் தமிழர் இல்லம், எல்லோருடைய வீட்டிலேயும் தமிழர் இல்லம் என எழுதுங்கள்.

எனவே நாளையிலிருந்தே தொடங்கிவிடவேண்டும். இயக்கமாக சாதிய தமிழர்களை இனத்தமிழர்களாக மாற்றுவது, மொழியால் மட்டும் தமிழர்களை இணைக்க முடியவில்லை; ஏனென்று சொன்னால் சாதியும், மதமும், அரசியலும் தமிழர்களைப் பிரிப்பதற்கு பல கூறுகள் போடுகிறது. எனவே தமிழர்கள் ஒற்றுமைபட்டால் ஒழிய தமிழர்களுக்கு எப்படி பாதுகாப்பு வரும்? தமிழ்நாட்டில் எங்க தெரு பெரிசு, நாங்க உயர்ந்தவங்க; இவ்வளவு பேர் இருக்கிறோம் என்ற உணர்வுகள் எல்லாம் எதிலிருந்து வருகிறது. அதை ஒன்றை அடையாளப்படுத்துவதில் இருந்துதான் வருகின்றது. நான் இந்த மேடையிலே இருந்து கேட்டுக்கொள்கிறேன். அறுபது ஆண்டுகாலம் உண்மையிலேயே பொதுவாழ்வில் தமிழராக வாழ்ந்தவராக இருந்தால், நாளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இனிமேல் அவருடைய சாதியைக் கூட அவர் நீக்கி விட வேண்டும்; எதிர்க்கட்சி தலைவி அம்மையார் அவர் நீக்கிவிடவேண்டும்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்கள் ஜாதியை எடுத்துவிட வேண்டும்; தங்களுடைய மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே இந்த சாதி அடையாளத்தை நீக்கிவிடுவது ஒன்றுதான் உண்மையாக, நீங்கள் தமிழர்களுக்கு பாடுபட போவதாக கருதப்படும். இன்னும் சொல்லபோனால் நீங்கள் செம்மொழி மாநாடு நடத்துவது உண்மையாக இருக்குமானால் கூட, செம்மொழி மாநாட்டிற்கு முன்பாகவே உங்கள் கட்சியினர் அனைவரையும் சாதி அடையாளத்தை நீக்க சொல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இன்றையிலிருந்து தமிழ்நாட்டில் தமிழர் யார்? தமிழர் அல்லாதவர் யார்? என்பது வித்தியாசப்பட்டுவிடும். எங்கேயும் நீங்கள் சாதியை அடையாளப் படுத்தாதீர்கள்.

தமிழர் என்ற அடையாளத்தைவிட வேறு உயர்ந்த அடையாளம் உலகத்திலே எங்கும் கிடையாது. இந்த அடையாளத்தைத் தூக்கி நிறுத்துங்கள். இடையிலே சாதிகள் வந்து ஒட்டியது; ஒட்டவைக்கப்பட்டது. இந்த மண்ணிலுள்ள பூர்வகுடிமக்கள் நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தை மறக்கடிப்பதற்கு தான் சாதியைக் கொண்டுவந்து புகுத்தினார்கள்; அது என்றாவது ஒரு நாள் அகற்றபடுவதற்காகதான் இந்த இயக்கத்தினுடைய பெயரை ‘புதிய தமிழகம்’ என்று வைத்தது அரசியலுக்காக அல்ல. ‘புதிய தமிழகம்’ என்று உருவாகும் என்று சொல்லி இருக்கின்றேன்; இன்றுதான் புதிய தமிழகமாக மலர்ந்திருக்கிறோம் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். எனவே நமக்கு இருக்கக்கூடிய பணிகள், நமக்கு இருக்கக்கூடிய சுமைகள், நாம் செய்ய வேண்டிய பயணம் வெகுதூரம் இருக்கின்றது.

இந்த மாநாடு, பேராளர்கள் சொன்னதுபோல, இந்த மாநாடு கூடி கலைய கூடிய மாநாடு அல்ல; வரலாற்றிலே சில விஷயங்களைப் பதிவு செய்வதற்கும் பதிவு செய்து அதன்படி நகர்ந்து செல்வதற்கும் உண்டான மாநாடு; தமிழர்கள் இன்று நேற்று அல்ல; ஐயாயிரம் ஆண்டுகாலம்,பத்தாயிரம் ஆண்டுகாலம் மொகஞ்சதரோ, ஹரப்பா, சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்து தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள்.

அந்நியருடைய படையெடுப்பாலே தெற்கு நோக்கி நகர்ந்து, அதற்குப் பிறகு பல பிரிவுகளாகப் பிரிந்து பலர் கூலிக்காரர்களாக பல நாடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள். எனவே, ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒருங்கிணைப்பதும் அந்தத் தமிழர்கள் பல இடங்களில் தங்கள் பெயரைக்கூட சொல்ல முடியாமல் இருக்கின்ற நிலைகளை எல்லாம் மாற்றி, நாம் ஒன்று படுத்தவேண்டிய நிலைக்கு நாம் வந்துள்ளோம். இனிமேல் எங்கிருந்தும் எங்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு குரல் வராதா என்ற நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னால் தமிழகம் தமிழர்களாக நிறைந்திருக்க வேண்டும்; தமிழர்களாக இருக்க வேண்டுமென்று சொன்னால் தமிழர்களிடத்தில் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்; அந்த ஒற்றுமை உருவாக்கப்படவேண்டும் என்று சொன்னால் நம்மிடத்திலே இருக்கிற குறுகிய மனநிலைகள் மாறி அமைய வேண்டும். அதைத்தான் இந்த மாநாட்டிலே “தமிழராய் எழுவோம்” என்ற கோஷம் கொடுத்தவுடனேயே, அதற்கு என்ன பொருள் என்று சொன்னால் வேறு அடையாளங்களை மறப்போம்; துறப்போம்.

அதுதான் சாதி, மத, அரசியல் தேச எல்லைகளை மறப்போம்; தமிழராய் எழுவோம் என்பதின் பொருள் அதுதான்.

எனவே, நாம் தமிழராய் மாறுவதற்கும் தயாராகி விட்டாலே, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்துவிடும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடலாம். யாரும் தனிதனியாக ஒவ்வொரு பிரச்சனையாக பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த அடிப்படையிலே தான், இனி அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகத் தமிழ் மக்களுக்கு ஒரு பாதுகாப்பை, அரணை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதன்முதலாக இப்பொழுது நிரந்தர உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கும் இந்த மாநாட்டின் வாயிலாக முடிவெடுத்து இருக்கின்றோம்.

அந்த செயலகம் எங்கு செயல்படும்; எப்படியெல்லாம் செயல்படும்? யார் எல்லாம் உறுப்பினர்கள் இருப்பார்கள்? அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது காலபோக்கிலே தெரியும்; எனவே, நம்மைப் பொறுத்தமட்டிலும் நமது இளைஞர்களிடத்தில் கேட்டுக் கொள்வது, இப்பொழுது இங்கு வந்திருக்கக்கூடிய தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், பெருமக்கள் நம்மீது இதுநாள் வரையிலும், தேர்தல் வந்தால் வாக்களிப்போம்; வேறு பிரச்சனைகள் ஏற்பட்டால் ஊர்வலம் நடத்துவோம்; பேரணி நடத்துவோம்; அது வேறு.

ஆனால், இப்பொழுது நமக்கு இதுநாள் வரையிலும், தமிழக அளவில் இருந்த பிரச்சனைகளுக்காக மட்டும் நம்முடைய தோள்களில் சுமைகளைச் சுமந்தோம். ஆனால், இப்பொழுது உலகெங்கும் வாழக்கூடிய பத்துகோடி தமிழ் மக்களுடைய பிரச்சனைகளையும் தோள்களிலே சுமக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; மனபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்; மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் வரலாற்றிலே எல்லோருக்கும் எல்லா காலகட்டங்களிலேயும் போராடுவதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்காது; சில சங்கடங்களைக் கூட கண்டு களிப்பதற்கு கூட வாய்ப்பு கிடைக்காது; நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் பெருமை யாருக்கும் கிடையாது; தமிழர்களைப் பாதுகாப்பதற்குள்ள பொறுப்பை இப்படி ஒரு இயக்கம் முன்வந்து ஏற்றுக் கொண்டதைப் போல வரலாறு யாருக்கும் கிடையாது; அந்த வரலாறு நமது புதிய தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது; அதைப் போற்றி காக்கக் கூடிய வகையில் தான் நமது எதிர்கால நடவடிக்கைகள் இருக்க வேண்டும். .

அந்த அடிப்படையில்தான் ஏறக்குறைய 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானத்திலே மிக முக்கியமாக 21வது தீர்மானம் மிக முக்கியமாக ”தமிழராய் எழுவோம்” என்று எழுதி, அதற்குப் பிறகு ”உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு” அதன் இலச்சினையில் என்ன குறிப்பிட்டு இருக்கின்றோம் என்று சொன்னால், மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலி முகாமில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி முகாமில் முடக்கி வைத்துவிட்டு அந்தத் தமிழ் மக்களுக்கு ஒரு குரல் கொடுக்காமல் என்ன செம்மொழி மாநாடு? எப்படி இந்த மாநாட்டை நடத்துவது? என்ன மனசாட்சியோடு நடத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. நாம் அதனால்தான் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம்; பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் மே மாதம் 7ஆம் தேதி வரை மூன்று மாதகால அவகாசம் கொடுக்க தயாராக இருக்கின்றோம். இந்த மூன்று மாசத்திற்குள்ளாக இலங்கையிலே முள்வேலி முகாம்களில் இருக்கக்கூடிய தமிழர்களை அவர்களது சொந்த நிலங்களுக்கு கொண்டுபோய் அவர்களைக் குடியமர்த்தவில்லை என்று சொன்னால், இப்பொழுது இடைப்பட்ட காலத்திலே தமிழ் மக்களுடைய நிலங்களிலேயே குடியேற்றப்படுகின்ற சிங்களவர்களை அகற்றவில்லை என்று சொன்னால், இந்த இடைப்பட்ட காலத்திலே சிங்கள ராணுவம் மற்றும் பிற நாட்டினுடைய ராணுவங்கள் முகாமிட்டு இருக்கின்றன; அந்த ராணுவ முகாம்கள் அகற்றபடவில்லை என்று சொன்னால், இப்பொழுது மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள்; தேதி அறிவிக்கப்படும்; ஒரு மிகப்பெரிய படை “தமிழர் எழுச்சி படை’ இலங்கை நோக்கி செல்லும் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். வரட்டும்! மோதல் வரட்டும்! பிரச்சனைகள் வரட்டும்! உலகம் கவனிக்கட்டும், பார்க்கலாம்! ஒரு முடிவு எங்களுக்கு வேணும்; “It’s a dead line” இந்த முடிவைதான் நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்; நாங்க சொல்வதையெல்லாம் சொல்லிட்டோம்; இந்த மாநாட்டின் வாயிலாக; நான் மற்ற தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கின்றேன். இனிமேலும் நீங்கள் விலகி செல்லாதீர்கள்; இந்த மாநாட்டில் பல தமிழ் ஆர்வலர்களை அழைப்பதற்கு நாங்கள் முடிவு செய்தோம்; ஆனால், பல காரணங்களால் அவர்களை அழைக்க முடியவில்லை; எதிர்காலத்திலே அனைவரையும் தமிழ் மக்களுக்காக, தமிழ் மண்ணுக்காக, மொழிக்காக, இனத்துக்காக குரல் கொடுக்கக்கூடிய அனைவரையும் ஓரணியில் திரட்டக்கூடிய பணியையும் நாங்கள் எடுப்போம் என்பதையும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இனிமேலும் காலம் தாழ்த்துவதிலே, நீங்கள் எந்த விதமான பலமும் கிடையாது. நாங்கள் நிச்சயமாக இலங்கை நோக்கிப் பயணம் செய்வோம். தமிழ் மக்களுக்கான அந்த விடுதலையை நீங்கள் பெற்று தருவது உலக நாடுகளுடைய, இந்திய அரசினுடைய, தமிழக அரசினுடைய கடமை. இதைத்தான் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில், இந்தியாவில், மலேசியாவில் மட்டுமல்ல; சிங்கப்பூரில் மட்டுமல்ல; இலங்கையில் மட்டுமல்ல; தமிழர்கள் பம்பாயில் என்ன கஷ்டபடுகின்றார்கள் தெரியுமா? கடந்த ஒரு வாரகாலமாக பத்திரிகையிலே பார்த்திருப்பீர்கள்; மராத்தி தெரிந்தவர்கள் மட்டும் தான் பம்பாயில் ஓட்டுநர்களாக இருக்கமுடியும்; அப்படியென்று சொன்னால், தமிழன் தமிழ் மொழிக்கு அப்பாற்பட்டு ஒரு மொழியைக் கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றான்; தமிழன் இரண்டாந்தர குடியாக்கப்படுகிறான்.

இந்த மாதிரி இங்க தமிழ்நாட்டிலே உண்டா? தமிழைக் கற்றுக் கொண்டவர்கள்தான் தமிழ்நாட்டிலே ஓட்டுநராக இருக்கமுடியும் என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா? தமிழ்நாட்டுக்கு யார் வேண்டுமனாலும் வரலாம்! யார் வேண்டுமானலும் குடியேறலாம்! யார் வேண்டுமானலும் நிலத்தை வாங்கலாம்! யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கி குவிக்கலாம்! தமிழருக்கு இடம் இல்லாமல் போகலாம்! ஆனால், தமிழனுக்கு மட்டும் அண்டை மாநிலத்திலே வேலை கிடையாது! அண்டை நாட்டிலே வேலை கிடையாது! எங்கும் வேலை கிடையாது! எல்லா இடங்களிலேயும் ஒடுக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் எத்தனை காலத்திற்குதான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம்;

இனிமேலும், நிச்சயமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தமிழ் இனத்திற்கு, அது கேரளாவாக இருந்தாலும் சரி! கர்நாடகத்தில் இருந்தலும் சரி! ஆந்திராவில் இருந்தாலும் சரி! மாகாராஷ்டாராவில் இருந்தாலும் சரி! கல்கத்தாவில் இருந்தாலும் சரி! மலேசியாவோ, சிங்கப்பூரோ இலங்கையோ என எந்தப் பிரச்சனை என்று காதுக்கு வந்தாலும், நிச்சயமாக தமிழினம் இனிமேல் ஓரணியில் திரட்டப்படும் என்பதை இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் வாயிலாக தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

எனவே இந்த மாநாட்டிலே மிக முக்கியமாக ஒரு பிரகடனம்: பிரகடனம் என்று சொன்னால், நாம் யாரிடத்திலும் கோரிக்கை வைப்பது அல்ல; இது நமக்கு நாமே விதித்து கொண்ட வழிமுறைகள்; அதை நான் இப்பொழுது படிக்கின்றேன்; அன்பு கூர்ந்து கேளுங்கள்!

மாநாடு பிரகடனம்

சிந்துச் சமவெளி மொகஞ்சதோரா, ஹரப்பா நாகரீகமே உலக வரலாற்றில் தோன்றிய முதல் நாகரீக வாழ்க்கையின் தோற்றுவாய் ஆகும். அப்பெருமைமிகு வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்களே என்பதுதான். அண்மைக்கால அகழ்வாராய்ச்சியின் தீர்க்கமான முடிவுகளாகும். அத்தகைய பெருமைமிகு வாழ்க்கையை மேற்கொண்ட தமிழர்கள் காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகளுக்கு இந்தியாவின் தென்முனைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்ல; இன்று ஆளாகி, உலக அளவில் ஏறக்குறைய 80 நாடுகளில் பிழைப்புத்தேடி தங்களுடைய அடையாளங்களை இழந்துவரும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

குறிப்பாக கி.பி ஆம் நூற்றாண்டுகளில் 17 உலக அளவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்க நாட்டின் மண்ணின் மைந்தர்களான கருப்பின மக்களையும், ஐரோப்பிய நாடுகளுக்கும்,மேலை நாடுகளுக்கும் அடிமைகளாக விரட்டி அடித்தனர்.

அதே போன்று, இந்தியாவிலிருந்து இலங்கை, மலேசியா, பர்மா, பிஜி, கயானா மற்றும் இந்தோனேசியா முதலிய நாடுகளுக்கு, தமிழ் மக்களைக் கட்டாயப்படுத்தி, அடிமைகளாக அழைத்துச் சென்று, அந்தந்த நாடுகளின் காடுகளைத் திருத்தி நாடுகளாக்கவும், மலைகளைக் குடைந்து சாலைகள் போடவும், இரண்டாவது உலகப் போரின் போது கடுமையான இருப்புப்பாதைகளை போடவும் நிர்பந்தித்தனர், இரண்டாவது உலகப்போருக்கு பின்பு, இலங்கை, மலேசியா பெரும்பாலான நாடுகளும் சுதந்திரம் பெற்றன.ஆனால் ஆனால் தமிழர்களுக்கு மட்டும், மீண்டும் ஒரு அவலமே வந்து சேர்ந்தது.

1948 இல் இலங்கையிலிருந்து பத்து லட்சம் தமிழர்கள் குடியுரிமை,வாக்குரிமை பறிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் ஒரு லட்சம் தமிழர்கள் பர்மா நாட்டிலிருந்து திருப்பி அனுப்பபட்டனர். 200, 300 ஆண்டுகாலம் பல தலைமுறைகளாக வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்கள் செழுமைப்படுத்திய மண்ணிலேயே இன்று வரை ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் ஆளாக்கப்படுகின்றனர்; மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இலங்கையின் வட கிழக்கு பூர்வீக தமிழ்க்குடிமக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை; தமிழ் மண்ணிலேயே தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்வதற்கும் எண்ணற்ற தடைகள் உள்ளது. இந்திய மண்ணில் பரவிக்கிடக்கும் பல இலட்சம் ஈழத்தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் பத்து கோடிக்கு மேற்பட்ட தமிழினம் இன்று கேட்பாரற்று கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழின மக்களை இனிமேலும் பாதுகாப்பதற்கு தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ, உலக அளவிலோ யாரையும் நம்பி எந்தவிதப் பலனும் இல்லை என்பதனைக் கடந்த ஆண்டு ஈழமக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டபோதும் கூட, உலகம் மௌனம் சாதித்ததிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, உலக அளவில் தமிழர்களின் வாழ்வுரிமை, மண்ணுரிமை, மனித உரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை நிலைநாட்டி தமிழ் மக்களைப் பாதுகாத்திட, செயலகம் ஒன்றை நிறுவிட இம்மாநாட்டின் வாயிலாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றது.

தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எவருடைய தயவுமின்றி நம்முடைய பாதுகாப்பை முடிவு செய்யவும், நமக்குள்ளே இருக்ககூடிய அனைத்து விதமான வேறுபாடுகளையும் குறிப்பாக, தாய்த்தமிழகத்தின் தமிழ்மக்கள் இடையே புரையோடிப்போன சாதி உணர்வுகள், மத உணர்வுகள், கட்சி உணர்வுகள் ஆகியவற்றை அடியோடு துறக்கவும், புலம்பெயர்ந்த தமிழர்களும் தேச எல்லைகளை மறக்கவும் தங்களை தமிழர் என்ற ஒரே அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கவும் இம்மாநாட்டின் மூலமாக பிரகடனப்படுத்துகின்றோம்.

எனவே, இன்றைய தீர்மானங்கள், பிரகடனங்கள் அனைத்தையும் மனதில் வைத்து, இந்த மாநாட்டிலே பங்கு பெற்று இருக்கக்கூடிய, புதிய தமிழகம் கட்சியினுடைய அன்பு செயல் வீரர்கள், தாய்மார்கள், தமிழ் அறிஞர்கள் ஆகிய அனைவரும் அடுத்தடுத்த கட்டமாக, நமக்கு எப்படியெல்லாம் என்னனென்ன அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் உன்னிப்பாக கவனித்து, அதற்குண்டான போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளுமாறு நான் இப்பொழுதே கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த மாநாட்டை பொறுத்தமட்டிலும், நாம் இந்த அளவிற்கு, இந்த மாநாட்டை வெற்றிகரமாக ஆக்குவோம் என்று மற்றவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 1998 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி தொடங்ககப்பட்ட போது, ராமநாதபுரத்திலே மாநாடு நடத்தினோம்; அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைந்தது. திருச்சியிலே 2000ஆம் ஆண்டு அக்டோபர் 1,2 தேதிகளில் மாநாடு நடத்தினோம்; அது திருப்பு முனையை ஏற்படுத்தியது. திருநெல்வேலியிலே 2002ஆம் ஆண்டு ஜுலை 6,7ல் ஒரு மாநாடு நடத்தினோம்; அதுவும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைந்தது. அதற்குப் பிறகு கோவையிலே 2005ஆம் ஆண்டு ஒரு நாள் மாநாடாக ஏப்ரல் 14 அன்று நடத்தினோம்; அது மண்ணுரிமை மாநாடு! மதுரையில் 2007 பிப்ரவரி 24இல் ஒரு மாநாடு நடத்தினோம்; அந்த மாநாடும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைந்தது. இப்பொழுது அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல, இது தமிழகத்தினுடைய எல்லையைக் கடந்து, இந்தியாவினுடைய எல்லையைக் கடந்து உலகளவில் இருக்கிற அனைத்து தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட மாநாடு இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாடு! இந்த மாநாட்டிலே பங்குபெற்ற பெருமையை நீங்கள் உருவாக்கி இருக்கின்றீர்கள்; இந்த மாநாட்டிலே அனைத்து மாவட்டங்களிலிருந்து வந்து இரண்டு நாள் மாநாட்டிலேயும், மலேசியாவிலிருந்து வந்திருக்கக்கூடிய பேராளர்கள் பெருமையும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் அளவிற்கு அமைதி காத்து, ஒற்றுமை காத்து, கட்டுப்பாடு காத்து, இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த மாநாட்டிற்கு எப்படி பாதுகாப்போடு பத்திரமாக வந்து சேர்ந்தீர்களோ அதே போல நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுகின்ற வரையிலும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்லவேண்டும். இப்பொழுது மூன்று முழக்கங்கள் இந்த மாநாட்டின் சார்பாக எழுப்பப்படும்; அனைவரும் எழுந்து நின்று இந்தக் முழக்கத்தை எழுப்பி மாநாட்டை நிறைவு செய்யவும். இந்த மாநாட்டின் முடிவாக, ஏற்கனவே நேற்றுக் காலையிலே ஏற்றி வைக்கப்பட்ட கொடி, இந்த மாநாட்டின் முடிவில் முறைப்படி இறக்கி பேராசிரியர் டாக்டர் ராமசாமி அவர்களிடத்தில் கொடுக்கப்படும். எனவே மத்திய பகுதியிலே கொடியை இறக்கி அவரிடத்தில் கொடுக்கின்ற அந்த ஒரு நடைமுறையும் நடைபெறும்; அது வரையிலும் அமைதி காக்குமாறு கேட்டுகொள்கின்றேன்; நன்றி; வணக்கம்.

எழுவோம்! எழுவோம்! தமிழராய் எழுவோம்!
விழ விழ எழுவோம்! வீறு கொண்டு எழுவோம்!

உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு ஒரு கண்ணோட்டம்

தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,7 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடும் மிகச்சிறப்பாக நடந்தேறியது. வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக இந்த மாநாடு அமைந்ததென்று, மலேசியப் பேராளர்கள் பலர் கருத்துரைத்தனர். அதிலும் மிகச்சிறப்பான விடயம் என்னவென்றால் முதலாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தது நமது மலேசிய நாட்டின் தமிழ்த்தலைவர் ஒருவர் என்பதுதான். பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், மாநாட்டின் இரண்டாவது நாளான 7ஆம் தேதி கொள்கையுரையும் ஆற்றினார். அடுத்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, மலேசியாவில் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக மாநாட்டின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்டது.

இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில், மலேசியாவிலிருந்து சென்ற அதிகமான தமிழ்ப் பேராளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் இரவி, உத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன், இந்தராஃப் தலைவர்கள் கணபதி ராவ், வசந்தக்குமார், கேமரன் மலை சிம்மாதிரி, வர்த்தக பிரமுகர் டத்தோ இரா.அருணாசாலம், பூச்சோங் முரளி, ஜசெக காமாட்சி, ஐபிஎப் மதியழகன், செபராங் பிறை நகராட்சி கவுன்சிலர் இராமச்சந்திரன், தலைநகர் ௧.கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மலேசியப்பேராளர்கள் இந்த மாநாட்டில் தங்களது ஈடுபாட்டை சிறப்பாக வெளிப்படுத்தினர் என்றே கூறவேண்டும். மாநாட்டின் இரு நாட்களிலும் மலேசியத் தமிழர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக மாநாட்டின் இரண்டாவது நாளன்று மலேசியத் தமிழர்கள் பலர் மாநாட்டில் தங்களது கருத்துகள், கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கட்டுரைகளை
சமர்ப்பித்த பேராளர்களின் கருத்துக்கள்

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்:

உலகத் தமிழர் சரித்திரத்தில் முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு மாநாடு, ஒரு வரலாற்றின் தொடக்கப்புள்ளியாக அமையும் என்று நான் நம்புகிறேன். இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் பல்வேறான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர், ஆனால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு அரணும் இல்லை என்பது கவலைக்குரிய உண்மையாகும். அதனால்தான், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, நம்மால் தடுத்து நிறுத்த இயலவில்லை. இன்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அந்தத் தமிழர்களுக்கு என்ன கதி என்பது இன்றும் வினாவாக உள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில், பலமுறை ஈழத்தமிழர்கள் தொடர்பான தீர்மானங்களை நாங்கள் கொண்டுவர முயன்ற போதும், அத்தீர்மானங்கள் காரணாமில்லாமல் நிராகரிக்கப்பட்டன. உலகத்தில் எங்கு சென்றாலும் அவலங்களை எதிர்நோக்கும் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்த இந்த மாநாடு வழிவகை செய்ய வேண்டும் என்று இவ்வேளையில் நான் வேண்டிக்கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் அ. சிவநேசன்:

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, இன்று கோவையில் நடைபெறுகின்றது. இதில் மலேசியாவிலிருந்து வந்துள்ள நாங்கள் வரலாற்றின் மிக முக்கிய சந்திப்பில் இருக்கிறோம் என்பதில் பெருமையடைகின்றோம். உலகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர். தமிழர்களின் மொழிக்கு ஆபத்து, கலாச்சாரத்துக்கு ஆபத்து, பண்பாட்டுக்கு ஆபத்து என்று பல்வேறான ஆபத்துகள் உலகத் தமிழினத்தை தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றன. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய சிலர், அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாகும். அந்த வேளையில் உலகத் தமிழர்களின் பாதுகாப்புக்கென மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டு ஏற்பாட்டு குழுவினருக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தாக வேண்டும். உலகத்தின் எந்த மூலையில் தமிழனுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும், அது மொழியைச் சார்ந்த பாதிப்பாகட்டும், கலாச்சாரத்தை சார்ந்த பாதிப்பாகட்டும், பண்பாட்டைச் சேர்ந்த பாதிப்பாகட்டும், தமிழனின் வாழ்வாதரத்தை சேர்ந்த பாதிப்பாகட்டும், முதன்முதலில் அதைத் தட்டிகேட்பதற்கு உலகத்தில் வாழும் தமிழன் தயாராக வேண்டும். அவ்வாறு தயாராகும் பட்சத்தில் தமிழன் வாழ்வுரிமை காக்கப்படும், அந்தக் கடப்பாடு, வேட்கை முன்பே தோன்றியிருக்குமெனில், ஈழத்தில் இன்று சோகமான அந்த முடிவு ஏற்பட்டிருக்காது.

ஹிண்ட்ராஃப் கணபதி ராவ்

உலகத்தின் எந்த மூலையில் தமிழருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைத் தட்டிக்கேட்கும் தைரியம் உலகத் தமிழர்களுக்கு வரவேண்டும். அவ்வாறு தைரியத்தை வரவழைப்பதற்கு முதற்படியாக இன்றைய இந்த மாநாடு அமைய வேண்டும் என்பது நமது விருப்பமாகும். இன்றைய மாநாட்டின் வெளிப்பாடாக, உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். உலகத் தமிழர்களின் பல்வேறான பிரச்சனைகளுக்கும் அந்த பாதுகாப்பு மையத்தின் வழியாக குரலெழுப்பி நாம் தீர்வு காண வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நமது ஈழத்து சகோதரர்களுக்கு இன்று நிகழ்ந்துள்ள கடமை. இதுபோன்ற ஒரு பாதுகாப்பு மையம் ஒன்று இல்லாததால் ஏற்பட்டுதுதான். மலேசியாவிலும் நாங்கள் பல்வேறான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றோம்; ஆனால் அவற்றைத் தனியாக எதிர்கொண்டுதான் வருகின்றோம். எங்களது உரிமைகளைத் தற்காக்க நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம்; இனியும் போராடுவோம்; அது உலகத் தமிழனின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட போராட்டம் என்றால் நிச்சயம் நாங்கள் அதில் அங்கம் வகிப்போம். அந்த போராட்டம் அமைதி வழியிலான ஜனநாயகப் போராட்டமாக இருப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்.
ஹிண்ட்ராஃப் வசந்தக்குமார்

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு இன்று வந்திருக்கும் மலேசியத் தமிழர்களான நாங்கள், தினம், தினம் போராடி வருபவர்கள். எங்களின் அன்றாட வாழ்வே போராட்டம் போன்றதுதான். ஆகவே, போராட்டம் என்று வந்து விட்டால் நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். இன்று மலேசியாவில், தமிழ் மொழிக்கு மிகப்பெரும் ஆபத்து நெருங்கியுள்ளது. மலேசியாவின் உயர் பள்ளிக்கூட தேர்வில், தமிழ்ப் பாடத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் மிகப்பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது, அதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகின்றோம். தமிழ்மொழியை மலேசிய மண்ணிலிருந்து அழிய விடாமல் இருக்க நாங்கள் நடத்தும் அந்தப் போராட்டத்தில், நாங்கள் மீண்டும் சிறைக்கு சென்றாலும் பாதகமில்லை. எனது இனத்திற்காக எந்தவொரு தியாகத்தை செய்யவும் நான் தயராகவுள்ளேன், என்னுடைய அருமை போராட்டவாதிகள் தயாராகவுள்ளனர்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் அன்பழகன்

இன்று உலகம் எங்கும் தமிழர்கள் பரவிக்கிடக்கின்றார்கள். தமிழகம், இலங்கை நாடுகளுக்கு அடுத்த நிலையில் அதிகமான தமிழர்கள் வாழும் நாடாக மலேசியா உள்ளது. இந்த மலேசிய திருநாட்டில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நான் உங்களிடம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மாலுமியில்லா கப்பலில் சிக்கி பரிதவிப்பவர்கள் தாம் மலேசியத் தமிழர்கள். எங்களுக்கென்று சரியான தலைமைத்துவம் இல்லாததால், பெரும் பின்னடைவுகளை நாங்கள் கடந்த காலங்களில் சந்தித்து வந்துள்ளோம். இன்று எங்களின் அடிப்படை உரிமையான தமிழ்க்கல்வியின் மீதும் கைவைக்க தொடங்கி விட்டனர். ஈராண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் நாங்கள், இப்பொழுது புதியதொரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளோம், அந்த தலைமைத்துவ மாற்றத்தின் வழி சமூக மேம்பாட்டை காண்போம் என்று நம்புகின்றேன். உலகத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மாநாடு, திருப்புமுனையாக அமைய வேண்டும்.

பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை குழு அமைப்புத் தலைவர் மு.சத்தீஸ்

இன்று கோவை மாநகரில், கடல் அலையென திரண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களைக் காண்கையில் உள்ளம், உவகை கொள்கின்றது. வரலாற்றின் மிக முக்கிய சந்திப்பொன்றில் நாம் இருக்கின்றோம். உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், ஏளனமாக தமிழன் நடத்தப்படுகின்றான். ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டத்தை தடுக்காமல் வரலாற்று பிழையொன்றை இந்தத் தமிழகத்தின் தலைவர் ஒருவர் நிகழ்த்தியுள்ளார், அவரின் பெயரைக்கூட நான் சொல்லப்போவதில்லை; தனது போராட்டத்தை உலகத் தமிழர்களின் தோளில் சுமத்திவிட்டு சென்றுள்ளார் தலைவர் பிரபாகரன்; தமிழகத்தில் ஏற்படும் மாபெரும் அரசியல் மாற்றத்தின் மூலம் அந்தப் போராட்டம் வெற்றி பெரும். நாடு கடந்த தமிழீழ அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்து நாம் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்போம். மலேசியாவில் கூட தமிழர்கள் பிச்சைக்காரர்களாக, வந்தேறியவர்கள் என்று ஏளனப்படுத்தப்படுகின்றோம். இந்த நிலையை மாற்றியமைக்க, சினிமா மாயையிலிருந்து வெளியேறி மாபெரும் மாற்றத்தை கொண்டுவர இளைஞர்களே நீங்கள் புறப்படுங்கள். தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்போம்.

பினாங்கு தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் செ.குணாளன்

இனியொரு விதி செய்வோம் என்றதொரு புதுக்கவிதையையும் சமர்ப்பித்தார். இறுதியமர்வில், பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டின் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் லண்டனில் ஒலித்த உலகத் தமிழர்களின் பாதுகாப்பு, அவர்களின் வாழ்வாதார உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்துவதாக இருந்தன. அனைத்து தீர்மானங்களும் தெ வந்திருந்தவர்களின் அமோக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கொள்கையுரை ஆற்றிய,

பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி

உலகத்தமிழர்களின் வாழ்வாதாரம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதை தமது உரையில் மிக எளிமையாக விளக்கினார். இன்று ஈழத்தமிழ் போராட்டம் நசுக்கப்பட்டதற்கு இந்தியா துணைபோன காரணத்தினால்தான் அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற பரவாசி மாநாட்டை நான் புறக்கணித்தேன். இந்தியாவின் அந்த மாபெரும் துரோகத்தை தட்டிக்கேட்காமல் இருந்த தமிழக அரசையும் நான் வன்மையாகக் கண்டித்தேன். இதே கோவை மாநகரில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வந்தாலும், நான் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இனமானமுள்ள எந்தவொரு தமிழனும் அந்தச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டான். உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழர்களின் வேட்கையெல்லாம் தனியொரு தமிழீழம் அமைய வேண்டு என்பதாகவே இருக்கின்றது. அந்தத் தமிழீழ போராட்டம்தான் இன்று அரசியல் பரிமாணம் பெற்று, நாடுகடந்த தமிழீழ அரசாக மலர்ந்துள்ளது. அந்த நாடு கடந்த தமிழீழ அரசின் போராட்டங்களுக்கு உலகத் தமிழர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இன்றைய மாநாடு வெறும் கூடிக்கலையும் மாநாடாக இல்லாமல், உலகத் தமிழர்களுக்கு ஆக்கபூர்வமான நலன்களை ஏற்படுத்தும் மாநாடாக இருக்க வேண்டும். இன்றைய மாநாட்டின் வெளிப்பாடாக உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்படும். அந்த மையம் உலகத் தமிழர் சார்ந்த விவகாரங்களில், அனைத்து தமிழ், தமிழர் நலன் சார்ந்த அமைப்புகளோடு ஒன்றிணைந்து செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டின் இறுதி நிகழ்வாக மாநாட்டுக்குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நன்றியுரை ஆற்றினார்.

இன்றைய மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகையளித்து, மாநாட்டை தொடக்கி வைத்து, கொள்கையுரையும் ஆற்றிய பேராசிரியர் இராமசாமிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்திய அரசு நடத்தும் மாநாட்டையும், தமிழக முதல்வர் பெரும் ஆரவாரத்தோடு நடத்தும் செம்மொழி மாநாட்டையும் புறக்கணித்து விட்டு, நமது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பேராசிரியருக்கு இந்த தமிழினத்தின் மீதுள்ள பற்றை நினைத்து தாம் பெருமையடைவதாக கூறினார். மாநாட்டின் தீர்மானங்களை விளக்கமாக எடுத்துக்கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு மிக முக்கியமான தீர்மானத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். இலங்கையின் வட கிழக்கில், முள்வேலி முகாமெனப்படும் வதை முகாம்களில் வைத்து கொடுமை செய்யப்படும் தமிழர்களை, இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க அடுத்து வரும் 100 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், தமிழகத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் தமிழ் இளைஞர்கள் இலங்கையை நோக்கி கடல்வழியாக பயணப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அடுத்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, மலேசியாவில் நடைபெறும் என்று அறிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முதல் முறை மாநாடு சிறப்பாக நடந்து முடிய அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த அனைவருக்கும் தனது ஏற்பாட்டுக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்ட மலேசிய பேராளர்களைப் பாராட்டிய அவர் வரும் காலங்களில் தமிழர் நலன் குறித்து ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு மாநாட்டிலும், உலகத்தமிழர்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

மாநாட்டு கொடியையும், மாநாட்டு சின்னத்தையும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை ஏற்று நடத்தும் மலேசியாவின் சார்பாக, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி பெற்றுக்கொண்டதோடு, மாநாடு இனிதே முடிவுற்றது.

தடைகள்

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு பிப்ரவரி 6,7இல் இடம் பெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். ஈழத்தமிழர்கள் தங்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேல் போராடியும், அந்த உரிமை கிடைக்கவில்லை. இலங்கைப் போரில் நடந்த மனித உரிமைமீறல்களை ஐரோப்பா, அமெரிக்கா உள்பட ஐநா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்திய அரசு இதுவரை எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. தாய் தமிழகத்திலிருந்து பிழைப்புத் தேடி கர்நாடகா, மகாராஷ்டிரா செல்லும் தமிழர்கள் மிக எளிதாக தாக்கப்படுகின்றனர். மக்களின் வாழ்வுரிமை பிரச்சனை எதுவும் தீர்க்கப்படவில்லை.

குறிப்பாக ஆந்திராவில் பாலாறு, கர்நாடகாவில் காவேரி, கேரளாவில் முல்லைப் பெரியாறு, தமிழக கிழக்கு கடற்கரை கச்சத்தீவு ஆகிய பிரச்சனைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். உலகத் தமிழர் பாதுகாப்புக்காக புதிய தமிழகமும், தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து கோவை வ.உ.சி பூங்கா திடலில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை பிப்.6,7 நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இம்மாநாட்டில் இலங்கை உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் பிப்ரவரி 6 இல் வீரவணக்கம், அஞ்சலி, கருத்தரங்கு ஆகிய நிகழ்வுகளும் பெப்ரவரி 7 இல் பேரணியும் நடத்தப்படுகின்றது. இந்த மாநாட்டிற்காக டிச 15ஆம் தேதி முதல் சைக்கிள் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை பிப்ரவரி 6,7 ஆகிய தேதிகளில் நடத்த அனுமதி கோரி புதிய தமிழகம் கட்சியினர் கோவை மாநகர காவல்துறையினரிடம் விண்ணப்பித்தனர். இந்த மனுவை கோவை காவல்துறை பரிசீலிக்கவில்லை. மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கோவையில், நடத்த திட்டமிட்டிருக்கும் ‘உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதிகோரும் மனு தொடர்பாக, புதிய தமிழகம் கட்சி சார்பில் அளிக்கப்படும் விவரங்களை முழுமையாகப் பரிசீலித்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதி கோரும் புதிய தமிழகத்தின் மனுவை நிராகரித்து, கோவை மாநகர காவல்துறை துணை கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுமீது விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன் ”கோவை மாநாட்டுக்கு அனுமதி கோரும் மனுவைப் பரிசீலிக்கும்போது கிருஷ்ணசாமி தரப்புக்குக் காவல்துறை எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. எனவே, இந்த மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய தமிழகத்தினரின் மனுவைக் கோவை காவல்துறை மீண்டும் பரிசீலித்து பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

1. தமிழீழ விடுதலைப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தமிழ் நிலத்து தியாகதீபம் முத்துகுமார் மற்றும் உலகெங்கிலும் ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிர் ஈந்த 19 தியாகிகளுக்கும் இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகின்றது.

2. தங்களது சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காக 60 ஆண்டுகளாகப் போராடும் ஈழத்தமிழர்கள் மீது, இனப்போரை ஏவி தமிழின அழிப்பை நடத்திய இராஜபக்சே அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது.

3. வன்னிப்போரில் ஒரே நாளில் 70,000 தமிழர்களைக் கொலை செய்து, போரின் முடிவில் ஒரு இலட்சம் தமிழர்களைப் பலியாக்கி, 3 இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் வதை செய்யும் இராஜபக்சே அரசைக் கண்டிக்காமல் அமைதி காத்து, அதற்குத் துணையாக இருக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

4. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களையும், மனிதஉரிமை மீறல்களையும் குறிப்பிட்டு நடவடிக்கையில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கின்றோம்.

5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாவதை இம்மாநாடு வரவேற்கின்றது. அது இன்றைய காலத்தின் கட்டாயம் என இம் மாநாடு கருதுகின்றது.

6. மலேசியத் தலைமை அமைச்சரது சிறப்பு அதிகாரியின் சமீபத்திய சுடுசொற்கள், தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதாகவும் தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக இழிவுப் படுத்தியதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.

7. மலேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

8. மலேசிய மலையகங்களில் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

9. மலேசியாவில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பானியர்களால் வலுகட்டாயமாக சயாம் மரண ரயில் பாதைப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொலையுண்ட லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ஜப்பான் நாடு நட்டஈடு தரப்பட வேண்டும்.

10. மலேசியாவில் மலாயா பல்கலைக் கழகத்தின் இந்தியப்பிரிவில் தமிழ்ப்பகுதித் தலைவர் நீக்கம் செய்யப்பட்டு, ஒரு மலாய்காரர் பதவி ஏற்றுள்ளார்; கூடவே இந்தியப் பிரிவு தென்கிழக்கு ஆசிய ஆய்வுக்கூடமாக மாற்றம் காணும் என்று அறிக்கையில் கூறியபடி இயல்பாகவே இந்திக்கும், சமஸ்கிருத மொழிக்கும் படிகள் கட்டி பாதைகள் அமைக்க தயாராகியுள்ளதை மலேசியத் தமிழர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியத்திற்கும் இடமில்லை என பேரிடியாக அறிவித்துள்ளனர். இதற்கு மலேசிய அரசாங்கத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

11. மலேசியாவில் இயங்கிவந்த 1500 தமிழ்ப்பள்ளிகள், இன்று 524 பள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தமிழ்க் கல்வி மறுப்பு கைவிடப்பட்டு தேவையான தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி தமிழாசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

12. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் மக்களைக் கணக்கில் கொண்டு இங்குள்ள இந்தியத் தூதரகங்களில் தலைமைப் பொறுப்புகளில் தமிழரையே நியமித்தல் வேண்டும்.

13. தமிழ்நாட்டில் விளை நிலங்களை மொத்தமாக ஆலைகளுக்கு விலைக்கு வாங்கி, தரிசாக்குவதும், தமிழ் நிலங்களை மாற்றாரது வணிகக் குழுமங்களுக்கு சொந்தமாக்குவதுமான அபாயம் நடைபெற்று வருகின்றது. இதைத் தடுத்து நிறுத்த உடனடியாக தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.

14. ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற்கு நியாயமாகச் சேர வேண்டிய தமிழக மத்திய ஆட்சியாளர்களின் நதிநீரைப் பெற்றுத்தருவதில், பலவீனத்தைப் பயனபடுத்தி அரசு துரோகம் இழைக்கின்றது என இம்மாநாடு குற்றஞ்சாட்டுகின்றது.

15. தமிழ்நாட்டின் சொத்தான கச்சத்தீவைத் திரும்பப் பெற 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு தாரை வார்ப்பு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்.

16. 1983 முதல் இன்றுவரை 25 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையினர் மீது கொலைக் குற்ற வழக்கைப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

17. தமிழக இளைஞர்களைத் திசைதிருப்பி வரும் போதைப்பழக்கம், திரைப்படப்பித்து, லாட்டரி மோகம் ஆகியவற்றை அனுமதிக்கும் ஆபத்தான போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்.
18. இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும்.

19. அண்மை காலங்களில் தமிழ்நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக அரங்குக் கூட்டங்களுக்குக்கூட அனுமதி மறுப்பதாகவே காவல்துறையின் போக்கு உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்றுதான் உரிமைகளைப் பெற வேண்டும் என்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலநிலை நிறுத்தப்படாவிட்டல் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென இம் மாநாடு எச்சரிக்கிறது.

20. இந்திய நாட்டிலேயே பெங்களூர், மும்பை, தலைநகர் டெல்லி போன்ற நகரங்களில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டு அவர்களின் ‘வாழ்வுரிமையை’ உறுதி செய்ய வேண்டுமென மத்திய,மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

21. இன்று பிப்ரவரி 6,7-2010 இல் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்குப் பின், 100 நாட்களுக்குள் இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டு வதைப்பட்டு கொண்டிருக்கும் 3 1/2 இலட்சம் தமிழர்களைத் தங்களது சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யக் கூடாது, சிங்கள இராணுவம் உட்பட பிறநாட்டு இராணுவம் அனைத்தும் தமிழர் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் தமிழகத்திலிருந்து ஒரு இலட்சம் இளைஞர்கள், இலங்கை நோக்கி புறப்பட உள்ளோம் என்பதை இம்மாநாடு பறைசாற்றுகின்றது

Resolutions of the World Tamil Protection Conference Place: Va.Vu.Si. Field, Koyambatore

Date: 6-7 February 2010

1. This Conference salutes the slain warriors, men and women, who fought for Tamil Eelam, Muthukumar and the 19 martyrs of Eelam.

2. This Conference severely reprimands the Rajapakse regime for executing a genocidal war to silence the voice of Tamils who for 60 years have been demanding for self-determination and protection.

3. This Conference also severely reprimands the Indian Government and the Government of Tamil Nadu, which have stood by the Rajapakse regime in the murder of 40,000 civilians in the fourth Eelam war, and which have been responsible for the death of 100,000 Tamils in toto, and a further 350,000 Tamils now intered in detention camps.

4. This Conference reprimands the careless attitude of the UN and its inability to act against the war crimes and crimes against humanity committed by Sri Lanka.

5. This Conference welcomes the Trans-national Tamil Eelam Government, considering it as a dire necessity.

6. This Conference reprimands the special aide to the Prime Minister of Malaysia who threatened to revoke the citizenship of Tamils, and who characterized the Tamils as beggars.

7. The attack and desecration of places of worship in Malaysia must be stopped.

8. Japan must pay compensation to the Tamils for the conscription of slave labour for the infamous Burma-Siam Death Railway.

9. The Head of Department of the Tamil Department in the Faculty of Sociology and Anthropology has been forcibly removed and replaced by a Malay person. The Department has been reclassified as the South Asian Studies Department thus creating the possibility for official sponsorship of Hindi and Sanskrit. In the mean time Tamil Literature as a subject in SPM examination has been abolished. These manouvers by the Malaysian government are totally unacceptable to this Conference.

10. The number of Tamil Schools in Malaysia have reduced from 1,500 to 524. This must stop and new Tamil Schools built where there is a need.

11. Tamils predominate in countries like Malaysia, Sri Lanka and Singapore but the Indian High Commission have consistently appointed non-Tamil ambassadors. This must change and Tamil ambassadors appointed in these countries.

12. Ancestral land in Tamil Nadu have been endangered when cleared and sold off to factories and foreign families. Tamil Nadu Government must take immediate steps to bring about a law to prevent this.

13. This Conference accuses the Central Government of India of treasonable stance for exploiting the political weakness of Tamil Nadu Government and not enforcing the equitable water settlement with Andhra, Karnataka and Kerala.

14. The treaty that ceded sovereignty of Katchaitheevu in 1974, and ratified in 1976, must be abrogated and the island returned to Tamil Nadu.

15. Since 1983 more than 400 fishermen have been murdered in the high seas by the Sri Lankan Navy Proper judicial action has to be instituted against these aggression

16. Tamil Nadu Government must cease supporting industries such as the movies, lottery and alcohol, that cultivate evil and way lay the youth.

17. In recent times, freedom of speech, freedom of expression and opinion has been under attack in Tamil Nadu. A simple act of hiring a hall requires a court order for the Police to grant permission. This Conference warns that this insult to civil rights must desist or the Government will face a severe backlash.

18. Tamils in India, esepcially in Bangalore, Mumbai and the capital sity New Delhi, are often attacked and their property damaged. This must stop, and this Conference asks the Central Government to take action to protect the civil rights of Tamils.

 

கோயம்பத்தூரின் முதலாம் உலகத்தமிழர் மாநாடு

“புதிய தமிழர் விழிப்பும் எழுச்சியும்” 

பொன்ரங்கன், மலேசியா
தமிழனாகப் பிறந்து, தமிழனாக வாழ்வோம். “எழுவோம்! எழுவோம்!! தமிழராய் எழுவோம்!!!” எனும் புரட்சி முழக்கத்- துடன் நடந்து முடிந்த உலகத்தமிழர் முதலாம் மாநாட்டு முழக்கம் இன்னும் நம் காதுகளிலும், மனங்களிலும் எழுச்சி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூர் வா.உ.சி. மைதானத்தில் சுமார் பத்தாயிரம் தமிழ்த்தூதுவர்கள் முன்னிலையில், மலேசிய நாட்டின் 89 பேராளர்களும் கலந்து தமிழுக்கும், தமிழனுக்கும் சிறப்பு சேர்த்த அழகு நம் கண்களுக்கு குளுமையாக இருந்தது.

ஓர் இனத்துக்கு அடையாளம் தனது மொழி. மொழியையும் இனத்தையும் இழந்து விட்டவனுக்கு முதுகெலும்பு உடைந்த, மரியாதையில்லா வாழ்வாகும்.

மலேசிய பேராளர்கள் 89
பினாங்கு துணை முதல்வர் முனைவர் மாண்புமிகு ப. ராமசாமி தலைமையில் மலேசியப்பேராளர் குழுவினர், தமிழகம் பயணப்பட்டு, பிப்ரவரி 4ஆம் தேதி கோயம்பத்தூர் அண்ணா- மலை விடுதியில் இரவு 9 மணிக்கு அறிமுக சந்திப்புக்கூட்டம் நடத்தினோம்.

மாநாட்டுத் தலைவரும் புதிய தமிழக கட்சி தலைவருமான முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி, போர்ட்டிக்சன் எம்.எல்.ஏ. ரவி, குணசேகரன், அம்பாங் டாக்டர் செல்லதுரை, சமுக சேவையாளர் சாமுவேல்ராஜ், கேமரன்-மலை சிம்மாதிரி, ஈப்போ கலையரசு, ஜோகூர் கண்ணா, சிவகாமி, ஐ.பி.எப். மதியழகன், ஜோகூர் செல்வக்குமார், மேஜர் கிருஷ்ணன், பூச்சோங் முரளி, மலாக்கா கணபதி, ரவாங் இந்து சங்க கணமூர்த்தி, மலேசிய தமிழ் அறவாரிய உதவித்தலைவர் பொன்ரங்கன், ஜோகூர் சிவகாமிதேவி போன்ற இன்னும் குறிப்பிட்ட பல பிரதிநிதிகளும் மாநாட்டு ஏற்பாட்டுக்- குழுவினருடன் நிகழ்வுகளுக்கு கடைசி நேர நிர்ணய தொகுப்புகளை ஆராய்ந்து முடிவு செய்தோம்.

தாய் தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருந்தும், இந்தியா ஒரு வல்லரசு நாடாக இருந்தும், ஈழத்தமிழர்களின் உரிமைப்போ- ருக்கு உதவாது ஊமையாகிப்போனதை, இந்தியாவில் தமிழர்களுக்கு தனி அங்கிகாரம் இல்லை என்பதால், இனி தமிழன் தனித்து இயங்க வேண்டிய தருணத்தில் தனி “தமிழர் தேசியம்” உருவாக்கத்திற்கு உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு வழி வகுத்துள்ளது.

உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் இனி தனித்தமிழர்களாக எழ வேண்டும். தாம் வாழுகின்ற நாடுகளில் தமிழும், தமிழ் இனமும் காப்பாற்றப்பட ஒவ்வொரு நாட்டிலும் தமிழர் தேசியம்வழி இணயவேண்டும்.

உலகத்தமிழனுக்கு “ஆபத்து” என்ற அறிகுறிகள் நமக்கு தென்படுகிறது. உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்த தமிழக அரசு கொடுத்த கெடுபிடிகளையும் கடந்து, நீதிமன்ற உத்தரவு வழி மாநாடு நடைப்பெற்றது.

உலகத்தமிழர்கள் தனித்தமிழர்களாய் ஒன்றிணையும் காலம் கனிந்து விட்டது. கடந்த பல ஆண்டுகளாக தமிழ் நாட்டை விட்டு, புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள், “தமிழகம்” நமது என்ற உண்மையை மறந்து, ஈழம் நமது நாடு என்ற உரிமையை மறந்து, அடங்கிக்கிடப்பது நமது வீரப்பரம்பரைக்கு அவமானமாகும்.

கோயம்புத்தூர் மாநாட்டு பிரகடனமானது ஜாதி, மதம், அரசியல், இயக்கங்களை கடந்து தமிழர் தேசியம் ஆளும் பேரியக்கத்தின் கீழ் இணைய வேண்டும் எனும் கொள்கையில் தமிழராய் எழுவோம் என்று முழக்கமிட்டு பத்தாயிரம் பேர் முன்னிலையில், நம் முதற்கட்ட குரலை ஒலிக்கச்செய்துள்ளோம்.

89 மலேசியப்பேரளார்களின் தலைவரும் பினாங்கு மாநில துணைமுதல்வருமான மாண்புமிகு டாக்டர் ப. ராமசாமி அவர்கள் மாநாட்டை கொடியுயர்த்தி தொடக்கி வைத்த பெரு மையும் பேருரையும் உலகத்தமிழர்களுக்கு எழுச்சியையும், புரட்சியையும், தீரத்தையும் கொடுத்தது என்று நாம் பதிவு செய்யலாம்.

மிகப்பெரிய மாநாட்டு மேடையும் வ. உ. சி. மைதானமும் முழுக்க கட்டப்பட்ட மேடைகுவிப்பும், மக்கள் கூட்டமும் புதிய தமிழக கட்சி கொடியும், வாகனங்களும், கண்காட்சி கூடாரங்களும் நம்மை பிரமிக்கச்செய்தன.

பத்தாயிரம் பேருக்கு உணவு கொடுத்த தொண்டர்களும், உணவுப்பந்தலும் குழுமியிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் ஒரு “தமிழ் தேசியம்” காண வேண்டும் என்ற உணர்வுப்பூர்வ உண்மையை நம்மால் அனுபவிக்க முடிந்தது.

மாநாட்டு தொடக்க விழா உரைக்குப்பின் “தமிழராய் எழுவோம்” என்ற மாநாட்டு தலைவரும் புதிய தமிழக தலைவருமான டாக்டர் க. கிருஷ்ணசாமியின் உரை, நம் இளம் தமிழ்த்தோழர்களின் உணர்வை பிசைந்திழுத்த வேகம் அவர்களின் கர ஒலிகளில் தென்பட்டது.

தமிழ்நாட்டு தமிழர்களைத்தவிர, மலேசியா, சிங்கப்பூர், கனடா, கேரளா, தெலுங்கு தேசம், டெல்லி என நாடு கடந்து இந்திய நாட்டு பிற மாநில தமிழன் உணர்வுமிகுந்த தமிழின தோழர்களை சந்திக்க முடிந்த மகிழ்ச்சி, மாநாட்டுக்கு மனநிறைவை தந்தது எனலாம்.

வின் தீவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு TSS மணி மாநாட்டு நிகழ்வை மிக அழகுடன் வழி நடத்தி, தமிழின கருத்து வேட்கைகளை ஆய்வுப்பூர்வமாக முன்வைத்த பாங்கு, மாநாட்டு மக்களை நிலைக்கொள்ளச்செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய பேச்சாளர்களில் சமூக சேவையாளர் திரு சாமுவேல்ராஜ் அவர்களின் உரை இளைஞர்களை நோக்கி தமிழர் தாகமும் வேகமும் நிலைநாட்டி பெரும்பரபரப்பை உண்டுபண்ணியது.

பிறகு நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு ரவியும், மாண்புமிகு குணசேகரனும், பேராக் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பிமிகு குலசேகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மறுநாள் ஜோகூர் மாநில சிவகாமியும், தமிழ் அறவாரிய உதவித்தலைவருமான பொன்ரங்கனும் உரை நிகழ்த்தி பல கருத்துக்களை முன் வைத்தனர்.

இவர்களுடன் தமிழ்நாட்டின் பல தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களின் மாநாட்டு உரை மக்களுக்கு உந்து சக்தியாக அமைந்தது.

மாநாட்டின் முடிவில் ஒரு பிரகடனமும், 20 தீர்மானங்களும் வாசிக்கப்பட்டு மனமகிழ்வுடன் ஏற்கப்பட்டன.

குறிப்பாக மலேசிய தமிழ்மொழி, தமிழ்ப்பள்ளிகளின் நிலை, எஸ்.பி.எம். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் பாடங்களின் தவிப்- பும் தவிர்ப்பும் பற்றியும் நாடு கடந்து தீர்மானமாக எழுதப்பட்டு மாநாட்டில் முன்மொழியப்பட்டது. மலேசியாவில் தமிழ் இடை நிலைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்- கையும் முன்வைக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வரின் அறிக்கைப்படி தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டு, தமிழ்ப்பள்ளி எழும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு சென்றதின் பயனாக உலகத்தமிழர்களின் வாழ் நிலை, சமூகம், நமது கலை, பண்பாட்டு பாதிப்புகளின் துரோக விளைவுகளை நம்மால் உணர முடிந்தது.

புதிய தமிழர் தமிழ்நாடு மலரவேண்டும். இதற்கு தமிழர் தேசியம் பிறக்க வேண்டும் என்று முதலாம் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் விளைவாக கொண்டுள்ளோம்.

தமிழர் தேசியம் உலகம் முழுவதும் பிறந்து சமூகம், பொருளாதாரம் எனும் இரண்டு சமப்படகில் ஒன்றோடு ஒன்று இணைப்பயணம் செய்து தமிழர் தேசியம் காணவுள்ளது.

நமக்கு ஒரு நாடு வேண்டும். அதற்குமுன் தமிழர் தேசியம் என்ற உணர்வும் உரிமையும் கடப்பாடும் நம் இதயத்துடிப்பில் பதிவாக வேண்டும் இதற்கு முதல் கட்டமாக இந்தியர் திராவிடன் என்ற சிறைச்சாலை கட்டமைப்பிலிருந்து விடுபட்டு, ஈழம் பிறக்க உலகத்தமிழன் உருவாக்கம் பெறவேண்டும்.

சில இதழ்களின் பார்வையில்.. உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு
உலகத் தமிழர்களைக் காப்பது யார்?
சூரியதீபன்
இலங்கையின் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் நிலையை நேரில் கண்டறிவதற்காக தமிழகத்திலிருந்து திமுக கூட்டணிக் கட்சியினரின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு கடந்த வருடம் இலங்கைக்குச் சென்றது. முள்வேலிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த அவர்களிடம் ‘பேசுவதற்காக’ இலங்கை ராணுவத்தால் யாழ் நூலக மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களிடம் பேசி விட்டுத் திரும்பியபோது குழுவின் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, “உலகில் உள்ள எட்டுக் கோடித் தமிழருக்கும் கலைஞர்தான் தலைவர். நீங்கள் வேறு ஏதேனும் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாராம்.

‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என வீறாப்பாகத் தொடங்கி, ”மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என முதுகு வளைந்து, மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலும் ஆட்சி என மண்டியிட்டு, அரசு அதிகாரமே எமது உயிர் என வீழ்ந்து கிடக்கின்ற ஒரு கட்சியின் தலைவரை, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ராணுவத்தின் கொடூரமான தாக்குதலால் நிலைகுலைந்து போன தமிழர்கள் தம்மைக் காப்பாற்றுமாறு கதறியபோது, காங்கிரஸ் கட்சியோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு தன் கபட நாடகங்களால் தமிழ் மக்களை வஞ்சித்த, உலகெங்குமுள்ள தமிழர்களால் துரோகி என வசைபாடப்படுகின்ற ஒரு கட்சியின் தலைவரை எட்டுக்கோடித் தமிழர்களுக்குமான ஒரே தலைவராக முன்னிறுத்துவதற்குக் கட்சியும் அரசும் நாள்தோறும் ‘விழா’ நடத்திக்கொண்டிருக்கிறது.

கோட்டைக் கொத்தளங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவரும் பல வகைகளில் சரிக்கட்டப்படுகிறார்கள். முன்னரும் மந்திரிப் பிரதானிகளும் கோலோச்ச நகரின் மையத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது புதிய தலைமைச் செயலகம். மன்னர் கோலோச்சும் இடத்தையும் பவனி வரும் இடத்தையும் தூய்மைப்படுத்த இருக்க இடமற்று சாலையோரங்களிலும் கூவம் நதியின் கொசுக்கள் பிடுங்கும் கரைகளிலும் சாக்கடையோரங்களிலும் அடைக்கலம் தேடியிருந்த லட்சக்கணக்கான விளிம்புநிலை மக்கள் தம் வாழிடங்களிலிருந்து கண்காணாத இடங்களுக்கு விரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மாசுபடுத்தப்பட்ட நீராதாரங்கள், நதிநீர்ப் பிரச்சினைகள், பன்னாட்டு நிறுவனங்களின் நில அபகரிப்பு முதலான காரணங்களால் நலிந்து போயுள்ள விவசாயச் சமூகம் பிழைப்புக்காக நகரங்களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றது. நெசவு முதலான பாரம்பரியக் கைத்தொழில்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில். மன்னர் பாராட்டு விழாக்களில் திளைத்துக்கொண்டிருக்க இளவரசர்களும் இளவரசிகளும் திருவீதி உலாக்களில் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் அரிசியையும், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும் வழங்கிப் பெருமைதேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏழையாழைகளுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி; பேராசிரியர்களுக்கும் அறிவுத் துறையினருக்கும்? வாழ்த்துப்பாக்கள் பாடவும் ஆரத்தி எடுக்கவும் அறிஞர்களுக்கும் ஒரு வாய்ப்பு வேண்டாமா? அதற்குத்தான் தமிழ்ச் செம்மொழி மாநாடு,

கோவை செம்மொழித் தமிழ் மாநாடு பற்றி இடையறாது லெளியாகிக்கொண்டிருக்கும் அறிவிப்புகளை வரிசைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கே தமிழர்கள் திணறிக் கொண்டிருக்கின்றார்கள். மாநில அரசின் அதிகாரிகள், அமைச்சர்களில் பாதிப் பேருக்கு மாநாட்டை நடத்தி முடிக்கும்வரை ஊண் உறக்கம் இல்லை. (மீதிப் பேருக்குப் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மார்ச் 13ஆம் தேதிக்கு முன்பாகக் கட்டி முடித்து முதல்வர் கையில் ஒப்படைத்தாக வேண்டிய கட்டாயம்) மாநாடு முடிவு பெற்ற பின்னர் மன்னர் இருக்கையைக் காலிசெய்தால் “அன்னைக்கு மகுடம் சூட்டிட, காத்திருந்தார் தமிழ்மகன்; சூட்டியதும் மகுடம் துறந்தார்” எனத் தமிழ்ப் பேரறிஞர்களும் கவிஞர்களும் நாக்கில் வார்த்தைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றார்கள். யாழ் மண்டபத்தில் பாலு சொன்ன வாசகங்களை ‘உண்மை’யாக்கும் முன்னெடுப்புக் காரியங்கள்தாம் இவை. ஒரு லட்சம் தமிழ் உயிர்களுக்குப் பதிலாய், ஒரு லட்சம் புகழ் மொழிகளா?

முதல்வருக்குப் புகழாரம் சூட்ட தமிழ்ப் பேரறிஞர்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் அதே கோவை மாநகரில் பிப்ரவரி, 6, 7 நாட்களில் க.கிருஷ்ணசாமியின் தலைமையிலான புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ‘உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’ நடைபெற்றதை ஆளும் திமுக அரசோ, முதல்வர் கருணாநிதியோ வரவேற்பார்கள் என எதிர்பார்ப்பது பேதமை. கருணாநிதியின் உலகத் தமிழ் நாயகன் பட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிகழ்வு அது.

தமிழ்நாட்டில் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி ஆகிய அனைத்து நிலைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது.

மொழிவாரி மாநிலங்கள் உருவாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழகத்தின் அடிப்படை நீராதாரப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படவில்லை.

தமிழகத்தின் அங்கமாக விளங்கிய கச்சத்தீவு தமிழக மக்களின் விருப்பமின்றி இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதன் விளைவு, தமிழக மீனவர்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வீட்டுமனை இல்லை. எனினும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் செயல் வேகவேகமாக நடந்து வருகின்றது.

வேலை தேடி இலங்கை, பர்மா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிஜி, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழர்களும், மும்பை, பெங்களூர், தில்லி முதலிய பெரு நகரங்களிலும் வசிக்கும் தமிழர்களும் சுய அடையாளங்களோடு சுதந்திரமாக வாழ முடியாத பாதுகாப்பற்ற நிலை.

இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனித உரிமை மீறல் என வர்ணிக்கப்படும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பின்னர் முள்வேலி முகாம்களுக்குள் வதைபடும் மூன்று லட்சம் தமிழர்களின் நிராதரவான நிலை. பதினைந்து லட்சம் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் அகதிகளாகத் தவிக்கும் அவலம் என்பன போன்ற பிரச்சினைகளைக் கவனப்படுத்தும் துண்டறிக்கை ஒன்றின் மூலம், தமிழர்களை மீட்டெடுக்கவும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணவும் வலியுறுத்தி கோவையில் 2010 சனவரியில் ’உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்பெறும் என அறிவித்தது புதிய தமிழகம். எட்டுக்கோடித் தமிழர்களுக்கும் ஒரே தலைவராகக் கருணாநிதி முடிசூடிக்கொண்டு விட்ட பிறகு, இப்படியொரு மாநாட்டை நடத்த யாராவது முனைந்தால் அதைத் தமிழினத் தலைவரின் தலைமையிலான தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளும் என்பது யூகிக்க முடியாததல்ல.

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான இலச்சினை அக்டோபர் 29இல் வெளியிடப்பட்டது. 2009, அக்டோபர் 17இல் அறிவிப்பை வெளியிட்ட அமைப்பாளர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர் கூட்டத்தில் போர்க்குற்றங்களுக்காக “இராசபக்ஷேயவைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவோம்” என அறிவித்தார்.

ஒன்பதாவது உலகத் தமிழர் மாநாட்டை சனவரி 21இல் நடத்துவதென செப்டம்பர் மத்தியில் கருணாநிதி அறிவித்தார். உலகத் தமிழ் மாநாடு பற்றிய அறிவிப்பு வந்ததும் எதிர்வினையாற்ற சமூக அக்கறையுடைய படைப்பாளிகள் 23.09.2009 இல் அறிவிப்பு செய்து, 29.09.2009 அன்று கூடி தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பை அங்கீகாரத்துக்கு உருவாக்கிக்கொண்டார்கள். அதிகாரத்தின் முன் பணிந்தும் வளைந்தும் போய்விட்ட தமிழ் மேதமைகள், கலை, இலக்கியவாதிகள், அரசியலாளர்களைப் போல் அல்லாமல் அந்த அமைப்பு தன் எதிர்ப்பைத் தெரிவிக்க உறுதி பூண்டது.

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் நொபுரு கராஷிமா ஆராய்ச்சி மாநாட்டுக்குரிய கால அவகாசம் இல்லையெனக் கூறி ஒப்புதல் அளிக்கவில்லையாதலால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பதிலாக, முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி மறுபடியும் தன்னிச்சையாக அறிவித்தார். செம்மொழி மாநாட்டுக்குப் போட்டியாக, தன் துரோகங்களை அம்பலப்படுத்தும்விதமாக இப்படியொரு மாநாட்டை நடத்தத் துணிந்தவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா தமிழினத் தலைவர்?

மாநாட்டை நடத்தவிடாமல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும் திமுகவும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல் செயல்பட்டன.

மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரும் விண்ணப்பம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கோவை மாநகர ஆணையரிடம் கொடுக்கப்பட்டது. சனவரி 15இல் காவல் துறை ஆணையர் அந்த மாநாட்டுக்கு அனுமதியளிக்க மறுத்தார். கருத்துரிமைக்கெதிரான அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநாட்டு அமைப்பினர் நீதிமன்றம் சென்றனர். மாநாட்டுத் தேதிக்கு 6 நாட்களே இருந்தநிலையில் ஆணையரின் தடையை ரத்து செய்த உயர்நீதி மன்றம் மறுபடியும் விண்ணப்பிக்குமாறு மாநாட்டு அமைப்பாளர்களுக்கு வழிகாட்டியது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிப்ரவரி முதல் நாள் அதே மாநகர காவல் துறை ஆணையரிடம் மீண்டும் விண்ணப்பித்தது அமைப்பு. பிப்ரவரி நான்காம் தேதி மாநாடு நடைபெறுவதற்கு இரண்டே இரண்டு நாட்கள் எஞ்சியிருக்கையில் அனுமதி அளிக்கப்பட்டது.

இரண்டொரு நாட்களில் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டிய நெருக்கடிக்குட்படுத்தப்பட்டனர். அழைப்பிதழ் அச்சிடக்கூட அவகாசமில்லை. நிகழ்ச்சி நிரலைத் தட்டச்சு செய்துதான் செய்தியாளருக்கு வழங்கினார்கள். திட்டமிட்டிருந்தபடி அரங்கமேடையின் பின்புலத்தில் இலச்சினையைப் பொருத்த முடியவில்லை. உரிய அவகாசமின்மை காரணமாக காகிதத்தில் வரைந்த கொடியைத் துணியில் ஒட்டி ஏற்றினார்கள்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நடத்தும் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், பேரணிகள், மாநாடுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் நீதிமன்றத்துக்குச் சென்று தடைநீக்கி ஆணை பெறுவதும் தமிழகத்தில் வழிமுறையாகிவிட்டது. மலிவான தந்திரங்கள் மூலம் விமர்சகர்களின் குரல்வளையை நசுக்கும், இரும்புக் கரங்கள் கொண்டு எதிர்ப்புகளை ஒடுக்கும் இத்தகைய தந்திரமான அரசியல் கலாச்சாரத்தின் சூத்திரதாரிகளாக இன்று அதிகாரத்திலிருக்கும் திமுக முன்பு இதே வகையான ஒடுக்குமுறைகளுக்குள்ளானது இப்போது பழைய வரலாறாகிவிட்டது.

“தடைசெய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றிப் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது குற்றமல்ல; அவ்வாறான இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதே குற்றம்” என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னும், மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் படம் பொறித்த பனியன்கள், நாட்காட்டிகள், ஈழம் பற்றிய குறும்படங்கள் ஆகியனவற்றைப் பறிமுதல் செய்து மூவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தது காவல் துறை. மதுரையிலுள்ள கருத்துப்பட்டறை வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு, முல்லைப் பெரியாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மார்க்சின் பொருள் முதல் வாதம், ஏங்கெல்ஸின் குடும்பம் அரசு தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அ.மார்க்ஸ், ஷோபாசக்தி குழுவினரின் ஈழப் போராட்டத்துக்கு எதிரான பரப்புரைகளுக்கு எதிர் வினையாக வெளியிடப்பட்ட அவதூறுகளை முறியடிப்போம் என்ற தொகை நூல் போன்றவற்றையுங்கூடப் பறிமுதல் செய்தது காவல் துறை. நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன் முதலிய இதழ்களில் தவறாமல் பிரபாகரனின் படங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றனவே அவற்றைப் பறிமுதல் செய்வீர்களா? எனக் கேள்வி எழுப்பிய இளம் வழக்குரைஞர் கலையரசன் மீதும், பேரா. தமிழ்வாணன் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்ததிலிருந்து, முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடுவரை தம் எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவுசெய்து வரும் தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், “எலும்புக் கூடுகள்மீதும், நடைப்பிணங்கள்மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசாரத்தை விநியோகித்தனர். அவற்றைப் பறிமுதல் செய்ததோடு ‘அரசுக்கு எதிராக அனுமதி பெறாமல் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாய் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்தத் தடைகளையெல்லாம் மீறி வாழ்வுரிமை, மண்ணுரிமை, மனித உரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை நிலைநாட்டித் தமிழ் மக்களைப் பாதுகாத்திட உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்ற புதிய புரிதலுக்கு வந்திருந்தார்கள் மாநாட்டுக் குழுவினர்.

வயிற்றுப் பிள்ளையைக் காக்க, கர்ப்பிணித் தாயை ஊட்டம் கொடுத்துப் பேண வேண்டும். தாயைப் பேணாதபோது, எலும்பும் தோலுமான நோஞ்சான் பிள்ளைதான் பிறக்கும். தமிழர்களைச் சிதைத்துவிட்டுத் தமிழை வளர்ப்பது எப்படி என்ற ஆதாரமான கேள்விக்கு விடை தராமல் செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தும் பெருமிதத்தில் இருக்கிறார் கருணாநிதி.

“தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எவருடைய தயவுமின்றி, நமக்குள் இருக்கிற அனைத்து வேறுபாடுகளையும் துறந்து இணைந்து செயல்படுவோம்” என்னும் முழக்கத்துடன் மாநாட்டுத் தலைவர் கிருஷ்ணசாமி தொடக்க உரையாற்றினார். அவரது நிறைவுரையும் இக்கருத்தையே வலியுறுத்தியது. தமிழர்கள் பாதுகாக்கப்பட ‘சாதி மறுப்போம், மதம் மறுப்போம்; கட்சி மறுப்போம்’ என்று சொல்கிற சுயபரிசோதனை முயற்சியாக இந்தப் பிரகடனம் அமைந்ததது.

உலகத் தமிழர் அனைவரின் பாதுகாப்பும் அதற்கான முழுப்பொறுப்பும் தன்மேல்தான் ஏற்றப்பட்டிருப்பதாக எண்ணுகிற கருணாநிதியின் புனைவுகள் இந்த மாநாட்டால் உடைபட்டிருக்கின்றன. அவ்வாறு கருதி தம் தலைவரைப் புகழ் உச்சியில் உப்பவைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் குழாத்தின் பெருமைகளும் சிதைந்திருக்கின்றன. இதன் காரணமாகவே இந்த மாநாட்டை இருட்டடிப்புச் செய்ய அனைத்து யுக்திகளையும் அரசோடு இணைந்து மேற்கொண்டது திமுக. அந்த யுக்திகளில் சில,

1. மாநாட்டுத் தேதிக்கு முந்தைய நாளான பிப்ரவரி 5ஆம் தேதி கோவையில் பள்ளி மாணவிகளை அணிவகுக்கச் செய்து செம்மொழி மாநாட்டு விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நடத்தியது அரசுத் தரப்பு. மாநாடு நடைபெற்ற அன்று கோவையிலிருந்து ஊட்டி வழியாக ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு ‘மோட்டார் வாகன’ பிரச்சார அணிவகுப்பைத் தொடங்கி வைத்தது.

2. மாநாடு நடைபெற்ற அதே நாட்களில் கோவையை அடுத்துள்ள திருப்பூரில் கனிமொழி, ஜெகத் கஸ்பார் இணைந்து வழங்கிய “நம்ம சங்கமம்”.

3. இரண்டாவது நாள் மாநாட்டின் போது கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுத்தை தொல். திருமாவளவனின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதன் மூலம் ஊடகங்கள் தம் பங்கைச் சிறப்பாக ஆற்றின. (அரசு விளம்பரங்கள் இல்லாமல் எப்படிப் பத்திரிகை நடத்துவதாம்?)

பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, காசி ஆனந்தன், சீமான் போன்றோர் அழைக்கப்படக் கூடாது என்னும் காவல் துறை ஆணையர் வாய்மொழியாக வழங்கிய நிபந்தனையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள். மலேசியப் பேராளர்கள் மட்டுமே (80 பேர்) வருகை தந்திருந்தார்கள்; அறிவிக்கப்பட்டவாறு பிற நாடுகளிலிருந்து பேராளர்கள் எவரும் பங்கேற்கவில்லை. குறிப்பாக, ஈழத்திலிருந்து எவரும் வரவில்லை.

மூன்று நாட்கள் முன்புதான் அனுமதி கிடைத்ததென்றாலும், அழைப்பிதழ், பதாகைகள், விளம்பரம் போன்று முன்கூட்டிய பணிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். திட்டமிடலும் பொறுப்பும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். திட்டமிடல், பணிமேற்கொள்ளல், முடிவுகளைச் செயல்படுத்தல் என்பனவற்றைத் துணை சக்திகளை இணைத்துக்கொண்டு மேற்கொள்வதே தலைமைப் பண்பு. எழுத்துலக அறிவுஜீவிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டுமா? அவர்கள் எந்த எல்லை வரை வருவார்கள் என்ற விசயம் எல்லோரும் அறிந்ததுதான்.

சாதி, மதம், கட்சி போன்ற தன்னிலைகளைக் கடந்து தமிழராய் இணைவோம் எனத் தீர்மானித்திருந்தாலும், இந்தத் தன்னிலைகளை நோக்கி இழுத்துச்செல்கிற தேர்தல் தன்னிலையைக் கடக்காமல் உலகத் தமிழர் பாதுகாப்பு சாத்தியமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்ற ஈழ விடுதலை ஆதரவுக் கட்சிகள் எல்லாமும் எங்கெங்கு எப்படிப்போய் யார் யாருடன் அடைக்கலம் தேடினார்கள் என்பது முகத்திலடிப்பது போன்ற ஒரு வரலாற்றுச் சாட்சியம்.

நன்றி: காலச்சுவடு, மார்ச் 2010

கோவை காவல்துறையின் ஜனநாயகப் படுகொலை
புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு 2010 பிப்ரவரி 6, 7 இருநாட்கள் கோவை வ.உ. பூங்கா திடலில் எழுச்சியுடன் நடந்தது. பல்லாயிரக்கணக்கில் திரளானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதி, மத, கட்சி உணர்வுகளைத் துறந்து “தமிழர் என்ற ஒரே அடையாளத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்” என்ற பிரகடனத்தை புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி முன்மொழிய கூடியிருந்தோர்.

கையொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஏற்றனர். ஆனால், இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி மறுத்தது காவல் துறை. உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினார். ஆனால், அந்த அனுமதியில் திரு. பழ.நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்த உள்ளிட்ட சிலரை அழைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர். பிறகு, அம்மாநாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகர உருவப்படங்கள், குறுந்தகடுகள், ஈழம் குறித்த நூல்கள் விற்கப்பட்ட என்று வழக்கறிஞர் கலையரசு, மருத்துவர் கிருஷ்ணசாமி உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்; மூவர் சிறைப்படுத்தப்பட்டனர்.

எல்லாக் கொடுமைகளையும் விஞ்சக்கூடிய இன்னொரு கொடுமை முன் அனுமதி பெறாமல் துண்டறிக்கைகள் வழங்கினார் என்று மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகும்.”எலும்புக்கூடுகள் மீது நடைப்பிணங்கள் மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தம மாநாடு” என்று தலைப்பிட்ட படைப்பாளிகள் முன்னணியின் துண்டறிக்கை வழங்கப்பட்டதற்குத் தான் மேற்படி வழக்கு.

துண்டறிக்கைக் கொடுப்பதற்குக் வேண்டுமெனில், இங்கு என்ன சனநாயகம் வாழ்கிறது? அப்படியே கூட முன் அனுமதி கோரினால் கலைஞர் புகழும் பாரதமாதா பசனையும் பாடும் துண்டறிக்கைகளுக்கு மட்டும் தானே அனுமதி கொடுப்பார்கள்! எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இதெல்லாம் முன் அறிகுறிகள்! இப்பொழுது எழுந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

நன்றி: தமிழர் கண்ணோட்டம், மார்ச் 24,20

திருமதி பார்வதி அம்மாள் காலமானார் உலகத்தமிழர்கள் அஞ்சலி!
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக 20/02/11 மாலை 4 மணியளவில் மாவீரன் பிரபாகரனின் தாயார் வே. பார்வதியம்மாள் மறைவிற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நிறுவனர்-தலைவர் டாக்டர். க. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர். க. கிருஷ்ணசாமி அவர்கள் ஆற்றிய புகழுரையில் கூறியதாவது: மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மறைவு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நெஞ்சங்களிலில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோய்வாய்ப்பட்டு அவர் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மனிதநேயமற்ற முறையில் மத்திய, மாநில அரசுகள் விமான நிலையத்திலேயே அவரை திருப்பி அனுப்பின. உலகங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்தவரும், ஈழத்தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன் பிரபாகரனின் தாயார் முறையான சிகிச்சை பெற முடியாமலேயே காலமானார் என்பது கொடுமையிலும் கொடுமை. உலகத்தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் அவர் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அவரது நினைவும், புகழும் தமிழர்கள் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் உரையாற்றினார். இதேபோன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

குரல் அற்றவர்களின் குரல், பிப்ரவரி 24, 2011

சூடானைப்போல்… ஈழத்தமிழர் கருத்தறிய ஐ.நா. வாக்கெடுப்பு நடத்துமா?
குழந்தை பேரற்ற தாயின் வேதனையும் தமிழ்நாடற்ற தமிழனின் வேதனையும் ஒன்றானதே.!
உலக ஜீவநதிகளில் ஒன்றான நைல் நதி பாயும் தெற்கு சூடான் தனி நாடாக பிரகடனம் செய்யப்பட்டு அந்த வெற்றியை சூடான் நாட்டு இளம்பிஞ்சுகள் ஒருவரோடு ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டாடி வர, அந்த ஆனந்தத்தை செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த நமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, உள்ளூர கொண்டாட்டம்.’ அந்த உணர்வு அந்த கண்கொள்ளா காட்சியை கண்ட ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருக்கும் என்பதில் வியப்பில்லை.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதங்களில் விடுதலை அடைகின்றன. மதம், மொழி, இனம், பூகோள அமைப்பு என்ற பல்வேறு விதமான காரணிகள் வெளிப்படும்.

சூடான் விடுதலையில் இனம், மொழி, மதம், பூகோளம் என அனைத்து அம்சங்களும் அடங்கி இருக்கின்றன. வடக்கு – தெற்கு என்பது சூடான் உருவான காலம் முதலே இருந்து வரும் பிரச்சனை. நைல்நதி பாய்ந்தும், எண்ணெய் வளங்கள் கனிம வளங்கள் நிறைந்திருந்தும் குவிந்திருந்தும் தெற்கு சூடான் மக்கள் வாழ்க்கை சுபிட்சமாக இல்லை.

தெற்கு சூடான் மக்கள் பெரும்பாலும் பழங்குடி மக்களே. அவர்கள் வழிபாடு இன்றுவரை இயற்கை வழிபாடே. உள்ளத்தில் அந்த மக்கள் எவ்விதமான ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. வடக்கு சூடான் ஒரு இஸ்லாமிய தேசமாக இருந்தாலும் கூட, தெற்கு சூடான் அதற்கு இலக்காகவில்லை. இந்தியா உட்பட, உலகமெங்கும் வாழும் பழங்குடி மக்களை மையப்படுத்தி கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் தீவிர மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைப் போன்று தெற்கு சூடான் பழங்குடி மக்களையும் அத்தொண்டு அமைப்புகள் குறிவைத்து எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவர்கள் தங்களுக்கே உரிய மொழி, வழிபாடு, இன அடையாளங்களை கட்டிக் காப்பதில் குறியாகவே இருந்தனர்.

அவர்கள் வாழ்க்கை முறையும், போராட்டமும், எவ்வித மத, சாதி வேறுபாடற்ற இயற்கை வழிபாட்டை மட்டும் நம்பியிருந்த சங்க காலத் தமிழர் வாழ்வு முறைக்கு ஒத்ததாகும். அவர்களும் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். லட்சக்கணக்கான சுடானியர்களும் பல்வேறு வீதமான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். எனினும், தங்களது அடையாளங்களை விட்டுக் கொடுக்காமல் கட்டிக் காத்துள்ளனர்.

‘தங்களுக்கான வாழ்வு, தங்களுக்கான தனி தேசம் அமைவதில்தான் இருக்கிறது’ என்பதில் ஒவ்வொரு சூடான் குடிமகனும் தெள்ளத்தெளிவாக இருந்துள்ளனர். ஆனால் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க அவர்கள் பலகாலம் போராடியுள்ளனர். தனி நாடு வேண்டி போராட்டம் நடத்திய மக்கள் மீது சூடான் அதிபர் நடத்திய மனிதாபிமானம் இல்லா தாக்குதலில் மட்டும் 20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அந்த உயிர்பலிகளுக்கு சூடான் அதிபரை ஐ.நா., குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தியது.

1955 முதல் 1972 வரையிலும் அதன்பின் 1983 முதல் நடந்த உள்நாட்டு போர் விளைவாக 2011ஆம் ஆண்டு ஜனவரி 9 முதல் 15 வரையிலும் பொதுமக்களிடையே மட்டுமின்றி நாடு கடந்து வாழ்ந்த சூடான் மக்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்களித்தவர்களில் 98.83 சதவிகிதம் பேர் தனி நாட்டுக்கு ஆதரவளித்து வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்புக்கு உலகநாடுகள் பலவும் ஆதரவு அளித்தன. அதன் முடிவு ஜூலை 9 ஆம் தேதி நள்ளிரவு முதல் சூடான் ஒரு தனி நாடாகியது. புதிய சூடான் பிறந்தது.

இன விடுதலைக்காக போராடிய தெற்கு மற்றும் மேற்குப் பகுதி சூடான் மக்கள் மீது சர்வதேச விதிகளை மீறி போர்குற்றம் புரிந்தார் என ஒருங்கிணைந்த சூடான் அதிபர் அல்-பஷீர் மீது 2009 மார்ச் 4 அன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்தியாவின் தென்கோடியில் இந்திய எல்லைக்கு அப்பால் 26 கி.மீ. தொலைவில் உள்ள ஈழத்தில் வடக்கு, கிழக்கு பகுதி வாழ் மக்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், அந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள இனத்துக்கும், மொழிக்கும் நிகரான அந்தஸ்து கேட்டு சூடானியர்களைப் போல ஏறக்குறைய 100 ஆண்டுகாலம் போராடி வருகின்றனர்.

அவர்கள் அனைத்துவித ஜனநாயகப் போராட்டங்களையும் நடத்திப் பார்த்தனர். ஈழத் தமிழ் மக்களுக்கு சிறுசிறு சலுகைகளை வழங்க முன்வந்த சிங்கள அதிபர்களும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர்.

இங்கிலாந்து அரசின் கீழ் சுதந்திரத்திற்கு போராடிய இந்திய மக்களுக்கு உடனடியாக முழு சுதந்திரத்தையும் அளிக்காத பிரிட்டிஷ் அரசு கூட, இந்தியாவை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து அதில் படித்தோர் மற்றும் நிலக்கிழார்களுக்கு வாக்குரிமை அளித்தது. சட்டமன்றங்கள், மாநகராட்சி, நகராட்சிகளை உருவாக்கியும் ஓரளவுக்கேனும் ஆட்சி – அதிகாரத்தில் இந்தியர்களுக்கான பங்கை அளித்தது. இதன் அடிப்படையிலேயே நீதிக்கட்சி சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களின் வாழ்வு உரிமைகள் சுதந்திர இந்தியாவில் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துரைக்க முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேஜை மாநாடுகள் ஆங்கிலேயர்களால் லண்டனில் கூட்டப்பட்டது.

ஈழத் தமிழரின் இன்னல்களும் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த இந்திய மக்களின் பிரச்சனைகளை ஒத்ததே ஆகும். பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றபோது அன்று தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே சுதந்திர இலங்கையில் காப்பாற்றப்படவில்லை. எந்த சுதந்திரம் தமிழர்களுக்கு சமநிலையை கொடுக்கும் எதிர் என பார்க்கப்பட்டதோ அதுவே எதிர்முனையாகிப் போனது.

சுதந்திரம் பெற்ற சூட்டோடு சூடாக ஆங்கிலேயர்களால் இலங்கை தேயிலை மற்றும் காபி தோட்டங்களை செழிப்படையச் செய்ய கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக அளவில் நடந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல்களில் இதுவும் ஒன்று. இன்று போலவே அன்றும் தமிழர்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை இந்திய அரசு கை கட்டி பார்த்து நின்றது.

அதன்பின் 7க்கு 4 என்ற அடிப்படையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்துக்கொள்ள ஸ்ரீமாவோ, லால்பகதூர் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம், ‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல ஏறி மிதித்தது’ என்பார்களே அதற்கொப்பாகும். புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது தாக்குதல் ருசி கண்ட சிங்கள அரசு அதை பூர்வீக தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை தொடங்கியது.

தமிழ்மொழி ஆட்சிமொழி என்ற அந்தஸ்தில் இருந்து அகற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களை வடிகட்டும் ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. எதிர்த்துப் போராடிய தமிழர்கள் மீது கொடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழ் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. அங்கம் அங்கமாக தமிழர்களின் உடல்கள் விலை பேசப்பட்டன. பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண தமிழ் நூலகம் கொளுத்தப்பட்டது. பல ஜனநாயகப் போராட்டங்களும் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட்டன.

1972இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வா அவர்களால் ‘தனித்தமிழ் நாடு’ கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய இளைஞர் படை எழுந்தது. 30 ஆண்டு காலத்துக்கும் மேலாக தனிஈழம் கோரி நடந்த போராட்டம், இந்தியா எனும் திரைமறைவில் உலக நாடுகள் ஒத்துழைப்போடு 2008 மற்றும் 2009-களில் ஈவு இரக்கமற்ற தாக்குதல்களை ராஜபக்சே அரசு நடத்தியது.

ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து குண்டுகளுக்கு பலி ஆயினர். மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். 15 லட்சம் தமிழர்கள் அகதிகளாய் வெளிநாடு தேடி தஞ்சம் புகுந்தனர். தமிழ் தாயகம் கோரிய அந்த மண்ணில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. எஞ்சிய தமிழர்கள் சிங்களத்துவனால் கண்காணிக்கப்படும் அவல நிலையில் உள்ளனர். விரட்டப்பட்ட தமிழர்களின் பூமி சிங்களவர்களாலும், சீனர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

20 ஆண்டுகாலம் தனி நாடு கேட்டுப் போராடிய சூடானியர்களுக்கு தெற்கு சூடான் சுடச்சுட கிடைத்திருக்கிறது. ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட 193ஆவது நாடாக தெற்கு சூடான் உதயமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா உட்பட இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளன.

ஆனால், இதேபோன்று இன, மொழி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை கேட்டுப் போராடிய ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை இந்தியாவும், உலக நாடுகளும் ஏன் அங்கீகரிக்கவில்லை? இனியாவது உலக நாடுகளின் கண்கள் ஈழம் பக்கம் கண் திறக்கும்? ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்? தமிழர்கள் கருத்துக்கும் ஐ.நா. மதிப்பளித்து வாக்கு எடுப்பு நடத்தும்?

10 கோடி உலகத்தமிழர்களின் ஒரே குரலாய் தனிஈழம் குறித்து ஐ.நா.வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் குரலாகவே இருக்கட்டும்.

குரல் அற்றவர்களின் குரல், ஜூலை 20, 2011

உலகெங்கும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை
சென்னையிலே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் கூட்டிய விடுதலை பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும்’ என்ற கருத்தரங்கில் நமது ஆசிரியர்…

“தமிழீழம் விடுதலை பெறுவதற்கு புதியதமிழகம் கட்சி துவக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 1984 ஆண்டு அப்பொழுது இலங்கையில் நடந்த இனபடுகொலையை கண்டித்து அந்நாள் முதல் இன்று வரை வெவ்வேறு போராட்டங்களையும், அந்த காலத்தில் இருந்து இந்த காலக்கட்டம் வரை எல்லா சூழ்நிலையிலும் தொடர்ந்து தமிழீழத்திற்கு ஆதரவாக கருத்தை வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் புதிய அரசு அமைந்தது முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் நிறைவில் ராஜ்பக்ஷேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு பொருளதார தடை விதிக்க வேண்டும், கச்சதீவை மீட்கவேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து முதல்முதலாக குரல் கொடுத்தது புதிய தமிழகம். 2007ஆம் ஆண்டு முதல் ஈழதமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்க்கு இந்திய அரசு பல்வேறு ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

2007-ம் ஆண்டு பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் 100 கோடி ரூபாயை நிதி ஒதுக்கி மறைமுக போருக்கு அப்போது உதவ தொடங்கியது இந்திய அரசு. இந்த 100கோடி நிதி உதவியை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினேன். முதன்முதலாக டெல்லியில் ராஜபக்சே உருவ பொம்மையை டெல்லியில் புதிய தமிழகம் எரித்தது.

தமிழீழம் இன்று இல்லையென்றாலும், என்றாவாது ஒரு நாள் மலர்ந்து தீரும். தெற்கு சூடானை பெற 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, இன்று விடுதலை பெற்றிருப்பது போல, ராஜபக்சேவிற்கு எதிராக விடுதலை பெற்று தமிழீழம் பெற்று தர நாம் உலக நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும். 20-30 ஆண்டுகளாக ஈழதமிழர்கள் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதே போன்று சூடானில் அதிபர் அல்பஷீர் மக்களை கொன்று குவித்தற்கு சர்வதேச குற்றவாளியாக அறிவித்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டார். அதற்கு சரிசமமான ராஜ பக்சே மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு மிகப்பெரிய கை தடுத்து வருகிறது என்றால் அது வேறுயாரும் இல்லை இந்தியா தான்.

போர்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசு முட்டுகட்டை போட்டு வருகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக, தேர்தல் அறிக்கையிலும் செல்லப்படாத ராஜ்பக்ஷேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளதார தடை, கச்சதீவை மீட்க வேண்டும் போன்ற தீர்மானங்களை சட்டபேரவையில் கொண்டு வந்து இந்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர். இதே போன்று உலக நாடுகளும், உலகத்தில் வாழும் தமிழர்களும், அமைப்புகளும் ராஜபக்சேவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் தமிழர்கள் விடுதலை பெற்று தமிழீழம் வருவது சுலபமாகிவிடும்.

ஐரோப்பா, ஆப்பிரிக்க உள்ள நாடுகள் சூடான் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதன் விடுதலை அங்கீகரித்து உள்ளன. ஆனால் தமிழீழம் போராட்டத்தை 50 ஆண்டுகளாக உலகநாடுகள் எதுவும் முன்வர வில்லை; ஆதரிக்கவில்லை ஏன், வடக்கு சூடானில் இஸ்லாமியர்களும், தெற்கு சூடானில் கிறிஸ்துவர்களும் உள்ளனர். இதனால் தெற்கு சூடானுக்கு விடுதலை அளிக்கப் பட்டது என்றும். தமிழீழ போராட்டத்திற்கு இது போன்று மதப்பிரச்னை ஏதாவது தடை உண்டா ?என்பதை ஆராயவேண்டும். தமிழீழ போராட்டத்தை புறக்கணிக்கப்படுவதற்கும், ஈர்க்கப்படாததற்குமான காரணத்தை சமூக, அரசியல் மற்றும் உளவியல் பார்வையில் நின்று ஆராய வேண்டும்.

30 ஆண்டு போராட்டத்திற்கு பின்பு நாட்டை விட்டு சென்றவர்கள் உள்பட அனைவரிடமும் வாக்கெடுப்பு நடத்தி 98.23 சதவிகதம் தெற்கு சூடான் தனிநாடாக உருவாக வாக்காளித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பை நடத்திய ஐ.நா.சபை எந்த நெருக்கடியும் இல்லாமல் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் உள்பட அனைவரிடம் ஜனநாயக ரீதியாக தமிழீழ நாடு அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இதனை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி 3 கோடி கையெழுத்தை பெற்று அதனை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைக்கவேண்டும். இலங்கை மீது பொருளதார தடை; ராஜபக்ஷேவை போர்குற்றவாளியாக அறிவிப்பது; கச்சதீவு மீட்பு; தமிழீழ ஆதரவாக வாக்கெடுப்பு என அனைத்து நடவடிக்கைகளுக்கும் நானும் புதிய தமிழகமும் என்றும் துணை நிற்போம்” என்று தமிழீழ ஆதரவாளர்களுக்கு ஆதரவை அளித்து எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

குரல் அற்றவர்களின் குரல், ஜூலை 27, 2011

கொந்தளிக்கும் தமிழர்கள்
காப்பாற்றப்படுவாரா பேரறிவாளன்?

கடந்த 2008-09இல் ஈழத் தமிழ் மக்கள் மீது நான்காவது கட்டப் போர் இலங்கை அரசால் துவங்கப்பட்ட பொழுது, அன்று தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் விடுத்த அறைகூவல்கள் தமிழ் மக்களை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில், உணர்வாளர்கள் நடத்திய ஆர்பாட்டங்களிலும், போராட்டங்களிலும், கொட்டும் மழையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியிலும் கட்சி வேறுபாடின்றி தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மக்களும் அணி திரண்டார்கள்.
ஆனால் ‘அவர்கள்’ வெளிப்படையாக நடத்திய போராட்டம் ஒருவிதமாகவும், திரைமறைவிற்குப் பின்னே அதற்கு நேர் எதிர்மறையான காரியமும் ஆற்றியது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

உச்சகட்டப் போர் துவங்கப்பட்ட நிலையில் போரை எப்படியும் நிறுத்தி எஞ்சியுள்ள போராளிகளையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்களின் ஏகோபித்த எண்ணமாக இருந்தது.

ஆனால், ஈடேறவில்லை. தமிழ் மக்களுடைய எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு அவர்கள் அனுப்பியதாகச் சொல்லப்பட்ட தந்திகள், கடிதங்கள், தூதர் எல்லாமே பேச்சுகள் நாடகம் என்பது பின்பு வெட்ட வெளிச்சமாகியது.

அப்போதே தன்னலமற்ற தமிழ் உணர்வு கொண்டோர் ஓரணியில் திரண்டு நின்று, ஓங்கி உரத்த குரலில் தங்களுடைய எதிர்ப்புகளை மத்திய அரசின் கவனத்தை முழுமையாக ஈர்க்கக்கூடிய வகையில் செய்து இருப்பார்களேயானால், நிச்சயமாக ஈழத்தமிழ் மக்கள் கைவிடப்பட்டிருக்க மாட்டார்கள்.

தமிழரிடையே நிலவி வரும் ஒற்றுமையற்ற தன்மையின் விளைவாக ஈழத்தமிழ் மக்களுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்-தமிழர் ஒற்றுமை குறித்து மேடையிலே முழங்குகின்ற வேகம் வீட்டுக்கு வந்தால் இருப்பதில்லை.

கண்முன்னே தினமும் ஒவ்வொரு இனமும் தனக்கென்று ஒரு நாட்டை சிருஷ்டித்துக் கொண்டே போகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டும் எல்லாமே தானாக கனிந்து பாலில் விழும் கனியாக இருக்குமென்று எதிர்பார்க்கிறார்கள். 18 வயது நிரம்புவதற்கு முன்பாக சிறை சென்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற பேராபத்தின் விளிம்பில் நிற்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களாக ‘கண்டம்டு’ செல் என்று அழைக்கப்படக் கூடிய தூக்குக் கயிற்றுக் கொட்டடியில் எல்லாவிதமான வேதனைகளையும் அனுபவித்து தற்போது வெறும் மனித உருவங்களாக மட்டுமே நிற்கிறார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் நளினி, தூக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு விட்டார். எஞ்சி உள்ளோர் இம் மூவர் மட்டுமே.

இவ்வழக்கின் மீதான தீர்ப்புக்குப் பிறகு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் 2 முறை அனுப்பிய சிபாரிசுகளை முன்னாள் ஜனாதிபதிகள் ஆர்.கே. நாராயணன் மற்றும் அப்துல்கலாம் அவர்களும் நிராகரித்து விட்டனர். ஆனால், மீண்டும் உள்துறை அமைச்சகத்தால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட சிபாரிசு அனுப்பப்பட்டது.

இன்றைய ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் மூவர் குறித்து வந்த கருணை மனுவை நிராகரித்துவிட்டார்.

‘தலித்தாக’ இருந்த கே.ஆர். நாராயணனுக்கும், ‘சிறுபான்மை’ சமூகத்தைச் சேர்ந்த அப்துல்கலாமுக்கும் இருந்த மனித நேயம், ஒரு பெண்ணாக இருந்தபோதும் உயர்ந்தகுடி என்பதால் இவருக்கு கருணை பிறக்கவில்லையே என்பது நமக்கு வேதனையை அளிக்கிறது. பெரியாரின் வாக்கு இன்றும் தீர்க்கதரிசனமானது என்று இதன் வாயிலாக வெளிப்படுவதை உணரலாம்.

கடந்த 2, 3 தினங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு ஆதரவாக அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனினும் வலுவான போராட்டங்கள் துவங்கப்படவில்லை.

நாம் சட்டமன்றத்தில் இது குறித்து விவாதிக்க கேட்கப்பட்ட அனுமதி இதுவரையில் வழங்கப்பட வில்லை.

நமது தனிநபர் தீர்மானமும், கவன ஈர்ப்பு தீர்மானமும் சட்டமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் ஏற்கனவே இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடை தீர்மானம், கச்சத்தீவு மீட்பு தீர்மானம் போன்றவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய நற்பெயரை இது இவ்வரசுக்கு பெற்றுத்தரும். ஒரு குற்றவாளிக்கு கருணை காட்டச் சொல்வதால் குற்றத்தை நியாயப்படுத்தியது ஆகாது.

ராஜீவ் கொலை குறித்து, சர்வதேச சதி சம்பந்தமாக எந்தவிதமான அறிக்கையும் வெளிவரவில்லை. எனவே கிடைத்த 4 பேரை மட்டும் தூக்கில் இடுவதால் அவர்கள் உண்மைக் குற்றவாளிகள் என்று பொருளாகாது.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்து பேசுவது அந்தக் குற்றத்தை நியாயப் படுத்துவதாகாது. எனவே உலகளவில் உள்ள 150க் கும் மேற்பட்ட நாடுகளில் அமலில் இல்லாத இந்த மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்யவும், அவர்களுக்கு கருணை காட்டவும், இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவும் தமிழக சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவருவதால் இன்றைய அரசுக்கு வரலாற்றில் நீங்காப் புகழ் கிடைக்குமே தவிர குறையாது. தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மக்களும் ஏற்கனவே 2008-09இல் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த போரில் அவர்களை காப்பாற்றத் தவறியவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி இருக்கிறோம்.

இப்போது யாரை நம்பலாம்; யாரை நம்ப முடியாது என்பது வெளிப்படையாகி விட்டது. நம்பகத்தன்மை அற்றவர்கள் மக்களால் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டு விட்டார்கள்.

7 கோடி தமிழ் மக்கள் வாழக்கூடிய இந்தப் பூமியில் தமிழ் இளைஞர்கள் மூவரின் மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதித்து விட்டால் வரலாறு நம்மை ஏளனம் செய்யும்.

தமிழ் ஆர்வலர்கள் தனிநபரோ, சிறிய குழுவோ, பெரிய குழுவோ அனைவரும் இத்தருணத்திலாவது ஓரணியில் திரண்டு வீதிக்கு வந்து, இம்மூவரையும் காப்பாற்ற ஓங்கிக் குரல் கொடுத்திட வேண்டும். மூவரின் உயிரையும் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு தமிழக முதல்வருக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் மரண தண்டனையிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கும் வகையில் கடிதம், தந்திகள், ஆர்பாட்டம், போராட்டம் வாயிலாக தமது உணர்வுகளை பதிவுசெய்ய வேண்டுகிறேன். காலம் கடந்து விடக்கூடாது; கண்கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் செய்வதில் பலன் இருக்காது.

2008-09இல் நடந்த எந்தத் தவறும் இப்பொழுது நடந்துவிடாமல், இம்மூவரையும் காப்பாற்ற இப்போதே தமிழர் அனைவரும் போர்க்கோலம் பூணுவோம்.
குரல் அற்றவர்களின் குரல், ஆகஸ்ட் 24, 2011

சோனியா அவர்கள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்

தமிழர்களின் வரலாற்றில் கடந்த 18 தினங்களை யாராலும் மறக்கவே முடியாது. ஆகஸ்ட் 12ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூவரது கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட செய்தி மெல்லமெல்ல கசிய ஆரம்பித்தது. ஆங்காங்கே தமிழ் ஆர்வலர்கள் சிறியசிறிய குழுக்களாக கூடி அறிக்கைகள் கொடுத்த வண்ணம் இருந்தனர். எந்தவிதமான தகவலும் ஊர்ஜிதமாக வெளியே வராத நிலையில் பொதுமக்களால் இதை முழுமையாகப் புரித்துகொள்ள முடியவில்லை.

ராஜீவ்காந்தி கொலை நடந்து 19 வருடங்கள் ஆகிவிட்
ட நிலையில் ஏறக் குறைய ஒரு தலைமுறைக்கு இந்தச் சம்ப வத்தைப் பற்றி முழுமையான விவரம் எதுவும் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. மேற்படி மூவருக்கும் தூக்குதண்டனை கொடுக்கப்பட்டு, இத்தனை ஆண்டு காலம் இந்த தண்டனை ஏன் நிறைவேற்றப்பட வில்லை என்பது எண்ணற்றோருக்கு தெரியாது,

1992, மே 21ஆம் நாள் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார். அதையொட்டி கைது செய்யப்பட்ட 26 பேரில் 19 பேர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். 4 பேர் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு மட்டும் மரண தண்டனையும் ஊர்ஜிதம் செய்யப்பட்டு இருந்தனர். சோனியாவின் கருணையால் நளினி மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் இம்மூவரது கருணை மனுக்கள் மட்டும் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இந்த இடைவெளி காலத்தில், திரு. கே.ஆர். நாராயணன் மற்றும் திரு. அப்துல்கலாம் ஆகிய இருவரும் முழுமையாக தலா 5 ஆண்டு காலம் குடியரசு தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்கள் இருவருமே மரண தண்டனையை நிறைவேற்ற உள்துறை அனுப்பிய சிபாரிசுகளை மறுபரி சீலனை செய்யும் வண்ணமே கோப்புகளை திருப்பி அனுப்பினர். ஆனால் அந்த 11 ஆண்டுகள் கால தாமதத்திற்கு காரணம் யாருக்கும் தெரியாது.

கடந்த 12 ஆம் தேதி 11 வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இவர்கள் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தமிழக உள்துறை மறுக்கப்பட்ட செய்தியாக பேக்ஸ் மூலம் செய்தி வந்தது. இது எதையுமே தமிழக அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.

குடியரசுத் தலைவர் அனுப்பிய கடிதத்தில் (28.4.2000ம் ஆண்டு கோப்பு எண் 436) இம்மூவரின் கருணை மனுக்கள் மீதான குடியரசுத்தலைவர் அவர்களின் நிராகரிக்கப்பட்ட விஷயத்தை தெரிவிக்குமாறு சொல்லப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு 13 நாட்கள் மிகமிக ரகசியமாக தமிழக மக்களுடைய நாடித் துடிப்பை அறிவதில் முனைப்பாயிருந்தது. சட்டமன்றத்தில் புதிய தமிழகம் மற்றும் சில அமைப்புகளும் அவையில் கவனத்தை ஈர்க்க எடுத்த முயற்சிகள் அவைக் குறிப்பில் ஏற்றப்படாமலேயே தடுக்கப்பட்டன.

நாளுக்குநாள் தமிழ்நாடெங்கும் மூவருக்குமான மரண தண்டனைக்கு எதிரான குரல் அதிகரித்தே வந்தது. மத்திய அரசிடமிருந்து வந்த செய்தியை 13 நாட்களுக்குப் பிறகு, 11 மணி அளவில் தமிழ்நாடு உள்துறை செயலர் வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு தெரிவித்தார். இந்தச் செய்தி 25ஆம் தேதி இரவு தெரிவிக்கப்பட, 26ஆம் தேதி காலையில் காட்டுத்தீயாய் எங்கும் கசிந்து பரவியது.

26ஆம் தேதி சட்டமன்றத்தில் இதுகுறித்து நாம் பிரச்சனை எழுப்பிய போது பேச மறுக்கப்பட்ட நிலையில் நாம் வெளிநடப்பு செய்தோம்.

அன்று காலையிலேயே சென்னையில் பெண் வழக்கறிஞர்கள் 3 உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டார்கள். சென்னை, திருச்சி, சேலம் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கம்யூனிஸ்ட் சார்பாக வரும் 3ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

28 ஆம் தேதி காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் தேதி சிறு பொறியாக தமிழகத்தில் எழுந்த தமிழுணர்வு, 26ஆம் தேதிக்குப் பிறகு காட்டுத்தீயாக மாறியது.

29 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த அறிக்கை தமிழர் மத்தியில் எந்தவிதமான வரவேற்பையும் பெறவில்லை. அவர் இம்மூவரையும் காப்பாற்ற தனக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனக் கூறியதை சாதாரண மக்கள் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர் கொடுத்த அறிக்கையில், 2000ம் ஆண்டே கருணாநிதி முதல்வராக இருந்தபோது நளினிக்கு மட்டும் மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட போதே இம்மூவருக்கும் சிபாரிசு செய்யாத நிலையில் தற்போது மூவருக்கும் ஆதரவு பெருகி வரும் நிலையில் அவரின் கபட நாடகம் அம்பலமாகிவிட்டது. ஆனால், ஜெயலலிதா தனக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக் கழித்ததை எந்தத் தமிழரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தடுத்து நிறுத்த வேண்டாம்; ஆனால் சட்ட மன்றத்தில் இதைப்பற்றி விவாதிப்பதற்கும் மத்திய அரசுக்கு பகிரங்கமாக ஒரு வேண்டுகோள் வைக்க என்ன தடையென வினவினார்கள். முதல்வரின் விளக்கம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது. அதிலும் காட்டுத்தீயாய் இருந்த விஷயம் 29ஆம் தேதி அன்று ஜெ. அறிவித்தபிறகு உலகெங்கும் தமிழர் நெஞ்சில் பெருங்காட்டுத் தீயாய் மாறியது.

1983 இலங்கை பிரச்சனை பெரிதாக உருவெடுத்த பிறகு, எத்தனை முறை இலங்கைத் தமிழருக்காக தமிழ் மக்கள் பல்வேறு அமைப்புகள், குழுக்கள், கட்சிகள் போராடி இருப்பினும் இம்மூன்று தமிழரையும் காப்பாற்ற இவர்கள் காட்டிய வேகம், ஒற்றுமை ஈடு இணை இல்லாதது.

2008-09இல் தமிழர்கள் தங்களின் உண்மையான சக்தியை உணர்ந்து எந்த நிழலின் பின்னாலும் ஒதுங்காமல் தமது சுய சக்தியை மட்டும் நம்பி, ஒரே நேரத்தில் நீதிமன்றம், சட்டமன்றம், மக்கள் மன்றம் என மூன்று தளங்களிலும் ஒருங்கிணைந்து போராடி இருப்பார்களேயானால், லட்சக் கணக்கான தமிழ் மக்கள் அங்கு கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். மூன்று லட்சம் பேர் முள்வேளி முகாமிற்குள் முடங்கியிருக்க மாட்டார்கள்; ராஜபக்சே வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

தமிழர்கள் தங்கள் பலத்தை இப்போது நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். இன்னும் நமக்குள் குடிகொண்டிருக்கக் கூடிய தயக்கம், மயக்கம், எதிர்பார்ப்புகள் முற்றாக அழிக்கப்படுமேயானால் தமிழினம் இழந்த பெருமையை எல்லாம் நிச்சயம் மீட்டெடுக்கும்.

15 தினங்கள் போராட்டத்தின் விளைவாக நீதிமன்றத்தில் இடைக்கால தீர்ப்பு பெற்றிருக்கிறோம். சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் மன்றத்தில் காஞ்சிபுரம் செங்கொடி வழிகாட்டி விட்டார். எனினும் நமது போராட்டம் முடிந்ததாக கருத முடியாது. இது ஒரு நல்ல துவக்கமே.

இன்று நீதிமன்றத்தில் வழக்கின்போது மத்திய வழக்கறிஞர் அரசு பங்காற்றிய விதம் மாநில அரசின் நடவடிக்கைகள் வேறு நிலைப்பாட்டிற்கு நம்மை கொண்டு செல்கிறது.

அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து மட்டும் விலக்கலித்தால் போதாது. நளினிக்கு காட்டிய கருணையும் அன்பையும் இவர்களுக்கும் காட்டலாம.

தமிழர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் கண்டபின் சோனியாவிற்கு அடிப்படையிலேயே மனமாற்றம் உருவாகி, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழரின் இதயத்தில் நீங்கா இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதனால் நாம் அனைவரும் சோனியாவுக்கு இம்மூவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினால் போதாது, சோனியா அவர்கள் இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தந்திகளை அனுப்பிக் குவிப்போம்.

குரல் அற்றவர்களின் குரல், செப்டம்பர் 07, 2011

தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்!
சென்னை உயர் நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழக சட்டப் பேரவையில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து, சட்டப் பேரவையில் தீர்மானத்தை தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றியுள்ளார். ஜெயலலிதா முன் மொழிந்த தீர்மானத்தை, சட்டப் பேரவை ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த தீர்மானம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று பின்னர் பார்ப்போம். முதலில், நாம் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு தெரியுமா?

புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியருமான கிருஷ்ணசாமி அவர்களுக்குத்தான். அவர்தான், மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத் தார். அதை சபாநாயகர், எடுத்துக்கொள்ள மறுத்த காரணத்தால், 19.8.11 வெள்ளிக்கிழமை அன்று வெளிநடப்பு செய்தார். இதைத் தொடர்ந்து பிரச்சனை வெளிப்பட்டு, தமிழக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது.

இதுவரை என்றுமே நடக்காத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்தி அநீதிக்கு எதிராக கொதித்து எழ வைப்பது என்பது சாதாரண காரியமா என்ன? முன்பெல்லாம் எது நடந்தாலும் எனக்கென்ன என்று இருக்கும் தமிழகத்தைப் பார்த்து வருத்தப்பட்டதுண்டு. ஆனால், மூவருக்கு தூக்கு என்ற செய்தியைக் கேட்டவுடன், அத்தனை அன்பு உள்ளங்களும், கொதித்து எழுந்தன. ஏதாவது செய்து அந்த மூவர் உயிரைக் காப்பாற்ற மாட்டோமா என்று தவித்தன. சமூக வலைத்தளங்களில், இந்த மூவருக்காக கண்ணீர் விட்ட நெஞ்சங்களைக் காண முடிந்தது.

மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒரு சேரக் குரல் கொடுத்தனர். பத்திரிகைகள் தலையங்கம் தீட்டி கோரிக்கை வைத்தன. தமிழகத்தின் அத்தனைக் கட்சிகளும், ஒரே குரலில், மூவர் உயிரைக் காப்பாற்று என்று உரத்துப் பேசின. ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும், இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு சேர மூவர் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கோரியது எவ்வளவு மகிழ்ச்சியளித்தது தெரியுமா?

இன்று இந்த மகிழ்ச்சியான சமயத்தில் ஒரே ஒரு நெருடல், தோழர் செங்கொடியின் மரணம் தான். அந்தத் தோழர் பொறுமையாக கொஞ்சம் இருந்திருக்கக் கூடாதா? நீதிமன்றங்கள் இருக்கின்றன.

போராட, கோடானுகோடி தமிழ் உறவுகள் இருக்கின்றன. அப்படியா மூவர் உயிரைப் பறிக்க விட்டு விடுவோம் ?

மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று சென்னை உயர்நிதிமன்றத்தில் விசாரணைக்கு போது, வந்த சென்னை உயர்நீதிமன்ற வரலாறு காணாத அளவுக்குகூட்டம். வழக்கு நடந்த 4ஆவது நீதிமன்றத்தின் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு நெரிசல்.

நீதிமன்ற அறைக்கு வெளியே 500 பேர் திரண்டிருந்தனர். நீதிமன்றத்துக்கு கீழே, 2000த்துக்கும் அதிகமானோர் திரண்டு முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். மூவர் சார்பாக, புது தில்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, காலின் கான்சால்வேஸ் மற்றும் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மூச்சுவிடக் கூட இடமில்லாத அந்த நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி தன் வாதத்தை தொடங்கினார்.

“11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து சாவகாசமாக குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்தக் கருணை மனுவை நிராகரித்திருக்கிறது. 2 வருடங்கள் தாமதமாக நிராகரித்த நேர்வுகளில் கூட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தத் தாமதம் என்பதை அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். முதன் முறை மாநில அரசிடம் கருணை மனு சமர்ப்பித்த போது 5 மாதங்களில் நிராகரித்திருக்கிறார்கள். இவருக்கு எதற்காக 11 ஆண்டுகள்? ஒரு மனிதனை அவன் இருக்கும் சிறையிலிருந்து வெளியே எடுத்து தூக்கிலிட 30 வினாடிகளே ஆகும். இந்த 30 வினாடிகளை மூன்று பேர் 11 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருப்பதை எண்ணிப் பாருங்கள்” என்று வாதிட்டார்.

அவருக்குப் பிறகு வாதாடிய காலின் கான்சால்வேஸ் பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக்கூறி, ஏன் இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.

இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர், மத்திய அரசு 8 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இந்தத் தகவல் கீழே குழுமியிருந்த தோழர்கள் காதில் விழுந்ததும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தனர்; கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அய்யா நெடுமாறன், சீமான், அறிவின் தாயார் அற்புதம் அம்மையார் ஆகியோர் கீழே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அற்புதம் அம்மையார், குழுமியிருந்த கூட்டத்தையும், கோஷங்களையும் கண்டு தன் மகனைச் சாக விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், வழக்கறிஞர்கள் என்று அத்தனை முகங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். சட்டப்பேரவை இயற்றியிருக்கும் தீர்மானத்தினால் என்ன பயன் விளையப்போகிறது?

ஒரு மாநில அரசின் சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரிக்க முடியாது. அப்படியே, நிராகரித்தாலும் அந்த மூவரை மாநில அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் அளித்தால், மீண்டும் மாநில அரசு அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 161இல் உள்ள அதிகாரத்தை பயன் படுத்தி, நிச்சயம் இந்த தண்டனையை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நடந்தது என்ன?
12ஆம் தேதி
மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றலாம் என்ற செய்தி வெளியாகிறது. அன்றே சட்டப்பேரவையில், மரணதண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், இசும்யூ. மா.கம்யூ. சமத்துவ மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சிகளில் சட்டமன்ற தலைவர்களோடு முதல்வரை சந்திக்க நேரம் கேட்டல், பேரவையில் இந்தக் கோரிக்கை எடுக்கப்படாமலேயே விடப்படுதல். அன்று மாலையே பேரறிவாளனின் தாயார் டாக்டர் கிருஷ்ணசாமியை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சந்தித்தல், தே.முதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அற்பதம் அம்மாளை சந்திப்பதை தவிர்த்தல்,

16ஆம் தேதி

சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர டாக்டர் கிருஷ்ணசாமி விருப்பம். இந்தத் தீர்மானத்திற்கு இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சி அ.சவுந்திரராசன், கே.பாலபாரதி, இந்திய கம்யூ. கட்சி எம். ஆறுமுகம், கூ.குணசேகரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எச். ஜவாஹிருல்லா. இந்திய குடியரசு கட்சி செ.கு தமிழரசன் அகில இந்திய பார்வர்டு பிளாக் பி.வி. கதிரவன், பாட்டாளி மக்கள் கட்சி ஜே.குரு. டீ. கலையரசன், சமத்துவ மக்கள் கட்சி ஆர். சரத்குமார், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசு போன்ற சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கையொப்பம் இடுதல் தீர்மானத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கையொப்பமிட மறுத்தல். பேரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தல்.

17ஆம் தேதி
அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதல்வரை சந்திக்க அனுமதி கோரல், அனுமதி மறுப்பு:.
25ஆம் தேதி
நன்னீரவில் தூக்குதண்டனை செய்தி வெளியில் கசிதல்.
26ஆம் தேதி
சட்டப்பேரவையில் டாக்டர் கிருஷ்ணசாமி தீர்மானத்திற்கு கோரிக்கை வைக்க அது தடுக்கப்படல்.
டாக்டர் கிருஷ்ணசாமி அவையை விட்டு வெளிநடப்பு செய்தல்,
29ஆம் தேதி
முதல்வர் அவர்கள், 110 விதியை காரணம் காட்டி தன்னால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சொல்லுதல். ஆனால், அன்றே தமிழகம் எங்கும் மக்கள் எழுச்சி தாண்டவமாடுதல்.
30ஆம் தேதி
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர், தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் நிறைவேற்றுதல். அன்றே சென்னை உயர்நீதிமன்றமும், 8 வார காலத்திற்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க தடை உத்தரவு போடுதல்.

1975 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்த காலம் தொட்டே ஈழத்தமிழ் இளைஞர்களுடன் நட்புறவை கொண்டிருந்த தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித குலத்தின் மூத்த குடியான தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள், இன ஒதுக்குக்களைக் கண்டு கோபம் கொண்டு அந்த அநீதி – மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். தமிழர் நலன், தமிழர் பாதுகாப்பு, உள்ளூர் தமிழர் ஒற்றுமைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி, கடல் கடந்து வாழும் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், மனித உரிமைகள் மீறல்கள் அரங்கேறிய போதெல்லாம் முதல் ஆளாகக் குரல் கொடுத்தவர் நமது டாக்டர் அய்யா அவர்கள்.

1983 – 1984களில் ஈழத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள் உச்சக்கட்டம் அடைந்து போது, கோவையில் மருத்துவ பணி ஆற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஈழத்தமிழ் போராளிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.1985 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் பங்கேற்று கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்கள்.

1989-90களில் தமிழகத்தில் ஈழத்தமிழ் போராளிகளை தமிழகத்தில் பலரும் கைவிட்ட வேளையில், தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தான் தனது சொந்த மருத்துவமனையில் அனுமதித்து விடுதலைப்புலிகளின் உள்ளம் மற்றும் உடல் காயங்களுக்கு மருந்தாக விளங்கியிருக்கிறார்கள்.

இலங்கை அதிபர் சந்திரிகா 1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தன் வசப்படுத்த முயற்சி செய்த நேரம் அது. இந்தியா அரசால் இலங்கைக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத தளவாடங்கள் அடங்கிய கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அதற்கு எதிராகத் தமிழகத்தில் எவரும் குரல் எழுப்பவில்லை, ”புத்த பெண்ணே, புத்த பெண்ணே, யுத்தம் செய்யாதே” எனவும், ”மத்திய அரசே, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் வழங்காதே” எனவும் மத்திய அரசுக்கு எதிராகச் சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது; அதன்பின் அக்கப்பல் திரும்பப் பெறப்பட்டது.

2000 மே 21 ஆம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தலைவர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஜீன் மாதம் 29 ஆம் தேதி தமிழர் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு தலைவர் பயணம் செய்து, பல்வேறு தமிழ் தலைவர்களுடன் தமிழர் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.

2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் பட்ஜெட்டில் இலங்கைக்கு ரேடார் வாங்க ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டது. அதை இரத்து செய்ய வலியுறுத்தியும், திருச்சியிலிருந்து இலங்கை அரசுக்கு இராணுவத் தளவாடங்களை அனுப்பக் கூடாது எனவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது; அதில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

”விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுகிறோம்” என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் உச்சக்கட்டமான பொழுது, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையின் பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டமும், மறியலும் நடத்தப்பட்டது.

2009 ஜனவரி 2 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தங்களுடைய இனத்திற்கான அடையாளத்தை மீட்டெடுக்கவும், விடுதலையை வென்றெடுக்கவும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்கள் கடைசி வரையிலும் களத்திலே நின்று தங்களுடைய இன்னுயிரை நீத்தார்கள்; முள்ளி வாய்க்காலில் 30,000 தமிழ் மக்கள் உயிரோடு புதைக்கப்பட்ட போது உலக அரங்கிலிருந்து ஒரு குரல் கூட எழவில்லை. அது மட்டுமல்ல, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்களான பெண்களும், குழந்தைகளும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அதற்கு எதிராகவும் உலக அளவில் எக்குரலும் எழவில்லை. அதையும் கண்டித்து 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோவையில் முதல் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தினோம்; மலேசியாவிலிருந்து மட்டும் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

2009 அக்டோபர் 28 ஆம் தேதி உலகத் தமிழர் மாநாடு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கோவையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அவதிப்படும் சித்திரத்துடன் தமிழராய் எழுவோம் என்ற முழக்கத்துடன் இலட்சாணை வெளியிடப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கேட்டு இலண்டனில் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களோடு கூட்டத்திலும், சுவிட்சர்லாந்து – ஜெனிவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டோம்.

கோலாலம்பூரில் மீண்டும் இரண்டாவது மாநாட்டை நடத்தினோம். கடல் கடந்து வாழும் உலகத் தமிழர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, ஜெர்மனி, அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு போன்ற சர்வதேச அளவிலான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.

2012 நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச ஆணையம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற தலைவர் அவர்கள் வலியுறுத்தல்.

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் லண்டன் உலக தமிழர்களுக்கான மொரிசீயஸ் மாநாட்டிலும், ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமை ஆணையக் கூட்டத்திலும் உலகத்தமிழர்கள் சார்பாகவும், இந்தியா சார்பாகவும் கலந்து கொண்டு தமிழர் பிரச்சனைகளை எடுத்துரைத்தார்கள். இலங்கைத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து சென்னை ஐ.நா துணை தூதரகம் முற்றுகை போராட்டம் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதேபோல 2011 முதல் 2016 வரை 5 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக பலமுறை குரல் கொடுத்து, வெளிநடப்பு என ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி என்றுமே இரண்டற கலந்தே நின்றிருக்கிறது.