ரஷ்யாவின் ஹவானா போர்ப் பயிற்சி! உலக யுத்தத்திற்கான முஸ்தீபா? ரஷ்யா – உக்ரைன் போருக்கான முடிவா?

அறிக்கைகள்
s2 209 Views
  • Russia
  • Russia
Published: 13 Jun 2024

Loading

ரஷ்யாவின் ஹவானா போர்ப் பயிற்சி!
உலக யுத்தத்திற்கான முஸ்தீபா?
ரஷ்யா – உக்ரைன் போருக்கான முடிவா?

பெரிய ஆரவாரம் ஏதுமின்றி, வல்லரசுகளின் யுத்த முஸ்தீபுக்கான ஒரு செயல் கியூபாவின் தலைநகரான ஹவானா அருகே அமெரிக்காவின் தெற்கு மாகாணமான ஃபுளோரிடாவின் எல்லையிலிருந்து வெறும் 66 கிலோ மீட்டர் தொலைவில், ரஷ்யாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களும், விமானம் தாங்கி கப்பல்களும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவினுடைய எல்லையிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவின் கூப்பிடும் தூரத்தில் இன்னொரு வல்லரசு நாடு அதிநவீன அணு ஆயுத ஏவுகணை பயிற்சியில் கியூபாவுடன் இணைந்தும், தனித்தும் ஈடுபடுவதை உலக வரலாற்றை உற்று நோக்கக் கூடியவர்களால் எளிதில் கடந்து செல்ல முடியாது.

ஏறக்குறைய 66 வருடங்களுக்கு முன்பு, 1962 ஆம் ஆண்டு இதற்கு நிகரான ஒரு சம்பவம் நடைபெற்ற பொழுது அன்று அமெரிக்கா பூமிக்கும் வானத்திற்கும் குதித்தது. 1957-ல் கியூபாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவால் கியூபா எப்பொழுதும் தாக்கப்படலாம் என்ற சூழல் உருவாகிய நிலையில், கம்யூனிஸ்ட் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரஷ்யா தனது நட்பு நாடான கியூபாவில் ரகசியமாக ஏவுகணைகளை அமெரிக்காவை நோக்கி ஏவி இருந்தது. அமெரிக்காவின் U2 உளவு விமானம் அதைக் கண்டறிந்து தெரிவித்த பிறகு, அந்த ஏவுகணைகளை உடனடியாக அகற்றவில்லை எனில், அணு ஆயுத தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை விடும் அளவிற்கு அமெரிக்கா சென்றது. ஏறக்குறைய 13 நாட்கள் உலகமே பதட்டத்திலிருந்தது. மீண்டும் ஒரு உலக யுத்தம் அது அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும் சூழல் உருவாகிவிட்டது. கென்னடி மற்றும் குருச்சேவ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவுக்கு எதிராக துருக்கியில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மெர்க்குரி ஏவுகணைகளும், அமெரிக்காவுக்கு எதிராக கியூபாவில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஏவுகணைகளும் அகற்றப்பட்டு இரு வல்லரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
கம்யூனிச அகிலம் எனும் உலகத்திலுள்ள 81 நாடுகளுடைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தன. அதில் ரஷ்யா உள்ளிட்ட 79 நாடுகள் ’சமாதான சுகவாழ்வு’ கொள்கையை ஏற்று, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர் அல்ல, வளர்ச்சி என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். சீனாவும் அல்பேனியாவும் மட்டும் யுத்தமே தீர்வு என மாறுபட்ட கருத்துக் கொண்டு கம்யூனிஸ்ட் அகிலம் அறிவித்த அறிவிப்பிலிருந்து விலகிச் சென்றார்கள். இப்பொழுது வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1962 ஐ போல அமெரிக்காவைப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையா? அல்லது ஒரு மிகப்பெரிய போருக்கான முன்னேற்பாடா? என்பது விரைவில் வெளிச்சம் ஆகிவிடும்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போரின் துவக்கத்தில் தலைநகர் வரையிலும் சென்ற ரஷ்யப்படைகள் பின்வாங்கி உக்ரைனின் 15 சதவீத பூகோளப் பகுதிகளை தன் வசம் வைத்திருக்கிறது. அண்மைக் காலத்தில் உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ரஷ்யா வெகுவாக முன்னேறி வருகிறது.

”நேட்டோவின்” முழு சக்தியும் உக்ரைனுக்கு வழங்கப்பட்டும் தன்னுடைய இழந்த நிலத்தை உக்ரைனால் மீட்டெடுக்க முடியவில்லை. கடந்த இரண்டு வருடத்தில் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய்கள் அமெரிக்காவாலும், ஐரோப்பிய நாடுகளாலும் உக்ரைன் ராணுவத்திற்கு செலவழிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் இந்நாடுகளுடைய ஏவுகணைகள், விமானங்கள் ரஷ்யாவின் எல்லைக்குள் செல்லக்கூடாது என்பது கட்டுப்பாடாக இருந்து வருகிறது. உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் எல்லைக்குள் சென்றும் தாக்கக்கூடிய அனுமதியும் ஆயுதங்களையும் தர வேண்டும் என வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து இறுதியாக அமெரிக்க அதிபர் பிடன் அவர்களும் ரஷ்யாவின் எல்லைக்குள்ளும் சென்று தாக்குதல் தொடுப்பதற்கு உக்ரைன் படைகளுக்கும் அனுமதி அளித்து விட்டார். உக்ரைனிலிருந்து ஏவுகணைகள் ரஷ்யாவின் எல்லையைத் தாண்டி மாஸ்கோவையோ அல்லது ரஷ்ய நகரத்தையோ தாக்கும் பட்சத்தில் அதை இரண்டு வல்லரசுகளுக்கான போரின் தொடக்கமாகவும், அது மூன்றாவது உலக யுத்தத்தின் துவக்கமாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்காது.

ரஷ்ய அதிபர் புடீனை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, நேட்டோவின் ஏவுகணைகளும் விமானங்களும் ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக புட்டினால் சும்மா இருக்க முடியாது. அதற்குப் பதிலடியாக இன்று அமெரிக்காவின் எல்லையிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நட்பு நாடான கியூபா ராணுவத்துடன் இணைந்து ரஷ்யப் படைகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது சாதாரணமான நிகழ்வு அல்ல. அமெரிக்காவின் ஏவுகணைகளோ விமானம் தாங்கிகளோ ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி தாக்கும் பட்சத்தில் அடுத்த நொடி கியூபாவின் தலைநகரான ஹவானாவிலிருந்து அமெரிக்காவின் மீது தாக்குதல் தொடுக்கப்படும். அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி மோதலில் ஈடுபடும் சூழல் வெகு தொலைவில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் எவ்வித விமானமோ, ஏவுகணைகளோ தாக்காது என்ற நிலை அதிகாரப்பூர்வமாக ஏற்பட்டாலொழிய ரஷ்யா – கியூபா படைகளின் போர்ப் பயிற்சிகளுக்கு முடிவு வராது என்றே கருதலாம்.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தம் உலகில் ஒரு அமைதியற்ற சூழலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா – ரஷ்யப் போரை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ள மாட்டா. எனவே பைடன் தன்னுடைய உக்ரைனுக்கான வாக்குறுதிகளிலிருந்து பின்னேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒருவேளை இரண்டு வல்லரசுகளும் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து அணு ஆயுதம் உபயோகப்படுத்தப்பட்டால் அதனுடைய விளைவு சாதாரணமாக இருக்காது.

ரஷ்யாவின் ஹவானா போர்ப் பயிற்சி!
உலக யுத்தத்திற்கான முஸ்தீபா?
ரஷ்யா – உக்ரைன் போருக்கான முடிவா?
பொறுத்திருந்து பார்ப்போம்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
13.06.2024