தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்! தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினருக்கு விருப்ப மனு விநியோகம்!!
327 Views
![]()
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்!
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினருக்கு விருப்ப மனு விநியோகம்!!
கரோனா ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படாத நிலையில், அனைத்துக் கோவில்களின் நடை கூட திறக்கப்படவில்லை; அரசியல் மற்றும் சமுதாயக் கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி சார்பின்றி, செல்வாக்குள்ள தனி நபர்களும் போட்டியிடுவார்கள். மக்களுக்கான அதிகாரம் அடிமட்டம் வரையிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமாக்கப்பட்டன. சிறிதும் கால அவகாசம் கொடுக்காமல், செப்டம்பர் 15-ஆம் தேதி முதலே வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் மக்களோடு மக்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் கட்சிகளுக்கு இது அவ்வளவு எளிதாக இருக்காது. அரசு நிர்வாகத்தினுடைய எல்லா அமைப்புகளையும் தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற கார்ப்பரேட் கட்சிகளுக்கு மட்டுமே இதுபோன்ற குறுகிய கால தேர்தல் தேதி உகந்தாக இருக்கும். எனினும் புதிய தமிழகம் கட்சி அரசியலை அரசியலாக சந்திக்கும். அந்த வகையில், எதிர்வரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி வலுவாக இருக்கக் கூடிய தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதென்று முடிவு செய்யப்படுகிறது. அதன்படி, 16.09.2021 (வியாழக்கிழமை) மற்றும் 17.09.2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில், கீழ்கண்ட ஒன்றியங்களில், கீழ்கண்ட மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். எனவே புதிய தமிழகம் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் அதில் திரளாகக் கலந்துகொண்டு விருப்பமனு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15/09/2021.










