மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் – தீர்மானங்கள்
தேதி: 4 ஜூன் 2023
இடம்: மாவட்ட தலைநகர்
இன்று (04.06.2023) அனைத்து மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டங்களில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், அனைத்து மாவட்ட கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.!
”டாஸ்மாக் மதுக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுவை அருந்தியும், சட்டவிரோத பார் மற்றும் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மது காரணமாகவும், கல்லூரி மாணவர்கள் முதல் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த இலட்சோபலட்சம் உழைப்பாளர்கள் தங்களுடைய உழைப்பின் பெரும்பகுதியை இழப்பதுடன் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள்; தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்கள் உயிரிழப்பிற்கு ஆளாகிறார்கள்.
இன்று ஆட்சியில் உள்ள திமுக அரசு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் இன்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு பதிலாக, அடுத்த ஆண்டு கூடுதலாக பத்தாயிரம் கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மது விற்பனையை ஊக்குவிக்கும் செயலும் நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் கஜானாவுக்கு சென்றடைய வேண்டிய வருவாயை அத்துறைக்கு தலைமை தாங்க வேண்டிய அமைச்சர் மற்றும் அவரது ஆட்கள் அபகரித்துக் கொள்கிறார்கள். ஒட்டு மொத்தத்தில் டாஸ்மாக் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழலும் தமிழக மக்களின் உடல் நலத்திற்கு கேடும் நிகழ்கிறது. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள் இது குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்று ஆளுநர் அவர்களிடத்தில் மனு அளித்து இருந்தார்கள்.
இப்பொழுது பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத பார்கள் மூடப்பட்டு வருகின்றன. எனினும் சட்டவிரோதமாக பார்கள்நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையைப் பெறுவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவோ இல்லை. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் குடிநீருக்கு பதிலாக டாஸ்மாக் மது குழாய்கள் மூலம் வீடுதோறும் விநியோகம் செய்யப்படும் நிலை உருவானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக மக்கள் அனைவருக்கும் இருக்கிறது.
திமுக தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றக் கூடிய வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மது உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் கடைகள், பார்கள், கள்ளச்சந்தை மது விற்பனை உள்ளிட்ட அனைத்தையும் நிரந்தரமாக மூடி பரிபூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்ட 100 பொதுக் கூட்டங்களில் முதல் பொதுக்கூட்டமாக ஜூன் மாதம் 15 ஆம் தேதி புளியங்குடியில் நடைபெறக்கூடிய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து ஒன்றியம் வாரியாக பெருந்திரளாக கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப்படுகிறது”