27-ஆம் ஆண்டு துவக்க விழா மாநாட்டுத் தீர்மானங்கள்
தேதி: 15 டிசம்பர் 2023
இடம்: இராமநாதபுரம்
புதிய தமிழகம் கட்சியின் 27-ஆம் ஆண்டு துவக்க முப்பெரும் விழா, கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA அவர்கள் தலைமையில், 15.12.2023 – வெள்ளிக்கிழமை அன்று, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரத்தில் நடைபெற்றது!
இவ்விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மாநகர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உயிரிழந்த மக்களுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.4500 கோடி செலவிடப்பட்டதாக, மாநில அரசின் சார்பாக முதலமைச்சர் முதல் சக அமைச்சர்கள் வரையிலும் கூறிய நிலையில், அதுபோன்று முறையான வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததாலும், சென்னையில் கடும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்ற வானிலை அறிக்கை தெளிவுற தெரிவித்த பின்னரும், வழக்கமாக ஒவ்வொரு மழையின்போதும் சென்னை உட்பட சுற்றுவட்டார மாவட்டங்கள் பாதிக்கப்படும் என தெரிந்தும், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் உட்பட எதையும் முன்கூட்டியே பராமரிக்காமல் இருந்த மாநில அரசின் மெத்தனப் போக்கை புதிய தமிழகம் கட்சி கண்டிக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டின் தரைத்தளத்தின் உள்ளே பெருமளவில் தண்ணீர் புகுந்ததால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன; எனவே கண்துடைப்புக்காக இல்லாமல், சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட அனைத்து விதமான சேதங்களையும் நஷ்டங்களையும் முறையாக ஆய்வுசெய்தும், கணக்கிட்டும், போதிய இழப்பீடுகளை வழங்க வேண்டுமென மாநில அரசை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. வருங்காலத்தில் சென்னை மட்டுமால்லாது, தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் புயல், மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், எந்தவிதமான ஊழலுக்கும் இடமின்றி போதுமான கட்டுமான வசதிகளை ஏற்படுத்திட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
2. மது, குடிப்பவர்களுடைய உடல்நலத்தைக் கெடுப்பதோடு அவர்களுடைய குடும்பத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. அதுமட்டுமின்றி, அண்மைக்காலமாக குடிப்பழக்கங்கள் பள்ளி, கல்லூரி வரையிலும் ஊடுருவி, குடும்பங்களிலும் பொது இடங்களிலும் அமைதிச் சூழல் முற்றாக சீரழிக்கப்பட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கின்றன; குடிப்பழக்கத்திற்கு ஆளான ஆண்களால் மனைவிமார்களும் பெற்றோர்களும் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்; வருமானத்தின் பெரும்பகுதி மதுவுக்கே செலவிடப்படுவதால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன; குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் இளம் வயதிலேயே உயிரிழப்புக்கு ஆளாவதால் இளம் வயது பெண்கள் விதவையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன; சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் 40% பேர் மது அருந்தியவர்களே என்று புள்ளிவிவரம் சொல்கிறது; அண்மைக்காலமாக அதிகரித்துவரும் சாதியக் கொலைகளுக்கும் மதுவும் ஒரு காரணம் என ஆதாரங்கள் கூறுகின்றன. அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் வருமானம் என்ற ஒரே நோக்கத்தில், தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மது ஆலைகள் இயங்குவதாலும், 5500-க்கும் மேற்பட்ட தமிழக அரசின் டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுவதாலும், தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. புதிய தமிழகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு, ’தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; மதுவில்லா புதிய தமிழகம் படைத்திட மாநில அரசு முன்வர வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2021-க்கு முன்பு திமுக கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ’ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டது; ஒருபக்கம் ஏழை, எளிய மக்களின் வருமானத்தை திமுக அரசே மதுவைக் கொடுத்துப் பறிக்கிறது; இன்னொருபக்கம் மது உற்பத்தி ஆலைகள் முறையாக கலால்வரி செலுத்தாமலும், கட்சிக்காரர்களால் நடத்தப்படும் சட்டவிரோத பார்களாலும் ஊழலும் மிதமிஞ்சியிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் மேலிருந்து கீழ் வரை வருவாய் என்ற ஒரே இலட்சியத்தோடு நடத்தப்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும், சட்டவிரோத பார்களையும், மது உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் 27-ஆம் ஆண்டு துவக்க முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்படுகிறது.
3. ’மதுவிலக்கே நமது இலக்கு’ என்ற முழக்கத்தை 2024–நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியப் பிரச்சாரமாக முன்னெடுக்கக்கூடிய வகையில், தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி முதல் பட்டிதொட்டிகள் எங்கும் டாஸ்மாக் கடைகளையும், சட்டவிரோத பார்களையும், மது உற்பத்தி ஆலைகளையும் மூட வலியுறுத்தி, ’மதுவைத் தவிர்ப்போம்; மனிதகுலத்தைக் காப்போம்’ என்ற முழக்கத்தோடு மக்களிடத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் தொடர் போராட்டங்களையும் முன்னெடுப்பது என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்படுகிறது.
4. ஊழலற்ற நிர்வாகம் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அனைத்துத் துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் தலையாரி முதல் தலைமைச் செயலகம் வரையிலும் தமிழக மக்களை ஊழலில் வாட்டிவதைக்கிறது. எல்லா திட்டங்களுமே திமுக கட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் கமிஷன் எடுப்பதற்காக மட்டுமே வகுக்கப்படுகின்றன. சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.4500 கோடி செலவிடப்படும் என்று சொல்லி ஒதுக்கப்பட்ட நிதி, முறையாக செலவழிக்கப்படாமல் முறைகேடு ஏற்பட்டதன் காரணமாகவே இன்று சென்னை வெள்ளத்தில் சிக்கி, 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அல்லல்பட வேண்டியிருக்கிறது.
5. ’எங்கும் ஊழல், எதிலும் ஊழல், இதுவே திராவிட மாடல்’ என்று செயல்பட்டு வரும் திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்றிடவும், 2024-நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுகவை வீழ்த்திடவும், ஊழலற்ற ஆட்சியை அமைத்திடவும் புதிய தமிழகம் கட்சி தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி, மக்கள் விரோத திமுக அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தக்கூடிய பரப்புரையை உடனடியாக மேற்கொள்ள இம்மாநாடு முடிவு செய்கிறது.
6. தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் துணையோடு நடத்தப்படும் அனைத்து விதமான கனிம வளக் கொள்ளைகளையும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
7. தென்தமிழகத்தில் மீண்டும் தொடர் சாதியப் படுகொலைகள் தலைதூக்குவது மிகுந்த கவலையளிக்கிறது. தொழில், கல்வி, வணிகம், வேளாண்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் மிகமிக பின்தங்கியிருக்கக்கூடிய தென்தமிழகம் முன்னேற்றப்பாதையைக் காண வேண்டுமெனில், மாவட்டங்களில் அமைதியான சூழல் நிலவ வேண்டியது மிகமிக அவசியமாகும். அண்மைக்காலமாக நூதனமான முறைகளில் சாதாரண, ஏழை, எளிய, விவசாயக் குடும்பங்களைச் சார்ந்த நபர்களும் பட்டதாரிகளும் தனித்து இருப்பதை வாய்ப்பாக்கிக் கொண்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். கடந்த 3, 4 மாதங்களில் தென்தமிழகத்தில் படுகொலைக்கு ஆளானவர்களில் 90% பேர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற உண்மைநிலையை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; இதுபோன்ற கொலைகளில், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட முடியாதபடி இளஞ்சிறார்களும், கூலிப்படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கொலைகளுக்குப் பின்னாலும் மிகப்பெரிய உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. முன்பகை எதுவுமின்றி, நடத்தப்பட்ட இக்கொலைகளின் பின்னணி குறித்து மத்திய அரசின் சிறப்புப் புலனாய்வுக் அமைப்புகளால் விசாரிக்கப்பட்டால் மட்டுமே அதன் உண்மை நிலைகளும் வெளிவரும், எதிர்காலத்த்ல் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும் முடியும். அதேபோல, கூலிக்காகக் கொலை செய்யும் நோக்கத்தோடு செயல்படும் அனைத்துக் குழுக்களையும் கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
8. ஒருகாலத்தில் ’வடக்கே வாழ்கிறது; தெற்கே தேய்கிறது’ என்று முழங்கியே திராவிட ஆட்சியாளர்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தார்கள்; 56 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியாளர்களால், தமிழகத்தின் தென்பகுதிகளான இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய எந்தவிதமான திட்டங்களையும் கொண்டு வர முடியவில்லை; எனவே தமிழகத்தின் தென்பகுதி எந்த முன்னேற்றமும் அடையாமல் தேய்ந்துவிட்டது; இதுவே இளைஞர்கள் மது, புகை, போதை மற்றும் பல தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதற்கும், சில அயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு கூலிப்படைகளில் சேர்ந்து கொலை, கொள்ளை போன்ற கொடிய சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் காரணமாக அமைகிறது. கல்வியும் தொழில் வளர்ச்சியும் இல்லாத காரணத்தினால், சாதி-சமய பிணக்குகள் ஏற்படுவது, அதனால் அமைதியான சூழல் சீர்குலைக்கப்பட்டு தொழில் வளர்ச்சி இல்லாதது என ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன. எனவே தென்தமிழகம் முன்னேற்றம் காண நல்ல கல்விக்கூடங்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களும் தொழிற்சாலைகளும் கொண்டுவரப்பட வேண்டும். வடக்கு மாவட்டங்களில் மட்டுமே முதலீடுகளைக் குவிக்காமல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து தென்மாவட்டங்களிலும் தொழில் நிறுவனங்களில் முதலீடுகளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
9. ஜனநாயகத்தின் ஆணிவேர் என்பது வெளிப்படையாகவும் ஊழலற்ற முறையிலும் நடைபெறக்கூடிய தேர்தல்களே ஆகும். பிரிட்டிஷ் உள்ளிட்ட பல அந்நியப் படையெடுப்புகளால் 200 ஆண்டுகளுக்கு மேலாக காலனி ஆதிக்கத்திலிருந்த பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்காக உயிரிழந்தவர்கள், சிறைப்பட்டவர்கள், சொத்துசுகங்களை இழந்து வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் இலட்சோபலட்சம் பேர். அந்த மாமனிதர்கள் செய்த தியாகத்தால் கிடைக்கப்பெற்ற இந்த ஜனநாயகத்தை, முறைகேடான தேர்தல் முறைகளால் சுயநலவாதிகளும் ஆதிக்கவாதிகளும் அழிக்க நினைக்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகள் வரையிலும் வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவது என்ற ஒரு தவறான நடைமுறை தமிழகத்தில் மெல்ல மெல்ல புகுத்தப்பட்டு, சிறிய பொறியாக இருந்தது இப்போது பெருங்காட்டுத் தீயாக வளர்ந்து நிற்கிறது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறார்களோ இல்லையோ அதைப்பற்றிக் கவலைப்படாமல், வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வீடுதேடிச் சென்று, ஓட்டுக்கு ரூபாய் 500, 1000 என கணக்கிட்டு வாக்காளரிடம் சேர்த்துவிட்டால் வாக்குகள் குவிந்துவிடும் என்று திட்டமிட்டு, தேர்தல் நடைமுறையையே இன்றைய ஆட்சியாளர்கள் ஊழல்படுத்திவிட்டார்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் அளவுகடந்த முறைகேட்டில் ஈடுபட்டதன் காரணத்தால்தான், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டுமென நாம் வழக்குத் தொடுத்தோம். இந்தியத் தேர்தல் ஆணையம் இயந்திரத்தனமாக சில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசுவதும், வாக்காளர் சேர்ப்புப் பணிகளை மேற்கொள்வதும், பின் எல்லோரும் தவறாமல் 100% வாக்களிப்பில் பங்கெடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மட்டும் முன்னெடுப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது? எத்தனை வாக்காளர் இருந்தாலும் அத்தனை வாக்காளர்களும் பணம் வாங்கித் தான் வாக்களிக்கிறார்கள் என்ற நிலை உருவாக்கப்படும் பட்சத்தில், அதைத் தடுக்காத பட்சத்தில், தேர்தல் ஆணையம் இருந்தால் என்ன, இல்லாமல்தான் போனால் என்ன? எனவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடைய வாக்குச்சாவடி முகவர்களின் வங்கிக் கணக்குகள், GPay, Phonepe போன்ற பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே இந்தியத் தேர்தல் ஆணையம் கண்காணித்தால் மட்டுமே தமிழகத்தில் நேர்மையான நியாயமான ஜனநாயகமான முறையில் தேர்தலை நடத்த முடியும். தேர்தல் முறைகேடு விசயத்தில் அரசியல் கட்சிகள் தான் திருந்த வேண்டுமென தேர்தல் ஆணையமே அறிவுரை சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. மக்களுடைய ஏழ்மைநிலை, அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, வாக்குகளை விலைக்கு வாங்கும், ‘Cash for Vote; Vote for Cash’ என்ற நிலை இப்பொழுதே தடுத்து நிறுத்தப்படவில்லையெனில், அது இந்தியா முழுமைக்கும் பரவி, குணப்படுத்தவே முடியாத நிலைக்குப் போய்விடும். எனவே 2024-நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையான, நியாமான முறையில் நடத்துவதற்குப் போதிய வழிமுறைகளைக் இப்போதிருந்தே கையாள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
10. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் Fossil Fuels என்று சொல்லப்படுகிற படிம எண்ணெய் மற்றும் வாயுக்கள் அதிகமாக இருப்பதால், இங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வேளாண்மை பாதிக்கபடுகிறது என்று டெல்டா மாவட்டங்களில் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக பல பகுதிகளில் ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இராமநாதபுரம் மாவட்டம் ஏற்கெனவே வேளாண்மை, தொழில், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் ஆகும். எனவே அங்கு இதுபோன்று எண்ணெய்க் கிணறுகள் மூலம் படிம எரிவாயுக்களை எடுக்க முற்படுவதால், அப்பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை விளையும் பயிர்கள் கூட பாதிக்கப்படலாம். அண்மையில் துபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில் எடுத்த முடிவின்படி, அனைத்து நாடுகளுமே மெல்லமெல்ல படிம எரிவாயுவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே சீதோஷண நிலை மற்றும் பருவநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான மீத்தேன் வாயுவை உமிழும் இந்த படிம எரிவாயு அல்லது எண்ணெய்க் கிணறுகளை அமைக்கும் முயற்சியை முற்றாகக் கைவிடுமாறு புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
11. ”மதுவிலக்கே நமது இலக்கு; ஊழலற்ற புதிய தமிழகம் படைப்போம்; சாதி, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்போம்” என்ற முழக்கத்தோடு 2024-நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்பொருட்டு, 2024-ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் தினத்திலிருந்து களப்பணிகளைத் துவங்குவது என இம்மாநாட்டில் முடிவு செய்யப்படுகிறது.
12. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் இலங்கை அரசைக் கண்டிப்பதோடு மீனவர்களின் பறிக்கப்பட்ட படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை மீட்டுக்கொடுத்திட மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
13. புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்று 26 ஆண்டுகள் நிறைவுபெற்று, 27-ஆம் ஆண்டில் பயணிக்கிறோம். கடந்த 26 ஆண்டுகளில் 2 முறை சட்டமன்றத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தி வரலாற்று சாதனைகளை செய்து இருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கக்கூடிய தென்தமிழகத்தை தொழில், வணிகம், வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்த வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் புதிய தமிழகம் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, 2024 – நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றுச் செல்வதைக் குறிக்கோளாகக் கொண்டு, அந்த இலக்கை அடைய புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்ற புதிய தமிழகம் கட்சியின் 27-ஆம் ஆண்டு துவக்க நாளில் சபதமேற்போம்.
14. தேவேந்திரகுல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
15. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் புதல்வர் டாக்டர்.ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் கல்லூரி மாணவர் பருவத்திலிருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். குறிப்பாக, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவருடைய பங்கு மிகவும் போற்றப்படக்கூடியது. எனவே கட்சியின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கும், கொள்கைக் கோட்பாடுகளை பரந்துபட்ட மக்களிடத்தில் கொண்டு செல்லும் பொருட்டும், டாக்டர்.ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களை கட்சியின் மாநில இளைஞரணித் தலைவராக நியமனம் செய்யும் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை, 27-ஆம் ஆண்டு துவக்க முப்பெரும் விழாவில் புதிய தமிழகம் கட்சி ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது.