SC பட்டியலில் தொடரப் பரிந்துரை! எடப்பாடி அரசே தேவேந்திரகுல மக்களை சீண்டிப் பார்க்காதே!
தேதி: 06 டிசம்பர் 2020
இடம்: கோவை பொதிகை இல்லம்
புதிய தமிழகம் கட்சியின் அவசர மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம்.
6.12.2020 அன்று கோவை – பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA., அவர்களின் தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட, சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிச் செயலாளர்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்ற அவசர மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் காணொளிக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1:
”7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட 7 சாதி உட்பிரிவுகளின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பட்டியல் வகுப்பில் தொடரவும், தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும் இப்பிரிவினர் ஏற்கெனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும்”
என்ற தமிழக அரசின் அறிவிபபானது உலகெங்கும் வாழக்கூடிய இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாகும். இது நூறாண்டுகால பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு நேர் எதிரானது மட்டுமல்ல, கடும் ஆட்சேபனைக்குரியதும், கண்டனத்திற்குரியதும், அவர்களை மீண்டும் அவமானப்படுத்துவதாகும். தேவேந்திரகுல வேளாளர் என்றப் பொதுப் பெயர் மாற்றமும், பட்டியல் மாற்றமும் ஒன்றையொன்றுப் பிரித்துப் பார்க்க முடியாதக் கோரிக்கைகள் தான்.
தேவேந்திரகுல வேளாளர் என்பது யாருடைய கண்டுபிடிப்பும் அல்ல, புதுப் பெயரும் அல்ல. இது ஏற்கெனவே அம்மக்களால் தொன்றுதொட்டு பல நூறாண்டுகாலமாகப் பயன்படுத்தி வரக்கூடியப் பெயர்தான்; அதற்கான அரசாணை மட்டுமே வலியுறுத்தி வந்தோம். இம்மண்ணின் மூத்தக்குடி மக்களான தேவேந்திரகுல வேளாளர்கள் ஆங்கிலேயருடைய காலத்தில் தவறுதலாகப் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டுவிட்டதால், அவர்கள் சமூகத்தில் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கும் ஒதுக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளனர். தாழ்த்தப்பட்டோர், தலித், அரிஜன், ஆதிதிராவிடர்கள், அட்டவணைச் சாதியினர் என ஆளாளுக்கு பெயர் சூட்டுவதை இம்மக்கள் அறவே வெறுத்தே, சலுகைகளைத் தியாகம் செய்தாகினும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறுவதே தங்களுடைய உயிரினும் மேலான இலட்சியமாகக் கருதிப் போராடி வருகிறார்கள். ஒரு மிகப்பெரியப் பூர்வீகக் குடி மக்களுடைய நூறாண்டுகாலப் போராட்டத்தின் உள்ளார்ந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும் அவர்கள் தொடர்ந்து பட்டியல் பிரிவில் நீடிப்பார்கள் என்ற அதிமுக அரசின் முடிவு தேவேந்திரகுல வேளாளர்களுடைய உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கக்கூடியதாகும். பட்டியல் மாற்றத்திற்குப் பரிந்துரைக்காமல் பெயர் மாற்றத்திற்குச் செய்யப்படும் பரிந்துரை உயிரற்ற உடலுக்குச் சமமானதே. எனவே,
”இரண்டு கோடி தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்டநெடுநாளைய கோரிக்கைகளுக்கு மாறாக, அவர்களைத் தொடர்ந்து பட்டியல் பிரிவிலே நீடிக்கப் பரிந்துரை செய்யும் எடப்பாடி அரசைக் கண்டித்தும், பெயர் மாற்றத்துடன் கூடியப் பட்டியல் மாற்றத்திற்கு மட்டுமே பரிந்துரை செய்யக் கோரியும், தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும், முதல்கட்டமாக 2021-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6-ஆம் தேதி இலட்சக்கணக்கான தேவேந்திரகுல மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக நடத்திட முடிவு செய்யப்படுகிறது.”*
*தீர்மானம் – 2:*
தமிழ் மண்ணின் பூர்வீகக்குடி மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் அதிகார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புதிய தமிழகம் கட்சி 1997-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி துவங்கப்பட்டு, 23 ஆண்டுகள் நிறைவு பெற்று, 24-ஆம் ஆண்டில் வரும் டிசம்பர் 15-ல் அடி எடுத்து வைக்கிறது. அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் எவ்வித சமரசமுமின்றி நிறுவனர் – தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் இன்று வரையிலும் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த 23 ஆண்டுகளில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சி செய்த சாதனைகள் அளவிடற்கரியது.
1. 1995-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காவல்துறையினரால் சூறையாடப்பட்ட போது, டெல்லி வரையில் நெடும்பயணம் செய்து அப்பகுதி மக்களுக்கான நீதியை நிலைநாட்டி வரலாறு படைத்தது.
2. வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் அமைத்திட அரும் பாடுபட்டது.
3. தமிழகத்தில் 20,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவி வந்த இரட்டைக் குவளை முறையை அறவே ஒழித்துக் கட்டியது.
4. சிவகங்கை மாவட்டம், கண்டதேவியில் தேர்வடம் பிடித்து இழுப்பதற்கு தேவேந்திரகுல மக்கள்
உள்ளிட்ட அனைவருக்கும் உரிமையை நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத் தந்தது.
5. தியாகி இம்மானுவேல் தேவேந்திரனார் அவர்களுடைய நினைவு நாளில் பரமக்குடியில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி இலட்சக்கணக்கான தேவேந்திரகுல மக்களை அணிதிரளச் செய்து, அவரது புகழையும் நினைவையும் உலகறியச் செய்தது.
6. தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் மறைக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட இடஒதுக்கீடுகளை வெள்ளை அறிக்கை மூலம் போராடிப் பெற்றுக் கொடுத்தது.
7. பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மனித உரிமையை மீட்டு, சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்தது.
8. தென்தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நிலவிய சாதியக் கொடுமைகளிலிருந்து தேவேந்திரகுல மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக மக்களை விடுவித்தது பூர்வீகக் குடிமக்களை விடுவித்தது.
9. 1996 முதல் 2001 வரையிலும், 2011 முதல் 2016 வரையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அங்கம் பெற்று அதை முறையானத் தளமாகப் பயன்படுத்தி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுத்தது.
10. இதற்கெல்லாம் மணிமகுடம் சேர்த்தார் போல், புதிய தமிழகம் கட்சியின் கடந்த 10 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி *’தேவேந்திரகுல வேளாளர்’* என்ற ஒரே பொதுப்பெயரில் அழைத்திட தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்திருப்பது புதிய தமிழகம் கட்சியின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இதுபோன்ற புதிய தமிழகம் கட்சியின் ஒட்டுமொத்த வெற்றிகளை எல்லாம் கொண்டாடக்கூடிய வகையிலும், எதிர்வரும் காலங்களில் தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுடைய கேடயமாகவும், வாளாகவும் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்பதை பரந்துபட்ட மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வகையிலும், வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி, 24-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் அனைத்துக் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் *”புதிய தமிழகம் கட்சிக் கொடிகளை புதுப்பித்து ஏற்றவும், புதிய பெயர்ப் பலகைகளைத் திறந்து வைக்கவும், தமிழகத்தின் அனைத்து கிராமங்களில் அனைத்து தரப்புப் பொது மக்களுக்கும் பொது விருந்து அளித்தும் சிறப்பாக கொண்டாட வேண்டும்”* எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
*தீர்மானம் -3:*
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்ட முன் அனுபவம் இல்லாவிட்டாலும், புதிய தமிழகம் கட்சியின் சார்பாக விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்றுக்கொண்டு, கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி 12,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காவல்துறையின் பல ஒடுக்குமுறைகளையும் தாண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், ஊர் நாட்டாண்மைகளுக்கும், புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும், உற்றத் துணையாக இருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புதிய தமிழகம் கட்சி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
*தீர்மானம் – 4:*
புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி, கிளைப் பொறுப்பாளர்கள் நியமனப் பணிகளையும், 25 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி முகவர் நியமனம் பணிகளையும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் நிறைவு செய்து வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஜனநாயக நாட்டில் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுக்காக மக்களைத் திரட்டி போராடுவது ஒரு பக்கமாகவும், ஆட்சி-அதிகாரத்தில் பங்கு பெறுவது இன்னொரு பக்கமாகவும் பார்க்கப்படும். இலட்சக்கணக்கான மக்களை அடித்தளமாகக் கொண்ட புதிய தமிழகம் கட்சி, கோரிக்கை வைக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்கக்கூடாது, கோரிக்கையை நிறைவேற்றி தரும் அதிகார பீடத்தில் அமர வேண்டும். எனவே பட்டியல் வெளியேற்றம் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும்; 2021 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும்; ஆட்சி-அதிகாரத்தில் அமரவும்; இன்றிலிருந்தே களப்பணிகளை துவங்கிட புதிய தமிழகம் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.