மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும், இனிய நண்பருமான டத்தோ சாமிவேல் அவர்களுடைய மரணம் – ஆழ்ந்த இரங்கல்

Same Vellu Black And White Samy Velly Fb
Published On: 17 Sep 2022

மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும், எனது இனிய நண்பருமான டத்தோ சாமிவேல் அவர்களுடைய மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 1998 ஆம் ஆண்டு முதல் அவர் எனக்கு நன்கு பழக்கப்பட்டவர். 1999 ஆம் ஆண்டு கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவரும் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் நானும் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரையிலும் ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது பல்வேறு விதமான அரசியல் நிகழ்வுகளை மனம் விட்டுப் பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது; அது மட்டுமின்றி, அதற்குப் பிறகு நான் மலேசியா சென்ற பொழுதெல்லாம் அவரைச் சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவர் சென்னை வருகின்ற போதும், பலமுறை சந்தித்திருக்கிறோம். அவர் ஒரு சிறந்த பண்பாளர்; தமிழ் மக்கள்மீது பற்று கொண்டவர்; அவர் மலேசியாவில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக விளங்கி பலமுறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பல்வேறு பொறுப்புகளை வைத்து மலேசியத் தேசத்தின் இந்திய மக்களின் பாதுகாவலராக விளங்கியவர். அவர் மலேசியாவிற்கும்தமிழகத்திற்கும்இந்தியாவிற்கும் பெரும் பாலமாக இருந்தவர் என்றால் மிகையாகாது. அவர் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு மலேசியதமிழகஇந்திய மக்களுக்கும், இந்திய நாட்டிற்கும் ஓர் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், இருநாட்டு மக்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் கிருஷ்ணசாமி MD, Ex MLA,

நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

16.09.2022