1997 ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

1997 ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? – அகற்றினால் அனைத்து தலைவர்கள் சிலைகளையும் அகற்றுங்கள்!
1997-ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படி,
தமிழகத்திலுள்ள அனைத்துச் சிலைகளையும் அகற்ற முடிவெடுத்தால்,
காலந்தாழ்த்தாமல் அதை இன்றே செய்திடுங்கள்! – இல்லையாயின்
சம உரிமை, சமத்துவத்தின் அடையாளமாக
ஈ.வெ.ரா. அவர்கள் ஸ்ரீரங்கத்தில் தற்போது நிற்கும் இடத்திலேயே நிமிர்ந்து நிற்கட்டும்!!
1997-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த சாதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் அறவே நீக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, போக்குவரத்துக்கு இடையூறாகப் பொது இடங்களையும் நெடுஞ்சாலைகளையும் ஆக்கிரமித்திருந்த அனைத்துச் சிலைகளையும் அகற்றி, அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவிற்குப் பிறகு, மாவட்டங்களுக்கோ, போக்குவரத்துக் கழகங்களுக்கோ எவருடையப் பெயரும் சூட்டப்படவில்லை.
ஆனால், அன்றைய அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படியும், அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை உயர்நீதிமன்றங்களில் வழங்கப்பெற்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்துச் சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
நூறாண்டுகால சுதந்திரப் போராட்டத்தின் விளைவாகப் பல துண்டுகளாகக் கிடந்த பாரத தேசம் ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து மக்களுக்குமான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. சாதி, சமய வேறுபாடுகளின்றி செயல்படுவோம் என்ற அடிப்படையிலேயே, உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள் முதல் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் வரை தேர்தலில் போட்டியிடுகின்றபொழுதும், வெற்றிபெற்று பதவியேற்கின்றபொழுதும் உறுதிமொழி ஏற்கிறார்கள். ஆனால், வாக்குவங்கி என்ற சுயநல அரசியலுக்காக, சமூகங்கள் சாதி, மத ரீதியாக மீண்டும் மீண்டும் பிளவுபடுத்தப்படுகின்றன. சிலைகளாக இருக்கக்கூடிய பல தலைவர்கள் உண்மையாகவே இந்த நாட்டு மக்களுடைய மேன்மைக்காகத் தங்களுடைய சொத்துசுகங்களை இழந்ததோடு தமது வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள்; சிலர் வாக்குவங்கி அரசியலுக்காக சிலைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சமஉரிமை என்ற கொள்கைகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
அவருடைய எல்லாப் பேச்சுகளும் எழுத்துகளும் செயல்களும், எல்லாக் காலத்திற்கும் பொருத்தமுடையவையாக எடுத்துக் கொள்ள இயலாது. எனினும், அவர் வாழ்ந்த காலத்தில், சமூகத்தில் ஏற்பட்ட பல சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதற்கும், அதை எதிர்த்துக் களம் காண்பதற்கும் அவர் பெரிதும் தேவைப்பட்டிருக்கிறார். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, வழிபாட்டுரிமை என எதைப் பேசினாலும், பொருளாதார சமத்துவமும் அரசியல் அதிகாரமும் இல்லாமல் அது நிலைத்து நிற்காது. ஈ.வெ.ரா. அவர்கள், விஞ்ஞானப் பூர்வமானப் பொதுவுடைமைத் தத்துவத்தைத் தந்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், ஹோசிமின், மாசேதுங் போன்று, சோசலிச-சமத்துவப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதற்குண்டான சமூக விஞ்ஞானப் பார்வையுடன் தன்னுடைய கொள்கைகளை அமைத்துக் கொண்டவர் அல்ல. அதன் காரணமாகவே அவருடைய கருத்துகள் பிழைப் பொருள்முதல்வாதக் கருத்துகளாக விமர்சிக்கப்பட்டன.
எனினும், அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அவருடைய பல கருத்துகளில், பேச்சுகளில் நாம் முரண்பட்டு நிற்போம். ஆனால், அவருடைய ஒட்டுமொத்தக் கருத்துகளையும் எவராலும் புறந்தள்ள முடியாது, புறந்தள்ளவும் கூடாது. அவரே எல்லாம் என்று சொல்வது அல்லது இது அவருடைய மண் என்பதெல்லாம் அவரை முழுக்கமுழுக்க அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுடைய கருத்து. சாதி ஒழிய வேண்டும் என்று சொன்ன அவரது போராட்டம், அவருடைய நேரடி சீடர்களாக இன்று வரையிலும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாலோ அல்லது அவருடைய அரசியல் வாரிசுகளாலோ பிராமண எதிர்ப்பைத் தாண்டி ஓர் இம்மியளவும் நகரமுடியவில்லை.
அது அவருடைய குற்றமா அல்லது அவரைப் புரிந்து கொண்டவர்களுடைய குற்றமா என்பது வேறு. பிராமண ஒழிப்பே சாதி ஒழிப்பு ஆகாது; சாதி ஒழிப்பைப் பிராமண ஒழிப்புக்குள் அடைக்கக் கூடாது. ஆனால், பெரியாருடைய சமூக, அரசியல் வாரிசு என்று சொல்லக்கூடியவர்கள் பெரியாரை ஒரு வட்டத்திற்குள் அடைத்ததன் விளைவாக, இன்று அவருடைய சிலை உடைக்கப்படும் அல்லது அகற்றப்படும் என்று குரல் எழுகிறது. தமிழக சமூக, அரசியல் அரங்கில் தேச விடுதலைக்காகவும், ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர்களில் மகாகவி பாரதியார் முதல் மனிதராக நிற்கிறார்; தன்னுடைய சொத்து மற்றும் வாழ்க்கையை இழந்த வ.உ.சிதம்பரனார் அதற்கு அடுத்தபடியாக நிற்கிறார்; அவர்களுடைய வரலாறுகள் இந்திய சுதந்திரத்திற்கு முன்பானவை. ஈ.வெ.ரா. பெரியார் அவர்களுடைய உழைப்பும் பயனும் சுதந்திரத்திற்கு முன்பும் இருந்திருக்கிறது, பின்பும் இருந்திருக்கிறது.
அவருடைய பிராமண ஆதிக்க ஒழிப்பின் மூலம் பயன்பெற்ற பிராமணர் அல்லாத முன்னேறிய சமுதாயத்தினரும், இடைநிலைச் சாதியினரும், அவருடைய உழைப்பால் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனையும் அரசியல் அதிகாரத்தையும் சுவைக்க ஆரம்பித்தார்களே தவிர, அதை அனைவருக்கும் பங்கிட்டுத் தரவில்லை, பங்கிட்டுத் தரத் தயாராகவும் இல்லை. பெரியாருடைய பெயர் என்பது இவர்களுக்கு அப்பளம், ஊறுகாய் போல; அவ்வப்பொழுது சுவைக்காகத் தொட்டுக் கொள்வார்கள். டெல்டா மாவட்டங்களில் சாதி ஒழிப்பை நம்பி பின்சென்றவர்கள், குறைந்தபட்ச சாதி அடையாளத்தையும் இழந்து முகவரியற்றவர்களாக மாறியதும், கடவுள் மறுப்பை ஏற்றுக் கோவில்களுக்குள் செல்ல மறுத்ததன் விளைவாக, இருந்த உரிமைகளையும் இழந்ததும் தான் மிச்சம்.
பெரியாருடைய கொள்கைகளால் இன்றுவரையிலும் சமூக சமத்துவத்தையோ, வழிபாட்டு உரிமைகளையோ, பொருளாதார சமத்துவத்தையோ, அரசியல் அதிகாரத்தையோ பெறமுடியாவிட்டாலும் கூட, விளிம்புநிலை மக்கள் மானசீகமாக அவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை இன்றுவரை அளித்து வருகிறார்கள். பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டாலோ, அகற்றப்பட்டாலோ பெரியாரின் அடியொற்றி, பிராமணர்களை ஒழித்துக்கட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் அதைத் தடுக்கமாட்டார்கள்; ஏனென்றால், அவர்கள் சாதியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் மூத்தக்குடிமக்களை இன்னும் அரசியல் அதிகாரத்திற்கு அருகாமையில் அண்டவிடாமல் தடுப்பவர்கள் இந்தப் போலிப் பெரியாரிஸ்ட்டுகளே. அவர்களால் தான் இன்னும் சாதியமும், மூடநம்பிக்கைகளும் நிலைத்துநிற்கின்றன; சுரண்டல்கள் வலுப்பெற்றிருக்கின்றன; அனைத்து விதமான ஒடுக்குமுறைகளும் தலைதூக்கியிருக்கின்றன.
மக்களுடைய வழிபாடு என்பது வேறு, மதம் என்பது வேறு; சனாதனம் எந்தச் சிலை வழிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல; எந்தவொரு தத்துவமும் நிரந்தரமாக நிலைத்து நிற்கவேண்டுமென்றால், அது சமத்துவத்தின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். சிலைகள் ஒரு சிறிய குறியீடுகள் மட்டுமே எல்லாக் காலகட்டத்திற்கும் சிலைகள் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. அதன் காரணமாகத்தான், சிலைகளே சமூகப் பிரச்சினைகள் எழுவதற்குக் காரணமாக இருந்தபொழுது, அனைத்துச் சிலைகளும் அகற்றப்பட்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பு இருக்கக்கூடிய பெரியார் சிலை அகற்றப்பட்டு, அங்கு யார்யாருடைய சிலையோ வைக்கப்படவேண்டும் என்று ஒரு கருத்து தற்போது புதிதாக முளைக்கிறது.
பெரியார் கடவுளை மறுத்தது கடவுளை மறுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவர் அயோக்கியர்கள் என்று சொன்னதும், முட்டாள்கள் என்று சொன்னதும் எதிர்மறை வெறுப்புகளிலிருந்து சொன்னவை. பிறவியிலேயே உயர்வுதாழ்வு, தொட்டால் தீட்டு, பார்த்தாலே பாவம் என்ற சமூகச் சீர்கேடுகள், நம்பிக்கையின் பெயரில் நரபலியிடுதல், பிள்ளைக்கறி சமைத்தல் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பொருளாதார ஏற்றதாழ்வுகள், அனைத்துவிதமான அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் இதுபோன்ற பேதங்களைக் கண்டித்து, ஒட்டுமொத்தத்தில் அவர் தன்னுடைய கோபத்தை அவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஒரு குழுவோ, ஒரு இனமோ முழுச்சுதந்திரமாக வாழவேண்டுமெனில், பொருளாதாரச் சுதந்திரமும், அரசியல் அதிகாரமும் கைக்கு வரவேண்டும். வலுவான வாழ்வாதாரமில்லாமலும், அரசு அதிகாரத்தில் பங்கு இல்லாமலும் யாராலும் பிற உரிமைகளை தக்கவைத்துக் கொள்வது, அவ்வளவு எளிதானது அல்ல.
வழிபாட்டு உரிமைக்கும் இடஒதுக்கீட்டுக்கும் வலுவாகக் குரல் கொடுத்த அவர், தமிழகத்தின் நிலபுலன்களும் அரசியல் அதிகாரமும் கீழ்த்தட்டும் மக்கள் வரை சரிசமமாகப் பங்கிடப்படுவதற்கும் வலுவாகக் குரல் கொடுத்துப் போராடி இருந்தால், இன்று இதுபோன்று அவருடைய சிலைகளுக்கோ அல்லது அவருடைய சீர்திருத்தக் கருத்துகளுக்கோ எதிர்ப்பு கிளம்பியிருக்காது. ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து முழுக்கமுழுக்க நல்லது செய்வது என்பது ஒன்று; ஆனால், ஆட்சி அதிகாரத்தைப் பற்றியே சிறிதும் கவலைப்படாமல் மக்களுக்கு ஆற்றக்கூடிய தொண்டே உயர்வான தொண்டு என்ற நோக்கத்தில், சமத்துவத்திற்காகவும் சமஉரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் என்ற அடிப்படையில், அவருக்கு நிகர் அவரே.
அவருடைய சிலையை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வேறு எவருடைய சிலையையும் வைப்பதற்குண்டான சமத்துவ போதகர்கள் அண்மைக்காலத்தில் எவரும் வாழ்ந்துகாட்டவில்லை. ஒருவேளை பெரியாருடைய சிலைகளை அகற்றிவிட்டால் கூட, அவர் பேசிய, எழுதிய சமத்துவக் கருத்துகளுக்காக அவர் இன்னும் பலகாலம் போற்றப்படக்கூடியவராக இருப்பார். பெரியாருடைய சிலையை அகற்றிவிட்டோ அல்லது அகற்றாமலோ வேறு எவருடைய சிலையையும், எந்தக் கோவிலுக்கு முன்பாகவும் வைப்பது என்பது, தமிழகத்தில் மீண்டும் களேபரங்களுக்கே வித்திடும். அரசியல் ஆசைகள் என்பது வேறு; ஒரு வளர்ந்த சமுதாயத்தை மீண்டும் பின்னோக்கி இழுப்பது என்பது வேறு.
சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடிய வகையில், அடித்தட்டிலே கிடக்கக்கூடிய கோடானகோடி மக்களை, அனைவருக்கும் சமநிகராக உயர்த்துவது, அரசியல் அதிகாரத்தின் தலைமைபீடத்தில் அமர்த்துவது என்றத் தெளிவான திட்டங்களோடு செயல்பட்டால் வெற்றியடையலாம். அதைவிட்டுவிட்டு, பெரியாரின் ஒரு பக்கத்தை மட்டுமே பூதாகாரப்படுத்திக் கொண்டு, வேறு யார்யாருக்கோ முகவரியளிக்கவோ, முன்னிலைப்படுத்தவோ, அவர்களது சிலைகளை கோவில்களுக்கு முன் வைக்கவோ முயற்சி செய்வதை, தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
1997-ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படி,
தமிழகத்திலுள்ள அனைத்துச் சிலைகளையும் அகற்ற முடிவெடுத்தால்,
காலந்தாழ்த்தாமல் அதை இன்றே செய்திடுங்கள்! – இல்லையாயின்
சம உரிமை, சமத்துவத்தின் அடையாளமாக
ஈ.வெ.ரா. அவர்கள் ஸ்ரீரங்கத்தில் தற்போது நிற்கும் இடத்திலேயே நிமிர்ந்து நிற்கட்டும்!!
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13-11-2023